இடைமருதூர் (திருவிடைமருதூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க

அருள்மிகு நன்முலைநாயகி உடனுறை மருதவாணர்
மரம்:மருதமரம்

குளம்: காவிரி அயிராவணத்துறை

பதிகம்:
திருஞானசம்பந்தர் -1 -032 ஓடே கலணுண்
திருஞானசம்பந்தர் -1 -095 தோடொர் காதினன்
திருஞானசம்பந்தர் -1 -110 மருந்தவன் வானவர்
திருஞானசம்பந்தர் -1 -121 நடைமரு திரிபுர
திருஞானசம்பந்தர் -1 -122 விரிதரு புலியுரி
திருஞானசம்பந்தர் -2 -056 பொங்குநூன் மார்பினீர்
திருநாவுக்கரசர் -4 -035 காடுடைச் சுடலை
திருநாவுக்கரசர் -5 -014 பாச மொன்றில
திருநாவுக்கரசர் -5 -015 பறையி னோசையும்
திருநாவுக்கரசர் -6 -016 சூலப் படையு
திருநாவுக்கரசர் -6 -017 ஆறுசடைக் கணிவர்
சுந்தரர் -7 -060 . கழுதை குங்குமந்
கருவூர்த் தேவர் -9 -017 வெய்யசெஞ் சோதி
பட்டினத்து அடிகள் -11 -028 தெய்வத் தாமரைச்

முகவரி: திருவிடைமருதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம், 612108
தொபே. 0435 2460660

மயிலாடுதுறை கும்பகோணம் தொடர்வண்டிப் பாதையில், திருவிடைமருதூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஆடுதுறையை அடுத்துள்ளது இவ்வூர். பேருந்து வசதி மிகுதியும் உண்டு. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள 30 ஆவது தலமாகும்.

மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட பாடல்பெற்ற பதிகள் மூன்றாகும். அவை வடநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனம் என்ற சீபர்ப்பதம், பாண்டிநாட்டில் உள்ள திருப்புடைமருதூர், சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூர்; ஆகும்.

இவற்றுள் சீபர்ப்பதத்துக்கும் திருப்புடைமருதூர்க்கும் இடையில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால் இது திரு இடைமருதூர் என்னும் பெயர்பெற்றது.

மகாலிங்கேசுவரர் இப்பதியைச்சுற்றி இருக்கும் சிவதலங்களின் அமைப்பை ஒட்டி நடேசர் சந்நிதி - தில்லையாகவும், தட்சிணாமூர்த்தி சந்நிதி - ஆலங் குடியாக வும், நவக்கிரகக் கோயில் - சூரியனார் கோயிலாகவும் விநாயகர் சந்நிதி - திருவலஞ்சுழியாகவும், முருகர் சந்நிதி - சுவாமி மலை ஆகவும், வைரவர் சந்நிதி - சீகாழியாகவும், சண்டேசுவரர் சந்நிதி - திருச்சேய்ஞலூராகவும் விளங்குகின்றன. ஆதலால், இது மகாலிங்கத் தலம் என்றும் இறைவர்க்கு மகாலிங்கேசுவரர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன.

பூசநாளில் இத்துறையில் இறைவர் தீர்த்தம் கொடுத்தருளுவர். இப்பூசநாளில் நீராடலைப்பற்றி அப்பர் பெருந்தகையார், இத்தலத்துத் திருக்குறுந்தொகையில்,

``ஈச னெம்பெரு மான்இடை மருதினில்
பூச நாம்புகு தும்புன லாடவே``
எனவும், திருஞானசம்பந்தப் பெருந்தகையார்.
``பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய
ஈச னுறைகின்ற விடைமருதீதோ``
எனவும் சிறப்பித்து அருளினர்.

உமாதேவியார், உருத்திரர், மூத்தபிள்ளையார், முருகர், பிரமன், விஷ்ணு முதலியோர் பூசித்துப் பேறுபெற்றனர். பெரிய அன்பினையுடைய வரகுணபாண்டியதேவரின் கொலைப்பழியைப் போக்கியருளிய தலம் இதுவாகும். பத்திரகிரியார், பட்டினத்துப் பிள்ளையார் இவர்கள் இப்பதியில் பலநாள்கள் தங்கித் தவம்புரிந்து அருள் பெற்றனர். இவர்களுள் பட்டினத்தடிகளார் பிரதிமை கீழைக் கோபுர வாசலிலும், பத்திரகிரியார் பிரதிமை மேலைக்கோபுர வாசலிலும் இருக்கின்றன. வரகுணதேவரைப் பிடித்து நீங்கிய பிரமகத்தியின் உருவம் கீழைக்கோபுர வாசலில் உள்ளது.

``பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது அரிது`` என்று தாயுமானவரால் பெரிதும் பாராட்டப்பெற்ற பட்டினத்துஅடிகளார் இத்தலத்திற்கு மும்மணிக் கோவை ஒன்றை இயற்றியுள்ளார். அது பதினொன்றாந் திருமுறையில் சேர்க்கப்பெற்றுள்ளது. கோடீச்சுரக்கோவையைப் பாடிய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இத்தலத்திற்குப் புராணம் பாடியுள்ளார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை உலாவைப் பாடியுள்ளார். இவைகள் அச்சிடப்பெற்றுள்ளன. இவைகளேயன்றி, மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் இத்தலமான்மியத்தை உரைநடையில் எழுதியிருக்கிறார்கள்.

``திருவிடைமருதூர்த் தெருவழகு`` என்னும் உலகவழக்கு இவ்வூர்த் திருவீதிகளின் சிறப்பைப் புலப்படுத்துவதாகும். இப் பதிக்குத் திருஞானசம்பந்தரது பதிகங்கள் ஆறும், திருநாவுக்கரசரது பதிகங்கள் ஐந்தும், சுந்தரமூர்த்தி நாயனாரது பதிகம் ஒன்றும் ஆகப் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன.


கல்வெட்டு:

இக்குறிப்புக்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சிப் புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள் எழுதி உதவியது.(See the Annual Reports on South Indian Epigraphy for the years 1895-1907, No. 130-159 and 193-313; See also South Indian Inscriptions, Volumes.)

மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய முதற்பராந்தக சோழன் (கி.பி. 907-948) இரண்டாம்பராந்தக சோழனது மகனாகிய ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களில் இக்கோயிலில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதில், திருவிடைமருது எனக் குறிப்பிடுகின்றன. முதலாம் இராஜராஜன் காலத்தில் இது ஒரு நகரமாக விளங்கியிருந்தது.

இச்செய்தி அம்மன்னனது ஆறாம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற ``திரு இடைமருதுடையார் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற சிற்றாயிலுடையாரும், தேவகன்மிகளும், சபையும், திருவிடைமருதில் நகரமும் இருந்து நம் பிராட்டியார் ஸ்ரீபஞ்சவன் மாதேவியார் ஆழ்வாரைத் திருவடி தொழ வந்தருளினார்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்தும், அவனுக்குப் பிற்பட்டார் காலத்தும் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் இவ்வூரைத் திருவிடைமருதூர் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. எனவே மிகப் பழங்காலத்தே இது ஒரு நகரமாக விளங்கியிருந்த செய்தி புலப்படுகின்றது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகள் மூலஸ்தானத்து மகாதேவர், திருவிடைமருதுடையார், திருவிடைமருதில் ஆள்வார், திருவிடை மருதூருடைய தம்பிரானார் என்னும் திருப்பெயர்களாலும், நடராசப் பெருமான் மாணிக்கக்கூத்தர் என்னும் பெயராலும் வழங்கப் பெற்றுள்ளனர்.

இத்திருக்கோயிலின் முதல் பிராகாரத்து மேலைத் திருமாளிகையில் மூப்பிமாரில் இராஜராஜேச்சரத்துப் பதியிலாரில் அரிய பிராட்டியார், பெருமாள் பெரியதேவர் திருபுவன வீரதேவரின் (மூன்றாங்குலோத்துங்க சோழதேவரின்) முப்பத்தேழாம் ஆட்சி ஆண்டில் உடையார் தைப்பூசமுடைய நாயனாரை எழுந்தருளுவித்துள்ளார். இத்திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. தைப்பூசத் திருநாளில் தீர்த்தம் ஆடின பிற்றை நாள் தொடங்கி மூன்று நாளும், வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று நாளும் ஆக ஏழு அங்கங்களுடன் கூடிய இவ் ஆரியக்கூத்து ஆடப் பெற்றுவந்தது. இக்கோயிலில் நாடக சாலை ஒன்றும் இருந்தது. இச்செய்தியைத் ``திரைமூர்நாடு உடையாரும், திருவிடைமருதில் நகரத்தாரும், தேவகன்மிகளும் நாடக சாலையிலே இருந்து`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம். திருவிடைமருதுடையார் திருவோலக்கத்து வீற்றிருக்குங்காலத்து அவருக்கு மூன்று சந்தியும் உடுக்கை வாசிக்கப்பெற்றுவந்தது.

பெருமான் எழுந்தருளுங்கால் தேவர் அடியார் கவரி வீசிவந்தார்கள். அவர்கள் கவரிப்பிணாக்கள் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றுள்ளனர்.

இக்கோயிலில் தேவரடியாரைப் பாடச் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய நம்பி இவர்களுக்கு உய்யக்கொண்டார் வளநாட்டு இருமாறன் பூண்டிப்பெருமாள் சதுர்வேதி மங்கலத்தில் திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் 21 ஆம் ஆண்டில் நிலம் விடப்பெற்றிருந்தது. ஒரு கல் வெட்டு நான்காம் பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பிடாரி போகிருந்த பரமேசுவரியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இத் திருக்கோயிலுக்கு உரியதாக திருக்கலசக்கோரோணியின் தென்கரையில் ஒரு நந்தவனம் இருந்தது. அதற்குச் செம்பியன் மாதேவியான பெருஞ்சண்பக நந்தவனம் என்னும் பெயர் இடப்பெற்றிருந்தது. முதலாம் இராஜராஜ மன்னரது தேவியாராகிய பஞ்சவன் மாதேவியார் இறைவனை வழிபட வந்தபொழுது இந்த நந்தவனத்திற்கு எழுந்தருளிப் பார்வையிட்டதை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. மல்லிகைப் பூக்களைச் சாத்துவதற்காக மல்லிகை நந்தவனம் என்னும் தோட்டமும் இருந்தது.

இக்கோயில் திருமடைவிளாகத்தில் பெருந் திருவாட்டி என்னும் பெயர் பூண்ட மடம் ஒன்று இருந்தது. இது இளங் காரிகுடை யான் சங்கரதேவன் சிவலோக நாயகனான கங்கை கொண்டசோழ அனந்த பாலனால் செய்வித்ததாகும்.

இங்கா நாட்டுப் பல்லவரையன் இத்திருக்கோயிலில் ஆடல் விடங்கதேவரைஎழுந்தருளுவித்திருந்தான். இத்திருக்கோயிலின் வாசல் ஒன்றுக்கு ஏகநாயகன் திருவாசல் என்னும் பெயரை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு பிள்ளையாருக்குப் புராண கணபதி என்னும் பெயர் உண்மையை ஒரு கல்வெட்டு புலப்படுத்துகின்றது.

முதற் பராந்தகன் காலத்துக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தென்கரை, திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில் எனவும், முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் உலகுய்யக் கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர் எனவும் குறிப்பிடுகின்றன.

முதற் பராந்தகசோழன் காலத்தில் அளிக்கப்பட்டவை:- திருவிடைமருதில் ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமானடிகளுக்கு மார்கழித் திருவாதிரை தோறும் நெய்யாடி அருளுதற்குத் தொண்டை நாட்டு, செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு இடும்பேட்டைப் பண்டாரிகிழான் கொட்டி என்பான் பதின்கழஞ்சு பொன் கொடுத் திருந்தான். மூலஸ்தானத்து மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கினுக்குப் புலியூர்க் கோட்டத்து மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன் இருபத்தைந்து கழஞ்சு பொன்னை உதவியிருந்தான். இருமடிச் சோழப் பல்லவரையர் திருவிடைமருதுடையார்க்குத் திருமெய்ப் பூச்சுச் சந்தனத்திற்கும். சீதாரிக்கும், மாகேஸ்வரர்க்கும், பிராமணர்க்கும். திருநொந்தாவிளக்கு எட்டினுக்கும் ஆகப் பதினான்கு வேலி நிலத்தைத் திருவிடைமருதில் நகரத்தாரிடையும், திரைமூர்ச்சபையாரிடையும் முதற் பராந்தக சோழனது முப்பத்தைந்தாம் ஆண்டில் அதாவது கி.பி. 942இல் விலைக்கு வாங்கி அளித்துள்ளான்.

கிழக்கெல்லை வண்ணக்குடியார் பிணம்போகும் வழிக்கு மேற்கு, தென் எல்லை பெருவழிக்கும் வண்ணக்குடி வாய்க்காலுக்கும் வடக்கு, மேற்கெல்லை பழங்காவிரிக்குக் கிழக்கு, வட வெல்லை பழங்காவிரிக்கும் குடந்தையார் நிலத்திற்கும் தெற்கு ஆக இசைந்த பெருநான்கெல்லையுள் அகப்பட்டதாகும். செம்பியன் தமிழவேளான் மூலத்தான மகாதேவர்க்கு நொந்தா விளக்கு ஒன்றை வைத்துள்ளான்.

வெண்ணாட்டு வரம்பூசலுடையான் சந்திராதித்தன் சத்துருகண்டன் `திருவிடைமருதுடையார் சாலை` உண்ணும் பிராமணர்க்குத் தாலம் பதினெட்டு, சட்டுவம் ஒன்று இவைகளை இட்டுள்ளான். இவை முறையே நூற்றைம்பத்திரண்டு பலங்களும், ஐந்து பலங்களும் நிறையுள்ளன.

பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பன்மர் காலத்தில் விடப்பட்ட நிவந்தங்கள்:- தைப்பூசத் திருநாளில் தீர்த்தம் ஆடின பிற்றை நாள் தொடங்கி மூன்றுநாள் கூத்து ஆடுவதற்கும், வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்றுநாள் கூத்து ஆடுவதற்கும் ஏழு அங்கங்களைக் கொண்டுள்ள இந்தப் பழைய ஆரியக் கூத்தில் வல்லவனாகிய கீர்த்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கனுக்கு விளங்குடிநிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட வேலி நிலத்தை திரைமூர்நாடு உடையாரும், திருவிடைமருதில் நகரத்தாரும், கோயில் ஸ்ரீகாரியம் ஆராய்கின்றவரும் கொடுத்துள்ளனர்.

கோராசகேசரிபன்மர் காலத்தில் அளிக்கப்பெற்றுள்ள நிவந்தம்:- ஆனைமேல் துஞ்சின உடையாரின் தாயாருடைய பரிவாரத்துப் பெண்டாட்டி பொதுவன் சிற்றடி திருவிடை மருதில் ஆள் வார்க்குத் திருவிளக்கினுக்கு ஈழக்காசு இருபதினால் பொன் பதின் கழஞ்சையும், திருவிடைமருதுடையார் அமுது செய தண்ணீர் அமுது வட்டில் ஒன்று இருபத்துநான்கு கழஞ்சு நிறை உள்ளதையும் அளித்துள்ளனர். கவரிப்பிணாக்களுக்குத் திவசம்முந்நாழி நெல்பெறுவதற்கு தேவதானம் விளங்குடி பாட்டத்தில் அறுபது நீக்கி நின்ற நிலத்தில் வந்த நெல்லுப்பெறுமாறு கோயிலார் ஏற்பாடு செய்து அதைக் கல்லில் வெட்டுவித்துள்ளனர். அக் கவரிப்பிணாக்களில் ஒருவர் பெயர் மழுபாடி மருதி என்பதாகும்.

விக்கிரமசோழன் காலத்தில் அளிக்கப்பெற்ற நிவந்தம்:- திருவிடைமருதூர் திருக்கற்றளியில் மாணிக்கக் கூத்தற்கு அமாவாசை தோறும் திருவமுது உள்ளிட்டு வேண்டுவனவற்றிற்கும் கட்டுச் சோற்றுக்கும் அமாவாசை ஒன்றுக்கு நெல் ஐங்குறுணி இருநாழியாக ஓராண்டுக்கு வேண்டும் நெல் ஐங்கலனேமுக்குறுணியும், தேவர் கடமைக்கு ஐங்கலனேமுக்குறுணியும் ஆக நெல் பதின்கலனே தூணிப் பதக்குக்குத் திருவிடைமருதூரில் சதாசிவன் மகிக்கல் என்னும் பெயருள்ள நூற்று எழுபத்தைந்துகுழி நிலத்தை அரிகுலராஜமாராயன் வாங்கிக் கொடுத்துள்ளான்.

விட்டலதேவ மகாராயர் அளித்த நிவந்தம்:- வீரப்பிரதாப ஸ்ரீமான் மகாமண்டலேசுவர இராமராச விட்டலதேவ மகாராசர் புத்தாற்றுக்கு வடக்கு ஆவணம், சிற்றாடி என்னும் இரு ஊர்களைத் திருவிடைமருதூர்ச் சிவபெருமானுக்குத் தருமசிலாசாசனம் செய்து கொடுத்துள்ளார்.

இவைபோன்று இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் பலவாகும்.

 
 
சிற்பி சிற்பி