ஐயாறு (திருவையாறு)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர்


மரம்: வில்வ மரம்
குளம்: காவிரி, சூரியபுட்கரணி

பதிகங்கள்:
கலையார்மதி -1 -36 திருஞானசம்பந்தர்
பணிந்தவ -1 -120 திருஞானசம்பந்தர்
புலனைந்து -1 -130 திருஞானசம்பந்தர்
கோடல்கோங் -2 -6 திருஞானசம்பந்தர்
திருத்திகழ் -2 -32 திருஞானசம்பந்தர்
மாதர்ப்பிறை -4 -3 திருநாவுக்கரசர்
விடகிலேன்அடி -4 -13 திருநாவுக்கரசர்
கங்கையைச்சடை-4 -38 திருநாவுக்கரசர்
குண்டனாய்ச்சம -4 -39 திருநாவுக்கரசர்
தானலா துலக -4 -40 திருநாவுக்கரசர்
குறுவித்தவா -4 -91 திருநாவுக்கரசர்
சிந்திப் பரியன -4 -92 திருநாவுக்கரசர்
அந்திவட் டத்திங்கட்-4 -98 திருநாவுக்கரசர்
சிந்தைவாய் -5 -27 திருநாவுக்கரசர்
சிந்தைவண்ணத் -5 -28 திருநாவுக்கரசர்
ஆரார்திரி -6 -37 திருநாவுக்கரசர்
ஓசையொலி -6 -38 திருநாவுக்கரசர்
பரவும் பரிசொ -7 -77 சுந்தரர்

முகவரி: திருவையாறு அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 613204
தொபே. 04362 260332

தஞ்சாவூருக்கு வடக்கே 10.கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தஞ்சை, கும்பகோணம் திருக்காட்டுப்பள்ளி முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதி முடியத் திருவையாற்றிலிருந்து கண்டியூர் வரை பரவியிருந்தது.
கண்டியூர், திருச்சோற்றுத்துறை இவைகளைப் பாடிய தேவார ஆசிரியர்கள் இவ்விரு பதிகளையும் காவிரிக்கரையிலுள்ள பதிகளாகவே குறிப்பிட்டுள்ளனர்.

திருவையாற்றுக்கும் கண்டியூர்க்கும் இடையிலுள்ள குடமுருட்டியாறு அக்காலத்தில் இல்லை. அது காவிரியிலிருந்து கும்பகோணத்திற்குக் கிழக்கே பிரிந்துசென்றது. கடுவாய் என்பது குடமுருட்டியாறாகும்.

இக்கடுவாய்க்கரையிலுள்ள புத்தூரை, கடுவாய்க்கரைப்புத்தூர் என்று சிவநெறிகாட்டியருளிய குரவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல, அக்காலத்தில் குடமுருட்டியாகிய கடுவாயாறு கண்டியூர்ப்பக்கமாக ஓடியிருக்குமானால் அதைக் கடுவாய்க்கரைக் கண்டியூர் என்றே கூறியிருக்கவேண்டுமே! அங்ஙனம் குறிப்பிடாததன் காரணத்தையும் உணரவேண்டும்.

இதற்குப் பிற்காலத்தேதான், திருக்காட்டுப்பள்ளியைத் தலைப்பாகக் கொண்டு, குடமுருட்டியாற்றை வெட்டி, கும்பகோணத்திற்குக் கிழக்கிலிருந்து செல்லும் கடுவாயாற்றோடு சேர்த்து, காவிரியாற்றைக் குறுக்கி, மக்கள் வாழ்வுக்கும் சாகுபடிக்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரே நதியெனல் பொருந்தும் என்பர் சிலர். தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது ஆகையால், ஐயாறு என்று பெயர்பெற்றது என்பர் சிற்சிலர். சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, (நந்திவாய்நுரை), நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். பஞ்சநதம் என்பது, ஐயாறு என்னுந் தமிழுக்கு ஒத்த வடசொல். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் விளங்குவதாகும்.

இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர்; வட மொழியில் பஞ்சநதீசுவரர்; பிரணதார்த்திஹரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அறம்வளர்த்தநாயகி; வடமொழியில் தர்ம சம்வர்த்தினி என்பர். தீர்த்தம் காவிரி, சூரியபுட்கரிணி என்பன. இது சமயகுரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது. ``நந்தி அருள்பெற்ற நன்னகர்`` என்று சேக்கிழார் இப்பதியைச் சிறப் பித்துள்ளார். சிலாதமுனிவர்க்குத் திருமகனாய் அவதரித்த திருநந்தி தேவர், சுயசாதேவியை மணந்து, ஐயாறப்பரைப் பூசித்துச் சிவசாரூபம் பெற்றமையை உட்கொண்டு சேக்கிழார் இவ்வாறு கூறலானார். கடலரசன் இங்குவந்து ஐயாறப்பரைப் பூசித்துப் பேறுபெற்றான். ``ஆழிவலவனின்றேத்தும்`` என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதி இதற்குச் சான்றாகும். இலக்குமியால் பூசிக்கப்பெற்றது.

இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக் கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது. வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அப்பர் பெருமானுக்குக் காட்டியருளிய காட்சியை உணர்த்தும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற்கோயில், பெரியபுறத் திருச்சுற்றாலையின் தென்பால் (மூன்றாம் தெற்குப் பிராகாரத்தில்) இருக்கின்றது. அங்கு இறைவர் மணவாளக் கோலத்தோடு, சக்தியும் சிவமுமாக வீற்றிருந்து அருளுகின்றார். அப்பர் பெருமானின் அழகு திகழும் பிரதிமையும் அங்கு இருக்கின்றது.

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கியபோது எதிரே தோன்றிய திருவையாற்றையும் வணங்க விரும்பினர். அப்பொழுது காவிரியில் வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தமையால் அக்கரையிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் ``ஐயாறுடைய அடிகளோ`` என்று திருப்பதிகம் பாடிய அளவில், வந்து மீளுமளவும் காவிரியை வழிவிடச்செய்த பெருமையையுடையது இத்தலம். தம்மை வழிபட்டு வந்த ஒரு அந்தணச் சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட காரணம்பற்றி ஆட்கொண்டார் என்னும் பெயருடையாரது திருமேனி தெற்குக்கோபுரவாயிலின் மேல்பால் இருக்கின்றது. அவருக்கு அருகில் தென்மேற்கு மூலையில் இருப்பவர் ஓலம் இட்ட பிள்ளையார் ஆவர். ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக்குழி ஒன்று இருக்கிறது. அதில் மக்கள் குங்கிலியத்தை இட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தே இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். இச்செய்தியை ``எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட`` எனச் சம்பந்தரும், ``வாலியார் வணங்கி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேன்`` என அப்பர்பெருந்தகையும் அருளிச் செய்துள்ளதை இத்தலத்துத் தேவாரப்பகுதிகளால் அறியலாம்.

இறைவரைப் பூசித்த சைவர் ஒருவர் காசிக்குச் சென்று, குறிப்பிட்ட காலத்தில் வாராமையால் பூசைமுறை தவறியது. அதுபொழுது இறைவர் அச்சைவருடைய வடிவோடு இருந்து தம்மைத்தாமே பூசித்த சிறப்புடையது. இதைத்தான் ``ஐயாறதனில் சைவனாகியும்`` என்பார் திருவாசகத்தில். இப்பதிக்குப் பதினெட்டுத் தேவாரப்பதிகங்கள் இருக்கின்றன. திருவடிப் பெருமைகளை அப்பர்பெருமான் இருபது திருப்பாடல்களால் இத்தலத்தில் உணர்த்தியதுபோல் வேறு எப்பதியிலும் உணர்த்தாத அவ்வளவு பெருமையை உடையது.

இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழா. `சித்திரைப்பெருந்திருவிழா` என்பவை மிகச் சிறந்தன வாகும். இவைகளுள் நந்திதேவர் திருமணத்திருவிழா, பங்குனி மாதத்தில் நிகழ்வதாகும். அதுபொழுது அம்மையப்பர் ஒரு தனி வெட்டிவேர் பல்லக்கிலும், நந்திதேவர் வேறு ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வர். அங்கே நந்தி தேவர்க்குத் திருமணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே ஐயாற்றுக்கு எழுந்தருளும் விழா இதுவாகும்.

சித்திரைப்பெருந்திருவிழா: இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப்பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழ் ஊர்களையும் சுற்றிவரும் காட்சி போற்றத்தக்கதாகும்.

இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்து அருளாட்சியில் உள்ளது. இப்பொழுது ஆதீனத்தில் இருபத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள், பழங்காலத்துச் சோழமன்னர்களுடைய ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற சிறப்புக்களைப் போலவே இத்திருக் கோயிலின் நித்தியநைமித்திகங்கள் எல்லாவற்றையும் மிக்க சிறப்புறச் செய்வித்தருளுகின்றார்கள்.

இத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் பெரியபுறத் திருச்சுற்றாலை என்று கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. இப்பிராகாரத்தின் வடபால் ஒலோகமாதேவீச்சரம் என்னும் பெயருள்ள ஒருகற்கோயில் இருக்கின்றது. அது முதலாம் இராசராச சோழனுடைய மனைவியாராகிய ஒலோகமாதேவியால் கட்டப்பெற்றதாகும்.

அம்மன்கோயில் புதிய திருப்பணியை உடையது. புலவர்கள் செய்யுளை அலங்கரிப்பதுபோல், தேவகோட்டை உ. ராம. மெசுப. சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அழகுறத் திருப்பணி செய்திருக்கின்றனர். ஆடி அமாவாசை நாள் அப்பருக்குக் காட்சிகொடுத்த நாளாகும். அன்றும் திரளான மக்கள் வந்து கூடுவர். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒரு வெண்பாவால் திருவையாற்றைப் பாடியுள்ளார்கள். அது சேத்திரத் திருவெண்பாவில் சேர்க்கப்பெற்றுள்ளது.

அப்பாடல் வருமாறு:
``குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.``

இத்தல புராணம் ஞானக்கூத்தரால் இயற்றப்பெற்றது. தருமை ஆதீனம் அச்சிட்டுள்ளனர். இத்திருக்கோயிலுள் அமைந்த ஐயாறப்பர்கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆகிய மூன்று கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளின் சுருக்கங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


கல்வெட்டு:

பிற்காலத்துச் சோழமன்னர்களில் முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜன், விக்கிரமசோழன், மூன்றாங் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களும், பிற்காலத்துப் பாண்டிய மன்னர்களுள் கோச்சடையபன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர் காலத்துக் கல்வெட்டும், வீரமுக்கண் உடையார் மகனார் வீரசரவண உடையார் காலத்துக் கல்வெட்டும், தஞ்சாவூரையாண்ட அச்சுதப்பநாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஐயாறுடைய அடிகளுக்குத் திருநந்தா விளக்குகளுக்கும், நித்திய நைமித்தியங்களுக்கும் நிவந்தங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளை உணர்த்துபவையே. எனினும் எல்லாக் கல்வெட்டுக்களுமே பல அரிய வரலாற்று உண்மைகளை அறிவிப்பவையாயும் இருக்கின்றன.

ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பல்லவ மன்னர் ஒருவரால் செய்விக்கப்பெற்ற கற்றளியை உடையதாகும். மூன்றாம் (பிராகாரத்தின்) திருச்சுற்றாலையின் கிழக்குக் கோபுரம் விக்கிரமசோழனால் கட்டப்பெற்றதாகும். இச்செய்தி ``ஸ்வஸ்திஸ்ரீ இத் திருக்கோபுரம் விக்கிரமசோழனது`` என்னும் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. மேலக்கோபுரவாயிலிலுள்ள அச்சுதப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டு, ஐயாறப்பர் கோயிலின் மேலக்கோபுரமும், முதல் பிராகாரமும், திருநடமாளிகைப் பத்தியும், ஐந்தாம் பிராகாரத்தின் தெற்குவாசலில் உள்ள சூரியபுட்கரிணியெனும் திருக்குளமும், மூன்றாம் பிராகாரத்தில் தெற்குக்கோபுரமும் ஆனையப்பப்பிள்ளை, அவர் தம்பி வைத்தியநாதர் என்போரால் எடுப்பிக்கப்பெற்றவை என்கிறது.

இத்திருப்பணிகளைப் புரிந்த ஆனையப்பப்பிள்ளையும் அவர் தம்பியும் மருதூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தஞ்சாவூர் ஐயன்வாசல் அருகில் இருந்தவர்கள். இவர்கள் உருவங்களோடு இவர்களுடைய பெற்றோர்களின் உருவங்களும் முதல் பிராகாரத்து மேற்குத் திருச்சுற்று மாளிகையில் இருந்துள்ளன. ஆனால் அவைகள் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டன. அந்தந்த உருவங்களின் மேலே பொறிக்கப்பெற்ற பெயர்கள் இன்றும் உள்ளன. மேலக்கோபுரக் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற செய்தியை இம்முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்சுவரில் பொறிக்கப் பெற்றிருக்கும் ``ஈசுவர– ஆவணி‡ இந்தப் பிராகாரம் மருதுடையகத்தீச நயினார் புத்திரர் ஆனையப்பப்பிள்ளை, வயித்தியநாத அண்ணன்கள் புண்ணியம்`` என்னும் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.

அச்சுதப்ப நாயக்கர் திருவரங்கம் பெரியகோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்துள்ளனர். இரண்யகர்ப்பம் புகுந்தனர். உடைப் பெடுத்துச் சென்ற காவிரிக்கு அணைகட்டுவித்தனர். திருவையாற்றில் பூசப்படித்துறைக்குப் படிகள் அமைத்து அதற்குக் கல்யாணஸிந்து என்று பெயரிட்டுள்ளனர் என்னும் செய்திகள் பூசப்படித்துறை மண்டபத்துக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றன.

இறைவன் திருவையாறுடைய மகாதேவர், இறைவியார் உலகுடைய நாச்சியார் என்னும் பெயர்களுடன் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளனர். (திருக்காமக்கோட்டத்தை இடித்துப் புதிதாகத் தேவகோட்டைத் திருப்பணிச்செல்வர் உயர்திரு. மெய்யப்பச் செட்டியாரால் கட்டப்பெறுவதற்கு முன் இருந்த கல்வெட்டை அரசியலார் ஆண்டு அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அதில் இறைவியாரின் திருப்பெயர் உலகுடைய நாச்சியார் என்றே குறிக்கப் பெற்றுள்ளது. இப்பெயர் மறைந்துபோய், இக்காலம் அறம்வளர்த்த நாயகி என்னும் பெயர் வழங்கி வருகின்றது.)

அச்சுதப்பநாயக்கர், அவர் மனைவியார் உருவங்கள் மேலக்கோபுரவாசலில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளன. எனினும் அவர்களின் திருவுருவங்கள் முதல் பிராகாரத்தின் மேற்குத் திருச்சுற்று மாளிகையின் உள்பக்கத்தில் நல்ல கல்லிற் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன. பச்சையப்ப முதலியார், அவருடைய இருமனைவியர் இவர்களின் உருவங்கள் பச்சையப்பன் மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றன.

சோமாஸ்கந்தர் திருக்கோயில் சோழமன்னருடைய திருப்பணியை உடையது. இக்கோயில் கொடுங்கைவேலைகள் போற்றற்குரியன. வீரசரவண உடையார் காலத்தில் (சகாப்தம் 1303 -கி.பி. 1381) பாண்டிகுலாசனி வளநாட்டுச் செந்தலை - கருப்பூர் கச்சிவீரப்பெருமான் மகன், நேர் குலைந்து இற்றுப் போன இத்திருக் கோயிற் திருமண்டப மதிலைக் கட்டியுள்ளான்.

திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான் நூற்றெட்டு வேலி நிலத்தைக் கொடுத்துள்ளான். கோச்சடைய பன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டியதேவர் காலத்தில் திருவையாறுடைய நாயனார்க்குச் சுத்தமல்லி வளநாட்டுப் பாம்புணிக்கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டனான சேரகோன் ஆறேமாக்காணிசொச்சம் நிலத்தைத் திருநாமத்துக் காணியாகக் கொடுத்துள்ளான்.

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராசராச வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.

பொய்கைநாடு என்பது திருவையாற்றிலிருந்து கீழப்பழுவூருக்குப் போகும் பெருவழிக்கு மேற்கும் காவிரிக்கு வடக்குமாகிய பிரதேசமாகும். இப்பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளானே ஸ்ரீராஜராஜேச்சரம் உடையார்க்கு ஸ்ரீகாரியம் செய்தவன் ஆவன். அக்கோயிலில் நம்பி ஆரூரனார், நங்கை பரவையார் முதலானோர்ப் பிரதிமங்களை எழுந்தருளுவித்தவனும் இவனேயாவன். பொய்கை நாட்டுத் தலைநகராகிய பொய்கை எது என்று அறிந்து கோடற்கு இல்லை. இப்பொய்கை ஒரு வைப்புத்தலம் என்பதை, திருநாவுக்கரசர் பெருமானுடைய கே்ஷத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தின் இறுதிப் பாட்டுப் புலப்படுத்துகின்றது. திருப்பழனம் சிவன் கோயிலில் உள்ள ``ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு எ ஆவது ராஜராஜவளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவாமியூர் உடையார் திருப்புகலீசுவரமுடையார்க்கு`` எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதியால் இப்பொய்கைநாடு தென்பொய்கைநாடு வடபொய்கைநாடு என்னும் இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும், திருவாமியூர் - திருப்புகலீஸ்வரம் இப்பொய்கைநாட்டிற்குட்பட்டவை என்றும் பெறப்படுகின்றன.

தென்கயிலைக்கோயில்: இத்திருக்கோயிலில் உள்ள ஏழு கல்வெட்டுக்களுள் ஒன்று கிருஷ்ணராஜ உடையாரைப்பற்றியது. ஏனையவைகளெல்லாம் சோழநாட்டை ஆண்ட பிற்காலத்துச் சோழ மன்னர்கள் காலத்தனவாகும். இந்தச் சோழ மன்னர்கள் கல்வெட்டுக்களிலும், கருப்பஇல்லின் கிழக்குப்புறச் சுவரில் உள்ள ``திருமன்னி வளர இருநிலமடந்தையும்`` எனத் தொடங்கப்பெறும் கோப்பரகேசரி ராசேந்திரசோழதேவரின் (கங்கைகொண்டசோழன்) முப்பத் தொன்றாம் ஆண்டில் பொறிக்கப்பெற்றதே பழமையான தாகும். அக்கல்வெட்டிலுள்ள ``வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவன் மாதேவி......யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்றளி தென் கயிலாயமுடையார் கோயில்`` என்னும் பகுதியால், முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் மனைவியாராகிய பஞ்சவன் மாதேவியாரால் இக்கோயில் கட்டப்பட்டது என்று தெரிகின்றது. அம் முதல் இராஜேந்திர சோழதேவர் கி.பி. 1014 முதல் 1042 வரை ஆண்டவராவார். அவரது ஆட்சியாண்டு முப்பத்தொன்றில் இக் கோயில் கட்டப் பெற்றதென்று பெறப்படுகின்றமையால் இக்கற்றளி எடுப்பிக்கப் பெற்று இற்றைக்கு 952 ஆண்டுகள் ஆகின்றன.

