வாதவூரடிகள்

படம்


சிவமயம்

நாயன்மார் வரலாறு

எட்டாம் திருமுறை

வாதவூரடிகள் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

எழுதரு மறைகள்தேறா இறைவனை எல்லிற் கங்குற்
பொழுதறு காலத்தென்றும் பூசனை விடாதுசெய்து
தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள்மூழ்கி
அழுதடிஅடைந்த அன்பன் அடியவர்க்கு அடிமைசெய்வாம்.
- திருவிளையாடற் புராணம்.

செந்தமிழ் மணமும் சிவமணமும் ஒருங்கே கமழும் திருநாடு தென்பாண்டி வளநாடு. இந்நாட்டை அணிசெய்வது, ``புனல்யாறு அன்று இது பூம்புனல்யாறு` எனப் புலவர்களால் போற்றப்படும் வையை யாறு ஆகும். இந்நதி வரலாற்றுச் சிறப்பும், புராண இதிகாசச் சிறப்புகளும் உடையது.

திருவவதாரம்:

வையை யாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத்தில் இறைவன் வாதபுரீசுவரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி யுள்ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர். அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என்பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகிவரும் நாளில் தென்னாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் இவ் விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்க வும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு ``திருவாதவூரர்`` என்னும் திருப்பெயர்ச் சூட்டினர்.

அமைச்சுரிமை யேற்றல்:

திருவாதவூரர்க்கு வயது ஏறஏறக் கலைஞானங்களும் நிரம்பின. பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத் தும் கைவரப்பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக் கத்தையும், உற்றது கொண்டு மேல்வந்துறுபொருள் உணர்த்தும் அறிவின் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் என்பவனாவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் அவரைத் தனது அவைக்கு அழைத்து அள வளாவி, அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து ``தென்னவன் பிரம ராயன்`` என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும் இஃது இறைவனுடைய ஆணை யென்று எண்ணி அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை மிகக் கவனத்தோடு இயற்றிவந்தார். வாதவூரது அமைச்சியலால் குடிமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். வாதவூரரும், அரிமர்த்தன பாண்டியனுக்குக் கண்ணும் கவசமுமாக விளங்கி வந்தார்.

பதவியில் பற்றின்மை:

வாதவூரர் தமக்குக் கிடைத்த அமைச்சுரிமைத் தகுதியால் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சி யடையவில்லை. உலக வாழ் வும் வாழ்வில் காணும் பெரும் போகமும் நிலையற்றவை என்றறிந் தமையால், அப்பதவியில் அவர்க்கு உவர்ப்புத் தோன்றியது. ``கூத்தினர் தன்மை வேறு கோலம் வேறு ஆகுமாறு போல`` இவர் மேற் கொண்டிருந்த அமைச்சுரிமைக்கும், இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை இவருக்கு மிகுந்து வந்தது. பிறவிப் பெரும் பயனை அடைதற்குரிய வழி என்ன என்பதிலேயே இவருடைய சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

குதிரைகள் வாங்கச் செல்லல்:

ஒருநாள் வாதவூரர் அரசவையில் அமைச்சராய் வீற்றிருந்தார். அப்போது அரசனுடைய குதிரைச் சேவகர்கள் அங்கு வந்து `அரசரேறே! நமது குதிரைப் படைகள் குறைந்து விட்டன. வயது முதிர்ந்த குதிரைகளும், நோய் நிறைந்த குதிரைகளுமே இப்போது உள்ளன. சிறந்த குதிரைகள் நம்மிடம் இல்லை. ஆதலின் குதிரைப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று நினைவுறுத்துவது எங்கள் கடமை` என்று வணங்கித் தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அரசவையிலிருந்த சில தூதர்கள் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்து இறங்கியிருக்கின்ற செய்தியை அரசனிடத்துத் தெரிவித்தார்கள். அரசன் அமைச்சர் பெருமானாகிய பிரமராயரைப் பார்த்து ``நம்முடைய கருவூலத்திலிருந்து வேண்டும் பொருள்களைப் பணியாளர் மூலம் எடுத்துச் சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருக`` என்று ஆணையிட்டான்.

