திருமுதுகுன்றம்
பண் :காந்தாரம்
பாடல் எண் : 1
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி
மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே.
பொழிப்புரை :
அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
குறிப்புரை :
தேவா! பெரியோனே! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! அடியார் தங்கட்கு ஆ! ஆ! என்று அங்கு அருள் செய்வாய்! ஓவா உவரிகொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி வணங்கும் கோயில் முதுகுன்றே என முடிக்க. தேவா - சிவமாந்தன்மைப் பெருவாழ்வினனே. `அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என்னத் தேவு செய்யும். `எனக் கொண்டு கூட்டி, தேவு என்பதற்கு ஆசிரியர் மாதவச் சிவஞானயோகிகள் `சிவமாந்தன்மைப் பெருவாழ்வு` எனப்பொருள் உரைத்தருளியதறிக. சிறியோம் என்று மூவாமுனிவர்கள் சொல்லிக் கொள்வாராயின், அடியோம் அதனினும் இழிந்த சொல் பெற வழியில்லை. `நின்னையான் அகன்று ஆற்றுவனோ` (திருக்கோவையார் . 12.) என்புழி, அதன் உரையாசிரியர் கூறிய கருத்து ஈண்டுச் சிறுமை பெருமைகட்குங் கொள்க. ஆவா என்று:- `ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டுத், தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட கோவே` (தி.1 ப.89 பா.8)`ஆவா` என்றதன் பின், `என்` எனும் பகுதியடியாத் தோன்றிய வினைச்சொல் வருதல் உண்டு. `ஆவா என்று எனக்கு அருளாய்` என்ற பொருளது கொம்பொடிந்து பிழைத்தது (திருவாசகம் போற்றித் திருவகவல், 99)`ஆஆ செத்தேன்` (தி.1, 3:165)என்பது போலும் இடத்தில் அவ்வினைச் சொல் தொடர்தல் வேண்டா, `ஆவா என்ன ஆசைப்பட்டேன்` (திருவாசகம்-420)`ஆவா என்ற நீர்மையெல்லாம்` (தி.1.3.442) `ஆவா என்றருளிச் செடிசேருடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா` (தி.1.3.497) `ஆவா என்னப்பட்டு` (தி.1.3.605) `ஆவ என்றருளி` (தி.1.3.407), ஓவா உவரி - ஒழியாத கடல். தலவரலாறு காண்க. மூவா - மூத்தலில்லாத, (அழியாத என்றவாறு) `மூவாமுதலா` என்றதறிக. `கோயில் முதுகுன்று` என்றதால், மலையே சிவபிரான் என்றுணர்க; திருவண்ணாமலையே சிவபிரானாகும் அச்சிறப்பு இத்தலத்துக்கும் உண்டு.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 2
எந்தை யிவனென் றிரவி முதலா விறைஞ்சுவார்
சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்குங் கோயின் முதுகுன்றே.
பொழிப்புரை :
எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
குறிப்புரை :
எந்தை - என் அப்பன், (தந்தை - தன் அப்பன், நுந்தை - நுன் அப்பன் என்பது பழைய வழக்கு). இவன் எந்தை - இவனே (சிவபிரானே) என் அப்பன், என்று இறைஞ்சுவார் சிந்தையுள்ளே திகழ்வானை மந்தி மலர் கொண்டு வணங்குங் கோயில் என்க. கிரியா விதிப்படி சிவபூஜை செய்வோர் முதலில் சூரிய பூஜை செய்வாராதலின் `இரவிமுதலா இறைஞ்சுவார்` என்றார். இறைஞ்சுவார் - வினையாலணையும் பெயர். இரவி - சூரியன். திகழ்வான் - `ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி`. மந்தி - குரங்கு. ஈண்டு இனத்தைக் குறித்தது. குரங்குகளும் மலரினம் பல கொண்டு மக்கள் தொழுவதற்கு முந்தி வழிபடும் சிறப்பு உணர்த்தப்பட்டது. இது சிவபூஜை செய்யாத மாக்களை நாணுறுத்தும்.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 3
நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரம்
தேடு மடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
பாடுங் குயிலி னயலே கிள்ளை பயின்றேத்த
மூடுஞ் சோலை முகிறோய் கோயின் முதுகுன்றே.
பொழிப்புரை :
மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.
குறிப்புரை :
நீடு - மிகுதி. நிரந்தரம் - எப்பொழுதும். தேடும் - ஆராயும். \\\\\\\"தேடிக்கண்டு கொண்டேன்\\\\\\\" (தி.4 ப.20 பா.10) \\\\\\\" திருமாலொடு நான்முகனும் தேடித்தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்\\\\\\\". (தி.4 ப.5 பா.12) \\\\\\\"ஓட்டற்று நின்ற உணர்வு பதி முட்டித் தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று. நாடும் பொருளனைத்தும் நானாவிதமாகத் தேடுமிடமன்று சிவம்\\\\\\\" (திருக்களிற்றுப்படியார். 5.29) கிள்ளை - கிளி. பயின்று - பழகி. `மூடும்...... குன்று` - மலையைச் சோலையும் முகிலும் மூடியிருக்கின்றன. மூடுதல் - பொதுவினை. தோய்தல் - முகிலின் (சிறப்பு) வினை.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 4
தெரிந்த வடியார் சிவனே யென்று திசைதோறும்
குருந்த மலருங் குரவி னலருங் கொண்டேந்தி
இருந்து நின்று மிரவும் பகலு மேத்துஞ்சீர்
முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே.
பொழிப்புரை :
அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும், விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.
குறிப்புரை :
தெரிந்த - சிவபிரானே வழிபாட்டிற்குரியவனாகி வீடு பேறளிக்க வல்லவன் என்று ஆராய்ந்து அறிந்த. குருந்தம் என்னும் மரங்களின் மலர்களைக் கொண்டு நின்றும் இருந்தும் இரவும் பகலும் ஏத்தி வழிபடும் சீரையுடைய முதுகுன்று. முரிந்து - மேகங்கள் வளைந்து. மேகம் முரிந்து தவழும் சோலையையுடைய முதுகுன்று.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 5
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தம்
சித்த நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே.
பொழிப்புரை :
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.
குறிப்புரை :
வைத்தநிதி - சேமவைப்பாகவைக்கப்பெற்ற செல்வம். `வைச்சபொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன்` (தி.1 ப.80.பா4) `வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்றிருக்கின்.... அத்தன் அருள் பெறலாம்......நெஞ்சே\\\\\\\\\\\\\\\' (தி.1 ப.94 பா.5) `வைத்த மாடு` (தி.2 ப.72 பா.1 ப.77 பா.7). மணி - மாணிக்கம். வருந்தி - வழிபடாது கழிந்த காலத்தை எண்ணி வருந்தி. கட்டு வீடு இரண்டிலும் உபகரித்துவரும் பரசிவனை மறவாது வழிபட முயன்று. சித்தம் - சிந்திக்கும் மனம். நைந்து - மெலிந்து. சிவனே என்பார் சிந்தையார் - சிவசிவா என்று திரி கரண சுத்தியுடன் அழைத்திடும் அடியவர் சித்தத்தில் வாழ்பவர். சந்து- சந்தனமரம். குரவு - குராமரம். உந்தும் முத்தாறு - தள்ளுகின்ற (மணி) முத்த நதி. மணியாலும் முத்தாலும் கலந்து ஓடும் ஆறு மணிமுத்தாறு. திருமுதுகுன்றத்தருகில் ஓடும் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டது.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 6
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமா னுறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே.
பொழிப்புரை :
மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடி வகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முதுகுன்றாகும்.
குறிப்புரை :
வம்பு - மணம். வன்னி - சிறந்த பத்திரம் ஆகக் கொள்ளப்பட்ட வன்னிமரத்திலை. மத்தம் - ஊமத்தை. தூவி - அருச்சித்து. நம்பா என்று - நம்பனே என்று பூரண பக்தியுடன் அழைக்க. நல்கும் - வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும். கொகுடிமுல்லை என்பது விசேடம். `கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்` (தி.7 ப.30 பா1) எனத் திருக்கருப்பறியலூர் திருப்பதிகத்தில், நம்பியாரூரார் அருளியதுணர்க. மொய்ம்பு - வன்மை. மரச்செறிவு, உயர்ச்சி, உறுதி முதலியவற்றால் சோலைக்கு வன்மை கொள்ளப்படும். மொய்ப்பு (-நெருக்கம்) என்றதன் மெலித்தல் எனல் சிறந்ததன்று.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 7
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
பொழிப்புரை :
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
குறிப்புரை :
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே.
பொழிப்புரை :
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.
குறிப்புரை :
வாசம் - மணம். வேந்தை - அரசனாகிய இராவணனை. வேந்து - சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை ஒற்று முதலியனவும் அன்னவையே. பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த வண்டுமூசிப்பாடுஞ் சோலையை உடைய முதுகுன்று என்க. செய்த அடியார் என்று இறந்த காலத்தாற் கூறியதால், செய்யாதிருந்த காலமும் உண்டோ என்று ஐயுறலாகாது. அடியவர்கள் சிவபெருமானைப் பூசை செய்ததும் எழுந்து நின்று திருமுன் மலர்களைத் தூவி, துதிபாடியேத்தி, வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்து வழிபடும் கடமையுடையவர்கள்.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 9
அல்லி மலர்மே லயனு மரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.
பொழிப்புரை :
அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக் கொடிகள் அருகில் இருந்து கண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.
குறிப்புரை :
அல்லி - அகவிதழ்கள். அரவின் அணை - பாம்பாகிய படுக்கை. பிரமனும் விண்டுவும் என்றவாறு, சொல்லி - தோத்திரம் புரிந்து. பரவி - வாழ்த்தி. தொழ - வழிபட. ஒண்ணா - ஒன்றாத, பொருந்தப் புண்ணியஞ் செய்யாதவராயினர் என்றவாறு. சோதி - தீப்பிழம்பாய்த் தோற்றிய சிவபிரான் சோதியினது ஊர் முதுகுன்று என்க. முல்லை - (குறிஞ்சியை அடுத்த) முல்லைத்திணை. அயல் - பக்கம். முறுவல் - புன்னகை. முதுகுன்று - குறிஞ்சி, அதனை அடுத்துள்ளமுல்லை, தன்பால் பூத்த முல்லைப் பூக்கள் ஆகிய பற்களைக் காட்டிப் புன்சிரிப்புச் செய்யுந் தோற்றத்தையுடையது.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 10
கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.
பொழிப்புரை :
கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.
குறிப்புரை :
கருகும் உடலார் - கரிய உடம்பினர், `காரமண் கலிங்கத்துவராடையர்`(தி.1 ப.54 பா.10) கடு - கடுக்காய். உருகு சிந்தை இல்லார் - இரங்கும் உள்ளம் வாய்க்காதவர், வன்னெஞ்சரென்றபடி.(அஃது) இல்லார்க்கு அயலான் என்றது அக்கனியும் மனம் இல்லாத சமணர் கொள்கைகளுக்கு எட்டாமல் வேறாய் வேதாகமக் கொள்கைக்கு எட்டுமவன் பரமேச்சுவரன் என்றவாறு. திருகல் - கோணல். வேய்கள் - மூங்கில்கள். முருகு - அகில் மரம். பணை - கிளை. சிறிய மந்திகள் அகில் மரக்கிளை மேலிருந்து சிறிது வளைந்த வேய்களில் தாவிக்குதித்து ஆடும் என்க.
பண் :காந்தாரம்
பாடல் எண் : 11
அறையார் கடல்சூ ழந்தண் காழிச் சம்பந்தன்
முறையான் முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே.
பொழிப்புரை :
ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.
குறிப்புரை :
அறை - முழக்கம். அம்தண் காழி - அழகும் குளிர்ச்சியுமுடைய சீகாழி. முறையான் - வேதாகம முறைப்படி. குறையாப்பனுவல் - நிறைவுறப் பாடிய இத்திருப்பதிகத்தை கூடிப்பாட வல்லவர்கள் சந்திரசேகரனாகிய எம்பெருமானுடைய திருவடி நிழலைப் பிரியாதிருந்து பேரின்பம் நுகர்வர் என்றவாறு, அப்பேரின்பமே கொடுத்தலால், உலகின்பம் வேண்டுவார்க்கும் அதைக் கொடுத்தல் இப்பனுவலுக்கு மிக எளிதின் இயலுவதொன்று எனக் கொள்க.