இறைவன் திருப்பெயர் பஞ்சநதிவாணன் என்றும் இறைவி திருப்பெயர் அஞ்சலை என்றும் பெறப்படுகின்றன. இச்செய்தியை அர்த்தமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டுப் பாடல் அறிவிக்கின்றது.

முதலாம் இராஜேந்திர சோழதேவரின் இரண்டாம் மகனாகிய விசயராசேந்திரன் கல்வெட்டால், அம்மன்னனது மனைவியாரின் திருப்பெயர் திரைலோக்கியமுடையார் என்பதும், இக்கோயிலில் ஆடவல்லார் இவர்தம் பிராட்டியார் இவர்களுடைய திருமேனிகள் இருந்தன என்பதும், ஆடவல்லார்க்குத் திருக்கழுத்து, திருக்கை, திருவடி இவைகளுக்குச் சாத்தியருளப்பெற்ற அணிகலன்கள் முறையே சண்பங்காறை, திருக்கைக்காறை, திருவடிக்காறை என்ற பெயர்களுடன் வழங்கிவந்தன என்பதும், இவர்தம் பிராட்டியார்க்கு இக்காலம்போல் அல்லாமல் ஒற்றைத்தாலியே சாத்தியருளப்பெற்று வந்ததென்பதும், அவர் தம் திருக்காதணியின் பெயர் காறைகண்டி என்பதும், அக்காலம் பொன், மாணிக்கம், வயிரம் இவைகள் குடிஞைக்கல் என்னும் அளவையால் நிறுக்கப்பெற்று வந்தன என்பதும் வெளியாகின்றன.

மகாமண்டபத்தின் மேற்குப்புறச்சுவரில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவர் இவர்களின் கல்வெட்டுக்கள் கோயிலில் நுந்தாவிளக்குகளும் சந்திவிளக்குகளும் வைப்பதற்குக் கொடுக்கப்பட்ட நிபந்தங்களைத் தெரிவிக்கின்றன. இத்திருக்கோயிலின் திருச்சுற்றுமாளிகை கிருட்டிணராச உடையாரால் எடுப்பிக்கப்பெற்றதாகும். இச்செய்தி கீழைத்திருச்சுற்று மாளிகையில் தென்பாலுள்ள கடைசித் தூணுக்கு அடுத்த வடபாலுள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள ``ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் கிருஷ்ணராஜ உடையார்`` என்னும் கல்வெட்டால் புலப்படுகின்றது.

ஒலோகமாதேவீச்சரம்:இத் திருக்கோயிலைக் கட்டியவர் இஞ்சிசூழ் தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழமண்டலத்தைக் கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை ஆண்ட முதல் இராஜராஜ மன்னனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமா தேவியாராவர். இவ்வம்மையாரால் கட்டப்பெற்றமையின் இது ஒலோகமாதேவீச்சரம் என்று பெயர்பெற்றது. இச்செய்தி ``ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசத்திவிடங்கியாரான ஒலோகமாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதேவீச்சரமுடையார்க்கு`` என்னும் இக்கோயிற் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

இக்கோயிலில் முதல் இராஜராஜன், அவன் மகனாகிய முதல் இராஜேந்திரன், அவன் மகனாகிய முதல் இராஜாதிராஜன் என்னும் மூன்று சோழமன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜன் அரியணையேறிய இருபத்தொன்றாம் ஆண்டுக் கல்வெட்டே பழமையானது. அதிலேதான் ஒலோகமாதேவியார் இத்திருக்கோயிலைக் கட்டிய செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. அந்த முதலாம் இராஜராஜசோழன் கி.பி. 985 இல் பட்டம் எய்தியவன் ஆவன். அவன் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 985 உடன் இருபத்தொன்றைக் கூட்ட கி.பி. 1006 ஆகும். எனவே இன்றைக்கு (1954- 1006) 948 ஆண்டுகளுக்குமுன் இத்திருக்கோயில் கட்டப்பெற்றதாகும்.

இத்திருக்கோயிலில் இவ்வம்மையார் ஒலோகமாதேவீச்சரமுடையார், ஒலோகவிடங்கதேவர், அவர்தம் பிராட்டியார், பிள்ளையார், முருகர், ஆடவல்லார், சண்டேசுவரர் இவர்களின் திருமேனிகளை எழுந்தருளுவித்துள்ளார். இவர்களுள் ஒலோகமாதேவீச்சரமுடையார் என்பது கருப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருப்பெயராகும். ஒலோகவிடங்கதேவர், ஆட வல்லார் என்பன முறையே தியாகராசப்பெருமான், நடராசப் பெருமான் இவர்களுடைய திருப்பெயர்களாகும்.

இக்கோயிற் சிவபெருமானுக்கு நான்குகால பூசைகள் நடைபெற்று வந்தன. நெய்கொண்டு நொந்தாவிளக்குக்களும் சந்தி விளக்குகளும் பல ஏற்றப்பட்டு வந்தன. பருப்பமுது, கறியமுது, போனகம், பொறிகறியமுது, தயிரமுது, சர்க்கரையமுது, அப்பமுது இவைகள்கொண்டு திருவமுது செய்விக்கப்பட்டன. இவ்வம்மையார் தம் கணவன் பிறந்த நாளாகிய சதயத் திருவிழாப் பன்னிரண்டும், சித்திரைப்பெருந்திருவிழா ஒன்றும் ஆகப் பதின்மூன்று திருவிழாக்களையும் இத்தலத்து நடத்துவித்தார்.

இவ்வம்மையாரும் இவர் குடும்பத்தார்களும் கொடுத்துள்ள பொன்னாற்செய்து மணிகள் பதித்த அணிகலன்களுக்கும் வெள்ளியாற்செய்த பரிகலங்களுக்கும் அளவில்லை. அணிகலன்களையும் பரிகலங்களையும் எவரும் மாற்றிவிடா வண்ணம் நிறையெடுத்தும், அவற்றில் மணிகள் சேர்க்கப்பெற்றிருப்பின் அவை இத்துணை என்று உரைத்திருப்பதும் மகிழ்தற்குரியதாகும்.

இக்காலத்தில் வழக்கத்தில் இல்லாத பல அணிகலன்களின் பெயர்கள் இக்கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. அவைகள் கோளகை, தாழ்கூட்டுக்கம்பி, திருச்சன்னவடம், முத்தின்காரை, இடுக்குவளையல் முதலியன.

இக்கோயிலில் வழிபாடு நடக்குங்கால் உடுக்கை, உவச்சன் தலைப்பறை, கண்டை, திமிலை, மத்தளம், வீணை, கரடிகை முதலியவைகள் ஒலிக்கப்பெற்றுவந்தன.

இக்கோயிலில் ஆடல் பாடல் முதலிய பணிகளைச் செய்வதற்குப் பதியிலார் முப்பத்திருவர் இருந்தனர். அவர்கள் தலைக் கோற்பட்டம் பெற்றவர்கள். தலைக்கோல் என்பது ஆடல்பாடல்களில் சிறந்த பதியிலார்களுக்கு அரசனால் கொடுக்கப்பெற்ற பட்டமாகும்.

இக்கோயிலுக்கு ஒலோகமாதேவியார் இராஜேந்திரசிங்க வள நாட்டு, மிறைக்கூற்றத்துக் கலவாய்த்தலை என்ற ஊரில் வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தார்க்கு நீர்போகும் குஞ்சரமல்லி வாய்க்காலுக்கு வடபால் சற்றேறக்குறைய நூற்றிரண்டு வேலி நிலத்தை நிவந்தமாக விட்டிருந்தார். இவைபோன்ற பல அரிய செய்திகள் இக்கல்வெட்டுக்களால் விளங்குகின்றன.

(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1894 No. 213-256, No. 135-157, year 1924 No. 48. Also see the South Indian Inscriptions, Vol. V, No. 512-555.)

(செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, ஞானசம்பந்தம் ஆறாவது ஆண்டு மலர்.)

 
 
சிற்பி சிற்பி