முனையடுவார் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.

பொழிப்புரை :

பகைமையை வென்று உலகைக் காக்கும் சோழ மன்னரின் காவிரியாறு பாய்கின்ற நாட்டில், நறுமணமுடைய சோலை களில் மலர் அரும்புகள் விரிய, அவற்றின்றும் வடியும் தேனும் ஆற் றின் வழியே பெருக்கெடுத்து ஓடி, அவ்வெள்ளத்தால் சேறான வய லுள், உழவர்கள் உழுகின்ற சேறும் மணம் வீசுகின்ற, செல்வம் பெருகியுள்ள ஊர் திருநீடூர் ஆகும்.

குறிப்புரை :

ஆற்றுப் பெருக்கால் வரும் சேறும், உழவர்கள் உழுத லான் வரும் சேறும் பொருந்திய நீடூர் என்பதாம். செல்வம், நீடு, ஊர் = திருநீடூர் ஆகும். நீடூர் எனவரும் இரண்டனுள் முன்னையது செல்வ நீட்சியையும் பின்னையது ஊர்ப் பெயரையும் குறித்தன. நீடூர் - சோழ நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ஊராகும். ஊழிக் காலத்தும் அழியாது நிலைபெற்று இருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்ப.

பண் :

பாடல் எண் : 2

விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக் குடிமுதல்வர்
களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார்
கழலிற் செறிந்த காதல்மிகும்
உளங்கொள் திருத்தொண் டுரிமையினில்
உள்ளார் நள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவர் அடியார்க்கு
மாறா தளிக்கும் வாய்மையார்.

பொழிப்புரை :

யாவராலும் புகழத்தக்க வள்ளன்மையுடைய திருநீடூரில் வேளாளர் மரபில், தலைமையான குடி முதல்வராய், நஞ்சையுடைய கழுத்தினரும் நெற்றிக் கண்ணருமான சிவபெருமா னின் திருவடியில், செறிந்த பெருவிருப்பத்தை மனத்துள் கொண்ட திருத்தொண்டில் உரிமை பூண்டவராய், பகைவரைப் போரில் வென்றதால் வரும் பொருளைக் கொண்டு இறைவரின் அடியார்க்கு மாறா மல் சிறந்த உணவளிக்கும் வாய்மை யுடையவராய் விளங்கினார்.

குறிப்புரை :

விளங்கும் - புகழ் விளங்கும். `இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்\' (குறள், 232) என்பர் திருவள்ளுவனாரும்; நள்ளார் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 3

மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்
வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால்
அதனை நடுவு நிலைவைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால்
கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த
பொன்னுங் கொண்டு மன்னுவார்.

பொழிப்புரை :

போரில் பகைவர்க்குத் தோற்றவர் வந்து பெருஞ் செல்வம் தந்து தமது துணையைக் கொள்ளவேண்டில், அப்பகைமைக் குரிய காரணத்தை நடுநிலையில் நின்று அறநெறிவழாது ஆராய்ந்து, ஏற்று இயமனும் அஞ்சி ஒதுங்கும் போர் முயற்சியால் கூலியை ஏற்றுப் போரை வென்று, யாவரும் விரும்பும் வெற்றியைப் பெற்று, இசைந்த கூலியான பொன்னைக் கொண்டு வாழ்வாரானார்.

குறிப்புரை :

இதனால் இவ்வடியவர், தோற்றவர் பக்கம் நின்று அவர் கொடுக்கும் பொருளுக்காக மட்டும் துணைப் போகவில்லை. அறநெறி தவறாது இருக்குமவர்க்கே துணை செய்து பொருள் பெறுவர் என்பது கருத்தாகின்றது.

பண் :

பாடல் எண் : 4

இன்ன வகையால் பெற்றநிதி
எல்லாம் ஈச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக்
கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறிதயிர்பால்
கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னும் அன்பின் நெறிபிறழா
வழித்தொண் டாற்றி வைகினார்

பொழிப்புரை :

இவ்வகையால் பெறும் செல்வம் எல்லாவற்றையும், சிவனடியார்கள் தாம் கேட்டவாறு கொடுத்துத், தூய சர்ச்சரை, நறுமணம் பொருந்திய நெய், கறி, தயிர், பால், கனி என்ற இவை எல்லாவற்றையும் கலந்து திருவமுது அளித்து, நிலைபெறும் அன்பு நெறியில் பிறழாத வழித்தொண்டைச் செய்து வந்தார்.

