கருவூர்த் தேவர்

படம்சிவமயம்

நாயன்மார் வரலாறு

ஒன்பதாம் திருமுறை

கருவூர்த் தேவர்

கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த் தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை. இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமக்கலைகள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப்பெரிய யோகசித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று ஞானநூல்கள் பல வற்றையும் ஆராய்ந்து சிவயோகமுதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப்பெற்றவர். உலக வாழ்வில் புளியம்பழமும் ஓடும்போல ஒட்டியும் ஒட்டாமலும் விளங்கியவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன.

கருவூர்த்தேவர் கொங்குநாடு, வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலியடைந்து நெல்லை யப்பர் சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது பெருமான் இவரது பெருமையைப் பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக் கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான் கருவூர்த்தேவரை நெல்லை யம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும் அவ்வாலயம் செழித்தது என்றும் கூறுவர்.

கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.

தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய இராசராசேச்சுரத்துப் பெருவுடையார்க்கு அஷ்டபந்தன மருந்து சார்த்தினன். அம்மருந்து பலமுறை சார்த்தியும் இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தி இருந்தனன். அதனை அறிந்த போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு அழைப்பித்தார். கருவூர்த் தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான் அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார்.

தஞ்சையினின்றும் திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த் தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல்சாற்றி தொல்லைகள் பல தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு.

கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது.

இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.

காலம்:

இவர், தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம் ஆகிய இரண்டு தலங்களையும் பாடியிருத்தலின் இவர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.