தலைவாயில

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி.. | 2 | 3 |

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 5

நால்வர் காலம்

குடந்தை என். சேதுராமன் பி.எஸ்ஸி., டி.எம்..டி.,

இயக்குநர், இராமன்மற்றும் இராமன் வணிகக் குழுமம்.

சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். நால்வரின் காலங்களைப் பல அறிஞர்கள் பலகோணத்தில் ஆய்ந்து உள்ளனர். அவர்களின் ஆய்வுகளும் அணுகுமுறைகளும் ஆராய்ச்சி யாளர்களுக்குப் பெருவிருந்தாய் அமைகின்றன. அடியேன் இவ் ஆய் வில் இறங்குவதற்குமுன் அப்பெரியோர்களுக்கு எனது வணக்கத்தை முதற்கண் கூறி, ஆராய்ச்சியைத் துவக்குகிறேன். பலபுதிய செய்தி களை ஆங்காங்கே காணலாம்.

நால்வரின் கால ஆராய்ச்சிக்கு மூலக் கருவூலங்களாகத் துணை நிற்பவை முறையே பாண்டியர் வரலாறு, பல்லவர் வரலாறு, பழங்காலச் செப்பேடுகள், கல்வெட்டுகள், வானசாத்திரம், தேவாரம், பெரியபுராணம் ஆகியவை ஆகும். அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் ஆய்விற்கு அடித் தளமாக அமைகின்றன. அவைகள் தக்க இடத்தில் குறிப்பிடப்படும்.

திருஞானசம்பந்தர் காலம் :

திருஞானசம்பந்தரின் காலத்தை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பாக, பாண்டியர் காலத்தையும், வம்சாவழியையும் அறிவது அவசியம். ஆறாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை அரசாண்ட பாண்டிய மன்னர்கள் யாவர்? அவர்களின் காலம் எது? இவ்வினாக்களுக்குரிய விடைகளைப் பாண்டியர் செப்பேடுகள் பத்தும், அம்மன்னர்களின் கல்வெட்டுகளும் நமக்கு அளிக்கின்றன. அண்மைக் காலத்தில் பாண்டியரின் வரலாறு விஞ்ஞான ரீதியாக ஆராயப்பட்டது. இவ்வாய்வின்படி ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை அரசு புரிந்த பாண்டியரின் வம்சாவழிப் பட்டியல் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது. (பாண்டியர் செப்பேடுகள் பத்து - தமிழ் வரலாற்றுக்கழகம் - பதிப்பு 1967.)

ஒவ்வொரு மன்னனது காலமும் எவ்வாறு நிர்ணயம் செய்யப் படுகிறது என்பதைத் தக்க இடங்களில் சான்றுகளுடன் காண்போம்.

முற்காலப் பாண்டியர்

1. பாண்டியன் கடுங்கோன் (சுமார் கி.ி. 550)

(களப்பிரரை ஒழித்து, மதுரையில் மீண்டும் பாண்டியப் பேரரசைத் தாபித்தவன்)

2. மாறவர்மன் அவனி சூளாமணி

3. சேந்தன்

4. மாறவர்மன் அரிகேசரி (630-680)

(நெல்வேலிப் போரில் சேரனை வென்றான். புலியூரில் கேரளனை வென்றவன் - அநேக இரண்ய கர்ப்பம், துலா பாரம் தானங்களைப் பலமுறை செய்தவன். பாண்டி நாட்டில் மங்கலாபுரம் என்ற ஊரை நிர்மாணித்தான்.)

5. கோச்சடையன் ரணதீரன் (680-730)

(மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தான்.)

6. ஷ்ரீ மாறன் இராஜசிம்மன் (730-768)

(பல்லவ மல்லனை வென்றவன்)

7. நெடுஞ்சடையன் பராந்தகன் - முதல் வரகுணன் (768-811) (பரம வைணவன்)

8. ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லவன் (811-860)

(சேரனையும், சிங்களவரையும் வென்றவன்)

 

12. மாறவர்மன் இராஜசிம்மன்

(911-931)

பாண்டியர் செப்பேடு பத்தில், குறிப்பாக வேள்விக்குடி செப் பேடுகள், சீவரமங்கல செப்பேடுகள், தளவாய்புரம் செப்பேடுகள், சின்னமனூர் பெரிய செப்பேடுகள் ஆகியவைகளை ஊன்றிக் கவனித்தால் ஏழாவது மன்னனாகிய நெடுஞ்சடையன் பராந்தகனே முதல் வரகுணன் என்பதை எளிதில் அறியலாம். (Epigraphica Indica XXXII page 271) சாளக்கிராமத்தில் உள்ள வரகுணஈஸ்வரமுடையர் கோயிலுக்குத் தேவதான நிலங்கள் இறையிலியாக அளிக்கப்பட்டன என்று கூறுகிறது. (E.I. XXVIII No. 7) இதனால் ஷ்ரீ வல்லபன் தன் தந்தை வரகுணன் பெயரால் ஒரு சிவன் கோயிலை எழுப்பினான் என்பதை அறியலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய வரகுணனுக்கு உரியவை, கரவந்த புர ஆதிவாசி வைச்சியன், பாண்டி அமிர்தமங்கல வரையினனாகிய சாத்தன் கணபதி என்பான், சம்புவின் திருக்கோயிலையும், திருக் குளத்தையும் திருத்துவித்தான் என்றும், அவனது மனைவியாக நக்கன் கொற்றியார் துர்க்கைக்கும், சேட்டைக்கும் கோயில் எடுப்பித்தாள் என்றும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. மன்னனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் கலியுக வருடம் 3874இல் தை மாதத்தில் இத்திருப் பணிகள் செய்யப்பட்டன. (E.I. XXXVI No. 5). கல்வெட்டின் காலம் கி.ி. 774 சனவரி மாதம் ஆகும்.

மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலை நரசிங்கபெருமான் குடவரைக் கோயிலில் இம்மன்னனுக்கு உரிய இரு கல்வெட்டுகள் உள்ளன. மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி இக் குடவரைக் கோயிலை எடுப்பித்தார் என்றும், அவர் இறந்துவிடவே, அவரது தம்பியாகிய மாறன் எயினன் என்பவர் கோயிலைக் கட்டி முடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions Volumes XIV Nos. 1 and 2; E.I. VIII No. 33). இக்கல்வெட்டுகளில், மன்ன னின் மூன்றாம் ஆண்டு, கலியுக வருடம் 3871, கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை குறிக்கப்படுகின்றன. இதன் காலம் கி.ி. 770, நவம்பர் மாதம் நான்காம் தேதி ஆகும். (E.I. XXXVI page 115)

திருப்பரங்குன்றம் ஆனைமலைக் கல்வெட்டுகளின் காலங் களைப் பின்னோக்கிக் கணக்கிட்டால், கி.ி. 768 இல் சனவரியில் இருந்து நவம்பர் மாதத்திற்குள் ஏதோ ஒருநாளில் மன்னன் முடி சூடினான் என்பதை அறியலாம். நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணன் கி.ி. 768இல் முடிசூடியவன் என்னும் செய்தி ஆய்விற்கு ஒரு பலத்த அஸ்திவாரமாக அமைகிறது.

கி.ி. 770க்கு உரிய ஆனைமலைக் கல்வெட்டில் மன்னனின் மந்திரியாகிய மதுரகவி என்னும் மாறன்காரி குறிப்பிடப்படுகிறார். இவர் நம்மாழ்வாருடன் தொடர்பு உடையவர் என்பதை இலக்கியங் களால் அறியலாம். (E.I. VIII page 319, S.I.I. XVI Introduction)

சீவரமங்கலச் செப்பேடுகள் நெடுஞ்சடையன் பராந்தகனாகிய முதல் வரகுணனை குரு சரிதை கொண்டாடியவன் என்றும், பரம வைணவன் என்றும் கூறுகின்றன. (Archaeological Report on Epigraphy 1926 - 27 page 87;பாண்டியன் செப்பேடு பத்து பக்கம் XXIV) நம்மாழ்வார் வரகுணமங்கை என்னும் திருமால் தலத்திற்கு மங்களா சாசனம் அருளினார் என்பதும் அறியத்தக்கது. முதல் வரகுணனுக்கு சிரீவரன் என்னும் விருதுப்பெயர் இருந்ததைச் செப்பேடுகள் கூறுகின்றன. நம்மாழ்வார் சிரீவர மங்கை என்னும் தலத்திற்கு (நாங்குநேரி) மங்களாசாசனம் செய்துள்ளார். சிந்தனைக்கு உரிய இச்செய்திகளினால் முதலாம் வரகுணன் வைணவத்தில் பெரிதும் ஈடுபட்டவன் என்பதை அறியலாம்.

