மறைக்காடு (திருமறைக்காடு) (வேதாரணியம் வேதவனம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை மறைக்காட்டுமணாளர்


மரம்: வன்னி
குளம்: வேத தீர்த்தம்

பதிகங்கள்:

சிலைதனை நடுவிடை -1 -22 திருஞானசம்பந்தர்

சதுரம் மறைதான் -2 -37 திருஞானசம்பந்தர்

பொங்கு வெண்மணற் -2 -91 திருஞானசம்பந்தர்

கற்பொலிசு ரத்தினெரி -3 -76 திருஞானசம்பந்தர்

இந்திர னோடு தேவ -4 -33 திருநாவுக்கரசர்

தேரையு மேல்க -4 -34 திருநாவுக்கரசர்

ஓதமால்கடல்பா -5 -9 திருநாவுக்கரசர்

பண்ணின் நேர்மொழி -5 -10 திருநாவுக்கரசர்

தூண்டு சுடரனைய -6 -23 திருநாவுக்கரசர்

யாழைப்பழித் -7 -71 சுந்தரர்

முகவரி: வேதாரணியம் அஞ்சல்
வேதாரணியம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 614810
தொபே. 04369 250238

மறைகள் பூசித்த காரணம்பற்றி இப்பெயர்பெற்றது. இச் செய்தி ``சதுரம் மறைதான் துதி செய்து வணங்கு மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறைமைந்தா`` என்னும் திருஞானசம்பந்தரது இத்தலத் தேவாரப்பகுதியால் (பண் - இந்தளம். திருப்பாட்டு 1) விளங்கு கின்றது.

திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் தொடர்வண்டிப் பாதை யில் வேதாரணியம் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 3/4 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருத்துறைப்பூண்டி, நாகை ஆகிய ஊர் களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர் மறைக்காட்டுமணாளர். இத் திருப் பெயர், இவ்வூர்க்குரிய அப்பர் பெருமானின் ``மறைக் காட்டுறையும் மணாளன் றானே`` என்னும் திருத்தாண்டகத்தால் அறியக் கிடக்கிறது. வேதாரண்யேசுவரர் என்னும் பெயரும் உண்டு. இறைவியாரின் திருப்பெயர் யாழைப்பழித்தமொழியம்மை. இத்திருப் பெயரைச் சுந்தரமூர்த்திநாயனார், இவ்வூர்ப் பதிகத்தில் முதலாம் திருப்பாட்டில் ``யாழைப்பழித்தன்ன மொழிமங்கை யொரு பங்கன்`` என எடுத்தாண்டுள்ளார்.

தீர்த்தம்: வேததீர்த்தம், கடல்துறை, மணிகர்ணிகை, தேவபூடணம் என்பன.

தலவிருட்சம் வன்னி.

பார்வதிதேவியாரின் திருமணத்தின் பொருட்டுத் தேவரும் பிறரும் கூடிய கூட்டத்தின் காரணமாக வடதிசை உயர்ந்து, தென்திசை தாழ்ந்தது. அதைச் சமன்செய்யச் சிவபெருமான் அகத்தியரைத் தென் திசைக்கு அனுப்பினார். பெருமானது மணக் கோலத்தைக்காண முடியாது போவது பற்றிஅகத்தியர் வருந்தினார். அப்பொழுது சிவபெருமான் மணக்கோலத்தைத் திருமறைக்காட்டில் காட்டியருள் வதாகத் திருவாய் மலர்ந்து அதன்படி அக்கோலத்தைக் காட்டி யருளினார். மணவாளக்கோலம் மூலத்தானத்தில் சிவலிங்கப் பெருமானுக்குப் பின்பக்கத்தில் இருக்கின்றது. இராமர் இராவணனைக் கொன்ற பழி நீங்கப் பூசித்த தலமாதல் பற்றி இது கோடிக்கரை என்றும் பேசப்படும். இங்குள்ள மணிகர்ணிகைத் தீர்த்தத்தில் மூழ்கி, கங்கை புனிதமாயினாள். இங்கு உள்ள தேவபூடணத்தீர்த்தத்தில் மூழ்கி, காவிரி பரிசுத்தத்தன்மை எய்தினள். பிர்மதேவர் பூசித்துப் பேறு பெற்றனர்.வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பட்டிருந்த திருக்கதவை, திருஞானசம்பந்தர் கட்டளைப்படி திருநாவுக்கரசர் ``பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ`` என்று தொடங்கிப் பத்துப்பாடல்களைப் பாடிக் கதவைத் திறப்பித்தார்.ஞானசம்பந்தர் தேவாரம் பாடி அதை அடைப்பித்தார்.

முசுகுந்தச்சக்கரவர்த்தி தியாகேசப்பெருமானை எழுந்தருளு வித்த ஏழுவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகர்புவனவிடங்கர். நடனம் ஹம்ச நடனம்.

சுந்தரமூர்த்தி நாயனாருடன், சேரமான் பெருமாள் நாயனாரும் இங்கே வழிபட்டனர். இதற்குத் திருஞான சம்பந்தர் பதிகம் நான்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஐந்து, சுந்தரர் பதிகம் ஒன்று ஆகப் பத்துப் பதிகங்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுதற்கு வந்த எலி, அணையும் நிலையில் இருந்த திரியைத் தூண்டி, அதன் விளைவாய் மறு பிறப்பில் மாவலிச் சக்கிரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பர் சுவாமிகள் திருக்குறுக்கைத் திருநேரிசையில் எட்டாம் திருப்பாட்டில்.

``நிறைமறைக் காடு தன்னி னீண்டெரி தீபந் தன்னைக்

கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவானுலகமெல்லாங்

குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே``

என அருளியுள்ளார்கள்.

தலபுராணம், இவ்வூரில் தோன்றி யருளியவரும் திருவிளை யாடற் புராணம் எழுதியவருமாகிய பரஞ்சோதி முனிவரால் எழுதப் பெற்றது. அச்சில் வெளிவந்துள்ளது.

மறைசையந்தாதி இது யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவரால் எழுதப்பெற்றது. புலவர் பெருமக்கள் பெரிதும் பாராட்டும் நூல் இவை.




கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1924, No. 415-503) சோழமன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜ மன்னன், மூன்றாங் குலோத்துங்கசோழன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவன், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன், இவர்களின் காலங்களிலும், விஜயநகர அரசர்களில் வீரப்பிரதாப மகாராயர், தேவராய மகாராயர் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவ்வூர் (மறைக்காடு) உம்பள நாட்டுக் குன்றூர் நாட்டைச் சேர்ந்தது என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இராஜகேசரி வர்மனாகிய திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழன் கல்வெட்டு, திருப்பதியம் பாடுவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. இராஜேந்திரசோழன் கல்வெட்டு, விக்கிரமன் சந்தியையும் ஏனைய கல்வெட்டுக்கள், விளக்கினுக்கு, ஆடு, ஈழக்காசு இவைகள் கொடுக்கப்பட்டதைப் புலப் படுத்துகின்றன. மராத்திமொழியில் உள்ள கல்வெட்டு பிரதாபசிங் மகாராசர், துளஜாமகாராசர் என்போரைப்பற்றிக் கூறுகின்றன.

 
 
சிற்பி சிற்பி