ஏடகம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏடகநாதர்


மரம்: வில்வம்
குளம்: வைகையாறு

பதிகம்: வன்னியுமத்த -3 -32 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவேடகம் அஞ்சல்
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம், 625234
தொபே. 04542 259311

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் மதுரையில் சமணர்களோடு செய்த புனல்வாதத்தில் `வாழ்க அந்தணர்` என்று தொடங்கும் திருப்பாடலை எழுதி வைகையாற்றில் இட, அவ்வேடு ஆற்றில் எதிர் ஏறிச் சென்று தங்கிய தலமாதலின் இப்பெயர் பெற்றது. ஏடு தங்கிய செய்தியை ``ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை`` என்னும் ஞானசம்பந்தர் வாக்கே வலியுறுத்தும்.

இது திருச்சிராப்பள்ளி - மதுரை தொடர்வண்டிப் பாதையில், சோழவந்தான் நிலையத்திற்குத் தெற்கே 4.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

இறைவரின் திருப்பெயர் - ஏடகநாதர். இறைவியின் திருப்பெயர் ஏலவார்குழலி. இத்திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தர் ``ஏலமார் குழல் ஏழையோடு எழில்பெறும் கோலமார் திருவிடைக் குழகர்` எனக் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது. திருமால், கருடன், சேடன், சாத்தனார் இவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இச்செய்தி,
``உன்னி மாலும் உவணனுஞ் சேடனும்
மன்னு சாத்தனும் நான்குகம் வாழ்ந்தகம்``.

என்னும், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் கழுவேற்றின திருவிளையாடல் அறுபத்தாறாம் பாடலின் அடிகளால் அறியக்கிடக்கின்றது.

இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. கோயிலுக்குப் பின் புறத்தில் வைகையாறு தெற்கு நோக்கி ஓடுகின்றது.
``ஏடகங் கண்டு கைதொழுதலுங் கவலை நோய் கழலுமே``
``ஏடகத்தடிகளை அடிபணிந்து அரற்றுமின் அன்பினால் இடிபடும் வினைகள் போய் இல்லையதாகுமே``

என்னும் இவ்வூர்ப் பதிக அடிகள் இத்தலத்தை வழிபடுதலின் சிறப்பை உணர்த்தும்.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் பாண்டியர்களில் மாறவர்மன் மகனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்திகள்,ஸ்ரீவல்லபதேவன், இவர்கள் காலங்களிலும், கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தில் சகம் 1448இலும் பொறிக்கப்பெற்ற மொத்தம் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில்(See the Annual Report on South Indian Epigraphy for the year 1905 No. 677 - 689.) சிவபெருமானின் திருப்பெயர் திருவேடகமுடைய நாயனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது.

மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியன், சோணாட்டைக் கைப்பற்றி, முடிகொண்ட சோழபுரத்தில் விஜயா பிஷேகமும், வீராபிஷேகமும் செய்துகொண்டவன் என்றும், அவனே சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியனென்றும், கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம்பெற்றவன் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இம்மன்னன் காலத்தில் இவ்வூரில் இருந்த திருஞானசம்பந்தர் திருமடத்தில் இருபது தபசியர் உண்பதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. ஸ்ரீ வல்லபதேவன் கல்வெட்டில், இவ்வூர் பாகனூர்க் கூற்றத்தைச் சேர்ந்ததென்று கூறப்பெற்றுள்ளது. கிருஷ்ணதேவமாராயர் கல்வெட்டு பச்சைப் பெருமாள் பச்சை கண்டிய தேவர் நிலம் அளித்ததை புலப்படுத்துகின்றது.

 
 
சிற்பி சிற்பி