காரைக்காலம்மையார்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

காரைக்காலம்மையார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார் என்பதும் அறியற் பாலனவாகும்.

பெரிய புராணத்தில்

இவர் தம் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார்.

பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.

திருமணம்

நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.

மனைத்தக்க மாண்பு

பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

அடியவர்க்கு அமுது

ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான்.

அதிமதுரக்கனி

கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார்.

மாங்கனியின் மாயம்

அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.

மறுமணம்

இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.

புனிதவதியார் சந்திப்பு

இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.

பேய் வடிவம்

சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,

ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி

இவனுக்காகத்

தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து

இங்கு உன்பால்

ஆங்குநின் தாள்கள் போற்றும்

பேய்வடிவு அடியேனுக்குப்

பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்

பரவி நின்றார். (தி.12 காரைக்.49)

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே

மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்

ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாகி

வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்

(தி.12 காரைக். 50)

எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது

உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி

மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய

நற்கணத்தில் ஒன்றாய நாம் (85)

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.

அம்மையே வருக

பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற சிறு பிரபந்தத்தையும் அருளி இறைவனைப் போற்றித் திருக்கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் பெருவிருப்புடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக்கயிலை மால்வரையை அடைந்தார். சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதியவராய்

தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந் தார். இறைவனது திருவருள் நோக்கம் அம்மையார் மேற் பதிந்தது. சிவபோகத்தைத் தன் அடியவர்க்கருளும் அருட்சத்தியாகிய அம்பிகை அம்மையாரின் அன்பின் திறங்கண்டு வியந்து இறைவனை நோக்கி `எம் பெருமானே? தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப் பெண் யார்?` என வினவ பெருமான் `இவர் அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்` எனக்கூறி `அம்மையே` என்னும் செம்மொழியால் அவரை அழைத்தருள `அப்பா` என்று சொல்லிக் கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கினார்.

இறைவன் அவரை நோக்கி `நீ நம்பால் பெறக் கருதுவது யாது?` எனக் கேட்க அம்மையார் இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழ் இருக்க வேண்டு மென வேண்டினார்.

பெருமான் `தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற் றிருப்பாயாக` என அருளினார்.

திருவடிப்பேறு

அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து அண்டமுற நின்றாடும் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு உளம் உருகி வழிபட்டு `கொங்கை திரங்கி`, `எட்டி இலவம்` என்று தொடங்கும் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழ் என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வு பெற்றார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வரலாற்றை அழகுற விரித்துரைத்துள்ளார்.

முன்னோர் வழியில்

அம்மையார் அருளிய திருவாலங்காட்டுத் திருப்பதிகங்கள் தேவாரத் திருப்பதிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதற்கண் தோன்றிய சிறப்பால் மூத்த திருப்பதிகங்கள் எனப் பெற்றன. அம்மையார் அருளிய இரண்டு திருப்பதிகங்களில் முதல் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணமைப்பில் பாடப்பெற்றது. திருஞானசம்பந்தர் இப்பண்ணமைப்பிலேயே `தோடுடைய செவியன்` என்னும் திருப் பதிகத்தை அருளிச் செய்துள்ளார். மற்றொரு திருப்பதிகம் இந்தளம் என்னும் பண்ணமைப்பில் பாடப்பட்டுள்ளது. சுந்தரர் தாம் அருளிய திருப்பதிகங்களில் முதலாவதாகிய `பித்தாபிறைசூடி` என்னும் திருப் பதிகத்தை இவ் இந்தளப் பண்ணிலேயே பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் சுந்தரரும் அம்மையார் தலையால் நடந்த திருவலாங்காட்டைக் காலால் மிதித்தல் கூடாதென ஊர் எல்லையிலிருந்தே திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்.

இவற்றை நோக்கும்போது நம் ஆசாரியர்கள் அம்மையார் காட்டிய நெறியில் நின்று இறைவனைப் போற்றிய பாங்கையும் அம்மையாரிடம் அவர்கள் காட்டிய பத்திமையையும் நாம் நன்குணரலாம்.

காலம்

திருஞானசம்பந்தர் தாம் அருளிய திருஆலங்காட்டுத் திருப் பதிகத்தில்

வணங்கும் சிறுத்தொண்டர்

வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு

அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு

எம் அடிகளே (தி.1 ப.45 பா.7)

எனக் குறித்தருளுவதால் அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது யாப்பமைதி சொற்பொருள் அமைதி முதலியவற்றைக் கொண்டு ஆராயுங்கால் இவரது காலம் இருண்ட காலப்பகுதி எனப்படும். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.