ஆலவாய் (மதுரை திருவாலவாய்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு அங்கயற்கண்ணி உடனுறை சொக்கலிங்கப்பெருமான்

மரம்: கடம்பு
குளம்: பொற்றாமரை, வையை ஆறு, எழு கடல்

பதிகங்கள்: முளைத்தானை -6 -19 திருநாவுக்கரசர்
மானினேர்விழி -3 -39 திருஞானசம்பந்தர்
செய்யனே -3 -51 திருஞானசம்பந்தர்
வீடலால -3 -52 திருஞானசம்பந்தர்
வேதியாவேத -4 -62 திருநாவுக்கரசர்
மந்திரமாவது -2 -66 திருஞானசம்பந்தர்
நீலமாமிடற் -1 -94 திருஞானசம்பந்தர்
வேதவேள்வி -3 -108 திருஞானசம்பந்தர்
ஆலநிழலுகந்த -3 -115 திருஞானசம்பந்தர்
மங்கையர்க் -3 -120 திருஞானசம்பந்தர்
காட்டுமாவது -3 -47 திருஞானசம்பந்தர்
முத்திதருவது -2 -66 திருஞானசம்பந்தர்

முகவரி: மதுரை வட்டம்,
மதுரை மாவட்டம், 625001
தொபே. 0452 2344360

மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3/4.கி.மீ. தூரத்தில், வையையாற்றின் தென்கரையில் இருக்கிறது. தமிழகத்துப் பெருநகர்கள் பலவற்றிலிருந்தும் பேருந்துகளில் மதுரை செல்லலாம். பாண்டியநாட்டுத்தேவாரம் பெற்ற தலங்கள் பதினான்கில் முதன்மை பெற்றது.

இது மதுரைக்கு உரிய வேறு பெயராகும். வம்மிசசேகர பாண்டியன் ஆட்சிசெய்து வருங்காலத்தில் மக்கள் வசிப்பதற்கு இடம் போதாமையால், ஆதியில் இந்நகரத்திற்கு ஏற்பட்ட எல்லையைக் காட்டியருளுமாறு அவன் சிவபெருமானை வேண்டினான். பெருமானும் தனது திருக்கையில் கங்கணமாயுள்ள பாம்பை அளந்து காட்டுமாறு பணிக்க, அது வாலும் வாயும் ஒன்றுபடும்படி வட்டமாக வளைத்துக் காட்டியமையால் இப்பெயர்பெற்றது.

இதற்குரிய வேறுபெயர்கள் நான்மாடக்கூடல், மதுரை, கடம்பவனம், பூலோக கயிலாயம், சிவராசதானி, துவாதசாந்தத் தலம் என்பன.

இறைவரின் திருப்பெயர் சொக்கலிங்கப்பெருமான். இறைவியாரின் திருப்பெயர் அங்கயற்கண்ணி. இத்திருப்பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருந்தகையார் ``அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவாயாவது மிதுவே`` என எடுத்தாண்டிருப்பது மகிழ்தற்குரியது. வடமொழியில் மீனாட்சிதேவி என்பர்.

`பாண்டிநாடே பழம்பதி` என்று சிறப்பித்து ஓதப்பெறும் மதுரை, பாண்டிநாட்டில் பாண்டிய மன்னர்களுக்குத் தலைநகராக விளங்குவது மதுரை. புலமைமிக்க புலவர் பெருமக்கள் பலர் இருந்து தமிழ் மொழியை ஆராய்ச்சிசெய்ய நிலைக்களமானது. சங்கப்பனுவலாகிய பரிபாடலில், மதுரைக்கும் வையைக்கும் முப்பது பாடல்களைக் காணலாம்.

இங்குச் சிவபெருமான் செய்தருளிய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைப்போல வேறு எங்கும் நிகழ்ந்திலது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இவர்களுடைய பதினொரு பதிகங்களைக் கொண்டது.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அனல்வாதம் புனல் வாதம் செய்து சைவத்தைப் பாண்டிநாட்டில் நிலை பெறச்செய்த பதி. முத்திதரும் தலங்கள் ஏழனுள் ஒன்றாய் விளங்குவது. ஐந்து சபைகளுள் வெள்ளியம் பலத்தைக் கொண்டது. மூர்த்தி நாயனார் அவதரித்த திருப்பதி. மாணிக்கவாசகரது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு அறிவுறுத்தி அவனை உய்விக்கச் செய்வதற்காக, நரி பரி ஆக்கியது, பரி நரியாக்கியது முதலான திருவிளையாடல்களைச் செய்தருளிய தலம்.

1. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: இது வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப்பெறும். இது ஆராய்ச்சிக்குச் சிறந்த நூல். இதை ஆக்கியோர் செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியாவர்.

2. கடம்பவன புராணம்: இது தொண்டைநாட்டிலுள்ள இலம்பூரிலிருந்த வீமநாத பண்டிதரால் இயற்றப்பெற்றது.

3. சுந்தரபாண்டியம்: இது தொண்டைநாட்டிலுள்ள வாயிற் பதியிலிருந்த அனதாரியப்பரால் எழுதப்பெற்றது.

4. திருவிளையாடற் புராணம்: இது திருமறைக்காட்டிலிருந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றது. இது சமய வளர்ச்சிக்கும் தமிழ்வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இது தோன்றிய பின்னர், இத்தலத்திற்குரிய வேறு புராணங்களை மக்கள் விரும்பிப் படிக்காததே இதன் பெருமையை உணர்த்துவதாகும். சங்கநூல் அறிவுசான்ற திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் இதற்குச் சிறந்த உரையெழுதியுள்ளார்கள்.

5. திருவிளையாடல் போற்றிக்கலி வெண்பா, 6. மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: இவ்விரு நூல்களும் மேற்குறித்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றனவாகும்.

7. மதுரைக் கலம்பகம், 8. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்: இவ்விரு நூல்களும் குமரகுருபர அடிகளாரால் இயற்றியருளப் பெற்றன. இவைகளன்றி மதுரைக் கோவை, மதுரைச் சொக்கநாதர் உலா, தமிழ்விடுதூது முதலிய பல பிரபந்தங்களும் இறையனார் அருளிய களவியலும் (அகப்பொருள் இலக்கணம்) இத்தலத்தின் சிறப்பிற்கு உரியன.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அம்பிகை சிவஞானம் குழைத்து அருளிய இன்னமுதை உண்டவர். அவர் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். அவர், இப்பதியில், மங்கையர்க்கரசியாரை நோக்கி, ``உமைக் காண வந்தனம்`` என்றதோடு அவரைத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடியருளியுள்ளார்கள். ஆதலால், மங்கையர்க்கரசியார் பெருஞ்சிறப்பு வாய்ந்தவர் என்பது பெறப்படுகிறது.

மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் பதிகத்தில் வைத்துப் பாடும்பொழுது, மங்கையர்க்கரசியாரைக் குறிக்குங்கால் சிவன், உமை இவர்களோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். குலச்சிறையாரைக் குறிக்கும்பொழுது சிவபெருமானோடுமாத்திரம் தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். இவற்றால் மங்கையர்க்கரசியார் தம் கணவரோடு வாழவேண்டுமென்று, ஞானசம்பந்தர் திருவுளங்கொண்டதாகத் தோன்றுகின்றது. இக்கருத்தைத்தான் ``பையவே சென்று பாண்டியற்காகவே`` என்ற அவரது தேவாரப் பகுதியும் தெரிவிக்கின்றது.

மங்கையர்க்கரசியார் திருநீறு அணிந்திருந்த செய்தி ``முத்தின் தாழ்வடமுஞ் சந்தனக்குழம்பும் நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார்கின்ற பாண்டிமாதேவி`` என்னும் ஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.

நுணுகி ஆராயின் இவைபோன்ற பல உயரிய செய்திகளை இத்தலத்துத் தேவாரப் பதிகங்களால் அறியலாம்.


கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி