ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11
பாடல் எண் : 1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

குறிப்புரை :

அன்னம் - வீட்டின்பம். ` பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் ` என்னும் திருவாசகத்தில் சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள் பயத்தல் காண்க. கடவுளை அன்னம் ( அமுதம் ) என்னும் சொல்லால் குறித்தலுமுண்டு. தான் இறவாது நின்று பிறர் இறப்பை நீக்குதலால். ` பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் ` என்னும் தேவாரத் திருப்பாடலில் அமுதம் என்ற சொல் வீடுபேறு என்னும் பொருள் பயக்குமாறறிக. இனி, தில்லையில் இன்றும் பாவாடை நிவேதனம் உண்டு. பண்டு இது மிகப் பெரிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். அன்னம் பாலிக்கும் தில்லை என்பது அது குறித்ததுமாம். சிறுமை - அம்பலம் சிற்றம்பலம். பேரம்பலம் இருத்தலின் பிறிதின் இயைபு நீக்கிய அடைகொளியாகும். சிதம்பரம் என்பது உணர்வு வெளி என்னும் பொருட்டு ; அஃது ஏனைய அம்பலங்களை நீக்கியதாதலின் அதுவும் அவ்வடைகொளியே. பொன்னம் - பொன்னுலக வாழ்க்கை. ஆகுபெயர். பொன் எனலும், பொன் - அம் எனப் பிரித்து உரைத்தலும் கூடும். பொன் என்னும் நிலைமொழி வருமொழியொடு புணருங்கால் அம்முப்பெறுதல் பெருவழக்கு. ` பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி ` ( தி.8 திருவெம்பாவை 16.) ` பொன்னஞ் சிலம்பு ` ( இறையனார் களவியல் மேற்கோள் சூ.18. 146) ` பொன்னங்கடுக்கை ` ( கந். கலி. 93) ` ` பொன்னங் கமலம் ` ( மீனாட்சி. பிள். 24) ` பொன்னங்குழை ` ( முத்து. பிள். 394) ` பொன்னங்கொடி ` ( முத்து. பிள். 424) பொன்னஞ். சிலை ` ( சிதம்பர. மும். 542) ` பொன்னங்குவடு ` ( சிந்தா - 2136) ` பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது ` ` பொன்னங்கட்டி ` என அம்முப்பெற்றது ( தொல். எழுத்து. நச். சூத் . 405). என் அன்பு எனப் பிரிக்க. அன்பு என்பது அம்பு என மருவிற்று. தென்பு - தெம்பு. வன்பு - வம்பு. ( வீண்பு - வீம்பு.) காண்பு - காம்பு. பாண்பு - பாம்பு முதலிய சொற்களால் வல்லெழுத்துக்கேற்ப மெல்லெழுத்துத் திரிதல் காண்க. என் நம்பு எனப் பிரித்து என் விருப்பம் எனலுமாம். ` நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல்காப்பியம் சொல். 329.) ஆலித்தல் - விரித்தல், பெருக்கல், களித்தல், நிறைதல் ` ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி.9 திருப்பல்லாண்டு ) அகலல் என்பதன் மருவாகிய ஆலல் என்னும் தொழிற் பெயர் வேறு ; ஆலித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு. ` அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்களெல்லாம் ` ( தி.12 திருநாட். 21.) ` ஆலிய முகிலின் கூட்டம் ` ( தி.12 திருநாட். 24.) என்னம் எனக் கொண்டு எத்தன்மையனவும் என்றுரைத்தலும் பொருந்தும். ` இன்னம் ...... பிறவியே ` ` மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே ` என்றார் முன்னும். ( தி.4. ப.8. பா.4.) உரை காண்க. பாலித்தல் - கொடுத்தருளல். எல்லோரும் பிறவாமையை வேண்டுதலாயிருக்க சுவாமிகள் திருக்கூத்தைக் காணும் பிறவியையே வேண்டினார். அக்காட்சி கண்ட அளவானே, இவ்வுடம்பு உள்ளபோதே, பரமுத்திப் பேரானந்த அதீத நிலையை எய்தித் திளைக்க வைத்தலின். தில்லைத் தரிசனம் பரமுத்தியானந்தத்தை இவ்வுடம்பு உள்ள போதே கொடுத்தலின், அத்தரிசனத்திற்கு வாயிலாகிய பிறவியை மேலும் வேண்டுவாராயினர்.

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
tillaiciṟṟampalam will supply me food;
will give me gold.
over and above that.
having seen my desire to increase in intensity in this world will it still grant me this human birth to desire pleasure (from worshipping him).
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
annam paalikku:n thillaichchi'r 'rampalam
ponnam paalikku maelumip poomisai
ennam paalikku maa'ruka'n dinpu'ra
innam paalikku moaip pi'raviyae.
சிற்பி