திருக்கண்ணார்கோயில்
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 1
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகுந் நல்வினையாய நணுகும்மே.
பொழிப்புரை :
குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத் திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்./n
குறிப்புரை :
திங்களும் பாம்பும் கங்கையும் சிரத்தில் அணிந்து பெண்ணுமாய் ஆணுமாயிருக்கின்ற பேரருளாளனது கண்ணார் கோயிலைக் கைதொழுவார்களுக்கு இடரும் பாவமும் இல்லை; நல்வினை நணுகும் என்கின்றது. தண்ணார் திங்கள் - குளிர்ந்த மதி. இடர் பாவம் - துன்பமும் அதற்குக் காரணமாகிய பாவங்களும்./b
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 2
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயன்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
பொழிப்புரை :
மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச்செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.
குறிப்புரை :
மண்ணியாறு வளம்படுக்கின்ற வயல்கள் நிறைந்து சோலையிலே குயில் ஆட வண்டுபாடுங் கண்ணார்கோயில் இது என்கின்றது. கந்து அமர் சந்து - மணம் பொருந்திய சந்தனம். கந்து - கந்தம். கார் அகில் - வயிரமாய் இருக்கும் கறுத்த அகில். கோகிலம் - குயில். செந்திசை - செவ்வழிப்பண்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 3
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் னிடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
பொழிப்புரை :
பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.
குறிப்புரை :
பூதம் ஏத்த இரவில் நடஞ்செயும் ஈசன் இடம் இது என்பர். பல்லியல் பாணி - பலவாகிய இயல்பினையுடைய பாட்டு.
எல்லி - இரவு. கொல்லை - முல்லைநிலம். மௌவல் - காட்டுமல்லிகை. கல்லியல் இஞ்சி - கல்லால் இயன்ற மதில். மஞ்சு - மேகம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 4
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர்கோதை யஞ்சவுரித்து மறைநால்வர்க்
குருவளரால நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.
பொழிப்புரை :
மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மரநிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரைசெய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.
குறிப்புரை :
உமையாள் அஞ்ச காட்டானையை உரித்துப் போர்த்தி யும் சனகாதியர்க்கு உபதேசித்தும் அமர்ந்த பெருமானது கண்ணார் கோயிலையடைந்தவர்கள் கற்றவர்கள் என்கின்றது.
துங்கம் - உயர்ச்சி. வேழம் - யானை. மருவளர்கோதை - மணம்மிக்க மாலை போல்வாளாகிய உமாதேவி. நால்வர்க்கு - சனகாதியர்களுக்கு. உரு வளர் ஆலம் - தெய்வத்தன்மையாகிய அச்சம் வளர்கின்ற ஆலமரம். உரு - வடிவமுமாம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 5
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபாற் சென்றுலகெல்லா மளவிட்ட
குறுமாணுருவன் றற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
பொழிப்புரை :
வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.
குறிப்புரை :
மாவலியை வென்ற குறளனாகிய திருமால் வழிபட்ட இறைவன் எழுந்தருளியுள்ள இடம் கண்ணார்கோயில் என்கின்றது. மறு மாண் உருவாய் - குற்றம் பொருந்திய பெரிய வடிவமாய். செறும் - வருத்துகின்ற. குறுமாண் உருவன் - குறுகிய பிரமசாரி வடிவத்தை எடுத்த திருமால்.
தற்குறியாக - சிவபெருமானின் அடையாளமாக. கறுமா கண்டன் - கறுத்த பெரிய கழுத்தினை உடையவன். இத்தலத்திற்குப் பக்கத்தில் குறுமாணகுடி என்ற கிராமமும் இருப்பது அறிஞர்கள் அறிந்து இன்புறுதற்குரியது.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 6
விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.
பொழிப்புரை :
விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனிபோல்பவனை நண்ணி வழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.
குறிப்புரை :
தேவர்களுக்காக விஷத்தை விரும்பி உண்டவனை, அவர்களுக்கு அமுதம் அளித்து, எல்லா உலகிற்குங் கண்ணானவனை, கண்ணார்கோயில் கனியை அடையவல்லவர்க்கு எமன் பால் இன்னல் இல்லை என்கின்றது.
வேலை - கடல். உண்ணவன் - உண்டவன். நடலை - துன்பம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 7
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.
பொழிப்புரை :
முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார்கோயில் என்பர்.
குறிப்புரை :
கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபத்தைத் தேவர்கள் வேண்டிக்கொள்ளப் போக்கி ஆயிரங்கண் அளித்த கடவுள் இடம் இது என்பர். இத்தலத்து வரலாற்றைக் குறிப்பது இது. சார்பு - இடம். துன் அமர் - நெருங்கியிருக்கின்ற.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 8
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் னீள்கழனெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.
பொழிப்புரை :
அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத, ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.
குறிப்புரை :
இராவணன் கைலையின் கீழ் நெருக்குண்ணாதபடி திருவடியிலிருந்து தோத்திரிக்க, வாளும் தேருங் கொடுத்த இறைவன் எழுந்தருளியுள்ள இடத்தைப் பரவுவார் சிவலோகம் சேர்வார் என்கின்றது. பெருக்கு - ஆக்கம். பேதை - அறிவிலி. வரை - கைலைமலை. நெருக்குண்ணா - நெருக்குண்டு என்றுமாம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 9
செங்கமலப்போ திற்றிகழ்செல்வன் றிருமாலும்
அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோ டேத்திடவண்டத் தமர்வாரே.
பொழிப்புரை :
செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.
குறிப்புரை :
அயனும் மாலும் கண்ணால் நோக்க முடியாதவண்ணம் தீயுருவான சிவன்திகழும் கண்ணார்கோயிலை வணங்குவார் அமரர் உலகத்து இருப்பார் என்கின்றது.
அங்கு அம் மலக்கண் நோக்கரும் வண்ணத்து - அவ்விடத்து அழகிய ஊனக்கண்ணால் நோக்க முடியாதவண்ணம். தங்கு அமலக் கண்ணார் கோயில் அங்கு அமலத்தோடு ஏத்திட - அவ்விடத்து மலரகிதராய்த் துதிக்க.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 10
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணும்
சோறுடையார்சொற்றேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பர னென்பணிவானீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
பொழிப்புரை :
குலைகளை ஈனும் பனைமரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.
குறிப்புரை :
பனந்தடுக்கை உடுத்திய புத்தரும் சமணரும் சொல்லு கின்ற சொற்களைத் தெளியாதீர்கள்; சிவன் சேர்வது கண்ணார் கோயிலே என்கின்றது. தாறு இடு பெண்ணை - குலை தள்ளும் பெண்பனை. தட்டு - தடுக்கு.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 11
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியன்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுண்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் பழிபோமே.
பொழிப்புரை :
அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறைபுகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.
குறிப்புரை :
கண்ணார் கோயிலைப்பற்றி ஞானசம்பந்தன் சொல் லிய பாடல் பத்தையும் வல்லார் மேல் பழி போம் என்கின்றது. காமரு - அழகிய. பாமரு பாடல் - பரந்துபட்டுச் செல்லும் ஓசை மருவிய பாடல்.