சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானவர் திருமலைக்கொழுந்தர்


குளம்: காவிரி, சிவகங்கை

பதிகங்கள்: நன்றுடை -1 -98 திருஞானசம்பந்தர்
மட்டுவார்..செல்வரே -5 -85 திருநாவுக்கரசர்

முகவரி: மலைக்கோட்டை திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம், 620002
தொபே. 0431 2704621

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்று. இரயில், பேருந்து வசதிகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்திடங்களிலிருந்தும் செல்லலாம். இத்தலம் மிக விளக்க மானது. மலைக்காட்சியின் முதலிடமாக உள்ளது. காவிரிக்குத் தென் கரையில் அமைந்தது. கலாசாலைகளும், கல்லூரிகளும் நிறைந்தது. எல்லாவிதமான அறிவுத்துறையிலும் வளர்ச்சிக்குரிய இடமாக இருக்கிறது.

சரித்திர காலத்திலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்தே விளங்கிவருவது. சோழர் தலைநகரங்களில் ஒன்றாகிய உறையூரைத் தன்னகத்துக்கொண்டு விளங்குவது.

பெயர்க்காரணம்:

திரிசிராப்பள்ளி என்பதற்கு, திரிசிரன் என்னும் அரக்கன் பூசித்துப் பேறுபெற்றதனால், இப்பெயர்பெற்றது என்று புராணங் கூறும். இம்மலைக்கே மூன்று சிகரங்கள் உள்ளன. அதனால் திரிசிராப் பள்ளியெனப் பெற்றது என்று செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தப் பொருள்களில் வழங்கிய திருசிரப்பள்ளி திரிசிராப்பள்ளி ஆதற்கு என்ன விதியுண்டு என்பதை அறிஞர்கள் ஆய்ந்து முடிவுகாண்பார்களாக.

நமது சமயாசாரியப் பெருந்தகையார்கள் `சிராப்பள்ளிக் குன்றுடையானை`, `சிராப்பள்ளிச் செல்வன்` `சிரகிரி` எனவே வழங்குகின்றார்கள். திரிசிரா என்பதில் திரி என்பது மூன்று என்ற பொருள் குறித்த சொல்லாயின் அதனை விடுத்துச் சிராப்பள்ளி என்று வழங்கியிரார்கள். ஆதலால் அவர்கள் காலத்தில் திரு என்பதை அடைமொழியாகக் கொண்டதே சிராப்பள்ளி என்பதற்கு வேறு பொருள் இருந்திருக்கவேண்டும் என்பதனைக் கருத இடந்தருகின்றது.

``சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.

ஊர்ப்பெயரும்-கோயிற் பெயரும்: ஊர்ப்பெயர் சிற்றம்பர். கோயிற்பெயர் சிராப்பள்ளி. இதனை நன்கு விளக்குவது, இராஜராஜன் Iஆட்சியாண்டு 16 இல் வெட்டப் பெற்ற விக்கிரமசிங்க மூவேந்த வேளான் விளத்தூர் நாட்டில் நிலம் வாங்கி அதனைஉறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தான் என்ற கல்வெட்டுப் பகுதியாகும். வரகுண பாண்டியன் II ஆம் ஆண்டுக் கல்வெட்டும் இதனையே குறிக்கிறது. இன்னும் சில பகுதிகளிலும் சிற்றம்பர், சிற்றம்பர்நகர், சிற்றம்பர் பதியென இத்தலம் வழங்கப்படுகின்றது. ஆதலால் ஊர் சிற்றம்பர் எனவும், கோயில் சிராப்பள்ளி எனவும் வழங்கிவந்தமை தெளிவு.

மூர்த்தி: இறைவன்பெயர் தாயுமானவர் திருமலைக்கொழுந்தர், செவ்வந்திநாதர் எனவும், அம்மையின்பெயர் மட்டுவார்குழலம்மை எனவும் வழங்கும். வடமொழிவாணர் மாதுருபூதேசுவரர், சுகந்தகுந்தளாம்பிகையெனக் கூறுவர். கல்வெட்டுக்களில் இறைவன் திருமலைப் பெருமான் அடிகள் என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றனர். உச்சிப் பிள்ளையார், மாணிக்கவிநாயகர் ஆலயங்களும், மௌனமடம் முருகன் கோயிலும் மிகச்சிறப்புடையன.

தீர்த்தங்கள்: காவிரி,சிவகங்கை, நன்றுடையான், தீயதில்லான், பிரமதீர்த் தம் முதலியன உள்ளன. அவற்றுள் `நன்றுடையான்` `தீயதில்லான்` என்ற தீர்த்தங்கள் ஞானசம்பந்தர் தெய்வவாக்கிலும் திகழ்வன. இவையன்றித் தெப்பக்குளம் ஒன்றுண்டு. அது 16 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட விசுவநாத நாயகர் வெட்டுவித்தது.

இது மேருவின் சிகரங்களில் ஒன்று. ஆதிசேடனுக்கும், வாயுதேவனுக்கும் நடந்த சொற்போட்டியால் பிரிந்த சிகரங்களில், ஒன்று திருக்காளத்தி, மற்றொன்று திரிகோணமலை, மற்றொன்று திரிசிராமலை என்று புராணம் கூறும். கருவுயிர்க்க வருந்திய இரத்தினாவதியின் நிறைந்த அன்பிற்கிரங்கிப் பெருமானே தாயாக எழுந்தருளிப் பணிபல புரிந்து பாதுகாத்தார். ஆதலால் தாயுமானார் ஆயினார்.

