திருவண்ணாமலை


பண் :

பாடல் எண் : 1

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.

பொழிப்புரை :

பார்வதிபாகனே ! மேம்பட்ட சோதியே ! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே ! மழுப் படையை ஏந்தியவனே ! ஆதியே ! தேவர்கட்குத்தலைவனே ! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே ! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன் .

குறிப்புரை :

மாமலர்கள் - சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களை . ஓதித் தூவி - சிவநாமங்களை ஓதி அருச்சித்து . மலர் தூவி நினையுமாறு - நின்னை அல்லால் நினையுமாறு ஒரு நினைவு இல்லேன் . ஓதிய நாமங்களுள் ` உமையவள் பங்கா , மிக்க சோதியே , துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே , அமரர்கோவே , அணி யணாமலையுளானே ` என்பனவும் அடங்கும் . நீதி - சிவாகமமுறை , நினையல்லாமல் ஓதித் தூவி நினையுமாறு மற்றெவரையும் நினைவு இல்லேன் , ` அண்ணாமலையனை மறந்துய்வனோ ` ( திருக்குறுந்தொகை ) என்று தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்த வுண்மைக்குச் சேக்கிழார் திருவாக்கே சான்றாதலறிக . ` உண்ணாமலை யுமையாளொடு முடனாகிய வொருவன் ` ஆதலின் ` உமையவள் பங்கா என்றும் , பேரழலுருவனாதலின் ,` மிக்க சோதியே என்றும் , அழலாய் நின்றவாறே நில்லாது , அவ்வரியயனிருவரும் ஏனைய எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டருளினான் ஆதலின் , ` துளங்கும் எண்டோட் சுடர் மழுப்படையினான் ` என்றும் அவனே மூவர்க்கும் முதல்வன் ( சதுரன் ) ஆதலின் ` ஆதியே ` என்றும் , எல்லாத் தேவர்க்கும் மகாதேவனாதலின் , ` அமரர் கோவே ` என்றும் , அத்தகைய பெறுதற்கு அரியன் ஆயினும் காட்சிக்கு எளியன் அணியன் ஆகி நினைக்க முத்திதருதலால் , ` அணி அணாமலையுளானே ` என்றும் , நெஞ்சம் அவனுக்கே இடமாக வைத்து இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்கும் அன்பே அமைந்தவராதலின் ` தொண்டனேன் ` ( தி .4 ப .63 பா .2.) என முன்னும் பின்னும் குறித்தற்குத்தக்க ஏதுவாய்ச் சிவாகம நீதிப்படி தமக்கையாரால் ஆட்கொள்வித்தமையை மறவாதவர் ஆதலின் , ` நீதியான் ` என்றும் , அவனுக்கே இடமாக்கிய நெஞ்சத்திற் பிறனுக்கு இடமின்மையால் , ` நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் ` என்றும் பாடியருளினார் பாவேந்தர் . நினைதல் (- மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடுணர்த்திற்று .

பண் :

பாடல் எண் : 2

பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.

பொழிப்புரை :

பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே ! நீலகண்டனே ! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே ! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே ! தேவனே ! தேவர்கள் தலைவனே ! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே ! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன் .

குறிப்புரை :

பண்தனை - பண்ணிசையினிமையை . ஆகுபெயர் . வென்ற - வெற்றி கொண்ட . இன்சொல் - இனியவாய சொற்களையுடைய . பாவை :- உவமவாகுபெயர் . கார்கொள் கொன்றை :- ` கண்ணி கார் நறுங்கொன்றை `. கடவுள் :- பாசஞான பசு ஞானங்களைக் கடந்த பதிஞானமூர்த்தி . அண்டர் - தேவன் . தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமாறு ஒரு சொல்லும் இல்லேன் .

பண் :

பாடல் எண் : 3

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.

பொழிப்புரை :

சடமாகிய மாயையாகவும் , சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய் , குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே ! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர் தலைவனே ! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன் .

குறிப்புரை :

உருவம் ஆகி ஓதிய உலகு - காரியமாம் அசேதன ப்ரபஞ்சம் ; ( சடம் ) காரணம் மாயை . உயிரும் ஆகி ஓதிய வுலகு - சேதன ப்ரபஞ்சம் ; ( சித்து ). பெருவினை :- மூலகன்மம் நுண்வினை . ஏனைய மூன்றும் பருவினை . பிறப்பாய் நின்ற எம்பெருமான் . வீடாய் நின்ற எம் பெருமான் . ` ஊனநாடகம் ` ` ஞானநாடகம் ` ` பந்தமும் ஆய் வீடும் ஆயினார் ` ( தி .8 திருவாசகம் . 214) ` மருவி அல்லால் மற்றொரு மாடிலேன் `. மாடு - செல்வம் . ` செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே `. ` மலையுளான் ` ` மலையுளாய் ` என்றது அருளுரை . அஃது என்றும் பொய்யாகாது .

பண் :

பாடல் எண் : 4

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே
என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.

பொழிப்புரை :

பசிய பொன்னே ! பவளமலையே ! மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே ! செம்பொன்னே ! மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே ! உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன் .

குறிப்புரை :

பைம்பொன் - தங்கம் . தணிகைப்புராணம் (341) - களவு . செம்பொன் - பொன் . செம்பு , வெண்பொன் - வெள்ளி , இரும்பொன் - இரும்பு . பவளக் குன்று - ` பவளம்போல் மேனி `. பரமன் - எல்லாத் தேவர்கட்கும் மேலான பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு . சீர் - கனம் . மணி - மாணிக்கம் . அம் - அழகு . பொன்னே கொழித்து வீழும் மலை . என் பொனே - என்னுடைய பொன் போலும் சாலச் சிறந்த சிவஞானப் பொலிவுடைய ஆனந்த வெள்ளமே . ஏதும் - எப்பொருளையும் . நினைவு - நினைதல் . மலர்செய் பாதா - அன்பர்களது அகத் தாமரை மலர்தலைச் செய்யும் திருப்பாதனே . ` மலர் ` முதனிலைத் தொழிற்பெயர் . ` செய்பாதா ` வினைத்தொகை . ` மலர்செய் ` இரண்டனுருபு விரித்துரைத்துக்கொள்க . செம்பாதமும் செய்பாதமும் ஒன்றாகா .

பண் :

பாடல் எண் : 5

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.

பொழிப்புரை :

பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே ! தலைக்கோலம் அணிந்தவனே ! பார்வதிபாகனே ! வேதங்களில் வல்லவனே ! தலைவனே ! வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடியவனே ! வாமதேவனே ! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே ! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே ! உன்னைத் தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன் .

குறிப்புரை :

பிறை அணி முடியினானே - பிறை சூடிய சடைமுடிக் கடவுளே ; பிஞ்ஞகா - தலைக்கோலத்தானே ; பெண் ஓர் பாகா :- மாதியலும் பாதியனே ; மறைவலா - நான்மறைகளையும் தோற்றிய வன்மையனே ; மறைப்பொருள் உணர்ச்சியில் வல்லவனே ; இறைவா - எப்பொருட்கண்ணும் இருப்பவனே ; வண்டார் கொன்றையாய் - ` வண்டார் கொன்றையுன்மத்தம் வளர்சடைக் கொண்டான் ` ( தி .5 ப .53 பா .6). வாமதேவா ` கங்கை சூடும் வாமன் ` ( தி .4 ப .43 பா .4.) அறை கழல் - ஒலிக்கும் வீரகண்டை . ` இறைவா ` ` இறைவனே ` என்று ஈரிடத்து வந்தமையால் முன்னதற்குத் ` தங்குவோன் ` என்றும் , பின்னதற்குத் ` தலைவன் ` என்றும் பொருள்கொள்க . இறை என்பது தங்குகை ; தலைமை ; கடவுள் ; தலைவன் என்பன முதலிய பல பொருள் பயக்கும் .

பண் :

பாடல் எண் : 6

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுல மலிந்தவண்ணா மலையுளா யலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே.

பொழிப்புரை :

முறுக்குண்ட சடையின் மீது அலைகள் மோதும் நீரை உடைய கங்கையை வைத்து , யானைத் தோலை மேற்போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே ! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே ! மலரினும் மேம்பட்ட , கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன் .

குறிப்புரை :

புரிசடை முடியின் மேல் ( - முறுக்குண்ட சடை முடியின் மிசையில் ). ஓர் கங்கை என்னும் பொருபுனல் நங்கையை வைத்து , யானைத் தோலைப் போர்வையாக நினைந்து மேற்கொண்ட காலகாலா . ` யானையின் பசுந்தோல் பிறருடம்பிற் பட்டால் கொல்லும் ` ( சிந்தாமணி . 2787 நச்சினார்க்கினியர் உரை ) ஆயினும் நஞ்சுண்டே சுரன் அது போர்த்தும் இறவாதிருந்தமையால் ` காலகாலா ` என விளித்தருளினார் . ` ஆளும் நாயகன் அஃதறிந்துயிர்த்தொகை அனைத்தும் , வாளிலாது கண்ணயர்வது மாற்றுதல் மதித்து , நீளிருங் கரியுரித்திடும் அதளினை நிமலன் , றோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால் ` ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீரறாத , மையல் யானைவன்றோலை மேற்கொணடனன் மறைத்தான் ` ( கந்தபுராணம் . ததீசியுத்தரப் படலம் . 148, 149). அப் படலத்திற் புலித் தோல் , மழுப்படை , மான் , பாம்பு , தலை , துடி , பூதப்படை , முயலகன் முதலியவற்றின் வரலாறுகளைக் காரணத்தொடும் உணர்க . அதனால் , திருமுறைகளுள் அவற்றைப் பலமுறையும் கூறுதல் சிவப்ரபாவம் சிந்தையிடையறாதிருத்தற் பொருட்டு என்றுணரலாம் . அரிகுலம் - சிங்கத்திரள் . அரியென்றதன் பற்பல பொருள்களுள்ளே மலைக் கேற்புடையன யாவும் கொள்க . அலர் - பூ . முதனிலைத் தொழிலாகு பெயர் . வரி - கீற்று . பாட்டுமாம் . பண் - இசை .

பண் :

பாடல் எண் : 7

இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி யணியணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே.

பொழிப்புரை :

பரமனே ! சூரியன் , சந்திரன் , வானம் , பூமி , நீர் , காற்று , பாம்புகள் தங்கும் பாதலம் , எண் திசைகள் இவற்றிலே ஓளி உருவமாக இருப்பவனே ! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக் கோடு உடையேன் அல்லேன் .

குறிப்புரை :

இரவி - சூரியன் . மதி - சந்திரன் . விண் - ஆகாயம் . இரு நிலம் - பெரும்பூமி . புனல் - நீர் . காற்று ( கால் + து ) = காலுதலுடையது , வாயு . உரகம் - பாம்பு . உரம் - மார்பால் , கம் - நகர்வது . ஆர் - ஆர்தல் - உண்ணல் . பவனம் - காற்று . ` காலே மிகவுண்டு காலேயிலாத கணபணத்தின் மேலே துயில் கொள்ளும் மாலோன் ` ( கந்தரலங்காரம் ) ` வாயுவான் பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே ` ( செவ்வந்திப் புராணம் ) ` பவனாசனம் `. ` பவனம் எட்டும் ` :- ` பூதலங்கள் அவை யெட்டும் ` ( தி .6 ப .34 பா .9) என்று பின்னும் கூறியதுணர்க . பவனம் பூமி என்னும் பொருட்டாய் நின்று மக்கட்கு இடவாகு பெயராய் , எட்டுருவில் ஒன்றாம் புலனாயமைந்ததனைக் குறித்ததாகக் கொள்ளல் பொருந்தாது . ` ஒளியுருவம் ` - தீ . உரகம் :- ஈண்டு ஆதிசேடனைக் குறித்தது . ஆர்வனம் - ( சுமையாகப் ) பொருந்திய பூமி . பரவுதல் - வாழ்த்தல் . ` திசை யொளியுருவம் `:- அண்ணாமலையின் வரலாற்றுக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 8

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.

பொழிப்புரை :

அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே ! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே ! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே ! தூயோனே ! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . நல்கி - அருளி , ` பாசு பதத்தை யீந்தாய் .` ( தி .4 ப .7 பா .10.) நீர் ததும்பு உலாவுகங்கை - நீர் ததும்பும் கங்கை . உலாவும் கங்கை . ததும்பியுலாவுங்கங்கை எனல் சிறவாது . நெடுமுடியில் நிலாவக் கங்கையை வைத்தாய் . நெடுமுடி நிலாத் தோன்ற வைத்ததுமாம் . கொண்டல் - கீழ்காற்றாலடிக்கப்பட்டு வரும் மேகம் ஏனைய , கோடை தென்றல் வாடை மூன்றும் முறையே மேற்கு , தெற்கு . வடக்குத் திசைகளின் காற்றைக் குறிப்பன . ஆர்த்து - இடித்து முழங்கி . ஈண்டு - செறிகின்ற , தீர்த்தன் - தூயன் . ` அடிமைத் திறம் ` ` சைவத்திறம் `.

பண் :

பாடல் எண் : 9

பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.

பொழிப்புரை :

பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே ! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே ! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணா மலையில் உள்ளவனே ! வெண்மையை உடைய காளைவாகனனே ! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன் .

குறிப்புரை :

பாலும் நெய்யும் முதலாக ஐந்து . மிக்க - மேம்பட்ட , பசுவில் ஐந்து - ` ஆனகம் அஞ்சும் `. ( தி .4 ப .31 பா .7.) ` ஆனிடை ஐந்தும் ` ` ஆவாகி ஆவினில் ஐந்தும் ஆகி ` ( தி .6 ப .94 பா .8) மாலும் நான்முகனும் கூடிக் காணமாட்டாத வகையுள் நின்றது திருவண்ணா மலைச்சிறப்பு . கொண்டல் - மேகம் . பூகம் - கமுகு , திரட்சி எனக் கொண்டு மேகக் கூட்டம் எனலுமாம் . ஆலும் நீரும் கொண்டலும் பூகமும் உடைய ( அண்ணா ) மலை . ஆலும் - முழங்கும் . வால் - வெண்மை . வாலுடை விடை - வெள்விடை . விடையாய் - விடை உடையாய் . ( தி .6 ப .98 பா .9).

பண் :

பாடல் எண் : 10

இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.

பொழிப்புரை :

இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே ! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே ! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

இரக்கம் ( இரங்கு - அம் ) - மனம் இரங்கும் தன்மை , ஒன்று யாதும் - யாதொன்றும் . இல்லாக் காலன் - இல்லாத காலன் . ` நடுவன் ` ஆதலின் . தன் நடு நெறியிற் பிறழாமை காக்க இரக்கம் யாதொன்றும் இல்லாது காலம் ஒன்றே கருதுபவனானான் என்பர் ` இரக்கம் ஒன்றியாதும் இல்லாக் காலன் ` என்றருளினார் . கடிந்த - கோபம் கொண்டு உதைத்து நீக்கிய . எம்மான் - எம் ஆண்டவன் . உரத்தினால் - வலிமையால் . வரை - கயிலை . ஊக்க - ஊக்கங் கொண்டு எடுக்க . நுதி - முனை . அரக்கனை - இராவணனை . அமரர் ஏறே - தேவர்கோ அறியாத தேவதேவே . சிரத்தினால் - ` தலையால் தாளை வணங்காத் தலை கோளில் பொறியிற் குணமிலவே ` ( குறள் ) வணங்குதல் ( மெய் ). ஏத்தல் ( வாய் ), மறப்பின்மை , ( உள்ளம் ).
சிற்பி