முதல் வரகுணனின் தந்தை மாறவர்மன் ராஜசிம்மன் ஆவான். ராஜசிம்மன் பல்லவமல்லனைத் தோற்கடித்ததாகச் செப்பேடுகள் கூறுகின்றன. இப்பல்லவ மல்லன் நந்திவர்மன் என்னும் பெயர் கொண்டவன். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். கி.ி. 730இல் தனது பன்னிரண்டாவது வயதில் முடிசூடி 65 ஆண்டுகள் (கி.ி. 795 வரை) அரசாண்டவன். (E.I. XXIX page 92; S.I.I. IV No. 135 section "d" - A.R.E. 666 of 1922 Nandipotavarman regnal year 65) ஆகவே வரகுணனின் தந்தையான ராஜசிம்மனின் காலத்தைச் சுமார் 730 முதல் 768 வரை என்று கொள்ளலாம். ராஜசிம்மனின் தந்தை கோச்சடையன் ரணதீரன் ஆவான். இவன் சாளுக்கியர்களை மங்கலாபுரம் என்னும் இடத்தில் தோற்கடித்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. மங்கலா புரம் என்பது பாண்டி நாட்டில் உள்ள ஊர். இவ்வூர் இவன் தந்தை மாறவர்மன் அரிகேசரியால் நிர்மாணிக்கப்பட்டது என்பதைப் பின்னால் காண்போம். இவன் காலத்தை 680இலிருந்து 730 வரை என்று கொள்ளலாம். பின் கூறப்படும் சரித்திர நிகழ்ச்சிகளும், ரண தீரனின் தந்தையின் காலமும் அக்கருத்திற்குத் துணை நிற்கும்.

கோச்சடையன் ரணதீரன் மங்கலாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கடித்தது எப்போது என்ற வினாவிற்குத் திட்டவட்டமாக இப்போது விடை அளிப்பதற்கு இல்லை. சாளுக்கிய நாட்டில் முதலாம் விக்கிரமாதித்தன் கி.ி. 654 முதல் 681 வரை அரசாண்டவன். இவன் 647இல் பல்லவரை வென்று சோழமண்டலத்தில் ஊடுருவி உறையூரில் முகாமிட்டான். தொடர்ந்து பாண்டி மண்டலத்திலும் படையெடுத் திருக்கலாம். அப்போது இளவலான பாண்டியன் ரணதீரன் சாளுக்கிய விக்கிரமாதித்யனை மங்கலாபுரத்தில் தோற்கடித்து இருக்கலாம். (E.I. X No. 22; E.I. XXVII No. 20) சாளுக்கிய விக்கிரமாதித்தனின் மகன் வினயாதித்தன் 681 முதல் 696 வரை அரசாண்டவன். இவன் சோழ, கேரள, பாண்டிய, பல்லவரின் கூட்டணியை முறியடித்ததாகச் சாளுக்கியரின் செப்பேடுகள் கூறு கின்றன. ( E.I. IX page 201) எப்படி இருப்பினும் போர் நடந்த காலத்தை நிர்ணயிக்கும் வகையில் இடைவெளி இருபது ஆண்டுகளுக்கு மேல் இல்லை. தந்தையால் நிர்மாணிக்கப்பட்ட மங்கலாபுரத்தில் மகன் ரணதீரன் சாளுக்கியரைத் தோற்கடித்தான் என்னும் வரலாற்று வடிவமே நமக்குத் தேவையானது.

ரணதீரனின் தந்தை மாறவர்மன் அரிகேசரி ஆவான். அரி கேசரி, நெல்வேலிப் போரில் சேரனையும், புலியூர்ப்போரில் கேரளனையும் வென்றவன் என்றும், எண்ணற்ற துலாபாரமும், இரண்ய கர்ப்ப தானங்களும் செய்தவன் என்றும் செப்பேடுகள் கூறு கின்றன. இவனது காலம் 680க்கு முன் விழுகின்றது. இந்தக் கட்டத்தில், பெரிய புராணம், ஏனாதிக் கல்வெட்டு, மதுரை வைகைக் கல்வெட்டு ஆகியவைகளை நோக்குவோம்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவான். (630 - 668) மேலைச் சாளுக்கியர்களுக்கும், பல்லவர்களுக்கும் தீராத பகைமை இருந்தது. கி.ி. 642இல் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தான். (Sastri - A. History of South India - Page 151 Edition 1971) சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அவ்வூரே இன்று பதாமி என்று விளங்குகின்றது. அவ்வூரில் உள்ள மல்லிகார்ச் சுனர் ஆலயத்துப் பக்கத்தில் உள்ள பாறையில் நரசிம்மவர்மனது கல்வெட்டை இன்றும் காணலாம். நரசிம்மவர்மனும் வாதாபி கொண்டவன் என்று அழைக்கப்படலானான்.

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில், சிறுத்தொண்டர் நாயனாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, வாதாபிப் போரைப் பற்றி விரிவாய் எடுத்துரைப்பர். சிறுத்தொண்டரின் இயற்பெயர் பரஞ்சோதி என்பது ஆகும். இவர் அவதரித்த ஊர் சோழநாட்டுத் திருச்செங் காட்டங்குடி. பரஞ்சோதி மன்னனிடத்து யானைப்படைத் தலைவராய்த் திகழ்ந்தவர். மன்னவர்க்குத் தண்டு போய் வாதாபித் தொன்னகரம் துக ளாகச் செய்து பன்மணியும், நிதிக்குவையும் பரிசுத்தொகையும் இன் னும் பலவும் மிகக் கொணர்ந்து அரசன் முன் வைத்தனர். மன்னனும் மகிழ்ந்து பரஞ்சோதியைப் போற்றினான். பரஞ்சோதியார் வாதாபிப் போரில் கலந்து கொண்டது கி.ி. 642 என்பது வெள்ளிடை மலை.

