ஆலங்காடு (திருவாலங்காடு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வண்டார்குழலி உடனுறை ஊர்த்துவதாண்டவேசுவரர்

மரம்: பலா மரம்
குளம்: முத்தி தீர்த்தம்

பதிகங்கள்: கொங்கை திரங்கி -11 -2 காரைக்காலம்மையார்
துஞ்சவரு -1 -45 திருஞானசம்பந்தர்
முத்தாமுத்தி -7 -52 சுந்தரர்
வெள்ள நீர்ச்சடையர் -4 -68 திருநாவுக்கரசர்
ஒன்றாவுல -6 -78 திருநாவுக்கரசர்

முகவரி: திருவாலங்காடு அஞ்சல்,
அரக்கோணம்,
திருத்தணி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம், 631210
தொபே. 044 27872443

திருவாலங்காடு இரயில் நிலையத்தி லிருந்து வடக்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.தொண்டை நாட்டுத்தலம். திருவள்ளூர் - அரக்கோணம் பேருந்து வழியில் உள்ளது.

நடராஜப்பெருமான் நடனஞ்செய்யும் சபை ஐந்தனுள் இது இரத்தினசபையாகும். இறைவன் காளியை ஊர்த்துவ தாண்டவத்தால் தோற்கச்செய்த தலம்.

இதனைத் தேவாரம் `ஆடினார் காளிகாண ஆலங்காட்டடிகளாரே` என்று சொல்லும். பதஞ்சலி கார்க்கோடகன் என்ற பெயரோடும், வியாக்கிரபாதர் முஞ்சிகேசர் என்ற பெயரோடும் எப்பொழுதும் நடனதரிசனம் செய்வர்.

கைலைக்குத் தலையாலே நடந்துசென்ற காரைக்காலம்மையார், என்றும் திருவடிக்கீழ் ஆனந்த தாண்டவ தரிசனத்தோடு அமர்ந்திருக்கின்றார். திருஞானசம்பந்த சுவாமிகள், அம்மையார் தலையாலே நடந்த தலமென்று மிதித்தற்கு அஞ்சிப் புறம்போக, இறைவன் கனவில் `எம்மைப் பாட மறந் தனையோ` என்று கேட்டுப் பாடல்பெற்ற தலம்.

இங்கே வாழ்ந்த வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டினார்கள்.

இதனைத் `துஞ்ச வரு வாரும்` என்னும் பதிகத்தில் ஞானசம்பந்த சுவாமிகள் விளக்கியுள்ளார்கள்.


கல்வெட்டு:

அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்.(468 of 1905) நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்.(482 of 1905) அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படு கிறார்.(495 of 1905)

ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம் பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

 
 
சிற்பி சிற்பி