குறிப்புரை :

உண்டி நாலு விதத்தில், ஆறு சுவைத் திறத்தினில் அடிய வர்க்கு உணவு வழங்க வேண்டும் என ஆசிரியர் முன்னர்க் குறித்ததை, ஈண்டு ஒரு வகையால் விளக்கினாராயிற்று. சொன்ன சொன்னபடி - அடியவர்கள் வேண்டுவதை வேண்டியவாறே கொடுத்து, என்றார், அவர் தம்மினும் உயர்ந்தவராதல் பற்றி.

பண் :

பாடல் எண் : 5

மற்றிந் நிலைமை பன்னெடுநாள்
வையம் நிகழச் செய்துவழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோ கத்தமர்ந்து
பிரியா வுரிமை மருவினார்
முற்ற வுழந்த முனையடுவார்
என்னு நாமம் முன்னுடையார்.

பொழிப்புரை :

இவ்வாறாய நிலையில் அவர் இத்திருத்தொண்டைப் பல காலம் செய்து, வழிவழி வந்த அன்பால் ஆன நல்ல நெறியில், உமை யொரு கூறராய சிவபெருமானின் திருவருளால், தாம் பெற்ற சிவ லோகத்தில் அமர்ந்து, அதனின்றும் மீளாத உரிமையை அடைந்தார். வெற்றி பொருந்தப் போரைச் செய்த காரணத்தால் முனையாடுவார் என்ற திருப்பெயரைச் சிறப்பாக உடையவர் ஆனார்.

குறிப்புரை :

முன் - சிறப்பாக. நாயன்மார்களின் திருப்பெயர்களை முதற்கண் கூறிப்பின் அவர்தம் திருத்தொண்டுகளை விவரித்தலே யன்றி, அவர் தொண்டுகளை விரிவாகக் கூறிப்பின் அவர் பெயரைக் கூறலும் இவர்தம் மரபாக உள்ளது. இக்காலத்துப் பயிற்று முறையாளர் இதனைச் சிறப்பான உத்திமுறையாகக் கொள்வர்.

பண் :

பாடல் எண் : 6

யாவர் எனினும் இகலெறிந்தே
ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார்
விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செங்கோல் முறைபுரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்.

பொழிப்புரை :

எதிர்ப்பவர் யாவராயினும் அவரைப் போரில் வெற்றி கொண்டு, அதனால் பெற்ற அச்செல்வங்களை, இறைவன் அடியார்க்கு அளித்த முனையடுவார் நாயனாரின் மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, இனித் தேவர் தலைவரான சிவபெருமானின் சைவநெறி விளங்கச் செங்கோன்மை செய்யும் காவல் பூண்ட `கழற்சிங்க நாயனார்\' தொண்டின் நிலையைச் சொல்வாம்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 7

செறிவுண்டென்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்குக் குறியுண்டு ஒன்றாகிலும் குறையொன் றில்லோம் நிரையும் கருணையினால் வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழி பறிக்கப் பறியுண்டவர்எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.

பொழிப்புரை :

இறைவரின் நிறைந்த அருட்பெருக்கினால் மணமுடைய சோலைகள் சூழ்ந்த திருமுருகன் பூண்டியின் வழியில் தாம் கொண்டு வந்த பொருட்கள் வேடுவரால் கவரப்பட நம்பியாரூர், எம் பழவினையின் வேரை அடியுடன் பறித்து விடுவர் என்ற ஆதரவினால் அவர்பால் செறிதல் உளதாகும் என்று அவரிடத்தும் செயத்தகும் திருத்தொண்டின் பயனால் பெறத்தக்கதொரு குறிக்கோள் உண்டு. அதுவன்றி ஒன்றாலும் குறைவும் இல்லோம். வகை நூல் ஆசிரியர் அவிநாசியில் முதலையுண்ட சிறுவன் உயிர் பிழைக்கச் செய்ததும் திருமுருகன் பூண்டியில் வேடுவர் கொண்ட பொன்னை மீண்டும் பெற்றதுமாய நிகழ்ச்சிகளை நினைந்து வணக்கங் கூறினர். முனையடுவார் நாயனார் புராணம் முற்றிற்று. கறைக்கண்டன் சருக்கம் முற்றிற்று.

குறிப்புரை :

*************
சிற்பி