காளத்தி (திருக்காளத்தி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு ஞானப்பூங்கோதை உடனுறை குடுமித் தேவர்


மரம்: கல்லால மரம்
குளம்: பொன்முகலி ஆறு

பதிகங்கள்: சந்தமாரகிலொடு -3 -36 திருஞானசம்பந்தர்
வானவர்க -3 -69 -திருஞானசம்பந்தர்
விற்றூணொன் -6 -8 திருநாவுக்கரசர்
செண்டாடும் -7 -26 சுந்தரர்
பெற்ற பயனிதுவே -11 -9 நக்கீரதேவர்

முகவரி: காளாத்தி அஞ்சல்
சித்தூர் மாவட்டம்
ஆந்திர மாநிலம், 517644
தொபே. 08578 222240

இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும். சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும் வழிபட்டு வீடுபேறு அடைந்த தலம் ஆதல் பற்றி இப்பெயர் எய்திற்று என்பர். (சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை) பஞ்சபூத ஸ்தலங்களுள்(பஞ்ச பூதஸ்தலங்கள் ஆவன:- திருவாரூர் - பிருதிவி (நிலம்). திருவானைக்கா - அப்பு (நீர்). திருவண்ணாமலை - தேயு (தீ). திருக்காளத்தி - வாயு (காற்று). சிதம்பரம் - ஆகாசம் (இடைவெளி.)

வட சென்னை இருப்புப் பாதையில் காளத்தி என்னும் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 5. கி.மீ.தூரத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்று. )வாயுஸ்தலம். இறைவன் திருமுன்பு எரியும் பல திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் மோதப்பெற்றது போல் எப்பொழுதும் அசைந்து கொண்டிருப்பதே இதற்குச் சான்றாகக் காணலாம். தென் கயிலாயத் தலங்களுள் முதன்மை பெற்றது.

இறைவர் திருப்பெயர் - (1) திருக்காளத்திநாதர்.
(2) குடுமித் தேவர் - நாணன் என்னும் வேடனால், கண்ணப்பரிடம் கூறப் பெற்றபெயர்.
இறைவி திருப்பெயர் ``ஞானப்பூங்கோதை. இப்பெயர் ``ஞானபூங்கோதையாள் பாகத்தான் காண்`` என அப்பர் பெருமான் திருத்தாண்டகத்தில் வருவது காண்க. பிள்ளையார் - ஐஞ்சந்திப் பிள்ளையார். மரம் - கல்லால மரம். (விழுது இறங்காத ஆல மரமே கல் ஆலமரமாகும்)

தீர்த்தம்:
(1) பொன்முகலி ஆறு. இது இவ்வூரில் வடக்கு நோக்கிச் செல்லும் சிறப்புடையது.
(2) பிரம தீர்த்தம்
(3) சரசுவதி தீர்த்தம்.
(4) சூரிய தீர்த்தம் முதலியன.

திருமால், பிரமதேவர், திருமகள், கலைமகள், திக்குப் பாலகர் முதலான தேவர்களும், அகத்தியர், வசிட்டர் முதலான முனிவர்களும், முசுகுந்தச் சக்கரவர்த்தி, நக்கீரர் முதலான பெரியோர்களும், வழிபட்டுப் பேறுபெற்ற தலம். அன்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் கண்ணப்ப நாயனார் வழிபட்டு இறைவனுடைய வலப் பக்கத்தில் நிற்கும் பெருஞ்சிறப்பு வாய்ந்த பதி. கண்ணப்பரது திருத்தொண்டைப்பற்றி ``வாய்கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசனடி கூடு காளத்தி மலையே`` எனத் திருஞானசம்பந்தப் பெருமானும்,
``பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்
கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ``.
என வாதவூரடிகளும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இத்தலத்திற்கு வீரை நகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணம் ஒன்றும், கருணைப் பிரகாசர், சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் இவர்கள் மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம் ஒன்றும், சேறைக்கவிராசர் பாடிய உலா ஒன்றும், நக்கீரதேவர் பாடிய கைலைபாதி காளத்திபாதி அந்தாதி ஒன்றும் ஆக நான்கு நூல்கள் இருக்கின்றன. இவைகளன்றி ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக நான்கு பதிகங்கள் இருக்கின்றன.

இவ்வூர்ப் பாடல்பெற்ற கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச்சிவனார், ஆளுடையார் தென்கயிலாயமுடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதிவிடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். திருவிழா:
திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து. கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக்கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப்பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது.

திருமடம்:
திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான்.

இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்களுக்கு அரிசியும் இடுவதற்கு உடலாக (மூலதனமாக) விசயகண்ட கோபால தேவரின் நான்காம் ஆண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுப் பேரூர் நாட்டு மதுரைவாய் திருநல்லுழான் திருநட்டப்பெருமாள் தியாகமேனன் நிவந்தம் அளித்திருந்தான்.

இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்று ஒன்று இருந்தது.

திருநந்தவனம்:
திருக்காளத்தி உடைய நாயனாரின் திருமலை அடிவாரத்தில் வீரநரசிங்க தேவன் திருநந்தவனம் என்னும் பெயருள்ள நந்தவனம் இருந்தது. அது சசிகுலசளுக்கி வீரநரசிங்க தேவனான யாதவ ராயனால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு வீரநரசிங்க தேவன் ஆற்றூர் நாட்டுக்கோன்பாக்கத்திலும், திருக்காளத்திப் புத்தூரிலும் நெல்வாயிலிலும், தனக்குக் கிடைக்கும் நன்செய் நிலத்தில் பத்தில் ஒன்றாய் வந்த பாடிகாவல் கடமை, பொன் ஆயம், நெல்லாயம் இவைகளை உடலாக விட்டிருந்தான். ஆலால சுந்தர நந்தவனம் என்று ஒன்று இருந்ததை முதற்குலோத்துங்க சோழனின் 49-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு கமுகம் தோட்டத்திற்கு கண்ணப்ப தேவர் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.

நூற்றுக்கால் மண்டபமும், பெரியகோபுரமும்:
இக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தையும், பெரிய கோபுரத்தையும் கட்டியவர் விஜயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆவர். இதை இக்கோயிலில் சகம் 1438 - இல் செதுக்கப்பட்ட தெலுங்குக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

கண்ணப்பர் கோயில்:
இக்கோயில் மண்டபமும் மண்டபத்தைச் சுற்றிய தாழ் வாரமும் ஆடவல்லான் கங்கை கொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பெற்றது.

இவ்வூரிலுள்ள வேறு கோயில்:
இவ்வூரில் திருமணிக்கெங்கையுடைய வேறு கோயில் ஒன்று உண்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டில், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லம் நாட்டுப் பெருந்தண்டலத்துக்கோறுழான அமுதாழ்வான் மங்கை நாயகன் மழவராயனால் அக்கற்றளியும், திருமண்டபமும், சோபானமும் கட்டப்பெற்றதாகும்.

இக்கோயிலில் தனி இடத்தில் சசிகுலசளுக்கி தனிநின்று வென்றானாகிய வீரநரசிம்ம தேவனாகியயாதவராசன் மல்லிகார்ச்சுனரை எழுந்தருளுவித்திருந்தான்.

இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:
இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருவேங்கடக் கோட்டத்து, ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்தி என இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்காளத்தி முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் காளத்தியாகிய மும்முடிச் சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றிருந்தது.

பிறசெய்திகள்:
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலில் கிருத்திகைத்தீப விழாவைப்பற்றிக் கூறப்பெற்றுள்ளது. அதற்குக் கங்கைக்கொண்ட சோழமிலாடுடையான் நிவந்தம் அளித்திருந்தான். கண்ணப்பர் பிறந்த நாடு பொத்தப்பிநாடு என்று சேக்கிழார் கூறியுள்ளார். அப்பொத்தப்பி நாடு இவ்வூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாட்டுத் தொகையில் புரிசை நாட்டுப்புரிசை எனக் குறிப்பிட்டுள்ளார். அப்புரிசை நாடு மணவில் கோட்டத்தில் உள்ளது என்பதையும் இக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

அளவு கருவிக்குக் காளத்தியுடையான் மரக்கால் என்றும், ஒரு தலைவனுக்குத் திருக்காளத்தி தேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்கு மன்றாடி காரிசாத்தன் திருக்காளத்திகோன் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது.

திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப்பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96-ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம்.

நுந்தா விளக்கேயன்றி சந்தி விளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர்( See the Annual Reports on South Indian Epigraply for the year 1892 195 - 202, year 1892 72 - 76. 166 - 203, year 1904 276 - 303, year 1922 82 - 184, year 1924 150 - 180.

See also the South Indian Inscriptions, Volumes IV 643 - 650. Volumes VIII 377 -381. Volumes VIII 463 -502.)கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி