ஆரூர்அரநெறி (திருவாரூர்அரநெறி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு அகிலேசுவரி உடனுறை அகிலேசர்

மரம்: பாதிரி
குளம்: கமலாலயம்

பதிகங்கள்: எத்தீ புகினும் -4 -17 திருநாவுக்கரசர்
பொருங்கை -6 -33 திருநாவுக்கரசர்

முகவரி: திருவாரூர் அஞ்சல்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம், 610001
தொபே. 04366 242343

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகர் திருவாரூரில் உள்ள பூங்கோயிலின் தென் கிழக்குத் திசையில் உள்ளது இவ் ஆலயம்.

திருவாரூர்ப் பூங்கோயில் (கமலாலயம்) அரநெறி, பரவையுண்மண்டளி என்னும் மூன்று பாடல்பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றுள் பூங்கோயில் எனப்படுகின்ற பெரிய கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் தென் கிழக்குத் திசையில் மேற்கு முகமாயமைந்துள்ள ஆலயம் திரு ஆரூர் அரநெறி யெனப்படும். இங்குத் திருவாரூருக்குச் சமீபத்திலுள்ள ஏமப்பேரூரில் வைதிகப் பிராமண குலத்தில் திருவவதாரஞ்செய்த நமிநந்தியடிகள் நாயனார் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார்.

ஒருநாள் அவர் திருவாரூரையடைந்து அரநெறியை வணங்கும்போது அந்திப் போதாய்த் திருவிளக்குத் திருப்பணி செய்யவேண்டுமென்னுங் கருத்துத் தோன்றுதலினால் நெய்யின் பொருட்டு அமணர் வீடென்று அறியாது திருவிளக்குக்கு நெய்கேட்க அங்குள்ள அமணர் `கையில் மழுவுள்ள சிவனுக்கு விளக்கு மிகை` யென்ன இழித்துரைக்கக்கேட்டு வருந்திப் பரமசிவனது அசரீரித் திருவாக்கின்படிக் கமலாலய நீரை முகந்து கொணர்ந்து இரவு முழுதும் திருவிளக்கு எரித்தும் திருப்பணி செய்தும், சோழ ராஜாவினால் பங்குனி உத்திரத் திருநாளைச் சிறப்புறச் செய்வித்தும், வீதிவிடங்கப் பெருமான் திருமணலிக்கெழுந்தருளிய போது சேவித்துத் தம் வீடடைந்து பலரும் தீண்டலின் விழுப்பென்று ஆன்மார்த்த பூசை முதலிய செய்ய ஸ்நானத்தின்பொருட்டு நீர் கொணர மனைவி யாருக்குச் சொல்லிப் புறத்தே இருந்தபோது திருவருளினால் நித்திரையெய்திக் கனவிலே `திருவாரூரிலே உள்ளவர் யாவரும் சிவகண நாதராவர்` என்று உணர்த்தப்பெற்று அஞ்சி விழித்து அதனை மனைவியாருக்கும் உணர்த்திப் பூசை முடித்து வைகறையில் திருவாரூரையடைந்து யாவரையும் சிவசாரூப்யராகத் தரிசித்தும் நெடுநாட்டிருப்பணி செய்தும் திருவடியடைந்தார்.

இவரை ஷ்ரீ வாகீசமூர்த்திகள் ``தொண்டர்க்கு ஆணி`` என்றும், இவரது தொண்டை ``நம்பிநந்தி நீராற்றிரு விளக்கிட்டமை நீணாடறியு மன்றே`` என்றும், ``பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்`` என்றும் தமது திருப்பதிகத்திற் சிறப்பித்திருக்கின்றனர்.

இறைவனுக்கு, திருஅரநெறி உடையார் என்ற பெயரும் வழங்கியது என்று இக்கோயிற் கல்வெட்டுக்களின் மூலம் புலனாகிறது.

திருவாரூர் அரநெறிக் கோயிலுக்கு அப்பர்பெருமான் அருளிச்செய்த பதிகங்கள் இரண்டு மட்டும் உள.

தல வரலாற்றுக் குறிப்பு: திருவாரூர் அரநெறிக் கோயிலைக் கற்றளியால் கட்டியவர் திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான கண்டராதித்த சோழ தேவரது மனைவியாராகிய செம்பியன்மாதேவியாராவர். இத் திருக்கோயில் அரநெறியுடையார்க்குத் திருநொந்தா விளக்கு இரண்டினுக்குக் குருகாலன் திரு மூலட்டானத் தொண்டர் மேன்மங்கலத்தில் மூன்று வேலி நிலத்தை முதல் இராஜராஜ தேவரின் ஆட்சியாண்டு இருபது, நாள் இருநூற்று ஏழில் கொடுத்துள்ளார் என்றும் முதலாம் இராஜாதிராஜரின் இருபத்தேழாம் ஆண்டில் அரநெறி உடையார்க்கு அனுக்கியார் பரவை நங்கையார் தீபங்குடி மேல் மங்கலம் கிராமத்தில் வழிபாட்டிற்காக நிலம் கொடுத்திருந்தனர் என்றும் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.


கல்வெட்டு:

இத்திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழனாகிய இராஜராஜகேசரி வர்மன், மதுரைகொண்ட இராஜகேசரி வர்மன், ராஜேந்திர சோழ தேவன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தரில் வீரபூபதி உடையார் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

See the Annual Reports on South Indian Epigraphy for the year, 1904.No. 568 - 575.

ஈண்டுள்ள கல்வெட்டுக்கள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. இராஜகேசரிவர்மனுடைய இரண்டாமாண்டுக் கல்வெட்டு, உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் தம் மகனார் உத்தம சோழ தேவரின் மேன்மைகருதி வெள்ளிப்பாத்திரங்கள் அளித்ததையும், அம்மன்னன் காலத்து ஏழாமாண்டுக் கல்வெட்டு, திருஅரநெறி ஆள்வார் கோயிலை உடைய பிராட்டியார் செம்பியன் மாதேவியார் கருங்கல்லால் கட்டி, இரு திருமேனிகளை எழுந்தருளுவித்ததோடு நாடோறும் பூசனைக்கும் கோயிலைப் பழுது பார்ப்பதற்கும் ஆக 234 காசுகளைக் கொடுத்ததையும் குறிப்பிடுகின்றன.

மதுரை கொண்ட இராஜகேசரிவர்மனின் 32-ஆம் ஆண்டுக் கல்வெட்டு விளக்குக்குப் பொன் அளித்ததைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. இம் மன்னனுடைய கல்வெட்டு பிற்கால எழுத்தால் செதுக்கப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. வீரபூபதி உடையார் கல்வெட்டு சிதைந்து போன நிலையில் உள்ளது.

 
 
சிற்பி சிற்பி