கச்சிமேற்றளி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு திருமேற்றளிநாயகி உடனுறை திருமேற்றளிநாதர்


மரம்: மா மரம்
குளம்: விட்டுணு தீர்த்தம்

பதிகங்கள்: மறையதுபாடிப் -4 -43 திருநாவுக்கரசர்
நொந்தா வொண்சுடரே -7 -21 சுந்தரர்

முகவரி: திருமேற்றளித் தெரு
பிள்ளையார்பாளையம்
காஞ்சிபுரம் மாவட்டம், 631501
தொபே. 9865355572

இது செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியாகிய பிள்ளையார்பாளையத்தில் இருக்கின்றது.

திருஞானசம்பந்தர் வாழ்ந்திருக்கவும் பாடவும் பெற்றதால் இது பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது.

தலச் சிறப்பு: இங்கே இரண்டு திருக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று ஓத உருகீசுவரர்கோயில். இங்கே எழுந்தருளியிருந்தவர் திருமால். திருஞான சம்பந்தப் பெருமானாரின் திருப்பாடலைக் கேட்டுச் சிவலிங்கமாய் உருகினார். காஞ்சிப்புராணத்தில் இதற்கு ஆதாரம் உண்டு. மற்றொன்று திருமேற்றளி நாதர்கோயில். இவ்விரு திருக்கோயில்களுக்கும் கிழக்கே திருவீதியில் சம்பந்தர்கோயில் இருக்கின்றது. இத் தலத்திற்கு அப்பர் சுவாமிகள் பாடியருளிய திருநேரிசைப் பதிகம் ஒன்று இருக்கின்றது. காஞ்சி மாநகரம் சிறந்த திருத்தலமாகத் திகழ்வதுடன் எண்ணற்ற சிவதலங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இலங்குகின்றது. இவற்றுள் கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, திருஅனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக்காரைக்காடு என்ற ஐந்து சிவதலங்கள் தேவாரத் திருப்பாடல்கள் பெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. இவ்வைந்து திருத்தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்கச்சிமேற்றளி. இது திருக்கச்சி யேகம்பத்திற்குத் தென்மேற்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ள அணி நகராகும். இந்நகரை ஸ்ரீ காஞ்சிமேற்றளியென்றும் திருமேற்றளியென்றும் வழங்குவர். திருக்கச்சியின் மேற்றிசையில் அமைந்திருத்தலால் இத்தலம் இப்பெயர் பெற்றதெனலாம்.

இத்தலத்திற்கு அப்பர்பெருமான் பதிகம் ஒன்றும் சுந்தரர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் உள.

காஞ்சி - திருமேற்றளி:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1921 No. 86-91; year 1923 No. 101-104. ( with the name of the village Pillayarpalayam))

இத்திருக்கோயிலில், சம்புவராய மன்னர்களில், சகலபுவனச் சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன.

இராசநாராயணமல்லிநாதன் சம்புவராயரின் கல்வெட்டு, எயிற்கோட்டத்துத் தேவதானம் நந்தவன்சுதர்விளாகம் என்னும் ஊரில் இருவேலி நிலத்தைத் திருமேற்றளி உடைய நாயனார்க்குக் கொடுத்ததையும், சதாசிவ தேவமகாராயர் கல்வெட்டு, தறி ஒன்றுக்கு ஐந்தரை பணத்தைச் செங்குந்தர்களிடமிருந்து வசூலித்து இறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கும்விளக்குக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, கொண்ட மய்யராசையா என்பவர் கட்டளையிட்டதையும், தந்திவிக்கரமவர்மன் கல்வெட்டு, ஒரு முத்தரையர் திருமேற்றளிக்கோயிலுக்கு அறச் செயல்கள் புரிந்ததையும், கோயிலைச் சார்ந்து திருமடம் ஒன்று இருந்ததையும் குறிப்பிடுகின்றன.

குறிப்பு: திருமேற்றளி நிலைபெற்றுள்ள ஊராகிய பிள்ளையார் பாளையத்தின் தெருக்களில் உள்ள துண்டுக் கல்வெட்டுக்கள் திரு வேகம்பன்தெரு என்று காஞ்சிபுரத்தில் ஒரு தெருவிற்குப் பெயர் வைக்கப்பட்டிருந்ததையும் சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் ஒருவர் இருந்ததையும், ஏகாம்பரநாதர் கோயிலுக்குப் பழுது பார்ப்பதற்கு இரண்டு ஊர்களின் வரிகளைக் கொடுத்ததையும் உணர்த்துகின்றன.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி