திரைலோக்கிய சுந்தரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனுறை சுந்தரேஸ்வரர்


மரம்: கொன்றை

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் திருப்பனந்தாளுக்குத் தென்கிழக்கில் சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் திரைலோக்கி என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரில் இரு கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பாப் பெற்ற தலம் என்று கொள்ளப்பட்டு வருகின்றது.



கல்வெட்டு:

ஏமநல்லூர் - என்பது ஒரு வைப்புத்தலம். இது \"எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர்\"1 ( கேஷ்த்திரக்கோவைத் திருத்தாண்டகம், திருப்பாடல் 4. இதிலுள்ள எச்சில் என்பது இளமர்க்கு அடைமொழி. இதனை எனக்கு முதல்முதல் தெரிவித்தருளியவர் டாக்டர். உ.வே. சாமிநாதையர் ஆவர்.) எனத் தொடங்கும் கேஷ்த்திரக்கோவைத் திருத்தாண்டகத்துத் திருப்பாடலால் விளங்குகின்றது. இந்த ஏமநல்லூர், முதலாம் இராஜராஜன் காலத்தில் திரைலோக்கியமாதேவி சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் பெற்றது.1(ராஜேந்திரசிம்ம வளநாட்டு மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கியமாதேவி சதுர்வேதிமங்கலத்து சபையார் இடக்கடவ திருப்பரிசாரகஞ் செய்யும் மாண் இரண்டு. S.I.I. Vol II Part III, Page 317)

திரைலோக்கியமாதேவி என்பவர் முதலாம் இராஜராஜனது தேவியர்களில் ஒருவர். அவர் பெயரால் விளங்குவது இச்சதுர்வேதி மங்கலம்: இது திருலோக்கி என்று வழங்கப்பட்டு இக்காலம் தைலோக்கி என்று மக்களால் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில், சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில் என்னும் இரு கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளுள் சுந்தரேஸ்வரர்கோயில் கல்வெட்டில் இறைவர் பரசுராமேஸ்வரம் உடையார் என்று கூறப்படுகின்றனர்.

2(2 A.R.E. 1932 Numer 104) இந்தப் பரசுராமேஸ்வரம் உடையார் கோயில் நிலைபெற்றுள்ள இடம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டுத் தைலோக்கி ஆகிய விருதராச பயங்கரச் சதுர்வேதிமங்கலத்து ராஜதிவாகரநல்லூர் ஆகும்.

3(A.R.E. 1932 No. 102) இந்தப் பரசு ராமேஸ்வரம் உடையாரின் அம்மன்கோயில், கணித சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது. இந்த அம்மன்கோயிலின் பூசனையைக் கோசலை திரு புவன சுந்தரத் தட்சிணாமூர்த்திப் பட்டனுக்கு அரசன் (கோனேரின்மை கொண்டான்) உரிமை செய்ததை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது.

4(A.R.E. 1932 No. 104) மற்றொரு கோயிலாகிய கயிலாசநாதர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கயிலாசமுடையார் என்று அக்கோயிலிலுள்ள திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசதேவரின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.( A.R.E. 1932 No. 109)

இக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் \"இராஜேந்திர சோழதேவர் கங்கைகொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடி தொழுது\" என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044) கங்கை நீரைக் கொண்டு வருகையில் முதலில் இங்கு வந்து இக்கோயில் இறைவனை வணங்கி, அதன் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றான் என்று கொள்ளக்கிடப்பதால், இக்கோயில் சிறப்புடையதாதல் வேண்டும். அச்சிறப்புத்தான் என்னை எனின், அது கருவூர்த் தேவரால் பாடப்பட்டதாதல் வேண்டும். கருவூர்த் தேவர் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன் ஆகிய இருவர்களின் காலங்களில் இருந்தவர். இறைவர் பெயர் கல்வெட்டில் கயிலாசமுடையார் என்று இருக்கின்றது. திரைலோக்கியசுந்தரம் என்று குறிப்பிடப்படவில்லை - இலிங்கத்திரு மேனி அழகாய் (சுந்தரமாய்) இருப்பதால் கருவூர்த்தேவர் திரை லோக்கிய சுந்தரன் என்று பாடினார்போலும். இத்திரைலோக்கிய சுந்தரத் திருவிசைப்பாவின் ஒவ்வொரு பாடலிலும் `கோடைத் திரை லோக்கிய சுந்தரனே\\\' என்றிருப்பதால், கோடைக்கு அருகில் இத்திரை லோக்கி இருப்பது பற்றியாகும். கோட்டூர் என்பது கோடை என்று மருவி வழங்கப்படும். இத்திரைலோக்கிக்குத் தெற்கில் கோட்டூர் என்று ஓர் ஊர் இருக்கின்றது. அது கல்வெட்டில் மகேந்திரன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது.

\"இப்பரிசு ஒட்டி இப்பொன் பன்னிரு கழஞ்சுங் கொண்டோம் கஞ்சனூருள்ளிட்ட மகேந்திரன் கோட்டூர் சபையோம்\" என்னும் திருக்கோடிகாவில் செதுக்கப்பட்டுள்ள கோமாறன் சடை யர்க்கு யாண்டு 5-வது எனத் தொடங்கும் கல்வெட்டில் காண்க.

(South Indian Inscriptions Vol XIV The Pandyas, Appendix No. 1)

`கோடைத் திரைலோக்கிய சுந்தரனே\' என்பது கொண்டு, கோட்டூரில் உள்ள திரைலோக்கிய சுந்தரம் என்னும் இறைவரைக் கருவூர்த்தேவர் பாடினார் என்று கொள்ளக்கூடாதா எனின்? அவ் வாறும் கொள்ளலாம். கோட்டூர்க்கு மேற்கில் வயலில் ஒரு சிவன் கோயில் இருக்கின்றது. அதில் உள்ள சிவபெருமானுக்குத் திரை லோக்கிய சுந்தரம் என்று பெயர் இருந்தால் கொள்ளலாம். அதில் கல்வெட்டும் இல்லை. அப்படி வழக்கத்திலும் பெயர் இல்லை.

திருவிசைப்பாவில் `கோடைத் திரைலோக்கிய சுந்தரனே\' என்று இருப்பதுகொண்டு கோட்டூர்க்கு அருகில் உள்ள திரைலோக்கியே திருவிசைப்பாப் பெற்ற தலம் என்பது உறுதி என்றும், ஆனால் அவ்வூரிலுள்ள இருகோயில்களில், கைலாசநாதர் கோயில் ஒரு சிறப்பைப் பெற்றிருப்பதையும் காட்டி அக்கயிலாசநாதர் கோயிலே திருவிசைப்பாப் பெற்ற தலமாகலாம் என்றும் இச்சிறு ஆராய்ச்சியில் கூறியிருக்கிறேன். நுண்ணறிவு உடையார் ஆய்ந்து ஒரு முடிவிற்கு வருவது சைவத்திற்குச் செய்யும் தொண்டாகும்.

 
 
சிற்பி சிற்பி