காரி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மறையாளர் திருக்கடவூர்
வந்துதித்து வண்தமிழின்
துறையான பயன்தெரிந்து
சொல்விளங்கிப் பொருள்மறையக்
குறையாத தமிழ்க்கோவை
தம்பெயரால் குலவும்வகை
முறையாலே தொகுத்தமைத்து
மூவேந்தர் பால்பயில்வார்.

பொழிப்புரை :

மறையவர் மிக்கு வாழ்கின்ற திருக்கடவூரில் வந்து தோன்றி, வளம் பலவும் நிறைந்த தமிழின் இனிய துறைகளின் பயனைத் தெரிந்து, சொல் விளங்க அதன் உட்கிடையான பொருளா னது மறைந்து நிற்குமாறு, குறைவற்ற தமிழ்க் கோவையைத் தம் பெயரால் விளங்குமாறு முறைப்படத் தொகுத்து இயற்றித் தமிழ்கூறும் நல்லுலகத்தவரான மூவேந்தரிடத்தும் பழகிய நட்பினராய்,

குறிப்புரை :

தமிழில் உள்ள துறைகள் பலவேனும் அவை அகம் புறம் எனும் இரண்டினுள் அடங்கும். கோவை என்பது அகப்பொருள் பற்றியதாகும். இந்நூல் இன்று கிடைத்திலது.
தம் பெயரால் கோவையை இயற்றினார் என்ற ஆசிரியர், அவர் பெயர் காரி என்பதை ஐந்தாம் பாடலிலேயே குறித் தருளுகின்றார். காரி - கருமை நிறம் பொருந்தி நஞ்சு. அதனை உண்டமையால் சிவபெருமான் காரி என்றும் அழைக்கப் பெற்றார். `காரி உண்டிக் கடவுள திருக்கையும்\' (மலைபடு. - 83) என வருவதால் இவ்வுண்மை அறியலாம். இதனால் இப்பெயர் இறைவரின் பெய ரென அறியலாம். காரி - மேகம் எனப் பொருள் கொண்டு, இந்நாயனார் அடியவர்களுக்கு வேண்டியவாறு கொடுத்தும், திருக்கோயில் திருப்பணிகள் பல செய்தும், கோவை எனும் அரிய நூலை வழங்கியும் உலகிற்கு உதவியமை பற்றி இப்பெயர் பெற்றார் என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 2

அங்கவர்தாம் மகிழும்வகை
அடுத்தவுரை நயமாக்கிக்
கொங்கலர்தார் மன்னவர்பால்
பெற்றநிதிக் குவைகொண்டு
வெங்கண்அரா வொடுகிடந்து
விளங்கும்இளம் பிறைச்சென்னிச்
சங்கரனார் இனிதமரும்
தானங்கள் பலசமைத்தார்.

பொழிப்புரை :

அம்மூவேந்தர்களிடத்தும் மனம் மகிழுமாறு தாங்கருதிய பொருட்கு ஏற்ற சொற்களை நயம் பெறக் கூறி, நறுமணம் மிக்க பூமாலைகளை அணிந்திருக்கும் மன்னர்களிடம் பெற்ற செல்வக் குவியலைக் கொண்டு, கொடிய கண்ணையுடைய பாம்புடனே இயைந்து விளங்கும் பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் இனிதாக வீற்றிருக்கும் திருக்கோயில்கள் பலவற்றை அமைத்தார்.

குறிப்புரை :

இவர் அமைத்த திருக்கோயில்கள் பற்றிய விவரம் ஏதும் இது பொழுது தெரிந்திலது.

பண் :

பாடல் எண் : 3

யாவர்க்கும் மனமுவக்கும்
இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல்தேவர்
சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம்
மிகஅளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய்.

பொழிப்புரை :

யாவர்க்கும் மனம் மகிழும் படியான இன்பம் தரும் சொற்பயன்களையே கூறித், தேவர்களுக்கெல்லாம் தேவரான சிவ பெருமானின் சிறப்புடைய அடியார்கள் எல்லார்க்கும் அவர் விரும்புமாறு பெரும் பொருள்களை மிகவும் அளித்து, ஆனேற்று ஊர்தியையுடைய இறைவரின் சோலைகளையுடைய திருக்கயிலா யத்தை எப்போதும் மறவாத எண்ணமுடையவராகி,

குறிப்புரை :

இம் மூன்று பாடல்களாலும் நாயனார் புலவர்க்குப் புலவராயும், தொண்டர்க்குத் தொண்டராயும், திருப்பணிச் செல்வர்க் குத் திருப்பணிச் செல்வராயும் இருந்தமை விளங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 4

ஏய்ந்தகடல் சூழுலகில்
எங்குந்தம் இசைநிறுத்தி
ஆய்ந்தவுணர்வு இடையறா
அன்பினராய் அணிகங்கை
தோய்ந்தநெடுஞ் சடையார்தம்
அருள்பெற்ற தொடர்பினால்
வாய்ந்தமனம் போல்உடம்பும்
வடகயிலை மலைசேர்ந்தார்.

பொழிப்புரை :

பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் தம் புகழினை நிலை நிறுத்தி, ஆராய்ந்து தெளிந்த உணர்விலே இடையறாத அன்பு உடையவராய் இருந்து, அழகிய கங்கையாறு பொருந்திய நீண்ட சடையையுடைய இறைவரின் அருளைப் பெற்ற தொடர்பினால், அப்பெருமானைப் பொருந்திய மனத்தால் சேர்ந்தது போலவே, உடலாலும் வடகயிலை மலையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 5

வேரியார் மலர்க்கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல்வணங்கி
அவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை
வழுதியர்தம் மதிமரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம்.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்க்கொன்றையை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவடியைப் பேணும் காரி நாயனா ரின் அடிகளை வணங்கிக் கடல் போல் நிறைந்து வழியும் மதம் பொருந்திய யானைப் படையையுடைய பாண்டியர்களுக்குரிய சந்திர மரபில் தோன்றிய `நின்றசீர் நெடுமாற நாயனாரின்\' திருத்தொண்டி னைக் கூறுவாம்.

குறிப்புரை :

வேரி - தேன். காரி நாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி