பனந்தாள் (திருப்பனந்தாள்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரியநாச்சியார் உடனுறை திருத்தாடகையீச்சரத்து மகாதேவர்


மரம்: பனை மரம்
குளம்: பிரம்ம தீர்த்தம்

பதிகம்: கண்பொலிநெற்றி -3 -62 திருஞானசம்பந்தர்

முகவரி: திருப்பனந்தாள் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612504
தொபே. 0435 2456422

பனைமரத்தைத் தலவிருட்சமாக உடைமையின் இது பனந்தாள் என்று பெயர்பெற்றது. ஊரின் பெயர் பனந்தாள். இங்குள்ள கோயிலின் பெயர் தாடகைஈச்சரம் என்பதாகும். தாடகையால் பூசிக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது. இராமாயணத்தில் கூறப்பெற்றிருக்கும் தாடகை வேறு; இவர்வேறு.

இது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில், ஆடுதுறை தொடர் வண்டி நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இது தாடகைக்கு வளைந்தும், குங்கிலியக் கலியர்க்கு நிமிர்ந்தும் அருள் செய்த தலம்.``மாலை சாத்தும், தாடகை மானங்காப்பான் தாழ்ந்து பூங்கச்சிட்டு ஈர்க்கும், பீடுறு கலையன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர் ஈதால்` எனவரும் திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப்படலத்து அடிகளாலும் இச்செய்தியை அறியலாம். இவ்வூரில் இத்தாடகை ஈச்சரமும், ஊருடையப்பர் கோயிலும் திருத்தருமை ஆதீன அருள் ஆட்சிக்குட்பட்டவை.

இந்த ஊருடையப்பர் கோயில் மிகவும் கிலமாய் இருந்தது, இதை இப்பொழுது திருத்தருமை ஆதீனத்தில் 25 ஆம் பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி நடத்தி வருபவர்களும் அருங்கலை விநோதரும் பெருங்கொடை வள்ளலுமாகிய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைப்பு முறையில் முன்பு இருந்ததைப் போலத் திருப்பணி செய்துள்ளார்கள்.

இவ்வூரில் ஆதிகுமரகுருபர சுவாமிகளது பரம்பரையில் வரும் தம்பிரான் சுவாமிகள் அதிபராய் வீற்றிருக்கும் காசிமடம் இருக்கிறது. இதன் பெருமையையும், ஆற்றி வரும் தொண்டினையும் அறியாதார் யாருளர்? தாடகையீச்சரத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

கோயிலைக் கட்டியவர்: இத்தாடகை ஈச்சரத்தைக் கருங்கல்லால் கட்டியவர் திருப்பனந்தாள் நக்கன்தரணி என்பவராவர்.

இச்செய்தி, கர்ப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ள, ``ஆக நிலம் நாற்பத்திரண்டே முக்காலே நான்மா வரை முந்திரிகைக்கீழ் எண்மாவரையினில் இரண்டாயிரக் கலமும் இந் நாட்டுப் பனந்தாள் நக்கன் தரணி எடுப்பித்த திருத்தாடகை ஈச்சரத்துத் தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு யாண்டு 11 ஆவது முதல்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியப் பெறுகிறது.

கோயிலின் பரப்பு: ``இவ்வூர்த் திருத்தாடகைஈச்சரம் உடையார் ஸ்ரீ கோயில் என்றளந்த நிலம் இருமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நாலுமாவும்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் இக்கோயிலின் பரப்பு இருமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நாலுமா என்று பெறப்படுகின்றது.

இறைவனின் திருப்பெயர்: இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருத்தாடகை ஈச்சரத்து மகாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமாள், திருத்தாடக ஈச்சரமுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப் பெற்றுள்ளனர்.

இறைவியாரின் திருக்கோயிலைக் கட்டியவர்: இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசர் ஆவர். இச் செய்தியை ``ஸ்வஸ்திஸ்ரீ தேவியை எழுந்தருளுவித்த வெண்கூருடை யான் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவன் ராசன்`` என்னும் இறைவன் கோயிலின் மகாமண்டபத்து வாசலின் தென்பாலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

இறைவியாரின் திருப்பெயர்: `பெரியநாய்ச்சியார்` என்பது இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவியாரது திருப்பெயராகும். இச்செய்தியைத் ``திருக் காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார்கன்மிகள் ஆதிசண்டேசுவர தேவகன்மிக்குத் தானம் பண்ணி`` என்னும் முதற் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுப் பகுதி அறிவிக்கின்றது.