பரஞ்சோதியார் போர்த் தொழிலை வெறுத்தார். சிவபெரு மான்பால் பக்தி கொண்டு, மன்னனிடம் விடைபெற்று, தனது பதி யாகிய திருச்செங்காட்டங்குடி, வந்தமர்ந்து, திருத்தொண்டில் ஈடுபாடு கொண்டனர். சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். திருவெண் காட்டு நங்கை என்னும் நல்லாளை மணந்தார். அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான், தங்கள் மகனுக்குச் சீராளன் என்னும் பெயரை வைத்தனர். (திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் உள்ள முதல் இராஜராஜனின் 19 வது ஆட்சிக் கல்வெட்டுக்கள் இரண்டில் (கி.ி. 1004) இறைவனின் பெயர் சீராளன் என்று கூறப்பட்டு உள்ளது. "திருச்செங்காட்டங்குடி மகா தேவர் சீராள தேவர்க்குப் பணிசெய்து சிறுத்தொண்ட நம்பிக்குத் திருவிழா எடுப்பதற்கும், தேவதானம் திருச்செங்காட்டங்குடி சீராளத் தேவர் சித்திரைத் திருவாதிரைத் திருநாளில் சிறுத்தொண்டர் மாளிகையில் எழுந்தருளவும்" நிவந்தங்கள் அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறைவனின் பெயர் சீராளன் என்பது பெரியபுராணத்திலும் தேவாரங்களிலும் காணப்படவில்லை. கல்வெட்டில் இச்செய்தி கூறப்படுவது உய்த்து உணரத்தக்கது. தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நன்னிலம் கல்வெட்டுகள் முதல் தொகுதியில் எண்கள் 67, 68 காண்க.)தமத மகன் சீராளனைச் செழுங்கலைகள் பலப் பயிலப் பள்ளியினில் இருத்தினர். அவ்வமயம் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடிக்கு வந்து சிறுத்தொண்டரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடி இறைவன்பால் பதிகங்கள் இயற்றி அருளினார். இந்நிகழ்ச்சிகளை நோக்குங்கால், திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்தது சுமார் கி.ி. 650 என்று கொள்ளலாம்.

பலதலங்கள் ஏகிய பின்பு திருஞானசம்பந்தர் மதுரையம்பதி வந்தடைந்தார். அப்போது மதுரையில் நெடுமாறன் என்னும் பாண்டியன் ஆட்சிபுரிந்து வந்தான். இவன் மனைவியே சோழனின் மகளாகிய மங்கையர்க்கரசியார். மன்னனின் மந்திரி குலச்சிறையார் ஆவர். பாண்டி மன்னன் சைன மதப்பற்று உடையவனாக இருந்தனன். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திருஞானசம்பந்தர், பாண்டி மன்னனைச் சைவ சமயத்தை ஏற்கும்படி செய்து அருளினர். மன்னனும் சைவ சமயத்தைத் தழுவி, திருத்தொன்டுகள் பலபுரிந்தனன். இம்மன்னனை நெல்வேலிப்போர் வென்ற நெடுமாறன் என்றும், நின்றசீர் நெடுமாற நாயனார் என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரும், நம்பியாண்டார் நம்பிகளும், சேக்கிழார் பெருமானும் குறிப்பிடுவர். நெல்வேலிப்போர் வென்ற பாண்டியன் நெடுமாறனைத் திருஞானசம்பந்தர் சந்தித்தது கி.பி. 652 இல் எனக் கொள்வதில் தவறில்லை.

பாண்டியரின் செப்பேடுகளின் கூற்றுப்படி கோச்சடையன் ரணதீரனின் தந்தையான நெல்வேலிப் போர் வென்ற மாறவர்மன் அரிகேசரியே நின்ற சீர் நெடுமாறநாயனார் என்பதை எளிதில் அறியலாம். செப்பேடுகளும் மாறவர்மன் அரிகேசரி நெல்வேலியில் சேரனை வென்றான் என்றும், புலியூரில் கேரளனை வென்றான் என்றும் கூறுகின்றன. சமீபத்தில் ஏனாதி என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு இதனை உறுதி செய்யும். இக்கல்வெட்டு வட்டெழுத்தில் உள்ளது. எழுத்தின் அமைதி 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சுட்டுகின்றது. கல்வெட்டைப் பார்ப்போம்.

தலைவாயில்

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...|| 2 | 3 |