திருக்கடவூர் வீரட்டம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

திருவெண்ணீறு நிறைந்த திருமேனியை உடையவனே , புரியாகிய நூல் , ஒருபால் மாதினோடும் மற்றொரு பாற் பொருந்தி விளங்க , கூர்மை பொருந்திய முத்தலை வேல் ( சூலம் ) நீங்காதிருக்கின்ற அகங்கையினை உடைய , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லது வேறு யார் துணை !

குறிப்புரை :

` வளர் கங்கையின் ` எனப் பாடம் ஓதுவாரும் உளர் . ` அங்கையின் ` என்றது , ` கொன்றையன் ` என்பதன் இறுதிநிலையோடு முடிந்தது . ஆண்டு , ஐயுருபு கெட இன்சாரியை நின்றது . உம்மை சிறப்பு . ` என்னமுது `, என்றது , ` எனக்கு உரியதாகக் கிடைத்த அமுது ` என்றதாம் . மிருத்துவைக் கடப்பித்த பெருமானாகலின் , ` அமுதே என்று ` ஈண்டுப் பலவிடத்து அருளிச்செய்தார் . அட்ட வீரட்டத்துள் இத்தலம் , காலனைக் கடந்த வீரட்டமாதல் அறிக . இதனைச் சுவாமிகள் இத் திருப்பதிகத்து மூன்றாம் திருப்பாடலுள் எடுத்தோதியருளினார் . திருநாவுக்கரசு சுவாமிகள் திருவிருத்தத் திருப்பதிகம் முழுவதிலும் , பிற திருப்பதிகங்களுட் சில திருப்பாடல்களிலும் எடுத்தோதி யருளினார் . திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பதிகத்து இரண்டாம் திருப்பாடலில் எடுத்தோதியருளினார் . இனி , இத் திருத்தலப் பெருமானுக்கு , ` அமுதகடேசர் ` எனப் பெயர் வழங்குதல் , இத்திருப்பதிகத்துள் ஒன்றொழித்து ஏனைய திருப்பாடல்கள் எல்லாவற்றிலும் , ` என் அமுதே ` என்று அருளிச் செய்ததனோடு வைத்து உணரற்பாலது . இப்பெயர்க்குப் புராணம் வேறாகக் கூறுப . ` யாவர் ` என்பதன் திரிபாகிய யார் என்பது , ` ஆர் ` என மருவிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

பிறை பொருந்திய சடையை உடையவனே , பிரமன் தலையைக் கையில் ஏந்தி அதிற் பிச்சையை ஏற்கின்ற , வேதத்தை ஓதுகின்ற தேவனே , வேதத்தின் பொருளாய் உள்ளவனே , நஞ்சு தங்கிய கண்டத்தை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் இறைவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை ?

குறிப்புரை :

மறையை ஆர்த்தல் ( ஓதுதல் ), பலியேற்குமிடத்தில் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அன்றா லின்னிழற்கீழ் அறம்
நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்
தாய்மறை யோனுக்குமான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவனே , திருக்கடவூர்த் திருவீரட்டத்துள் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையாகிய பெருமானே , நீ , அன்று ஆல் நிழலின்கண் இருந்து நால்வர் முனிவர்கட்கு அருள்பண்ணி , காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய் ; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய் ; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை !

குறிப்புரை :

நால்வர்க்கு அறமுரைத்தமையும் , காலன் உயிரைக் கொன்றமையும் எல்லா முதன்மையையும் உணர்த்தும் குறிப்புக்களாகும் . ` நாள் ` என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது . ` மறையோனுக்கு நாள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` காலன் ` என்புழி ஐ யுருபு விரித்து , ` மறையோனுக்கு உயிர்கொடுத்தாய் ; என்றுரைப்பாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

போரா ருங்கரியின் னுரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா வென்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும் , அம் மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களை யுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே , கருமை பொருந்திய கண்டத்தை உடையாய் , திருக்கடவூரினுள் ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

` போர்த்து ` என்ற வினையெச்சம் , எண்ணின்கண் வந்தது . ` பொன்மேனியின்மேல் ` என்றது , யானைத் தோலினது இழி புணர்த்தி , அது போர்க்கலாகாமையைத் தோற்றுவித்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

கருமை பொருந்திய கண்டத்தையுடையவனே , யானையின் தோலைப் போர்த்தவனே , கையின்கண் பொருந்திநிற்கும் , படமெடுத்து ஆடுகின்ற பாம்பை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , நீ தப்பாது என் உயிரினுள் புகுந்தாய் ; அங்ஙனம் புகுந்ததன்றி இதுகாறும் வெளிப் போந்தறியாய் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

தப்பாது புகுந்தமையாவது , எல்லாப் பொருளிலும் புகுந்தவன் , தம் உயிரை யாதானுமோராற்றால் ஒழிந்துவிடாது , அதன் கண்ணும் புகுந்தமை . இயல்பாகவே நிறைந்து நின்றமையை , ஒருகாலத்துப் புகுந்ததுபோல அருளினார் , வியப்பினால் என்க . ` என் உயிர் ` என்றதனை , ` இராகுவினது தலை ` என்பதுபோலக் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிற
வாவுரு வானவனே
கண்ணா ருண்மணியே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

` நிலம் , நீர் , தீ , காற்று வானம் ` என்று சொல்ல வருகின்ற பூதங்களாகியும் . அப் பூதங்களாலாகிய , ` பெண் , ஆண் , அலி ` என்னும் உடம்புகளோடு காணப்படும் உயிர்களாகியும் அவற்றில் வேறற நின்று , நீ உருவங்கொள்ளுமிடத்து , யாதொரு பிறப்பினும் படாத திருமேனியைக் கொண்டு நிற்பவனே , கண்ணின் உள்ளாற் பொருந்தியுள்ள மணிபோல்பவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள எங்கள் தலைவனே , என்னுடைய அமுதம்போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை !

குறிப்புரை :

` கண் உள் ஆர் மணியே ` என்க . ` கண்ணாரும் மணியே ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

எரியார் புன்சடைமேல் இள
நாக மணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்டலை கொண்டவனே
கரியா ரீருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

தீப்போலப் பொருந்தியுள்ள புல்லிய சடையின் மேல் இளமையான பாம்பை அணிந்தவனே , நரிகள் பொருந்திய சுடலைக்கண் உள்ள , சிரிக்கும் வெண்டலையைக் கையில் கொண்டவனே , யானையினிடத்துப் பொருந்தியிருந்து உரிக்கப்பட்ட தோலை உடையவனே , திருக்கடவூரினுள் , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , எங்கள் அரிய பொருளானவனே , என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` இளநாகம் ` என்றதில் , இளமை , வலியின்மையைக் குறித்தது . வலியாவது கலுழனை வெல்லும் ஆற்றல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வேறா உன்னடியேன் விளங்
குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவ
னேஎன் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

ஒளி வீசுகின்ற குழையணிந்த காதினை உடையவனே , சிவனே , என்னுடைய செம்மையான விளக்கே , காறையாகப் பொருந்திய வெள்ளிய தந்தத்தை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` வீரட்டானம் ` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனே , உன் அடியவனாகிய யான் , உன்னையல்லது வேறுசிலர் கடவுளர் உளராக நினையேன் ; ஆதலின் , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` வேறு ` என்றவிடத்து , ` உளர் ` என்பது எஞ்சிநின்றது . ` கடவுளர் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` காறை ` என்பதன் ஐகாரம் தொகுக்கப்பட்டது . இப்பெயர்த்தாயதோர் அணிகலம் கழுத்தில் அணியப்படுவது என்பதனை , ` கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே ` ( தி .6 ப .4 பா .3.) என்றருளியவாற்றால் அறிக . மருப்பு , மாயோன் அவதாரமாகிய வராகத்தினது என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

அயனோ டன்றரியும் மடி
யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.

பொழிப்புரை :

முன்னொரு ஞான்று , பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடிப்போய்க் காணுதல் இயலாது நின்ற பொருளாய் உள்ளவனே , எங்கள் கடவுளே , மேலான ஒளிக்கும் மேலான ஒளியாய் இருப்பவனே , மிக்க நீர் பொருந்திய சடையை உடையவனே , திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் , என்னும் கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற பிறப்பில்லாதவனே ` என்னுடைய அமுதம் போல்பவனே , எனக்கு நீயல்லாது வேறு யார் துணை !

குறிப்புரை :

` அயன் ` இரண்டனுள் முன்னது முகமனாய் வந்த காரண இடுகுறியாயும் , பின்னது உண்மையான் வந்த காரணக் குறியா யும் நின்றன . மாயையும் ஒளியுடையதாகலின் , முன்னர் ` மேலான ஒளி ` என்றது உயிரை என்க . கயம் - மடு ; அது , மிக்க நீரை உணர்த்திற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் ` என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து , அழகிய திரு நாவலூரில் தோன்றியவனும் , திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின் , சிவலோகத்தில் இருத்தல் திண்ணம் .

குறிப்புரை :

ஏர்தல் - எழுதல் ; ஈண்டு , புலனாதல் என்னும் பொருட்டு . ` இறையையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலா யிற்று . ` ஆரூரன் ` என்றது , திருவாரூர் இறைவனை . இவர்தம் தந்தை யார்க்குத் தந்தையார் பெயரும் , ` ஆரூரர் ` எனக் குறிக்கப்படுதலின் , திருவாரூர்ப் பெருமானே இவர்தம் குடிக்கு வழிபடு கடவுளாதல் பெறுதும் . அதனால் , அப்பெருமானுக்கு அடியவராகத் தம்மைக் குறித்தருளினார் . ` அடித்தொண்டன் ` எனப் பின்னுங் கூறியது , தம் முன்னோர் போலத் திருநாவலூரில் வாழ்ந்து ஒரோவழி வந்து வழிபட்டு மீளாது , திருவாரூரிலே உறைந்து வழிபட்டமை பற்றி என்க . ` ஏத்த வல்லார் ` என்புழி , ` ஆயின் ` என்று ஒரு சொல் வருவிக்க . ஏகாரம் - தேற்றம் .
சிற்பி