இராசராசேச்சரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் பெயருள்ள இரண்டு ஊர்கள் இருக்கின்றன. அவைகளுள் க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல்நாட்டுத் தஞ்சாவூர் என்பது ஒன்று. பாண்டி குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் என்பது மற்றொன்று. இவைகளுள் முன்னது அறுபான் மும்மை நாயன் மார்களில் ஒருவராகிய செருத்துணை நாயனார் பிறந்த பதி. அது நன்னிலம் வட்டத்தில் திருமருகலுக்கு அருகில் உள்ளது. பின்னது தான் இராசராசேச்சரம் நிலைபெற்றுள்ள ஊர். இத்தஞ்சாவூரில் சிவகங்கைக் குளத்தில் உள்ள தஞ்சைத் தளிக்குளம், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகும். இதை அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் திருத்தாண்டகம் எட்டாம் பாசுரத்தில், தஞ்சைத் தளிக்குளத்தார் என்று வைத்துப்பாடியுள்ளனர். சிவகங்கைக் குளத்தில் தண்ணீர் குறைந்துள்ள காலங்களில் சிவலிங்கம், நந்தி இவைகளை இன்றும் காணலாம். எனவே தஞ்சைத் தளிக்குளத்தை அப்பர் பெருமான் பாடியிருப்பதால் அவரது காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற் பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்தது இத்தஞ்சாவூர். இவ்வூர், அப்பர் பெருமான் காலத்திலேயே தஞ்சை என்று மரூஉ மொழியாக வந்துள்ளது. இவ்வூரில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற கோயிலே தஞ்சை இராசராசேச்சரம் ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் வட்டத் தில், தஞ்சாவூர் தொடர்வண்டிச் சந்திப்பில் இறங்கி, சுமார் இரண்டு கிலோமீட்டர் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

தஞ்சாவூர் என்னும் பெயர்க்காரணம்: ஆனந்தவல்லி அம்பிகை, தஞ்சகாசுரன் என்பவனை வதம் செய்த காலத்து, அவ்வசுரன் அம்பிகையை நோக்கி \"இத்தலம் அடியேன் பெயரால் வழங்கவேண்டும்\" என்று வரம் பெற்றமையால், தஞ்சாபுரி என்று வழங்கப்பெற்றது என்பர். இவ்வூர்க்குள்ள வேறு பெயர்: குபேரன் பூசித்துச் சிலகாலம் இருந்தமையின் இவ்வூர் அளகை என்னும் பெயர் பெற்றது. இறைவரின் திருப்பெயர்: தஞ்சைப் பெருவுடையார் என்பது இலக்கியத்தில் கண்ட பெயர். வடமொழியில் பிரகதீசுவரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர்: பெரியநாயகி என்பது. வடமொழியில் பிருகந்நாயகி என்பர். பெருமை: கருவூர்த் தேவர் அருளிச் செய்த திருவிசைப்பாப் பெற்றது. \"பாரிற், கருவிசையை நீத்த கருவூரர் போற்றும், திருவிசைப் பாவுகந்த தேவே\" என்பர் திரு. சிவக்கொழுந்து தேசிகர். (தஞ்சைப் பெருவுடை யார் உலா. 300-301) தஞ்சைவிடங்கர்: சோழ மன்னர்கள், திருவாரூர்த் தியாகராச மூர்த்தியிடம் பற்றுடையவர்கள். ஆதலால் அவர்கள் இந்த இராசராசேச்சரத்தில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியாகராச மூர்த்தியாகவே எண்ணி, அம்மூர்த்திக்குத் திருவாரூரில் நடைபெறும் சிறப்புக்களை எல்லாம் இத்தலத்தில் இவருக்கும் நடத்திவந்தனர். தஞ்சைவிடங்கர் என்பது இவரின் திருப்பெயர். \"சீரார் கருணைத் தியாகரே - ஏராரோங் காரரே\" என்பது. (தஞ்சைப் பெருவுடையார் உலா. 96-97) இத்தலத்திற்குரிய ஆகமம்: மகுடாகமம். தலத்தைப்பற்றிய நூல்கள்: தஞ்சைப் பெருவுடையார் உலா. இது கும்பகோணத்திற்கு அருகில் திருக்கொட்டையூரில் இருந்த முத்தமிழ்ப் புலமைசான்ற திரு. சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பெற்றது. இதுவன்றி, பிருகதீசுவர மாகாத்மியம், சமிவன கே்ஷத்திர மாகாத்மியம் என்னும் இரண்டு வடமொழிப் புராணங்கள் இருக்கின்றன. இராசராசேச்சரத்தில் கருவூர்த்தேவர் செய்த அற்புதச் செயல்: முதலாம் இராஜராஜ சோழன், இராசராசேச்சரத்தைக் கட்டிய பின்னர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்க்க மருந்து சார்த்தியும், அது இளகிய நிலையில் இருந்தது. அதுபொழுது போகர் விடுத்த திருமுகப்படி, கருவூர்த்தேவர் தஞ்சைக்கு வந்து, இராசராசேச்சரத்துப் புகுந்து, தம் வாயில் உள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்தார். பின் அது இறுகிற்று. இக்கோயிலில் கருவூர்த்தேவரின் பிரதிமம் இருக்கின்றது.

கல்வெட்டு:

இராச ராசேச்சரம் என்ற தொடர்க்குப் பொருள்: இத்தொடர் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற கோயில் என்று பொருள்படும். (ஈச்சரம் - கோயில்) இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் `ராஜராஜீஸ்வரம்\' என்றே இக் கோயிலைக் குறிப்பிடுகின்றன. இலக்கண விதிப்படி அது தவறுடைய தாகும். ராஜராஜேஸ்வரம் என்பதே திருத்தமுடையது. இராசராசேச்சரம் நிலை பெற்றுள்ள இடம்: \"பாண்டிகுலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஷ்ரீ ராஜராஜீஸ்வரமுடை யார்க்கு நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஷ்ரீ விமானத்திலே கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டின\" - என்னும் முதலாம் இராஜராஜ சோழனின் ஆண்டு 26, நாள் 20இல் வெட்டப்பட்ட கல்வெட்டுப்பகுதி, தஞ்சை இராசராசேச்சரம் நிலை பெற்றுள்ள இடம் பாண்டிகுலாசனிவளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் அமைந்துள்ளதைப் புலப்படுத்தும். பாண்டிகுலாசனி என்பது முதலாம் இராஜராஜ சோழனுடைய விருதுப்பெயர்களில் ஒன்று. இதற்குப் பாண்டியர் குலத்துக்கு இடியை ஒத்தவன் என்பது பொருள். இப்பெயரே இவ்வளநாட்டுக்கு வைக்கப்பெற்றதாகும். இப்பெயர் பிற்காலத்தில் பாண்டிகுலபதி வளநாடு என்று வழங்கப்பெற்றுள்ளது. இப்பாண்டிகுலாசனி வளநாடு - ஆர்க்காட்டுக் கூற்றம், இடையாற்றுநாடு, எயிநாடு, எறையூர்நாடு, கிளியூர்நாடு, கீழ் செங்கிளி நாடு, சுத்தமல்லி வளநாடு, தஞ்சாவூர்க் கூற்றம் பனங்காடு நாடு, புறக்கிளிநாடு, மீசெங்கிளிநாடு, மீய்வாரிநாடு, வடகவிரை