ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு முத்தார்நகையம்மை உடனுறை அழகியநாதர்


மரம்: வன்னி
குளம்: பம்பை ஆறு

பதிகங்கள்: துன்னம்பெய் -2 -44 திருஞானசம்பந்தர்
குன்றவார்சிலை -2 -50 திருஞானசம்பந்தர்
மாமாத்தா -5 -44 திருநாவுக்கரசர்
வண்ணங்கள் -6 -9 திருநாவுக்கரசர்
காண்டனன் -7 -45 சுந்தரர்

முகவரி: திருவாமாத்தூர் அஞ்சல்,
விழுப்புரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம், 605402
தொபே. 04146 223319

விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் திருவாமாத்தூர் செல்லலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.

பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே, பசு என்றது உயிர்த்தொகுதியை.

இறைவரின் திருப்பெயர் அழகிய நாதர். இத்திருப்பெயரைத் திருக்குறுந்தொகையில் அப்பர்பெருமான் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும். இறைவியாரின் திருப்பெயர் முத்தாம்பிகை, முத்தைவென்ற முறுவலாள். முத்தார்நகை அழகுடையார் என்பர் அருணகிரிநாதர்.

பிருங்கி முனிவர் சிவபெருமானையே வழிபடுபவர். அம்மை யாரை வழிபடாதவர். அம்மையார் ஒருபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் அவரை அம்மையார வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர் முனிவர் அம்மையாரை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றனர். மூவராலும் பாடப்பெற்றது.

திருக்கோயில் பாதைக்கு இரு புறமாகக் கட்டப்பெற்றுள்ளது. மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன. சுவாமியின் முன்கோபுரம் பூர்த்தியாகவில்லை. சுவாமி கோயிலுக்கு நேர் வழியில்லை. தெற்குவாயில் வழியே சென்று பிறகு மேற்கே திரும்பவேண்டும். எதிரில் இராமர்கோயில் இருக்கின்றது. இராமன் வழிபட்டதனால் அபிராமேசர் என்று பெயர்வந்தது.

அர்த்தமண்டபத்தில் நிலவறை உண்டு. அச்சுதராயர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவர் திருப்பணிசெய்தாராம். அம்மன் கோயில் உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதற்குத்தான் பிராகாரமும் கோபுரமும் உண்டு.

இரட்டைப் புலவர்கள் இவ்வூர் இறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர். புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் இவ்வூரினர். அவருடைய சமாதி ஊரின்புறத்தே இருக்கின்றது.

இவ்வூருக்கு, சம்பந்தர் பதிகங்கள் இரண்டு. அப்பர் பதிகங்கள் இரண்டு. சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் கோப்பரகேசரிவர்மன் (முதல் பராந்தகன்) முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திர சோழன் (கங்கைகொண்ட சோழன்). வீர ராஜேந்திரன், முதற் குலோத்துங்கன்.

``பூமேவு வளர்திருப் பொன்மார்வு புணர
நாமேவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப``

என்னும் தொடக்கமுள்ள மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் முதலானோர் காலங்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார், திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர், திருவாமாத்தூர் உடைய பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப் படுகின்றார்

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903, No. 402-435; year 1922, No. 1-71. See also the South Indian Inscriptions, Volume VIII, No. 718-751. (South Arcot District, Vilupuram Taluk)).

இத்திருக்கோயில், கோப்பரகேசரி வர்மனது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இத்தளியைச் செய்தவன் அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவன், திருச்சுற்று மண்டபத்தைக் கட்டியவன் செம்பியன் காத்திமானடிகள் ஆவன். கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டில் இவ்வூர், அருவாநாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், கோப்பரகேசரி வன்மரான இராஜேந்திர சோழதேவன் அல்லது கங்கைகொண்ட சோழன் கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பனையூர்நாட்டு, வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், ``பூமேவுவளர் திருப்பொன் மார்வுபுணர`` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை யுடைய இராசகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பனையூர்நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், வழங்கப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டுக்களினால் திருநுந்தாவிளக்கு எரிப்பதற்குத் துலைநிறை செம்பொன், ஆடுகள் இவைகளையும் திருச்சந்திக்குத் திருச்சந்தனம், சீதாரி இவைகளுக்குப் பொன்னும், திருப்பதிகம் பாடுவதற்கு நிலநிவந்தமும் அளிக்கப்பெற்ற செய்திகள் புலப் படுகின்றன.

இத்திருக்கோயிலில், மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி வருவதற்குக் குருடர்கள் பதினாறுபேர்களும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் தலைக்கு நெல் பதக்காக நாளொன்றுக்கு முக்கலமாக நாள் 360-க்கு நெல் ஆயிரத்து எண்பதின் கலமும், புடைவை முதலுக்குப் பேரால் காசு ஒன்றாக காசு பதி னெட்டுக்கு, காசு ஒன்றுக்கு நெல் இருபதின் கலமாகவும் வந்த நெல் 1440 கலத்துக்கு, வேலி ஒன்றுக்கு நெல் நூற்று இருபது கலமாக ஆமாத்தூர் இறைவர் தேவதானம் கடுவனூரில் பன்னிரண்டுவேலி நிலம் காணியாகக் கொடுக்கப்பட்டு வந்தது, இந்நிலையில், ``பூமேவு வளர் திருப்பொன் மார்வுபுணர`` என்னும் தொடக்கமுள்ள மெய்க் கீர்த்தியை உடைய இராசகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி, குலோத்துங்க சோழன், தன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், தன் தேவாரத்துத் திருப்பதியம்பாடிய பொய்யாதசேவடி தேவகண நாதனான இராஜராஜப் பிச்சனையும் அவன் வர்க்கத்தாரையும் இத்திருக்கோயிலில் திருப்பதியம் பாடுவித்துக்கொண்டு, முன்பில் ஆண்டுகள் குருடர்களுக்கு விட்டுவரும் நிவந்தப்படி இவர்களுக்கும் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளான்.

இக்கல்வெட்டு(குறிப்பு: தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி 8, எண் 749, A. R. No. 433 of 1903), குருடர்களைக் கவலையின்றிக் கடவுள் பக்தியில் செலுத்துவதற்கு ஒரு வழிகாட்டியாகும்.

 
 
சிற்பி சிற்பி