வாதவூரரும் அக்கட்டளையை ஏற்றுப் பொற்பண்டாரத்தைத் திறந்து அளவிறந்த பொருள்களை ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு, படைகளும் பரிசனங்களும் தன்னைச் சூழ்ந்துவர மதுரைச் சொக்கேசன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல காதங்களைக் கடந்து திருப்பெருந் துறையென்னும் தலத்தை அடைந்தார். அவ்வூரை அணுக அணுக அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.

குரு உபதேசம்:

அவ்வேளையில் சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது அவர் செவிகளுக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில் கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில் சீடர்கள் சிலரோடு சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார். வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும் கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள் அக்குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பாசமாம் பற்றறுக்கும், ஆசானாக அக்குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத் திருக்கை சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம் ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள் திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. (அவரது திருமுகம் ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள் திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன) இவ்வாறு வீற்றிருந்த குருநாதரைக் கண்ட வாதவூரர் தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர் இவரேயென்று எண்ணினார். காந்தம் கண்ட இரும்புபோல மணிவாசகர் மனம் குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில் விரைந்து அருகிற்சென்ற வாதவூரர் அடியற்ற மரம்போல அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்தார். `ஐயனே! எளியேனை ஆட்கொண்டருளுக` என வேண்டி நின்றார்.

வாதவூரரின் பரிபாக நிலையைக் கண்ட குருநாதர் திருக்கண் நோக்கம், பரிசம் முதலிய தீட்சைகள் செய்து திருவடிசூட்டித் திருவைந்தெழுத்தை அவருக்கு உபதேசம் செய்தருளினார். இவ்வாறு தம்மை ஆட்கொண்டருளிய பெருங்கருணைத் திறத்தை வியந்த வாதவூரர் அன்போடு குரு நாதருடைய திருவடிகளை மீண்டும் வணங்கி எழுந்து நின்றார். ஞானாசிரியரது திருவருள் நோக்கால், ஞானத்தின் திருவுருவாக வாதவூரர் மாறினார். தமது குருநாதரின் திருவடிகளுக்குத் தம்மை ஆட்கொண்ட கருணையைக் குறித்துச் சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.

மாணிக்கவாசகர்:

ஞானாசிரியர் திருமுன் வாதவூரர் பாடிய தோத்திரங்கள் இனிமையோடு கேட்போர் மனத்தையுருக்கும் அருள் விளக்கத் தோடும் இருந்த காரணத்தால் ஞானாசிரியர் வாதவூரரை நோக்கி ``உனக்கு `மாணிக்கவாசகன்` என்ற பெயர் தந்தோம்`` என்று கூறி அவருக்கு அப்பெயரைத் தீட்சா நாமமாகச் சூட்டினார். அன்று முதல் வாதவூரர் என்ற திருப்பெயருடன் மாணிக்க வாசகர் என்ற பெயரும் அவருக்கு வழங்குவதாயிற்று.

திருப்பெருந்துறைத் திருப்பணி:

மணிவாசகர் குருநாதரை வணங்கி `என்னை ஆட்கொண்ட போதே என்னுயிரும் உடைமையும் தங்கட்குரியவாயின. ஆதலால் அடியேன் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அருளல் வேண்டும்` என்று குறையிரந்தார். குருநாதரும் `அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாணை யிட்டார். அக்கட்டளையின்படியே மணிவாசகர் அப்பொருள்களைக் கொண்டு திருப்பெருந்துறையில் மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு மாகேசுவரபூசை நிகழ்த் தினார். இவ்வாறு அரசன் குதிரை வாங்குவதற்குத் தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும் சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. மணிவாசகர் அருளாரமுதத்தை உண்டு கொண்டே தெருளார் சிவானந்த போகத்துத் திளைத்திருந்தார்.

அமைச்சரின் வேறுபட்ட நிலையை உடன் வந்தவர்கள் கண்டு மணிவாசகரிடம் `குதிரை கொண்டு மதுரை செல்லவேண்டுமே` என்று தாங்கள் எண்ணிவந்த செயலை நினைவூட்டினார். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப் பதை அறிந்த பணியாளர் மதுரை மாநகருக்குச் சென்று பாண்டியனி டம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் அழைப்பு:

இச்செய்தியையறிந்த பாண்டியன் சினந்து திருமுகம் ஒன்று எழுதி அதனை வாதவூரரிடம் சேர்ப்பித்து `அவரை அழைத்து வருக` என ஆணையிட்டுச் சிலரை ஏவினான். பணியாளரும் திருப்பெருந் துறையை அடைந்து அரசன் அளித்த திருமுகத்தை அமைச்சர் பிரானி டம் கொடுத்து அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர். அதனைக் கேட்ட வாதவூரர் தம் குருநாதரிடம் சென்று நிகழ்ந்ததை விண்ணப் பித்து நின்றார். குருநாதர் புன்முருவல் பூத்து ``அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் அறிவித்து விலை யுயர்ந்த மாணிக்கக்கல்லையும் கையுறையாகக் கொடுக்க`` எனக் கூறி மாணிக்க மணியை அளித்து விடை கொடுத்தனுப்பினார். வாதவூரரும் குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய்ப் பிரியா விடைபெற்று மதுரைக்கு எழுந்தருளினார். அரசவைக்கு வந்த மணிவாசகர் இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து, `வருகின்ற ஆவணிமூல நாளில் குதிரைகள் மதுரை வந்தடையும்` என்று கூறினார். அரசனும் சினம் மாறி மனம் மகிழ்ந்து அமைச்சரை அன்போடு வரவேற்று அருகிருந்து அவரை மகிழ்வித்தான்.

மணிவாசகரை மன்னன் ஒறுத்தல்:

ஆவணி மூலநாளை அரிமர்த்தனன் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர் அமைச்சருள் சிலர், `வாதவூரர் சொல்லியன அனைத்தும் பொய்யுரை; அவர் தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும் திருப்பெருந்துறையில் அரன் பணிக்காகச் செலவிட்டு விட்டார், அவர் கூறுவதை நம்ப வேண்டா`` என்று கூறினர். பாண்டியன் ஒற்றர்களை விடுத்து அவர் மூலம் அமைச்சர்கள் கூறியன அனைத்தும் உண்மையென்பதை அறிந்தான். வாதவூரர் செய்கையை எண்ணிச் சினந்து தண்டநாயகர் சிலரை அழைத்து வாதவூரர் பால் சென்று குதிரை வாங்கக்கொண்டுபோன பொருள்களை அனைத்தை யும் வற்புறுத்தித் திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். அச்சேனைத் தலைவர்கள் வாதவூரரிடம் சென்று மன்னன் கட்டளையை எடுத்துக்கூறி அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். கொடுஞ்சிறையில் இட்டனர். சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர். வாதவூரர் இறைவனைத் தியானித்து ஐயனே! ஆவணி மூலத்தன்று குதிரை கொண்டு வருவதாகக் கூறிய உன் உரை பொய் யாகுமோ? உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது தகுதியா? என்னைக் கைவிடில் எனக்கு யார் துணை? அடியான் ஒருவன் துன்புறுவது உனக்குக் குறையல்லவா? என்றெல்லாம் இறைவனிடம் முறையிட்டு வருந்தினார்.

நரிகள் பரிகளாயின:

வாதவூரர்தம் வருத்தத்தைத் தணிக்கத் திருவுளம் கொண்ட பெருமான் நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றித் தேவர் களெல்லாம் குதிரைச் சேவகர்களாய்ப் புடைசூழத் தான் குதிரை வாணிகன் போலத் திருக்கோலம் கொண்டு வேதமாகிய குதிரையில் அமர்ந்து, மதுரையை நோக்கிப் புறப்பட்டான். குதிரைப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. குதிரைப் படைகள் மதுரை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்து விட்டோமோ? என்று வருந்தி அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று முகமன்கூறி அருகிருத்தினான்.