குங்கிலியக்கலையரின் திருக்கோயில்: இக்கோயிலில் குங்கிலியக்கலையர்க்குத் திருக்கோயில் எடுப்பித்தவர் திருக்கடவூர்க் குங்கிலியக் கலையரின் திருப் பெயரையே தமக்குப் பெயராகக் கொண்ட திருப்பனந்தாள் குங்கிலியக் கலையர் ஆவர்.

இத் திருப்பனந்தாள் குங்கிலியக்கலையர் ``திருக் கடவூர்க் குங்கிலியக்கலையார் சீபாதத்துக்குப் பணிசெய்திருக்கும் தீயிலும் பிரியாதான் அழியாவிரதங்கொண்டவனான குங்கிலியக் கலையர்`` என இவ்வூர்க் கல்வெட்டுக்களில் பாராட்டப் பெற்றுள்ளனர். இதனால் இவரது அடியார் பக்திச் சிறப்பு இனிது விளங்குகின்றது.

இக்கோயில் இருக்கும் இடம்: இக்கோயில் இரண்டாம் திருச்சுற்றாலையில் (பிராகாரத்தில்) மேற்குப் பக்கத்தில் இருக்கும் கோபுரத்தின் தென்பால் விமானத்துடன் கூடிய ஒரு தனிக் கோயிலாக இருக்கின்றது.

திருக்கடவூர்க் குங்கிலியக் கலைய நாயனாரது மனைவியாரின் திருப்பெயர்: `நீலாயி` என்பது இவ்வம்மையாரின் திருப்பெயராகும். இச் செய்தி இரண்டாம் பிராகாரத்தின் தென்புறச் சுவரில் பொறிக்கப் பெற்றுள்ள முதற் குலோத்துங்கசோழன் கல்வெட்டால் விளங்குகின்றது. இப்பெயரைச் சைவமக்கள் கண்டு மகிழ்வுறுவர் என்பது திண்ணம்.

எடுப்பிக்கப்பெற்ற திருவீதி: திருஆப்பாடி உடையாரும், திருத்தாடகை ஈச்சரம் உடையாரும் திருநாளில் கொள்ளிடத்தில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுவதற்கு இராஜகம்பீரன் என்ற திருநாமத்தால் இரண்டாம் இராஜராஜன் காலத்தில் திருவீதி எடுக்கப் பெற்றது.

கோயிலைச் சோழமன்னர்கள் புரந்துவந்த விதம்: சோழமன்னர்களும் அவர்களது சேனாதிபதிகளும் அடிக்கடி இக்கோயிலுக்கு எழுந்தருளி இக்கோயிலைச் சுற்றிப் பார்த்தும், பண்டாரத்தைச் சோதித்தும் வந்தனர்.

அவ்வாறு செய்து வந்த காலங்களில் இக்கோயில் தேவகன்மிகள் கோயில் பண்டாரத்திலிருந்து திருவாபரணம், பரிகலச்சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

அபராதத்தைக் கொடுக்க உபாயம் இல்லாதவர் அவருடைய இக்கோயில் உரிமையை விற்று அபராதத்தைச் செலுத்தி வந்தனர்.

இச் செய்திகள் அனைத்தையும் ``அதிராசேந்திரதேவர்க்கு யாண்டு மூன்றாவது இராஜராஜமூவேந்தவேளார் இத் தேவர் பண்டாரம் சோதித்தவிடத்து`` ``திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு எட்டாவது சேனாபதிகள் பல்லவராசாயித்தேவர் பண்டாரம் சோதித்த விடத்து``, ``யாண்டு இருபத்தொன்பதாவது சேனாபதிகள் நந்தியராசா இத்தேவர் பண்டாரஞ் சோதித்த விடத்து`, ``ஸ்வஸ்திஸ்ரீ யாண்டு (14) நாள் முந்நூற்றி..................... டு திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருப்பனந்தாளுடையாரைக் கும்பிட்டுத் திருச்சுற்று மாளிகையிலே எழுந்தருள நீலாயிகுங்குலியக் கலையர்க்கு .....................................சாத்தியருளும் திருவாபரணமும் பரிகலச் சின்னமும் அழித்துக் கொண்டு கடமை செய்திதெனநென்று திருவாய் மொழிந்தருள அவர்களுக்குக் காசு கொடுக்க உபாயமில்லாமையால்`` எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதிகளால் அறியலாம்.

