நல்லூர் (திருநல்லூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கல்யாணசுந்தரி உடனுறை கல்யாணசுந்தரேசுவரர்


மரம்: வில்வம்
குளம்: சப்தசாகர தீர்த்தம்

பதிகங்கள்: கொட்டும்பறை -1 -86 திருஞானசம்பந்தர்
பெண்ணமருந் -2 -57 திருஞானசம்பந்தர்
வண்டிரிய -3 -83 திருஞானசம்பந்தர்
அட்டு மினில் -4 -97 திருநாவுக்கரசர்
நினைந்துரு -6 -14 திருநாவுக்கரசர்

முகவரி: சுந்தரப்பெருமாள் கோயில்
வலங்கைமான் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 614208
தொபே. 9363141676

கும்பகோணம் - தஞ்சை தொடர்வண்டிப் பாதையில், சுந்தரப் பெருமாள் கோயில் தொடர்வண்டி நிலையத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள இருபதாவது தலமாகும்.

இறைவர் திருப்பெயர் கல்யாணசுந்தரேசுவரர். இறைவி திருப்பெயர் கல்யாணசுந்தரி. தீர்த்தம் சப்தசாகரதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.

திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தை அப்பர்பெருமான் வழிபட்டு, அவரது திருவடியைத் தன் தலைமேல் வைத்தருள வேண்டுமென்று வேண்ட, அவர் ``நல்லூருக்கு வா ஆங்கே நின் நினைப்பதனை முடிக்கின்றோம்`` என்று கூறியருள அவ்வாறே அப்பர்பெருமான் அங்குவர, நல்லூர்ப்பெருமான் தன் திருவடியை அப்பர் தலைமேல் வைத்துத் திருவடி தீட்சைசெய்த பதியாகும் இது.

இச்செய்தி, ``நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே`` (திருத்தாண்டகம் திருப்பாடல் 4) என்னும் தேவாரப் பகுதியால் அறியலாகும்.

சிவனடியார்களுக்குக் கந்தை, கீளுடை கோவணம் இவைகளைக் கருத்தறிந்து உதவிவந்த அமர்நீதி நாயனார்க்கும் அவரது குடும்பத்தார்க்கும் முத்தியளித்த தலம். இச்செய்தியைத் திருநாவுக்கரசு நாயனார், இவ்வூர்த் திருவிருத்தம் ஏழாம் திருப்பாட்டில்,

``நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடந்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொடு மங்கோர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே``
எனச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

அகத்திய முனிவருக்குக் கல்யாணக்கோலத்தை இப்பதியில் சிவபெருமான் காட்டியருளினார். இவ்வூர்க்கு ஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசுநாயனார் பதிகங்கள் இரண்டு ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.

இக்கோயில் மாடக்கோயில் அமைப்பு வாய்ந்தது. இத் தலத்தில் வைகாசி மாதத்தில் ஏழூர் விழா நடந்துவருகின்றது. இலிங்கத் திருமேனியில் துவாரங்கள் காணப்படுகின்றன.

அமர்நீதி நாயனார், அவருடைய மனைவியார் இவர்களின் பிரதிமைகள் கற்சிலையிலும் செப்புச்சிலையிலும் இருக்கின்றன.



கல்வெட்டு:

இங்கே இருபத்துமூன்று கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்திரண்டு சோழர்களது. ஒன்று முஹாய்சரர் கல்வெட்டு இளங்கோயில் மகாதேவருக்கு விளக்குத்தானம் செய்யப்பட்டது. இளங்கோயில் என்றால் பாலாலயம் ஆகும். உத்தமசோழன் காலத்தில் மானக்குற்றை வீரநாராயணனார் ஸ்ரீ காரியமாக நியமிக்கப்பட்டார்.

இராஜராஜன் I காலத்தில் நாராயணன் ஏகவீரன் ஒரு மண்டபம் கட்டினான். நல்லூருக்கு அப்போது பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பேர் இருந்தது. வீர ராமநாதன் காலத்தில் அகோரவீரன் கோயிலுக்கு ஒரு பூதானம் செய்தான். விக்கிரம சிங்கதேவன் கோவிலுக்கு ஒரு நிலம் விற்றான். வாணகோவரையன் ஒரு விளக்குத் தானம்செய்தான்.

இராஜராஜன் III நாளில் கல்வெட்டில் கோயிலுக்குச் சேர்ந்த நிலங்களின் வரிசை கூறப்பட்டுள்ளது. அக்காலக் கல்வெட்டு ஒன்றில் தத்தனுடையார் ஈசானதேவர் என்ற ஆசிரியருக்கு அவர் மாணவி தன் கணவர் சொல்படி ஒரு மடம் மானம் செய்தது குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு விளக்குக்களுக்காக 200 காசு தரப்பட்டது. அகம்படி விநாயகப் பிள்ளையாருக்கு வீட்டு நிலமும் தோட்டமும் கொடுக்கப் பட்டன. அகம்படியார் கட்டின வீடும் 8 தென்னைமரங்களும் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன.

 
 
சிற்பி சிற்பி