செவ்வந்திப்பூவைத் திருடிய சிவத்திரவியாபகாரியான பூவாணிகனைக் கண்டிக்காத பராந்தகனது அரச அநீதியைக் கண்டு, சாரமாமுனிவர் வேண்டுகோட்படி பெருமான் மேற்குப் பக்கமாக உறையூரைப் பார்க்கத் திரும்பினார். மண் மாரியால் நகர் அழிந்தது. மன்னன் அழிந்தான். மன்னன் மனைவி கருவுற்றிருந்தாள். காவிரியில் வீழ்ந்தாள். அந்தணன் ஒருவன் பாதுகாத்தான். கரிகாலன் பிறந்தான். கருவுற்ற ஆதித்தசோழன் மனைவியாகிய காந்திமதிக்கு இறைவன் தானே தோன்றிக் காட்சி கொடுத்து, தான்றோன்றீசர் என்ற திருநாமம் பெற்ற வரலாறுகளும் புராணங்களில் பேசப்படுகின்றன.



கல்வெட்டு:

இங்குக் குகைகள் உள்ளன. இவை மகேந்திரன் காலத்தனவே என்பது குறிப்பிடப்பட்டது. ஒன்று மலைமேலுள்ளது. மற்றொன்று அடி வாரத்திலுள்ளது. மலைமேலுள்ள கோயில்களிலேயே கல்வெட்டுக் கள் மிகுதியாக உள்ளன. வடமொழியிலமைந்த எட்டு சுலோகங்கள் மகேந்திரவர்மனது மதமாற்றத்தையும் அதனால் அவன் செய்த சிவப்பணிகளையும் தெரிவிக்கின்றன. அவற்றில் கல்தச்சராலே இந்த அரசனுடைய புகழ் விரிந்து நீடித்திருக்க வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது ஒரு சுலோகம். இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நிரம்ப உள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் எழுந்த பிராமி எழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டாகும்(139 of 1938).

தொடர்ச்சியாகப் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பல்லவ கிரந்தத்தாலும், தமிழாலும் ஆக்கப்பெற்றன.

இராஜகேசரிவர்மன்: இவன் ஆட்சி பதினாறாம் ஆண்டில் சாகுபடிக்குக் கொண்டு வரப்படாத நிலங்களைக் குறைந்தவிலையாக ஐந்து கழஞ்சுக்கு விற்று, நிலம் விளைச்சலுக்கு வந்த பிறகு. நிலம் வாங்கியவர்கள் திருவிழாக் காலங்களில் சித்திரைத் திருநாளில் ஒன்பது நாட்களுக்குப் பன்மா கேசுவரர்களுக்கும் உணவு இடும்படி உத்தரவிட்டான்.(985 of 1013)

பாண்டியன் மாறன் சடையன்: இவன் ஆட்சி 4-ஆம் ஆண்டில் நிலமளித்திருக்கிறான். இதில் இறைவன் திருமலைப் பெருமான் என்றழைக்கப்படுகிறான்.(413,414 of 1904) வேங்கட தேவமகாராயர் சகம் 1351 வீரப்ப நாயக்கருடைய மேன்மைக்காக நிலமளித்தார். மதுரை விஜயரங்க சொக்கநாத நாயக்கருடைய காலத் தில் நரசபந்துலு என்னும் தன்வந்திரி வைத்தியருக்கு இறையிலியாக நிலமளிக்கப்பட்டது.(E.P.R. 1911 page 90)

அவ்வாறே திருமலைஅப்பராயத் தொண்டைமான் மகனும், திருமலைராயத் தொண்டைமான் பேரனுமான இராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் சகம் 1772-இல் கி.பி. 1805-இல் ஒராண்டிக்கோடி கிராமத்தைத் தேனாம்பட்டணம் இருளப்ப முதலியாரிடம் அளித்து, திருச்சிராப்பள்ளியில் அறச்சாலைநடத்த ஏற்பாடுசெய்தான் நல்லப்ப காலாட்க தோழராலும், ரங்கப்ப காலாட்க தோழராலும் அளிக்கப்பட்ட தேவதானங்களை அறிவிக்கும் செப்புப்பட்டயங்கள் உள. கல் வெட்டுக்களில் சிறப்பாகக் குகைக்கோயில் பின்சுவரில் திரிசிராமலை அந்தாதியொன்று எழுதப் பெற்றுள்ளது. அது 103 பாடல்களை உடையது. அதில் 104 ஆம் பாடலாக ``மாட மதுரை மணலூர் மதில் வேம்பை, யோடமர் சேய்ஞலூர் குண்டூரின் - நீடிய , நற்பதிக்கோன் நாரா யணன்சி ராமலைமேல், கற்பதித்தான் சொன்ன கவி`` என்றதால் நாராயணன் என்பவன் கல்வெட்டுவித்தான் என்று குறிப்பிடப்படுகிறது.

 
 
சிற்பி சிற்பி