புத்தூர்
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535,
5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
அருள்மிகு சிவகாமி அம்மையார் உடனுறை புத்தூரீசர்
மரம்: கொன்றை குளம்: திருத்தளித் தீர்த்தம், சிவகங்கை
பதிகங்கள்: வெங்கள்விம்முவெறி -1 -26 திருஞானசம்பந்தர்
புரிந்தம -6 -76 திருநாவுக்கரசர்
முகவரி: திருப்புத்தூர் அஞ்சல் சிவகங்கை மாவட்டம், 623211 தொபே. 9367148201
பாண்டிய நாட்டுத்தலம். தஞ்சை மதுரை பேருந்து வழித் தடத்திலுள்ளது. மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம் திருப்புத்தூர் எனவும், கோயில் திருத்தளி எனவும் வழங்கும். அப்பர் சுவாமிகள் `திருப்புத்தூரில் திருத்தளியான் காண்` என அறிவிப்பார்கள். உமாதேவியும், இலக்குமியும் பூசித்துப் பேறுபெற்ற தலம். இறைவன் அம்மை சந்நிதிகளுக்கு இடையில் பைரவர் சந்நிதி இருக்கிறது. பைரவர் சிறப்புடையவர். ஆனந்தக்கூத்தப்பெருமான், சிவகாமியம்மை திருவுருவங்கள் கற்சிலையாலான கண்கவரும் வனப்பின. விஷ்ணுவுக்கும் சந்நிதி உண்டு.
சுவாமிபெயர் புத்தூரீசர்; திருத்தளிநாதர். அம்மை சிவகாமி அம்மையார். தீர்த்தம் திருத்தளித் தீர்த்தம், சிவகங்கை முதலியன. தலவிருட்சம் கொன்றை.
கல்வெட்டு:
அரசியலாரால் 1908ம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 51 உள்ளன.
இறைவன் திருப்பெயர் திருக்கற்றளிப்பட்டாரர்;(-90 of 1908) ஷ்ரீதளி பரமேஸ்வரர்(-93 of 19080), திருத்தளி உடைய பரமேஸ்வரர், திருத்தளி ஆண்ட நாயனார்(-99 of 1908) , என வழங்கப்பெறுகின்றார். அம்மை திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்(-123 of 1908) , திருப்பள்ளிறை நாச்சியார் எனவும் வழங்கப்படுகின்றார். இவர்களேயன்றிக் கோயிலுக்குள்ளே கைலாச முடைய நாயனார்(-114 of 1908) , அகஸ்தீஸ்வரம் உடையார்(-130 of 1908) கோயில்களும் இருந்தனவாக அறியப்படுகின்றன. பைரவர் கோயில் மிகப் பிரசித்த மானது(-121 of 1908). விஜயநகரத்தை அரசாண்ட வீரப்பிரதாப அச்சுததேவ மகாராயர் நன்மைக்காகப் பெரிய ராமப்ப நாயக்கரால் பைரவருக்கு நிலம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைப்பற்றிய குறிப்புக்கள் விஜய நகர அரசர்கள் கல்வெட்டுக்களில் இதற்கு முந்தியதில் இல்லை.
கைலாசமுடைய நாயனார் கோயில் தேவரடியாளான ஒருத்தி திருநாவுக்கரசு நாயனார் படிவத்தைப் பிரதிஷ்டை செய்யவும், நைவேத்தியத்திற்காகவும் பொன் அளித்த செய்தியைத் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் 12-ஆம் ஆட்சியாண்டு கல்வெட் டொன்று காட்டுகின்றது(-117 of 1908). கோவில் அடியாளுக்கிருந்த அடியார் பக்தி என்னே! திருஞானசம்பந்தர் திருமடமும்(-129 of 1908) திருத்தொண்டத்தொகைத் திருமடமும்(-6 of 1908) சைவமடம் ஒன்றும் இருந்தன. இவற்றுள் திருஞான சம்பந்தர் திருமடத்தில் ஷ்ரீகண்ட சிவாச்சாரியர் இருந்ததாகவும் சோழதேசத்தில் இருந்த நிலத்தை விற்று அவருக்குக் கொடுக்கப் பெற்றதென்றும் அதே கல்வெட்டு அறிவிக்கின்றது. இக்கல்வெட்டு மாறவர்மன் சுந்தர பாண்டியன்I (கி.பி.1214-35) காலத்தது.
