அதிகைவீரட்டானம் (திருவதிகைவீரட்டானம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வீரட்டானேசுவரர்

மரம்: சரக்கொன்றை
குளம்: கெடிலம், ஆலகங்கை, சக்கரதீர்த்தம்

பதிகங்கள்: குண்டைக்கு -1 -46 திருஞானசம்பந்தர்
கூற்றாயினவாறு -4 -1 திருநாவுக்கரசர்
சுண்ணவெண் -4 -2 திருநாவுக்கரசர்
முளைக்கதிர் இளம் -4 -10 திருநாவுக்கரசர்
இரும்பு கொப்பளித்த -4 -24 திருநாவுக்கரசர்
வெண்ணிலாமதி -4 -25 திருநாவுக்கரசர்
நம்பனே எங்கள் -4 -26 திருநாவுக்கரசர்
மடக்கினார் புலியி -4 -27 திருநாவுக்கரசர்
முன்பெலாம் -4 -28 திருநாவுக்கரசர்
மாசிலொள்வாள் -4 -104 திருநாவுக்கரசர்
கோணன்மா -5 -53 திருநாவுக்கரசர்
எட்டுநாண் -5 -54 திருநாவுக்கரசர்
வெறிவிரவுகூவிள -6 -3 திருநாவுக்கரசர்
சந்திரனைமாகங்கை -6 -4 திருநாவுக்கரசர்
எல்லாம்சிவ -6 -5 திருநாவுக்கரசர்
அரவணையான் -6 -6 திருநாவுக்கரசர்
செல்வப்புன -6 -7 திருநாவுக்கரசர்
தம்மானைஅறி -7 -38 சுந்தரர்

முகவரி: பண்ருட்டி அஞ்சல்
கடலூர் மாவட்டம்

தென்னார்க்காடு மாவட்டம் கடலூர் தாலூகாவில் பண்ணுருட்டி தொடர்வண்டி நிலயத்திலிருந்து தென் மேற்கே 2. கி.மீ. தூரத்தில் உள்ளது.

தலச் சிறப்பு: அப்பர் சுவாமிகளுக்குச் சூலைநோய் தீர்த்து அருள் புரிந்த திருத்தலம். அட்டவீரட்டங்களுள் இது முப்புர மெரித்த சங்கார மூர்த்தியை உடையது. இத்தலத்தில் கருடன், பிரமன், திருமால், பஞ்ச பாண்டவர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம். இறைவன் சுந்தரருக்குச் சித்தவட மடத்தில் திருவடி தீட்சை செய்தருளிய சிறப்புடையது.


கல்வெட்டு:

இவ்வூர் வீரட்டானமுடையார் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903 28 - 60. year 1921 358 - 419. See also the South Indian Inscriptions Vol. VIII 301 - 306, 308 - 335.See also the Epigraphia Indica Vol. VIII page 8.)

கோயிலில் கங்கபல்லவருள் நிருபதுங்கவர்மர், பல்லவர்களில் பரமேசுவரப்போத்தரையர், தெள்ளாறெறிந்த நந்திவர்மர், பிற்காலப் பல்லவர்களில் கோப்பெருஞ் சிங்கதேவர், என்பவர்கள் காலங்களிலும்; பிற்காலச் சோழமன்னர்களுள், இராஜகேசரிவர்மன், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்கசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராஜாதிராஜன் என்பவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களுள் மாறபன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் விக்கிரமபாண்டியதேவர், ஜடாவர்மன் சுந்தரபாண்டியதேவர், திரிபுவன சக்கரவர்த்தி வல்லபதேவர் என்பவர்கள் காலங்களிலும், கேரளவம்சத்தில் இரவிவர்ம மகாராசராகிய குலசேகரதேவர் காலத்திலும், சாளுவவம்சத்தில் மகா மண்டலேசுவரரான நரசிங்க தேவ மகாராயர் காலத்திலும், விசய நகர மன்னர்களுள் (பொக்கண்ண உடையார் மகன்) கம்பண்ண உடையார், அச்சுததேவ மகாராயர், ஸ்ரீரங்கதேவ மகாராயர், சதாசிவதேவ மகாராயர் என்பவர்கள் காலங்களிலும், தஞ்சை நாயக்க மன்னருள் சின்னப்ப நாயக்கர் காலத்திலும் செதுக்கப் பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

ஊரின் பெயர்: நிருபதுங்கப்பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரைய மங்கலம் என்றும், முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் அதிராஜமங்கலம் என்றும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராசமங்கலியபுரம் என்றும், மணவிற் கூத்தனான காலிங்கராயனின் திருப்பணிகளைப்பற்றிக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

இறைவர் திருப்பெயர்: இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானமகாதேவர், திருவீரட்டானமுடையார், திரு வீரட்டானமுடையநாயனார், அதிகை நாயகர் என்னும் திருப்பெயர்களால் வழங்கப்பெற்றுள்ளனர்.

இறைவியார் பாராட்டப்பெறும் விதம்: இக்கோயில் கல்வெட்டுப் பாடலில் இறைவியார்
``அதிகை வீரட்டத்து ஈசன் இடமருங்கில் ஏந்திழை``,
``அண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத பெண்ணின் நல்லாள்``

என்னும் தொடர்களால் பாராட்டப்பெற்றுள்ளனர்.

திருக்கோயிலைப் புதுக்கியவர்: திருவீரட்டானமுடையார் கோயிலை நிருபதுங்கதேவரின் பதின்மூன்றாமாண்டில் புதுப்பித்தவர் முனைப்பாடி ஆமூர்ப் பெருங்குளத்தில் வாழ்ந்துவந்த முனைப் பேரரையர் மகன் முனையகோன் இளவரையர் ஆவர்.

(See the South Indian Inscriptions Volume VIII, Ins. No. 308. Epigraphia Indica Volume VIII.)

இக் கோயிலின் வான்கயிலாயத் திருமாளிகையை ஸ்தூபி பரியந்தம் திருமஞ்சனம் பண்ணிப் புறச்சாருணைத் திருக்கல்லும் சாத்தி அருளியவர் கேரள வம்சத்து இரவிவர்ம மகாராஜரான பெருமாள் குலசேகர தேவராவர்.இது நிகழ்ந்த காலம் கலியுகம் 4414. சகம் 1235.அதாவது கி. பி. 1313 ஆகும்.

திருக்காமக்கோட்டத்தைக் கட்டியவர்: திருக்காமக்கோட்டமென்பது இறைவியார் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாகும்.

இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவரான கூத்தர் காலிங்கராயர் ஆவர். இவர் இக்கோயிலைக் கட்டிய செய்தி இக்கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள,

``அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந்
திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங்
கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
கொண்டானந் தொண்டையர் கோ.``
என்னும் வெண்பாவால் விளங்கும்.

திருவதிகை வீரட்டானமுடையார் கோயிலைப் பொன் வேய்ந்தவர்: இக்கோயிலைப் பொன் வேய்ந்தவர் மேற்குறித்த கூத்தர் காலிங்கராயர் ஆவர். இச்செய்தியை,

``தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோ
பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு
முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
கொற்றத்தான் தொண்டையர் கோ.

என்னும் வெண்பா உணர்த்தும்.

மணவில் கூத்தர் வீரட்டானமுடையார்க்குச் செய்த வேறு திருப்பணிகள்: அதிகை நாயகர்க்கு நூற்றுக்கால் மண்டபத்தை அமைத்தார். மடைப்பள்ளியைச் சிலையால் சமைத்தார். மண்டபம் மாளிகை. பெரிய திருச்சுற்று இவைகளைக் கட்டினார். யாக மண்டபத்தைச் செய்தார்.ஆடல் அமர்ந்த பிரானுக்குக் கோயிலும் அரங்கும் அமைத்தார்.

பிள்ளையார்கோயில்: வீரட்டானமுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் திருப்பெயர் மூத்தநயினார் என்பதாகும். இவரது கோயிலைச் சகம் 1399இல் வெண்ணெய்ப் பெருமாள் என்பவர் பழுதுபார்த்துள்ளனர்.

திருவிழாக்கள்: இக்கோயிலில் தை மாதத்திலும், வைகாசி மாதத்திலும் விழாக்கள் நடைபெற்று வந்தன. தை மாத விழாவில் தேர் இழுக்கப்படுவது உண்டு. நாற்பது ஆண்டுகள் இக்கோயிலில் தேர் இழுக்கப்படாமல் இருந்தது. அதன் பொருட்டுச் சாளுவ பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராயரது தளவாய் அறம் வளர்த்த நாயனார் சகம் 1400இல் அதாவது கி. பி. 1478இல் திருத்தேர் ஒன்றைச் செய்து வைத்துள்ளனர்.

வைகாசி மாதம் நடைபெறும் விழா வசந்த விழாவாகும். அதன்பொருட்டு, சாளுவப் பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராசர் காலத்தில் திம்மி நாயக்கர் என்பவர் திரிபுவன மாதேவிப் பட்டணத்தைச் சேர்ந்த முதுகுளத்தூரில் வசூலிக்கப்படும் வரிப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

வாகீசர் திருக்கோயில்:வாகீசர் என்பது சைவ சமய குரவர் திருநாவுக்கரசராகிய பெருந்தகையார்க்குள்ள வேறு திருப்பெயராகும். இவர்க்கு, இத் திருவதிகை வீரட்டானக் கோயிலில் ஒரு தனிக்கோயில் உண்டு.

இக்கோயிலைக் கட்டியவர், மேலே குறிப்படப்பட்ட மணவில் கூத்தனான காலிங்கராயர் ஆவார். இச்செய்தி,

ஈசனதிகையில்வா கீசனெழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.

என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.

வாகீசர் திருமடம்: இவ்வூரில் வாகீசர் திருப்பெயரால் மடம் ஒன்றிருந்தது. இதற்குத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டுக் கணிச்சப்பாக்கத்து ஊரார், தங்கள் ஊர்த் தலைப்பாடகத்தில் இராசேந்திரப்பேரேரி கீழ்கரைக்குக் கிழக்கும், வடக்கெல்லை இந்நாட்டுப் பனைப்பாக்கத்து எல்லைக்குத் தெற்கும், கிழக்கெல்லை மதனிபாக்கத்தெல்லைக்கு மேற்கும், தெற்கெல்லை உற்றடத்து உறவும் ஆக இந்நான்கு எல்லைக்கு நடுவுட்பட்ட நிலம் குழி இரண்டாயிரத்தைத் திருவீரட்டானமுடையார் வாகீசர் மடத்துக்கு மடப்புறமாக எட்டுக் காசுக்கு விற்றுக் கொடுத்திருந்தனர். இம்மடத்திற்கு மடப்புறமாகப் பனைப்பாக்கத்து ஊராரும் அரைவேலி நிலம் விட்டிருந்தனர். இது நிகழ்ந்தது முதலாம் குலோத்துங்க சோழதேவரின் 44ஆம் ஆண்டாகும்.

திருநாவுக்கரையதேவர் திருமடம்: இவ்வூரில் இப்பெயருள்ள திருமடம் ஒன்றிருந்தது. இதில் உணவு அளித்தற் பொருட்டு அரும்பாக்கம் என்னும் ஊரின் தலைவனாகிய மதுராந்தகதேவன் பொன்னம்பலக்கூத்தன் திருவதிகையில் தனக்குச் சொந்தமாயிருந்த 4800 குழி புன்செய் நிலத்தை முதற் குலோத்துங்கனின் 48 ஆம் ஆண்டில் அளித்துள்ளனர்.

திருநாவுக்கரசரது திருப்பெயரைத் தெருவிற்கு இட்டு வழங்கியமை: இவ்வூரிலுள்ள பிடாரி கோயிலின் வடபால் ஒரு காடு இருந்தது. அதை வெட்டி ஒரு புதிய தெருவை உண்டாக்கி அதற்குத் திருநாவுக்கரசர் திருவீதி என்று பெயர்வைத்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர் அகோராஷ்டிர நயினார் திருமடம்: இவ்வூரில் இப்பெயருள்ள மடம் ஒன்றும் இருந்தது. இதற்கு மடப்புறமாக அதியமங்கலத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்ட தென்னம் பட்டில் நிலத்தை வாங்கி அளித்தவர் ஈசுவரநாயக்கருடைய பிரதிநிதி யாகிய காமக்கோக்கிழாரான அறம்வளர்த்த நாயனார் ஆவர். இது நிகழ்ந்த காலம் சகம் 1400. அதாவது கி.பி. 1478ஆகும்.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர், முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருமுனைப்பாடிநாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் கங்கை கொண்ட வளநாட்டுத் திருமுனைப்பாடி ஆமூர்நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; இம் மன்னனுடைய 46ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில், கங்கைகொண்ட சோழவளநாட்டுத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்றும்; ``பூமேவி வளர்பொன் மாது புணர`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழ தேவரின் 13ஆவது ஆண்டுக் கல்வெட்டில், இராஜராஜ வளநாட்டுத் திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும், சகல புவனச் சக்கவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவரின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் இராஜாதிராஜ வள நாட்டுத் திருமுனைப்பாடிக்கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது.

