பந்தணைநல்லூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு காம்பன்னதோளியார் உடனுறை பசுபதீசுவரர்


மரம்: கொன்றை
குளம்: பசு தீர்த்தம்

பதிகங்கள்: இடறினார்கூற் -3 -121 திருஞானசம்பந்தர்
நோதங்க -6 -10 திருநாவுக்கரசர்

முகவரி: பந்தணைநல்லூர் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 609807
தொபே. 0435 2450595

இறைவி ஆடிய பந்துவந்தணைந்த ஊர் என்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது. இது மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் குத்தாலம் தொடர் வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 9 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

இறைவர் திருப்பெயர் - பசுபதீசுவரர். இறைவியின் திருப்பெயர் - காம்பன்னதோளியார். இப்பெயர் ``காம்பேய்தோளி பற்றாகும் பாகத்தார்`` என இவ்வூர்ப்ப பதிகத்தில் அப்பர் பெருமானால் எடுத்தாளப்பெற்றுள்ளது. மரம் - கொன்றை.

தேவகன்னியர்களும் காமதேனுவும் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இத்தலத்திற்கு இருக்கின்றன.




கல்வெட்டு:

இவ்வூர்ச்சிவன் கோயிலில் சோழமன்னர்களில், முதலாம் இராஜராஜ சோழன், விக்கிரம சோழன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங் களிலும், விசயநகர வேந்தர்களின் காலங்களிலும், பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, காலிங்கராயன் மீது பாடப்பெற்ற பாடல்களும் இருக்கின்றன. இக்கோயில் கல்வெட்டுக் களில் இறைவர் பசுபதி தேவர், பசுபதீஸ்வரர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனிகள்:

பரகேசரிவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராஜராஜ தேவர் காலத்துக் கல்வெட்டில் விக்கிரம சோழீச்சரமுடையாரையும், குலோத்துங்க சோழீச்சரமுடையாரையும் எழுந்தருளுவிக்கப்பெற்ற செய்திகள் கூறப்பெற்றுள்ளன. இவ்விருதிருமேனிகளும் இக்காலம் முதற்பிராகாரத்துக் கொன்றை மரத்தடியிலும் இரண்டாம் பிராகாரத் தில் இரண்டாம் கோபுரத்துத் தென்பாலுள்ள செங்கற் கோயிலிலும் எழுந்தருளியிருப்பவையாக இருத்தல் வேண்டும்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:

முதலாம் இராஜராஜன் கல்வெட்டில் இவ்வூர் பந்தணைநல்லூர் என்றே குறிக்கப்பெற்றுள்ளது. விக்கிரமசோழனது ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூர் வடகரை விருதராச பயங்கர வள நாட்டு விளத்தூர் நாட்டுப் பந்தணைநல்லூர் என்று குறிக்கப் பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நாட்டுத் தொகையில் விளத்தூர்நாட்டு விளத்தூர் என்று கூறப்பெற்றுள்ள ஊர், இப்பந்தணை நல்லூர்க்குப் பக்கத்தில் இருத்தல் வேண்டும்.

இராஜராஜ நாடகம்:

முதலாம் இராஜராஜன் காலத்தில் இக்கோயிலில் நட்டுவப் பங்கு மெய்மட்டிப்பங்கு இவைகளை உடையவனாய் இருந்தவன் ஹாஸியன் விக்கிரமாதித்தன் அச்சனான இராஜராஜ நாடகப்பெரியன் ஆவன். இதில் இராஜராஜ நாடகப்பெரியன் என்பது பட்டப்பெயராகும். இப்பட்டம் இராஜராஜ நாடகத்தில் இவனுக்கு இருந்த பெரும் புலமையை விளக்குவதாகும். இந்நூல் இதுபொழுது கிடைத்திலது.

கோயில் பொருளைத் திருடியவர் தண்டிக்கப்பட்ட விதம்:

இவ்வூர்ப் பசுபதீச்சரர்க்குத் திருவாபரணம் செய்யக்கொடுத்து இத்தேவர் பண்டாரத்தில் ஒடுக்கியிருந்த பொன்னிலே சிறிது பொன்னை இக்கோயிற் சிவப்பிராமணர் சிலர் கூறிட்டுக்கொண்ட குற்றத்திற்காக, இச்சிவப்பிராமணரும் இவர்கள் வம்சத்தாரும் இக்கோயிலிலும், இக்கோயிலில் எழுந்தருளிவித்த விக்கரம சோழீச்சரமுடையார் கோயிலிலும், குலோத்துங்க சோழீச்சர முடையார் கோயிலிலும் புகுதல் கூடாதென்றும், இவர்கள் கூறிட்டுக் கொண்ட குற்றத்திற்காக நூற்றெண்பது காசை இக்கோயில் திருப் பணிக்கு உடலாக ஒடுக்க வேண்டுமென்றும், அரசன் ஆணையிட்டுள் ளான். இது நிகழ்ந்தது, ``பூமருவிய பொழிலேழும் பொருப்பேழும் புனைந்தருளி`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியை யுடைய பரகேசரி வர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் ஆறாம் ஆண்டு ஐம்பத்தைந்தாம் நாளாகும்.

கல்வெட்டுக்களைப் பாதுகாத்தவிதம்:

`பழங்கல்வெட்டிற் கண்டபடி` என்று முதலில் எழுதப்பெற்று, அதன்கீழ் ``ஸ்வஸ்திஷ்ரீ கோராஜகேஸரிவர்மற்கு யாண்டு (10) பந்தணைநல்லூர்ப் பசுபதி தேவற்கு`` என இக்கோயில் அர்த்த மண்டபத்தின் தென்புறத்தில் ஒரு(See the Annual reports on South Indian Epigraphy for the year 1931 No. 69-74, year 1932 No. 115-120.)

(குறிப்பு: இக்கோயில் கல்வெட்டுக்களை நேரில் படித்து வரலாறு எழுதப்பட்டுள்ளது.)கல்வெட்டுத் தொடங்குகிறது. இதனால் கோயிலைப் புதுப்பிக்குங்காலை அதில் கல்வெட்டு இருந்தால் அதை அவ்வாறே புதுப்பித்த கோயிலில் செதுக்கி வைப்பது பண்டைய வழக்கமென்று தெரிகின்றது.

காலிங்கன் எல்லனைப்பற்றிய கல்வெட்டுப் பாடல்கள்:

இப்பாடல்கள் முதற்கோபுரத்து வாசலின் வடபால் சுவரில் இருக்கின்றன. இவைகள் காலிங்கனது புகழைப்பற்றிக் கூறுகின்றன. இவன் தமிழில் மிக்க அன்புடையவன் என்றும், கொடையில் பாரியிலும் மேம்பட்டவன் என்றும், பலவாறாகப் பேசப்படுகின்றான். இக்கல்வெட்டுக்களின் எழுத்துக்களை நோக்கின் இவன் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனாதல் வேண்டும். இப்பாடல்களில் ஒன்று பின்வருமாறு:-

``நாலங்க வாளிபெற்றார் நாரியரே பாரியினு

மேலங்க மான கொடைவேளான் - காலிங்க

னெல்லனுக் கேபெறுமோ விந்திரநீ லங்கருப்பு

வில்லன்கைக் கேபெறுமோ மீன்``.

 
 
சிற்பி சிற்பி