மாணிகுழி (திருமாணிகுழி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மாணிக்கவல்லி உடனுறை மாணிக்கவரதர்


மரம்: கொன்றை
குளம்: கெடில நதி

பதிகம்: பொன்னியல்பொ -3 -77 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவகீந்திபுரம்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம், 607401
தொபே. 04142 274485

இத்தலம் சம்பந்தப்பெருமானால் உதவிமாணிகுழி என்றே பாடப்பெற்று உள்ளது.

பிராமண பிரமசாரியாய், குள்ளவடிவங்கொண்டு, மாவலிச் சக்கரவர்த்தி செய்த மங்கல வேள்வியில் மண் இரந்த திருமாலால் பூசிக்கப் பெற்றமையின் இது மாணிகுழி என்னும் பெயர் எய்திற்று.

இதை,
``நித்தநிய மத்தொழில னாகிநெடு
மால்குறள னாகிமிகவும்
சித்தமதொ ருக்கிவழி பாடுசெய
நின்றசிவ லோகன்இடமாம்.`` (தி.3 ப.77 பா.4)

எனத் திருஞானசம்பந்தர் இவ்வூர்ப் பதிகத்திலும்,
``... ... போர் வலித் தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணிக் குழியணைந்தார்.``
எனச் சேக்கிழார் தடுத்தாட்கொண்ட புராணத்திலும் (பா. 90) கூறுவன வற்றால் அறியலாம்.

திருப்பாதிரிப்புலியூர் தொடர் வண்டி நிலையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தூரத்திலுள்ள திருவகீந்திரபுரத்திற்குத் தென்மேற்கில் இது இருக்கிறது.

இறைவரின் திருப்பெயர் - மாணிக்கவரதர். இறைவியின் திருப்பெயர் - மாணிக்கவல்லி. தீர்த்தம் - கெடில நதி. இதைச் சேக்கிழார் ``தென்திசையில் கங்கையெனும் திருக்கெடிலம்`` எனக்குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் திருமுன்பு எப்பொழுதும் திரையிடப்பெற்றுள்ளது. அத்திரையில் பீமருத்திரரின் உருவம் இருக்கின்றது. இவர்க்குத்தான் முதலில் அர்ச்சனை நடைபெறுகின்றது. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாங் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னரில், விக்கிரம பாண்டியன் காலத்திலும், விசயநகர வேந்தரில் பிரதாபதேவ மகாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் இறைவர், திருமாணிகுழிமகாதேவர், உதவித் திருமாணி குழி ஆளுடையார், உதவித் திருமாணிகுழி மகாதேவர், திருமாணிகுழி உடையநாயனார், ஊர்செறி உதவி நாயகர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். தேவாரத்தைப் போலவே, கல்வெட்டிலும் உதவித் திருமாணிகுழி என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இறைவரின் பெயர்களில் மேற்குறித்த ஊர்செறி உதவி நாயகர் என்பது விஜயநகர வேந்தனாகிய ஸ்ரீ பிரதாபதேவமகாராயரின் (சகாப்தம் 1357) கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் இத்திருமாணிகுழி, விருதராசபயங்கர வளநாட்டு, மேற்காநாட்டு உதவித் திருமாணிக்குழி என்றும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், குறிக்கப்பெற்றுள்ளது. எனவே முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு விருதராச பயங்கரவளநாடு என்னும் பெயரையும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்ட சோழ வளநாடு என்னும் பெயரையும், மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாடு என்னும் பெயரையும் பெற்றிருந்த செய்தி புலனாகிறது.

இக்கோயிலிலுள்ள ``பூமாலை மிடைந்து`` என்று தொடங்கும் விக்கிரம சோழனுடைய மெய்க்கீர்த்தி மாத்திரம் அடங்கிய கல்வெட்டு சோழ மன்னர்களுக்குத் தில்லைச் சிற்றம்பலத்து இறைவன் குலதெய்வம் என்று குறிப்பிடுகின்றது. ``தன்குல நாயகம் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ் சூழ்ந்த திருமாளிகையும் கோபுரவாசலில் கூடகசாலமும்..... பசும்பொன் மேய்ந்து`` என்பது இதை உணர்த்தும் கல்வெட்டுப் பகுதியாகும். (திருமழபாடியில் உள்ள விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தியிலும் இச்செய்தி கூறப்பெற்றுள்ளது.)

(See the South Indian Inscriptions,Vol VII Numer 773.)

(குறிப்பு: இக்கல்வெட்டினால், இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய மகனாகிய இரண்டாம் இராஜராஜன் பிறந்த நட்சத்திரம் உத்திரட்டாதி என்று பெறப்படுகின்றது.)தில்லையம்பதி, சோழமன்னர்களுக்கு முடிசூட்டும் பதிகளுள் ஒன்றாகும். இப்பதியில் இரண்டாம் குலோத்துங்கசோழன் முடிசூட்டிக் கொண்டான் என்று இவ்வூரிலுள்ள (மாணிகுழியில் உள்ள) அம்மன்னனுடைய கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. சோழமன்னர்கள் தில்லையில் முடிசூட்டிக் கொள்வதற்கு ஆதாரமாய் உள்ள இக் கல்வெட்டு முக்கியமானது. ஆகையால் அக்கல்வெட்டில் வேண்டிய அளவு கீழே குறிப்பிடுகின்றேன். ``ஸ்வஸ்தி ஸ்ரீ ராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு அ (எட்டு) ஆவது ஜயங் கொண்ட சோழவளநாட்டு உதவித் திருமாணிகுழி உடையநாயனார் கோயில் தானத்தாற்கு மகனார் திருநட்சத்திரமான உத்திரட்டாதி நாள் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற சித்திரைத் திருநாளைக்கும், விக்கிரம சோழன் சந்திக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்த நிவந்தங்களுக்கு விட்ட....`` என்பதாகும்.

திருமடம்: உதவித் திருமாணிகுழி உடையார் திருமடை விளாகத்தில், ஸ்ரீ காழிநாடுடையான் திருமடம் என்று ஒரு திருமடம் இருந்ததை முதற்குலோத்துங்க சோழனது 49 ஆம் ஆண்டுக் 1கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அதற்கு மடப்புறமாக வானவன்மாதேவி நகரத்தார் நிலம் விட்டிருந்தனர்.

தியாகசமுத்திரக்கூடம்: இப்பெயருள்ள கூடம் பெரும்பற்றப் புலியூர்க்கோயிலினுள் இருந்ததை விக்கிரம சோழனின் 12 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக்கூடத்தில் பள்ளிச்சோட்டை சோழகோனிலிருந்து, ஆறுவேலி நிலத்தைத் திருமாணிகுழி கோயிலில் எழுந்தருளு வித்த விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருக்கும்படி விக்கிரம சோழன் கட்டளையிட்டிருந்தான்.

இக்கோயில் கல்வெட்டில் மூன்றாங்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராசேந்திர சோழதேவன், இராசாக்கள் நாயகன் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளான். வீர பாண்டியன் கல்வெட்டு, இவ்வூரை நடுவில் மண்டலத்து திருமாணி குழி எனக்குறிப்பிடுகின்றது. சோழமண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் உள்ளது ஆகையால் நடுவில் மண்டலம் எனப்பெயரெய்தியதாதல் வேண்டும்.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902. See also the South Indian Inscriptions, Vol. VII No. 772 - 797.)

 
 
சிற்பி சிற்பி