இங்குக் குறித்த திருமுனைப்பாடி நாடுதான், அறந்தரு நாவுக்கரசரையும் ஆலாலசுந்தரரையும் தோற்றுவித்த நாடாகும். இங்குக் குறித்த திருவாமூரே,

``சைவநெறி தலமேழும் பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்கும் திருவாமூர் திருவாமூர்``

எனச் சேக்கிழார் பெருமானால் பாராட்டப்பெற்ற, அப்பர் பெருமான் பிறந்த பதியாகும்.

இந்த ஆமூர்,மேல் ஆமூர், கீழ்ஆமூர் என்னும் இரண்டு பகுதியினை உடையதாய் இருந்தது. இவற்றுள் கீழாமூரைப் பற்றி இவ்வூர்க் கல்வெட்டுக்கள் ``திருமுனைப்பாடிக்கீழாமூர் நாட்டு`` எனக் குறிக்கின்றன. எனவே கீழாமூர் ஒரு நாடாகவும் விளங்கியிருந்தது. கண்ணமங்கலம், மானிநல்லூர், கோட்டிளம்பாக்கம், தொறுப்பாடி முதலானவை, இக்கீழாமூர் நாட்டில் அடங்கியுள்ள சில ஊர்கள் என இக்கோயில் கல்வெட்டு அறிவிக்கின்றது.

அளிக்கப்பெற்ற நிவந்தங்களில் சில: திருவீரட்டானமுடைய மகாதேவர்க்கு, உச்சியம்போது சந்தியில், சாத்தியருள நாள் ஒன்றிற்குத் திருப்பள்ளித்தாமம் பதக்காகச் சந்திராதித்தவல் செலுத்தும் பொருட்டு, சோழமண்டலத்து, அருமொழித் தேவ வளநாட்டு வாஞ்சியூர், வாஞ்சியூர்க் கிழவன் நாராயணன் ராஜராஜன், பனையூர்நாட்டு, ஆரங்கூர்நாட்டு, காட்டுப் பாக்கத்தில் பதினாறுசாண் கோலால் நூறுகுழி கொண்டது ஒரு மாவாக நிலம் அரையே நான்மாவரை அரைக்காணிக் கீழ்க்கால் நிலத்தை முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் 23ஆம் ஆட்சி ஆண்டில் வாங்கி அளித்திருந்தான்.

திருவீரட்டானமுடையார். திருச்சிற்றம்பலமுடையார் திரு வெழுச்சிக்குப் பெருந்திருவமுதுக்குச் செந்நெலரிசி பதின்கலத்துக்கு நெல் இருபத்தைங்கலமும், பலவர்க்கத்துக் கறியமுது மூவாயிரப் பலத்துக்கு நெல் முக்கலமும், மிளகமுது நானாழிக்கு நெல் நாற்கலமும், தயிரமுது கலத்துக்கு நெல் கலமும், சர்க்கரையமுது நிறை நாலுக்கு நெல் நாற்கலமும், உப்பமுது தூணிக்கு நெல்கலமும், புளியமுது நிறை ஒன்றுக்கு நெல் கலமும், அடைக்காயமுதுக்குப் பாக்கு ஆயிரத்துக்கும் வெற்றிலைப்பற்று ஐம்பதுக்கும் திரமம் இரண்டுக்கும், நெல் ஆறு கலமும், சாத்தி அருளச் சாந்துக்கும் கற்பூரத்திற்கும் காசு ஒன்றுக்கு நெல் இருபது கலமும், செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம் இரண்டா யிரம் கொள்ளக்காசு அரைக்கு நெல் பதின்கலமும், சீதாரிக்கு நெல் இரு கலமும், வழக்கத்துக்குப் பலவர்க்கத்துப் பரிசட்ட உரு எண்பதுக்கு, காசு ஐந்துக்கு நெல் நூற்றுக்கலமும், தானம் பண்ணியருளப் பொன் அரைக் கழஞ்சுக்கு நெல் இருபதின் கலமும், திருக்காப்பு நாணுக்குப் பொன் அரைக்காலுக்கு நெல் இருகலனே தூணிப்பதக்கும் அடிக்கீழிட அரிசி பதக்குக்கு நெல் ஐங்குறுணியும் ஆக இந்நெல் இருநூற்றுக் கலனே இருதூணிக்கும், திருவீரட்டான முடையார் தேவதானமான கொழுந்தாழ்வார் ஏரிகரைக்குக் கிழக்கும், திருவீரட்டானமுடையான் வாய்க்காலுக்கு வடக்கும், குப்பை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு மேற்கும், சத்திய பாவை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குத் தெற்கும் ஆக இந்நடுவுட்பட்ட ஒரு வேலி கொல்லை நிலத்தை, சோழ மண்டலத்து இராச நாராயண வளநாட்டு விளைநாட்டு அரசூர் சிவப் பிராமணன் பாலாசிரியனான கோழம்ப நாயகன் திருத்திக் கொடுத்துள்ளான்.

திருவீரட்டானமுடையார் திரு அர்த்தசாமத்துத் திருப்பள்ளிக் கட்டில் ஏறி அருளினால் அமுது செய்தருள அமுதுபடி, வெஞ்சனத்துக்குக் காலிங்கராயன் தன் பெயரால் கட்டின காலிங்கராயன் சந்திக்கு உத்திபற்றில் அதியனூர்பால் காலணை என்னும் நிலத்தைத் திரிபுவனச் சக்கிரவர்த்தி ஸ்ரீ வல்லபதேவ பாண்டியரின் 33ஆம் ஆண்டில் கொடுத்துள்ளான்.

இக்கல்வெட்டில் கண்ட தூய தமிழ்ச்சொல்: ``இதன் பலிசையால் இரண்டு நந்தா விளக்குக்கு நாள்வாய் உரிநெய் அளந்து கொடுப்போமானோம் திருக்கோயிலுடையார் கையிலே நகரத்தோம். இவ்விளக்கு நந்தில் பன்மாகேஸ்வரர் கடை கூட்டப்பெற்றார்`` என்னும் பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும்; ``இதன் பலிசையால் யாண்டு பத்தாவது முதலாக நாள்வாய் நாழிநெய் அளந்துகொடுத்து இரண்டு நந்தாவிளக்கு எரிப்பேனானேன்`` - என்னும் தெள்ளாறெறிந்த நந்தி போத்தரையர் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும் நாள்வாய் என்னும் தூய தமிழ்ச் சொல் கிடைத்துள்ளது. இச்சொல் இக்காலத்தில் வழக்கத்தில் அருகியுள்ளது. கல்வெட்டுக்களில் பெரும்பான்மையும் நிசதம் என்ற வடசொல்தான் காணப்படுகிறது. நிசதம் என்பதற்கு நாடோறும் என்பது பொருள். நிசதம் என்பதற்கு முற்காலப் பல்லவர் காலங்களில் நாள்வாய் என்ற தமிழ்ச்சொல் இருந்தது கண்டு மகிழ்தற்கு உரியதாகும்.

முட்டில் (தடைப்படில்) என்ற பொருளில் நந்தில் என்ற சொல் வழங்கியிருப்பதும் நோக்கத்தகும். (`நந்தல் கேடுடனே ஆக்கம்` என்பது நிகண்டு).

``மானம் நந்தலனாகி மனுநெறி
போனதண் குடைவேந்தன் புகழென``

என்னும் கம்பராமாயண ஆற்றுப்படல அடிகளில் நந்தலனாகி = கெடாதவனாகி என்ற பொருளில் இருப்பதையும் காணலாம்.

பொதுச் செய்திகள்: இத் திருவீரட்டானமுடையார் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சண்டேசுவரர் கலியுகச் சண்டேசுவரதேவர் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளார். இத் திருக்கோயிலில் நாடக சாலை மண்டபம் ஒன்று இருந்ததை வாகன மண்டபத் தூணிலுள்ள உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அது பூங்குன்றம் அத்தமன் ஐயாறனாகிய கண்ட தோள் கண்டப்பையனால் கட்டப்பெற்றதாகும். இக்கோயிலுக்குப் பதியிலாரும் தேவரடியாரும் இருந்தனர்.

இக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் முதலியார் (`நாடற்கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டம்` என்னும் திருப் பாடற்பகுதி (பா.18) இத் திருமுறையிற் காண்க. - முத்து. சு.) நாடற்கரிய கூத்தரும், நாயகரும் ஏறி அருளினால், முற்பாடு திரை எடுத்தால் பதியிலார் ஆடவும், பிற்பாடு திரை எடுத்தால் தேவரடியார் ஆடவும் கடவதாக, கோமாறபன்மரான திரிபுவனச் சக்கவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டியதேவர் திருவாய் மொழிந்தருளியிருந்ததை அவருடைய ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது.

இக்கோயிலில் நெய் அளக்கும் கருவிக்கு அதிகைநாயகன் நாழி என்றும், வாய்க்கால் ஒன்றுக்குத் திருவீரட்டானமுடை

 
 
சிற்பி சிற்பி