நாடு, வடசிறுவாயில்நாடு, விளாநாடு முதலான பதினேழு பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. தஞ்சாவூர்க் கூற்றம்: தஞ்சாவூர், கருந்திட்டைக்குடி முதலான ஊர்கள் இக் கூற்றத்தில் அடங்கியிருந்த ஊர்களிற் சிலவென்று கல்வெட்டுக்கள் அறிவிக் கின்றன. கூற்றம் என்பது இருநாடுகளுக்கு இடைப்பட்ட சிறு பிரி வாகும். இக்காலம் ஒரு தாலூகாவிற்குச் சமம் ஆகும். இராசராசேச்சரம் கட்டி முடிவுபெற்ற காலம்: இராஜராஜ சோழன் தன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டு, நாள் இருநூற்று எழுபத்தைந்தில் ஷ்ரீ இராசராசேச்சரமுடையார் ஷ்ரீ விமானத்துச் செம்பின் ஸ்தூபித் தறியில் வைக்கச் செப்புக்குடம் ஒன்றைக் கொடுத்த செய்தியை அவன் கல்வெட்டுப் பகுதி உணர்த்துகின்றது.1 எனவே கோயில் கட்டி முடிவு பெற்ற காலம் (கி.பி. 985 + 25) கி.பி. 1010 அதாவது இற்றைக்கு 990 ஆண்டுகள் ஆகும். இராசராசேச்சரத்துக் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர்: இக்கோயில் கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவர், சோழமன்னர்களின் கல்வெட்டுக்களில், இராசராசேச்சரம் உடையார், இராசராசேச்சரமுடைய பரமசுவாமி எனக் குறிக்கப்பெற்று உள்ளனர். மல்லப்ப நாயக்கர் கல்வெட்டில் \"தஞ்சாவூர் பெரிய உடைய நாயனார்\" என்னும் பெயர் காணப்படுகின்றது. இதுவே தஞ்சைப் பெருவுடையார் என்று வழங்கப்பெறுகின்றது. இக்கோயிலில் முதலாம் இராஜராஜ சோழன் எழுந்தருளு வித்தனவும், கொடுத்தனவுமாகிய வேறு திருமேனிகள்: தட்சிண மேரு விடங்கர், மகாமேருவிடங்கர், சண்டேசுவர பிரசாததேவர், இவர் பிராட்டியார் உமாபரமேசுவரியார், சண்டேசுவரரின் தந்தையார் விழுந்து கிடந்தாராய் உள்ளவர், பிரசாதம் பெறுகின்றாராகக் கனமாகச் செய்த சண்டேசுவரர், மகாதேவர், பஞ்சதேக மூர்த்திகள் முதலான வேறு திருமேனிகளை, முதலாம் இராஜராஜன் இக்கோயிலில் எழுந் தருளுவித்துள்ளான். ஆடவல்லான் என்னும் கல்லால் எண்ணூற்று இருபத் தொன்பது கழஞ்சே முக்காலே மூன்று மஞ்சாடி நிறையுள்ள ஷ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவரையும், பாதாதி கேசாந்தம் மூவிரலே மூன்று தோரை உயரமும், நான்கு திருக்கைகளிலும் பிடித்தருளிய சூலமும், கபாலமும், பாசமும், தமருகமும், வெள்ளியின் பாதபீடமும் உள்பட நிறை எழுபத்திரு கழஞ்சரையுள்ள பொன்னின் கே்ஷத்திரபால தேவர் ஒருவரையும் கொடுத்துள்ளான். முதலாம் இராஜராஜ சோழனது திருத்தமக்கையாரும், தேவிமார்களும், அரசியல் அலுவலாளர்களும் எழுந்தருளுவித்த திரு மேனிகளும் பிரதிமங்களும் : இராஜராஜதேவர், திருத்தமக்கையார், வல்லவரையர் வந்தியத்தேவர், மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார், இத்திருக்கோயிலில் தம் தந்தையாராகிய பொன் மாளிகைத்துஞ்சியதேவர் (இரண்டாம் பராந்தக தேவர்) தமது தாயாராகிய வானவன் மாதேவியார், தட்சிணமேரு விடங்கரின் பிராட்டியார் உமாபரமேசு வரியார், தஞ்சை விடங்கரின் பிராட்டியார் உமா பரமேஸ்வரியார் இவர்களின் திருமேனிகளையும்; இராஜராஜதேவர் தேவிமார்களில் ஒலோகமாதேவியார், பிச்ச தேவரையும்; திரைலோக்கிய மாதேவியார், கல்யாணசுந்தர தேவர் இவரது பிராட்டியார் இவர்களையும், அபிமானவல்லியார், இலிங்க புராணதேவர், பிரமன், விஷ்ணு இவர்களையும், சோழ மாதேவியார், இடபவாகனதேவர் இவர் தம் பிராட்டியார் உமா பரமேஸ்வரியார் இவர்களையும்; பஞ்சவன்மாதேவியார், தஞ்சை யழகர் இவர் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களையும்; இலாடமாதேவி யார் பாசுபதமூர்த்தியையும்; பிருதுவிமாதேவியார் ஷ்ரீகண்டமூர்த்தி களையும்; இராஜராஜதேவர் அரசியல் அலுவலாளர்களில், அதிகாரிகள் காஞ்சிவாயில் உடையான் உதையதிவாகரன் தில்லையாளியாரான இராஜராஜ மூவேந்தவேளார், க்ராதார்ஜுந தேவரையும்; இராஜராஜ தேவர் பெருந்தரம் வேளான் ஆதித்தனான பராந்தகப் பல்லவரையர் உமாசகிதர், இவர் தம் பிராட்டியார்; சுப்பிரமணியதேவர், கணபதியார் இவர்களையும்; இராஜராஜதேவர் பெருந்தரம், உய்யக்கொண்டார் வள நாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நாரக்கன் ஷ்ரீ கிருஷ்ணன் மும்முடிசோழ பிரமாதிராயன், அர்த்தநாரீஸ்வரரை யும்; இராஜராஜதேவர் சிறுதனத்துப் பெருந்தரம் கோவன் அண்ணா மலையான கேரளாந்தக விழுப்பரையன், பிருங்கீசர், சூரியதேவர் இவர்களையும்; ஷ்ரீ காரியஞ்செய்த பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான், திருஞானசம்பந்த அடிகள், திருநாவுக்கரையதேவர், நம்பி ஆரூரனார், நங்கை பரவையார், முதலாம் இராஜராஜ சோழர், இவரது தேவியார் ஒலோக மாதேவியார், \"தத்தாநமரே\" என்ற மிலாடு டையார் (மெய்ப்பொருள் நாயனார்), சிறுத்தொண்ட நம்பி; திரு வெண்காட்டு நங்கை, சீராள தேவர் இவர்கள் பிரதிமங்களையும்; சந்திரசேகரதேவர், கே்ஷத்திர பாலதேவர் இவர்களின் திருமேனி களையும்; ஈராயிரவன் பல்லவரை யனான மும்முடிச்சோழ போசனான உத்தமசோழப் பல்லவரையன் சண்டேசுவரதேவரையும் எழுந்தருளுவித்துள்ளனர். அம்மன்கோயிலைப்பற்றிய செய்தி: திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்டான் இக் கோயிலில் உலகுமுழுதுடைய நாச்சியாரை எழுந்தருளுவித்து, அவர்க்கு அமுதுபடி உள்ளிட்டு வேண்டுவனவற்றிற்கு அருமொழித் தேவ வளநாட்டு மேல்கூறு விடையபுரப்பற்றில் கொட்டகர்க்குடியிலே பதின் வேலி நிலத்தை இறையிலியாகக் கொடுக்கப் பெற்ற செய்தியை அம்மன்கோயில் கல்வெட்டு அறிவிக்கின்றது.இங்குக் குறிக்கப்பெற்ற திரிபுவனச் சக்கரவர்த்தி சோழ மன்னனோ அல்லது பாண்டிய மன்னனோ என்று துணிந்து கூற முடியவில்லை. ஏனெனில் இருவம்சத் தார்களும் திரிபுவனச் சக்கரவர்த்தி கோநேரின்மைகொண்டான் என்ற பட்டங் களைச் சூடி வந்தார்கள். கோநேரின்மை கொண்டான் என்பது தனக்கு ஒப்பார் எவரும் இலர் என்ற பொருள் தரும். எனவே அம்மனின் திருப் பெயர் உலக முழுதுடைய நாச்சியார் என்பதாகும் அம்மன் கோயிலுக்கு முன்னிலையில் உள்ள மண்டபங்களுக்கு மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் என்னும் பெயர்கள் வைக்கப் பெற்றிருந்தன. இவைகளை எல்லாம் அம்மன் கோயிலின் மேற்குப் புறச் சுவரிலுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக் கின்றன. கணேசர்: நிர்த்தனம் செய்யும் கணபதியார் இருவர், உட்கார்ந்து இருக்கும் கணபதியார் மூவர், நிற்கும் நிலையிலிருக்கும் கணபதியார் ஒருவர் ஆக எழுவர் திருமேனிகளை, முதலாம் இராஜராஜன் இக்கோயிலில் எழுந்தருளுவித்துள்ளான். இவர்களை யன்றி ஆலயத்துப்பிள்ளையார், பரிவார ஆலயத்துப்பிள்ளையார் இவர்களைப் பற்றியும் குறிப்புக்கள் இருக்கின்றன. பிராகாரத்தில் இருக்கும் பிள்ளையார்கோயிலை, தஞ்சையை ஆண்ட மகாராட்டிரமன்னராகிய, சரபோஜி மகாராசர் சகம் 1723 இல் பழுதுபார்த்ததோடு இக்கோயிலுக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவைகளையும் புதிதாகக் கட்டியுள்ளார். சகம் 1723 என்பது கி.பி.1801 ஆகும். எனவே இம்மண்டபங்கள் கட்டப்பெற்று இற்றைக்கு 168 ஆண்டுகள் ஆகின்றன. இச் செய்திகளை இக்கணபதிக் கோயிலில் உள்ள படிக்கட்டுகளின் கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுப்பிரமணியர் கோயில்: மேற்குறித்த சரபோஜி மகாராசர் சகம் 1723 அதாவது கி.பி. 1801, இக்கோயில் மகாமண்டபத்தின் முன்புள்ள படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டியுள்ளனர். வாயில்கள்: இராசராசேச்சரத்தின் முதற்கோபுரவாயிலுக்குக் கேரளாந்தகன் திருவாசல் என்றும், இரண்டாம் கோபுரவாயிலுக்கு இராசராசன் திருவாசல் என்றும், தெற்குத்திருவாசலுக்கு விக்கிரம சோழன் திருவாசல் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. தீர்த்தம்: இக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதற்கு மண்டூக தீர்த்தம் என்று பெயர். அது சகம் 1724இல் அதாவது கி.பி. 1802இல் சரபோஜி மன்னரால் ஒரு கிணறு வடிவமாகக் கட்டப்பட்டுள்ளது. திருச்சுற்றுமாளிகை: இக்கோயிலின் திருச்சுற்றுமாளிகையைக் கட்டியவர் சோழமண்டலத்து உய்யக்கொண்டான் வளநாட்டு அமண் குடியான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஷ்ரீகிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரமராயர் ஆவர். திருவிழாக்கள்: இத்திருக்கோயிலில் மாதந்தோறும் சதயத் திருவிழா, கார்த்திகை மாதத்தில் கார்த்திகைநாள் திருவிழா, மாதந் தோறும் சங்கிராந்திவிழா, ஆட்டைத்திருவிழா, அல்லது பெரிய திருஉற்சவம் இவைகள் நடைபெற்றுவந்தன. இவைகளுள் சதயத் திருவிழா என்பது முதலாம் இராஜராஜசோழன் பிறந்த சதய நட்சத்திரத்தில் மாதந்தோறும் நடத்தப்பெற்று வந்ததாகும். ஆட்டைத் திருவிழா என்பது ஆண்டுதோறும் நடத்தப் பெறும் பெரிய விழாவாகும். இது வைகாசி மாதத்தில் நடைபெற்று வந்தது. இவ்விழாக் காலங்களில் இராஜ ராஜ நாடகம் நடத்தப் பெறுவதுண்டு. \"உடையார் வைகாசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடக மாட நித்தம் நெல்லுத் தூணியாக நூற்றிருபது கலம்\" என்னும் \"திரு மருவிய செங்கோல் வேந்தன்\" எனத் தொடங்கும் கோப்பரகேசரி பன்மரான உடையார் ராஜேந்திர தேவரின் ஆறாம் ஆண்டுக் கல் வெட்டால் அறியக் கிடக்கின்றது. அம் மன்னன் காலத்தில் நாடகம் நடித்துவந்தவன் சாந்திக் கூத்தன் திருமுதுகுன்றனான விஜய ராஜேந்திர ஆசாரியன் ஆவன். இந்த வைகாசிப் பெருந்திருவிழா ஒன்பது நாள்கள் நடைபெற்று வந்தது. \"பெரிய திருஉத்ஸவம் நாள் ஒன்பதுக்கும்\", \"ஆட்டைத் திருவிழா எழுந்தருளும் நாள் ஒன்பதும்\" என்னும் கல்வெட்டுப் பகுதிகளே சான்றாகும் (மிகப் பழங்காலத்தே விழாக்கள் ஏழுநாள்கள் நடைபெற்றுவந்தன. \"ஏழு நாளும் கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கை வீரட்டனாரே\" என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் வாக்கால் புலனாகும், விழாக் காலங்களில் சிவயோகி களுக்கு அன்னம் அளிக்கப்பெற்று வந்தது. திருவிழா நாள்களில் எழுந்தருளும் திருமேனிகளுக்குப் பழவரிசியால் சமைக்கப்பட்ட போனகம்; பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, கடுகு, நெய், இவை கொண்டு செய்த புளிங்கறியமுது, காய்க்கறியமுது, பொரிக்கறியமுது; இவை அமுதுசெய்விக்கப்பெற்றன. திருமஞ்சனம் முதலியன: இக் கோயிலில் சிறுகாலை, உச்சி யம்போது, இராவை என்ற மூன்று காலத்தும் பூசை நடைபெற்று வந்தது. பெருஞ்சண்பக மொட்டு, ஏலவரிசி, இலாமச்சம் இவைகளை ஊறவைத்த நீரால் திருமஞ்சனம் ஆட்டிவந்தனர். பழவரிசியால் சமைத்த போனகம். கறியமுது, பருப்பமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது, வெள்ளிலை அமுது இவைகொண்டு அமுது செய்விக்கப்பட்டன. திருவமுது செய்விக்கும்பொழுது திருப்புகைக்குக் கொண்டது சீதாரியாகும். (சீதம் - குளிர்ச்சியை, அரி - போக்குவது) சீதாரி என்பது சந்தனத்தூள். \"திருமெய்ப்பூச்சுக்கும் சீதாரிக்குமாக நிசதம் சந்தனம் முப்பலம்\' என்னும் கல்வெட்டுத் தொடர் இதற்குச் சான்றாகும். திருப்பதியம் விண்ணப்பிக்க நிவந்தம்: முதலாம் இராஜராஜ சோழன், தஞ்சை இராசராசேச்சரத்தில் திருப்பதியம் விண்ணப்பிக்கப் பிடாரர்கள் நாற்பத்தெண்மர்களையும், உடுக்கை வாசிக்க ஒருவரையும், கொட்டி மத்தளம் வாசிக்க ஒருவரை யும் ஆக ஐம்பதின்மர்களை நியமித்து அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு இராசகேசரியோடு ஒக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் நாடோறும் முக்குறுணி நெல் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தான். ஒருநாளைக்கு முக்குறுணி நெல்வீதம் ஓராண்டுக்குத் தொண்ணூறு கலங்கள் ஆகின்றன. இது அக்காலத்தில் நல்ல சம்பளமாகவே இருந்த தாகக் கொள்ளவேண்டும்

 
 
சிற்பி சிற்பி