11. கொடிக்கவி
001 கட்டளைக் கலித்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4
பாடல் எண் : 4

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

அஞ்செழுத்தும்... நாலெழுத்தும் சிவாயநம என்கிற அஞ்செழுத்தும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தும், ஓம் நமசிவாய என்கிற ஆறெழுத்தும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தும் ஆன இப்படி உச்சரிக்கிற விதிப்படியே உச்சரித்து ; பிஞ்செழுத்தும்... நெஞ்சழுத்தி விதிப்படி உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை யறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும் மேலைப் பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் தன்னுடைய இருதயத்திலே வைக்கில் ; பேசும்... கொடி பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டறக் கூசாமல் அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.
பஞ்சாக்கர முதலாகிய மந்திரங்களை உச்சரித்து அதன் பிறகு அந்த மந்திரத்தினுடைய அட்சர சொரூபத்தை அறிந்து சத்தி சிவான்மகமாயிருக்கிற அட்சரத்தை இருதயத்திலே வைத்தால் அந்தச் சத்தி தானே சிவனை இரண்டறக் கலப்பிப்பளென்று பஞ்சாக் கரத்தினாலே மோட்சத்தை அடையும் படிக்குக் கொடி கட்டினேன்.
அஞ்செழுத்தும்... நெஞ்சழுத்தி பஞ்சாட்சரம் உச்சரிக்கிற முறைமையிலே தூல பஞ்சாட்சரம் சூக்கும பஞ்சாட்சரம் அதிசூக்கும பஞ்சாட்சரம் சூட்சுமாசூட்சும பஞ்சாட்சரமென்று உச்சரிக்கிற முறைமை நாலுவித முண்டு. அந்த முறைமை உச்சரித்து அந்தப் பஞ்சாட்சரத்தினுடைய சுபாவ மறிந்து அது ஏதென்னில், சிகாரம் சிவம், வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதம், மகாரம் மலம் ஆக இந்த முறைமையை யறிற்து இதிலே ஊன நடனமாகிய நகார மகாரத்திலே சென்று செனன மரணத்திலே போகாமல் ஞான நடனமாகிய சிகார வகாரத்தைப் பொருந்திச் சிகார முதலாக உச்சரித்து அப்படி உச்சரிக்கிற முறைமையும் விட்டு வகாரமாகிய ஞானந் தானாக நிற்கவே சிகாரமாகிய ஞேயத்திலே அழுத்துவிக்கும். அது எப்படி யென்னில், சத்தியாகிய வகார மிடமாகச் சிவமாகிய சிகாரத்தி னிடையிலே அழுந்தவே அத்தன்மை யுண்டாக்கும். அதற்கு உம் : நெஞ்சுவிடுதூதிலே (93) ‘அஞ்செழுத்தை, யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தி யுணர்த்தியதன், வைச்சிருக்கு மந்த வழியாக்கி’ என்றும், சிவப்பிரகாசத்தில் (91) ‘திருவெழுத்தஞ்சில்’ என்ற பாடத்திலும், திருவருட்பயனில் (83) ‘ஊன நடன,’ (89) ‘ஆசினவா’ என்ற குறள்களிலும் வரும் ஏதுக்களைக் கண்டு கொள்க. ஆனால் பஞ்சாட்சரத்தை உச்சரித்தாற் போதாதோ உச்சரிக்கவும் அதன்மேலே சத்தி சிவான்மகமாகிய எழுத்தினிடத்திலே நிற்கவும் அதன்மேலே மோட்சமுண்டாமென்றது ஏதென்னில், பஞ்சாட்சரத்தை உச்சரித்ததனாலே அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசிக்கும். அதற்கு உம் : சிவஞானபோதச் சூரணையில் (9) ‘பஞ்சாட்சரத்தை விதிப்படி உச்சரிக்க’ என்றது இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானம் வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாதலின் அது நீக்குதற்கெனக் கொள்க. இந்தப் பஞ்சாட்சர உச்சரிப்பிலே விளங்கின ஞானத்திலே நகார மகாரந் திரோதமலமென்றும் யகாரம் ஆன்மபோத மென்றும் மூன்றெழுத்தும் நீங்கி ஞானமேயாய் அந்த ஞானத்தினாலே சிகார வகாரத்தி னிடையிலே நின்றழுந்துகிறது வைச்சிருப்பு. அதற்கு உம் : திருவருட்பயனில் (89) ‘அருளினால் வாசியிடை நிற்க வழக்’ கென்பது கண்டுகொள்க. இப்படி ஞானத்திலே அழுந்துகிறோ மென்கிறதையும் விடவே சிவன்தானே இவனைக் கிரகித்துக் கொண்டும் இவன் செயலெல்லாந் தன் செயலாகவும் இவனுந் தானாகவே நிற்பன். இதற்கு உம் : திருவுந்தியாரில் (6) ‘நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன், தன்செயல் தானேயென் றுந்தீபற, தன்னையே தந்ததென் றுந்தீபற’ ஆக மூன்றுவகையுங் கண்டுகொள்க.

குறிப்புரை :

கொடிக்கவி யுரை முற்றும்
(இங்குப் பதிப்பித்த கொடிக்கவியுரை திருநெல்வேலி திரு. எம்.பி.எஸ். துரைசாமி முதலியாரவர்கள் அனுப்பி வைத்த ஏட்டுப் பிரதியிலுள்ளது. இதனை யொப்பு நோக்கற்குத் துணையாயிருந்தன இராசாங்கத்துக் கையெழுத்து நூல் நிலயத்துப் பிரதியும் அதனைப் பெரிதும் ஒத்த சிவஞான போத யந்திர சாலைப் பதிப்பும். இவ்வுரை விளக்கமாயுள்ள விரிந்தவுரை. இதனை யியற்றியவர் பெயர், இயற்றிய காலம் முதலியன விளங்கவில்லை.
எஸ். அனவரத விநாயகம் பிள்ளை)

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
anjsezhuththum eddezhuththum aa'rezhuththum :naalezhuththum
pinjsezhuththum maelaip peruvezhuththum - :nenjsazhuththip
paesum ezhuththudanae paesaa ezhuththinaiyum
koosaama'r kaaddak kodi.
சிற்பி