பாண்டியன் பரிசு:

கடல் அலைகள்போல் வந்த படைகளின் விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம் வானை மறைத்தது. குதிரைக்கூட்டம் மதுரை மாநகரை அடைந்தது. வாணிகத் தலைவனாக வந்த சிவபிரான் பாண்டியன் முன்னிலையில் குதிரைகளனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில் நடத்திக் காட்டியும், ஆடல்கள் புரியச் செய்தும் பாண்டியனை மகிழ்வுறுத் தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன் குதிரைத் தலைவனுக்கு ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான் அப்பரிசைப் புன்னகையோடு தன் செண்டினால் வாங்கினான். தான் அளித்த பரிசை மரியாதைக் குறைவாகக் குதிரைத் தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன் வெகுண்டான். அருகிலிருந்த வாதவூரர் `செண்டினால் பரிசு பெறுதல் அவர்கள் நாட்டு வழக்கு` என்றுகூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர், குதிரை இலக்கணமறிந்த புலவர்கள் குதிரைகளை யெல்லாம் இவைகள் நல்ல நிறமும், நடையும், நல்ல சுழிகளும் பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும் தானளித்த பொருளைவிடப் பல மடங்கு அதிகமான குதிரைகளைப் பெற்றதாக மகிழ்ந்து அவைகளைப் பந்தியில் சேர்க்குமாறு பணித்தனன். வணிகர் தலைவன் குதிரைகளையெல்லாம் கயிறுமாறிக் கொடுக்கும்படித் தன்னுடன் வந்தவர்களிடம் கூறி அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.

பரிகள் நரிகளாயின:

அன்று இரவு நடுநிசியில் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின. பந்தியில் இருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்று ஊர்மக்கள் அஞ்சும்படி மூலை முடுக்களில் எல்லாம் ஓடி மறைந்தன. காலையில் குதிரைச் சேவகர்கள் உள்ளம் பதறி, உடல் நடுங்கி, அரசனிடம் வந்து முறையிட்டனர். இச்செய்தியைக் கேட்ட மன்னன் சினம் பொங்கி அமைச்சர்களை அழைத்து திருவாதவூரர் செய்த வஞ்சனையைக் கூறிப் படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தித் தண்டனை அளித்து அவரிடத்தில் கொடுத்த பொருள்களை யெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு உத்தர விட்டான். படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றி ஒறுத்தார்கள். வாதவூரர் இறைவன் திருவருளை நினைந்து எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று கூறி வருந்தி நின்றார்.

வைகையில் வெள்ளம்:

வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான், வையையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வையை யில் தோன்றிய பெருவெள்ளம் மதுரைமாநகர் முழுவதும் விரைந்து பரவத்தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர்மக்கள் ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி மன்னனிடம் சென்று முறையிட்டனர். பாண்டியனும் ஆற்றுவெள்ளத்தைத் தணிக்க, பூ, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகிய தேயல்லாமல் சிறிதும் குறையாதது கண்டு அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்து சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்று நன்கு தெளிந்து அவரை விடுவித்து மதுரை மாநகரை இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். வாதவூரரும் திருவருளை எண்ணி வழுத் தினார். வெள்ளத்தின் வேகம் ஒரு சிறிது குறைந்தது. இருப்பினும் முற்றும் வெள்ளம் குறையவில்லை. அதனைக்கண்ட பாண்டியன் மதுரை மக்களையெல்லாம் ஒருங்குகூட்டி ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு என்று அளந்து கொடுத்து ஆற்றின் கரையை அடைக்கும்படி ஆணையிட்டான்.

மண் சுமந்தது:

அரசன் ஆணையைக் காவலர் ஊர் முழுவதும் முரசறைந்து அறிவித்தனர். அந்நகரில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் மூதாட்டி தனக்கு அளவு செய்துவிட்ட ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவ னிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி ஆள் போலத் தோன்றினான், `யாரேனும் கூலி கொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ?` என்று கூவிய வண்ணம் தன்னை வந்தடைந்த அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்து, `நீ எனக்குக் கூலியாளாக வரவேண்டும்; அவ்வாறு வந்து என் ஆற்றின் பங்கை அடைத்துத் தருவாயானால் நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்` என்று கூறினாள். அதற்கு இசைந்த அக் கூலியாள் அவள் கொடுத்த பிட்டை வாங்கி உண்டு, தாயே! என் பசி தீர்ந்தது; இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன் என்று அவன் பங்கை அறிந்து அதனை அடைப்பதற்கு முற்பட்டான்.