வேறு செய்திகள்: இத் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள இடவை என்ற ஊரைப்பற்றியும் அதற்குப் பாயும் இடவைவாய்க்காலைப்பற்றியும் இவ்வூர்க் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இந்த இடவைக்குப் பாண்டியனை வென்கண்ட சோழ சதுர் வேதி மங்கலம் என்ற வேறு பெயரும் உண்டு. இங்கே முதலாம் ஆதித்தசோழன் பாண்டியனோடு பொருது அவனைப் புறங்காட்டி ஓடச்செய்தான். அதுகருதியே இடவைக்கு இப்பெயர் உண்டாயிற்று. ``இன்னம்பர் ஏரிடவை ஏமப்பேறூர்`` என்ற தேவாரப்பகுதியால் இவ்விடவை ஒரு வைப்புத்தலம் என்று பெறப்படுகின்றது.

திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறைக்குப் போகும் பெருவழியில் இடையார் நல்லூர் என்னும் ஊர் இருக்கின்றது. அதை இடவையாகக் கொள்ளுதற்கு இல்லை.

முதலாம் இராஜராஜசோழனின் ஒரே ஆண்டில் பொறிக்கப்பெற்ற ஒரே கல்வெட்டு இடையார்நல்லூர் வேறு, இடவை வேறு என்பதை உணர்த்துகின்றது. சகம் 1369 இல் (கி.பி. 1447) விசய நகர வேந்தர் ஆகிய தேவராயமகாராயரின் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவர் காலத்தில் செதுக்கப்பெற்ற இக் கோயில் கல்வெட்டு இடவை என்ற ஊரிலுள்ள காராம்பிச்செட்டு நாராயணப்பட்டர் தாடகை ஈச்சரத்துப் பெருமானுக்கு வைகாசித் திருவிழாவிற்கு நிலம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. எனவே கி.பி. 1447 லும் இவ்வூர் இருந்தது என்று பெறப்படுகின்றது

(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1908, 1914, 1932 No.28, 29-47, 74-80.

குறிப்பு: தருமை ஆதீனத்தில் இருபத்தைந்தாம் பட்டத்தில் அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் கட்டளையிட்டருளியவாறு 1946 இல் இக்கோயில் கல்வெட்டுக்களைப் படித்துச் செந்தமிழ்ச் செல்வியில் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கமே இது.)

திருப்பனந்தாளில் மாடக்கோயில் அமைப்புடன் ஒரு சிவன்கோயில் தருமை ஆதீன அருளாட்சியில் இருக்கின்றது. அக்கோயிலில் மிகப் பழங்காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் அக்கோயிலைத் திருவிசயனீச்சரம் என்று குறிப்பிடுகின்றன. அது விசயனீச்சரம் அன்று. அசனீச்சரம் என்பதை இத்தாடகை ஈச்சரமுடையார் கோயில் மடைப்பள்ளிவாசல் அருகாலில் செதுக்கப் பெற்றுள்ள குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு நன்கு அறிவிக்கின்றது.

`அசனீச்சரம்` என்றால் பிரமனால் பூசிக்கப்பெற்ற கோயில் என்று பொருள். அவ்வாசல் படியின் மற்றொரு அருகாலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு இவ்வூரில் வேளூர் கிழவன் திருவையாறு தேவனான இராஜேந்திரசோழப் பல்லவரையனால் `இருநூற்றுப் பதினொருவன்` என்னும் பெயருள்ள ஒரு குளத்தை வெட்டிய செய்தி பெறப்படுகின்றது.

கருப்ப இல்லிலுள்ள கல்வெட்டுப் பகுதியால் இவ்வூர்க்கு அண்மையில் ஓடும் மண்ணியாற்றுக்குக் `குஞ்சரமல்லன்` என்ற வேறு பெயரும் உண்டென்று பெறப்படு கின்றது.

இவ்வூர்க்கு வடக்கே சுமார் பத்துமைல் தொலைவில் உள்ள கங்கைகொண்ட சோழேச்சரத்தில் சோழமன்னர்களுடைய கல் வெட்டுக்கள் இல்லை.

எனினும் இத்திருப்பனந்தாள் கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திரன் காலத்தில் சோழமன்னர்களுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் வீடு இருந்ததைக் குறிப்பிடுகின்றது.

இரட்டபாடி ஏழரை இலக்கமுங் கொண்டு ஆகவமல்லனை இருமடிவென் கொண்ட உலகுய்ய வந்தருளின அண்ணற்கு யாண்டு கக (11) ஆவது கங்கைகொண்ட சோழபுரத்து வீட்டினுள்ளால் குளிக்குமிடத்துத்தானஞ்செய்தருள இருந்து`` என்பது அதைக் குறிக்கும் கல்வெட்டுப் பகுதியாகும்.

 
 
சிற்பி சிற்பி