அண்ணாமலை (திருவண்ணாமலை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலைநாதர்

மரம்: மகிழ மரம்
குளம்: சிவகங்கை, பிரம, அக்கினி, இந்திர தீர்த்தங்கள்

பதிகங்கள்: உண்ணாமுலை -1 -10 திருஞானசம்பந்தர்
பூவார்மலர் -1 -69 திருஞானசம்பந்தர்
ஓதிமாமலர்கள் -4 -63 திருநாவுக்கரசர்
வட்டனைம் -5 -4 திருநாவுக்கரசர்
பட்டிஏறு -5 -5 திருநாவுக்கரசர்

முகவரி: திருவண்ணாமலை அஞ்சல்,
திருவண்ணாமலை மாவட்டம், 606601
தொபே. 04175 252438

நடுநாட்டுத் தலம். புகழ்பெற்ற தமிழக நகரங்களில் ஒன்று. விழுப்புரம் - காட்பாடி வழியில் இரயில் நிலையம். அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. நினைக்க முத்திகிடைக்கும் தலம். இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை கோட்டத்தின் தலை நகரம். சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலை இத்தலத்தை வலம் வந்தமையின் மாறின.

இறைவன்பெயர் அண்ணாமலைநாதர், அருணாசலேசுவரர் என்றும் கூறுவர். இறைவிபெயர் உண்ணாமுலையம்மை, அபீதகுஜாம்பாள் என்றும் கூறுவர். விநாயகர் பெயர் ஸ்ரீ சம்பந்தவிநாயகர், முக்குறுணி விநாயகர் என்றுங் கூறுவர்.

கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப்பகுதியிலுமாக 360 தீர்த்தங்கள் உள்ளன. சிறந்தவை சிவகங்கையும், பிரம தீர்த்தமும், மலைப்பகுதியிலுள்ள அக்னிதீர்த்தமும், இந்திர தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்திகைத் திரு விழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளைத் தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும். சித்திரைமாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தைமாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில் அம்பிகைவிழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும் சிறப்பாகக்கொண்டாடப் பெறுகின்றன.

அயனும் மாலும் அகந்தைகொண்டு, அடிமுடிதேட அன்னமும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர் அண்ணாமலைநாதர். முருகன் தாருகனை வதஞ்செய்து வணங்கிச்சென்ற தலம் பலவற்றுள் இதுவும் ஒன்று. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லையாயினும் சேக்கிழார் வரலாற்றால் ஊகிக்கவேண்டியுள்ளது. நக்கீரர், பரணர், கபிலர், பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும் அண்ணாமலையைப் பற்றிப்பாடிய பாக்கள் பதினொராந்திருமுறையில் உள்ளன.

வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம்வந்து திருப்பணி பல செய்துள்ளான். வல்லாளமகாராஜன் அண்ணாமலையை ஆண்டுவந்தான். அருணகிரி நாதர் கோபுரத்திலிருந்து இறக்க எண்ணி வீழ்ந்தபோது முருகன் தோன்றி அருள்செய்தான். குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர் முதலானவர்கள் சித்தி பல செய்தனர்.

கோயிலின் வடகிழக்குமூலையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. கிழக்குப்பக்கத்தில் நுழையும்போதுள்ள உட்கோபுரம் வல்லாளமகாராஜன் கோபுரம் என்று வழங்கப்படுகிறது. வல்லாள கோபுரத்தின் வடகிழக்கு மூலையில் சக்திவிலாஸமும் உள்ளது. மேற்கு நோக்கி உட்சென்றால் கிளிக்கோபுரம் காணலாம். தலவிருட்சத்திற்கு மேற்கே கல்யாணமண்டபம் உள்ளது.


கல்வெட்டு:

பதிவுசெய்யப்பெற்ற மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம், திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம், பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன. பாண்டியர், பல்லவர், ஹொய்சளமன்னரான வீரவல்லாளதேவர், விஜயநகரத்து ராயர், தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் வணிகர், வேளாளர் முதலியவர்கள் கல்வெட்டுக்களும் காணக்கிடக்கின்றன.

முதல் இராஜேந்திரனுடைய காலத்தில் (கி.பி. 1038.) திருவண்ணாமலை, மதுராந்தகவளநாட்டுப் பெண்ணை வடகரைத் திருவண்ணாமலை என்றும், மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1179.) காலத்தில் இராஜராஜ வளநாட்டு வாணகோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், மேற்படி சோழனுடைய 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1204) வாணகோப்பாடிப் பெண்ணை வடகரை அண்ணா நாட்டுத் திருவண்ணாமலை என்றும், விஜயநகர இராயர்கள் காலத்தில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துச் செங்குன்றக் கோட்டத்துப் பெண்ணைவடகரை வாணகோப்பாடி அண்ணாநாட்டுத் தனியூர் திருவண்ணாமலை என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. இதனால் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய வள நாட்டுப் பெயர் முதலில் மதுராந்தகவளநாடு என்றிருந்து, பிறகு இராஜ ராஜ வளநாடு என்று மாறி, இறுதியில் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் ஆயிற்றென்றும், இம்மண்டலத்தின் உட்பிரிவாகிய செங்குன்றக் கோட்டத்தினுள் அண்ணாநாட்டுத் தனியூராகக் குறிக்கப்பட்டதென்றும் அறியக்கிடக்கும்.

பல்லவர் காலத்திற்கு முந்திய கல்வெட்டொன்றும் இல்லாமையால், கோயில் செங்கற்சுதை மாடமாக இருந்ததென்றும், மலையின் மேல் அண்ணாமலையார் கோயில்கொண்டிருந்திருக்க வேண்டுமென்றும் யூகிக்க வேண்டியுள்ளது. முதற்பிராகாரத்துச் சுவரில் கங்கை கொண்ட இராஜேந்திரன் கல்வெட்டு (கி.பி.1028) காணப்பெறுவதால், இதற்கு முன்பே கருங்கல் திருப்பணி நடந்திருக்க வேண்டும், முதற் பிராகாரத்து விளங்கும் ஏகாம்பரநாதர் கோயில், சிதம்பரேசர் கோயில் ஆகிய இரண்டின் சுவர்களிலும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சாஸனங்கள் காணப்படுகின்றன. கிளிக்கோபுரத்து 33 கல்வெட்டில் பழைமையுடைய வீரராஜேந்திர சோழனது இரண்டாவது ஆட்சியாண்டின் (கி.பி,1063) முன்பே கருங்கல் திருப்பணியாயிருக்க வேண்டும்.
திருக்காமக்கோட்டமுடைய உண்ணாமுலைநாச்சியார் கோட்டம் தனியாக கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றது. கல்வெட்டுகளில் திருக்காமக் கோட்டம் எனக் குறிக்கப்பெறும்.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த கல்வெட்டுக்களில் வீரராகவன் திருமதில், வாணாதிராயன் திருமதில், திருவேகம்பமுடையான் திருமதில் முதலியன குறிக்கப்பட்டுள்ளன. அம்மையப்பன் சந்நிதிக்கு இடையில் மேற்பக்கத்தில் நங்கையாழ் வீசுவரம் என்னுங் கோயில் பல்லவகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசியால் (கி.பி.1269) எடுப்பிக்கப் பதினாலடிக் கோலால் பதின்மூன்றரைகுழி விற்றுப் பதினாயிரம் பொற்காசு பெற்றுக் கட்டியபகுதி இன்று இல்லை.

கிருஷ்ணதேவராயர் (கி.பி.1516) ஆயிரங்கால் மண்டபத்தையும், எதிரிலுள்ள திருக்குளத்தையும், பதினொரு நிலையிலுள்ள கோபுரத்தையும், வேறுபல திருப்பணிகளையும் அமைத்தமை அறியப்படுகிறது.

பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனும், அவன் மகன் வேணாவுடையானும் செய்த திருப்பணிகள் மிகப்பல. பூஜைக்கும் திருப்பணிக்குமாக `அண்ணாமலைநாதர் தேவதானப்பற்றுக்களும், அண்ணாநாட்டு நாற்பாக் கெல்லைக் குட்பட்ட நன்செய் புன்செய் ஆக உள்ள நிலத்திற்கு ஆயம்பாடி காவலால் வந்த நெல்லும் காசாயமும் மற்றும் எப்பேர்ப்பட்ட பல்லாயங்களும்` இவன் தானமாக ஈந்தான்.

கல்வெட்டுக்களில் காணப்பெறும் கோயில் அதிகாரிகள் ஸ்ரீருத்திரர், ஸ்ரீமாகேசுரர், ஸ்ரீமாகேசுரக் கண்காணி செய்வார், தானத்தார், தானபதி மாகேசுரர், தேவகன்மிகள், கோயிற்கணக்கர், ஸ்ரீகாரியஞ்செய்வார் எனப் பலராவர். இவரில் ஸ்ரீமாகேசுரர், தர்மசாசனங்கள் ஒழுங்காக நடைபெறக் காரியம் பார்ப்பவராவர்.

அண்ணாமலைநாதருக்கும் உண்ணாமுலை அம்மைக்கும் பிச்சதேவர் முதலிய மூர்த்திகட்கும் திருப்பள்ளி எழுச்சி, சிறுகாலை சந்தி, உச்சிப்போது, இரவை, அர்த்தசாமம் முதலியகாலங்களில் அமுது முதலியவற்றிற்கு நிலம் அளித்தமை அறியலாம்.

சில சாஸனங்களில் பிரமநாயனார் பெரியமடத்து முதலியார், வையந் தொழுவார் பெரியமடத்து முதலியார், ஊருக்குப் பெரிய மடத்து முதலியார், திருவண்ணாமலை உடையார் திருமுற்றத்தே இராஜேந்திரசோழன் சாலை, காங்கேயன்மடம், அம்மைமடம் முதலியன அறியப்படும் செய்திகள்.

நெய், மிளகு, உப்பு, தயிர், அடைக்காய், வெற்றிலை, சீரகம், வாழைப்பழம், வாழையிலை முதலியன நெல்லளந்து பெறப்பட்டவை. மங்கையர்க்கரசி என்னும் நங்கை தன்னாபரணங்களை விற்ற பொருள்கொண்டும், நெல்லைக்கொண்டும் ஏரிபுதுக்கி உதவினாள் என்ற செய்தி கல்வெட்டால் அறியப்படுகிறது.

 
 
சிற்பி சிற்பி