பாண்டியன் பிரம்படி:

வேலையைத் தொடங்கிய அவ் வந்தியின் ஆளாகிய சிவபெருமான் மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று கரையில் கொட்டிவிட்டுக் களைப்படைந்தவன்போல ஓய்வு எடுத்துக் கொள்வதும், வந்தி அளித்த பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடு வதும் செய்து பொழுது போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக் கூடையைத் தலையணையாக வைத்து உறங்கவும் செய்தான். ஆற்றின் கரை அடைபட்டதா என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும் தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும் கிழவி யின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடக்கிறது. வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன் சரிவரத் தன் பணியைச் செய்யாமல் பொழுதைக் கழிக்கிறான்; அதனால் அப்பகுதி நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு ஊரார் பங்கையும் கரைக்கிறது என்று கூறினர். உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன் அக்கூலியாளை அழைத்து வரச்செய்து தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில் அடித்தான். அடித்த அளவில் கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி அரசன், அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அண்ட சராசரப் பொருள் அனைத்தின் மேலும் பட்டது. அப்போது வாதவூரர் இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக வந்த திருவருளை எண்ணி வியந்தார். பாண்டிய மன்னன் வாதவூரர் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி, `நற்றவப் பெரியீர்! எனக்கு அமைச்சராய் இருந்து அமர்ந்து எம் குலதெய்வத்தை என் கண்ணாரக்காட்டிக் குதிரைச் சேவகனாக வும், கூலியாளாகவும் வரச்செய்து என் பிறவி மாசை ஒழித்த பெரியவரே, என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் பெருமையை இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்` என்று வேண்டினான். வாதவூரர் பாண்டியனிடம் `இறைவனுடைய திருவடித்தொண்டு செய்ய என்னை உரிமையாக்குவதே இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்` என்றார். மன்னனும் அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு தம் அரண்மனைக்குச் சென்றான்.

அமைச்சியலைத் துறந்து தவ வேடம் தாங்கிய வாதவூரடிகள் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய், திருப் பெருந்துறையை அடைந்தார்.

குருநாதர் பிரிவு:

மீண்டும் தன் குருநாதரை அடைந்த வாதவூரடிகள் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதைச் சீடர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்புற்றிருக்குமாறு பணித்தார். அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல் பெரிதும் வருந்தினர். அதனைக் கண்ட குருநாதர் இக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் `இக்கோயில் திருக்குளத்தில் தீப் பிழம்பு ஒன்று தோன்றும்; அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்` என்று திருவாய் மலர்ந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர், `நீ எம்மைப் பின் தொடர்ந்து வருதல் வேண்டா; உத்தர கோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக் கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர், தில்லையை அடைவாயாக` என்று கூறிச்சென்றார். மணிவாசகரும் அவ்வாறே திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின்கீழ் ஒரு தெய்வீகப் பீடம் அமைத்து அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து அடியார்களோடு தாமும் வழிபட்டு வரலாயினார்.

தல யாத்திரை:

மணிவாசகர் திருவருட் போகத்தில் திளைத்து வாழும் நாள்களில் 1. நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4. குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து. 6. ஆசைப்பத்து, 7. வாழாப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட் பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம், 14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி அடியார் கூட்டத்துடன் பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும் ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு அதில் மூழ்கினர். பெருமான் அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருட் காட்சி வழங்கியருளினார். அடியார்கள் அனைவரும் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர் இவ்வேளையில் கொன்றை மர நிழலில் சிவயோகத்தில் அமர்ந் திருந்தார். இந்நிகழ்ச்சியை யோகக் காட்சியில் அறிந்த அடிகள் அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த குருநாதரின் திருவடிப் பீடத்தைப் பற்றிக் கொண்டு அழுதார். 21. திருச் சதகம் என்னும் பாமாலையால் இறைவன் திருவருளைத் தோத் திரித்தார். பின்னர், குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம் திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி 22. நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் தோத்திரம் செய்தார். அப்போது இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்குப் பல சித்திகளும் கைவரப் பெற்றார். பின்னர், பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கடந்து சோழவளநாட்டைச் சேர்ந்த திருவிடை மருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந் தருளியுள்ள இறைவன் அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூரை அடைந்து புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி, 23. திருப் புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார். அதன் பின்னர், சீகாழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து 24. பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள் அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.

திருவண்ணாமலையில்:

அடிகள் அண்ணாமலையில் தங்கியிருந்தபோது மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில் கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து வீடுகள்தோறும் சென்று ஒருவரை யொருவர் துயிலெழுப்பிக் கொண்டு நீராடி வழிபாடு செய்வதைக் கண்டு அவர்கள் வாய் மொழியாகவே வைத்து 25. திருவெம் பாவையையும், அவ்வூர்ப் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதாக வைத்து 26. திருவம்மானையையும் அருளினார்.

சிதம்பர தரிசனம்:

பின்னர், அண்ணாமலையை நீங்கிக் காஞ்சிபுரம் அடைந்து அவ்வூர் இறைவனைத் தரிசித்துத் திருக்கழுக்குன்றம் அடைந்து 27. திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறை யில் அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தில்லையின் எல்லையை அடைந்து அத் திருத்தலத்தைத் தரிசித்தார்.

தில்லை சிவ லோகம் போலக் காட்சியளித்தது. அந்நகரை யடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருக் கோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி வலமாகச் சிற்சபை யில் எழுந்தருளியிருக்கும் ஆனந்த நடராசப் பெருமானை ஆறா அன்பினில் கண்டு கண்ணீர்வார உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளி வந்து காட்சி கொடுத்த இறைவனைத் தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து பேரானந்தம் உற்று ஆனந்தக் கண்ணீர் பெருக 28. கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர், தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் பலநாள்கள் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார். அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து மீண்டும் தில்லை வந்தடைந்தார். தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை 29. குலாப்பத்து, 30. கோயில் திருப்பதிகம், 31. கோயில் மூத்த திருப் பதிகம், 32. கீர்த்தித் திருவகவல், 33. திருவண்டப் பகுதி, 34. போற்றித் திருவகவல், 35. திருப்பொற்சுண்ணம், 36. திருத்தெள்ளேணம், 37. திருவுந்தியார், 38. திருத்தோள் நோக்கம், 39. திருப்பூவல்லி, 40. திருப்பொன்னூசல், 41. அன்னைப் பத்து, 42, திருக்கோத்தும்பி, 43. குயில் பத்து, 44. திருத்தசாங்கம், 45. அச்சப்பத்து, என்பனவாம்.

புத்தரொடு சமய வாதம்:

மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில் சிவனடி யார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார். அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ் வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து `தீயவரும் உள்ளன் போடு இப்பெயரை ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்` என்று கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடி யார் கூறுவதைக் கேட்டுச் சினந்து `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்` என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு `யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம் என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது, அவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி `தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; கவலற்க` என்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் ``அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்`` என்று அழைத்தார்கள்.

ஊமைப்பெண் பேசியது:

வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும், புலவர்களும் அவ்வவை யில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, `புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்து என் கடமை` என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து `வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார். வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மை களை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர் கலை மகளை வேண்டி சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை` என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன் வாதவூரரை வணங்கி `அடிகளே என்பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின் றாள். அவளைப் பேசும்படிச் செய்தால் நான் தங்களுக்கு அடிமை யாவேன்` என்று கூறினான். வாதவூரர் அதற்கிசைந்து அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அப்பெண்ணும் அனை வரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள். அந்த வினா - விடைகள் தாம் 46. திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவஞ் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து புத்த குருவும், மற்றவர் களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டு மென்று வேண்டினான்.

மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மணிவாசக ரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் 47.

திருப்படையாட்சி, 48. திருப்படை யெழுச்சி, 49. அச்சோப் பத்து, 50. யாத்திரைப்பத்து என்ற பதிகங் களைப் பாடியருளினார்.

இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது:

இவ்வாறு சிதம்பரத்தில் மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள் களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக் காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி மணி வாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக` என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங் கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார். கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதனைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாசக உட்பொருள்:

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.

காலையில் கோயிலில் இறைவனைப் பூசை செய்ய வந்த அருச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு அதனையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர் வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரர் அதனைக் கேட்டு, திருவருளையெண்ணி வணங் கினார். முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளைத் தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்` என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார். இவ்வற்புத நிகழ்ச் சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர். நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண் டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட் கொண்டருளினார்.

அடிகள் காலம்:

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.

மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.