இவையன்றிக் கிராம தேவதைகளாக அங்காளம்மன் கோயில்(-138 of 1908), நின்ற நாராயணப்பெருமாள்கோயில்(-140 of 1908) இவைகளும் திருப்புத்தூர் கிராமங்களில் இருந்தனவாகக் குறிக்கப்படுகின்றன. பெருமாள் கோயில், திருத்தளி உடையார்கோயிலிலேயே இருந்த தாகக் குறிக்கப் பெறாமை ஊன்றி அறிதற்குரியது. இத்தலத்து நிகழ்ச்சிகள் யாவும் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. ஷ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் இராஜேந்திரசோழ கேரளனான நிச்சலராஜனால் கேரளசிங்க வளநாட்டில் விளக்கிற்காக 50 ஆடு கொடுக்கப்பெற்றிருக்கிறது(-93 of 1908). அரசனாலேயே 25 பசுக்களும் ஒரு காளையும் விளக்கிற்காகக் கொடுக்கப்பெற்றிருக்கின்றன(-108 of 1908). சோழ தேசத்தில் கயாமாணிக்க வள நாட்டு மருகல் நாட்டுப் புத்தனூரில் வசித்த ஒருவர் 25 பசுக்களையும் ஒரு காளையையும் விளக்கிற்காகக் கொடுத்தார்.(-109 of 1908)காளிங்கராயன் வேண்டுகோளுக்காக இரண்டு கிராமங்கள் அளிக்கப்பெற்றன. உலக முழுதுடையாள் என்னும் அரசியால் மடப்பள்ளித் திருப்பணி செய்யப் பெற்றது (-115 of 1908).
பராக்கிரம பாண்டியன்:
இவன் காலத்திய கல்வெட்டுக்கள் 4 உள்ளன. அவற்றால் இவன் ஆட்சி பதினொராம் ஆண்டில் புறமலைநாட்டுப் பொன்னமரா வதியான இராஜேந்திரசோழ நிஷதராயன் என்பவனால் திருத்தளி உடையார் கோயில் உற்சவத்திற்காக நெல் அளிக்கப்பெற்றது(-94 of 1908). திருப் புத்தூர்ச் சபையார்கூடி நரலோக வீரன் சந்தி என்னும் விழாவிற்காக நிலம்விற்றுக் கொடுத்த வரலாறு அறிவிக்கப்பெறுகிறது(-98 of 1908). ஓர் அந்தண னால் திருப்பள்ளி அறை நாச்சியார் நிவேதனத்திற்காகப் பொன் அளிக்கப்பெற்றது. உய்யவந்தான் கண்டிதேவனான காங்கேயன் என்பவனால் கோயிலுக்கு அளிக்கப்பெற்ற சாசனங்கள் பட்டியலாகக் குறிக்கப்பெற்றிருக்கின்றன.
குலசேகர பாண்டியன்:
நியமம் என்னும் ஊரான் ஒருவனால் விளக்குத்தண்டுக்காகப் பொன்னும், தேனாற்றுப்பாசன வசதியும் செய்து கொடுக்கப்பெற்றதாக அறியப்பெறுகிறது. அதிசயப் பாண்டிய நல்லூரான குட்டக்குடியில் கண்டன் உய்யவந்தானான காங்கேயனால் திருப்பதியம் விண்ணப் பிப்பார்க்கு இறையிலியாக அளிக்கப்பெற்றது. இந்த நிலம், வீரகுணப் பெருமாள் என்பவரால் திருப்புத்தூர் திருத்தளியிலுள்ள கூத்தாடு தேவரான நடராஜ தேவருக்கு அளிக்கப்பெற்றிருந்தது. அதே கோயிலிலுள்ள சைவமடம் ஒன்றிற்குத் திருவாலந்துறை உடையா னான திருக்கொடுங்குன்ற முடையான் நிஷதராஜனால் சில வரிகள் வசூலித்துக்கொள்ள உரிமை அளிக்கப்பெற்றது. திருப்புத்தூர் மூல பரிஷத் என்னும் சபையார் மதுரைசென்று கோயில் நிலங்களுக்கு வரி கட்டி வரவேண்டியதற்காக வழிப்பயணச்செலவான ஒரு குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறான்.
கைலாசமலைநாதர் கோயில் திருவிழாவிற்காகச் சம்வத்சர வாரியமாக வரி தள்ளுபடி செய்தமை குறிக்கப்பெற்றுள்ளது. தயாபஞ்சகம் என்றழைக்கப்படும் மண்டபத்தில் மூலச்சபையார் கூடிச் சில கொடுக்கல் வாங்கல்கள் செய்த செய்தியும், திருத்தொண்டத் தொகையான் திருமடமும் குறிக்கப்பெறுகின்றன. சோழபாண்டிய வளநாட்டு குலசேகரநாட்டுப் பிராமணி ஒருவனால் கோயிலில் நான்கில் மூன்று பங்கு விளக்குக்களை ஏற்றப் பொன் வழங்கப் பெற்றது. கண்டிய தேவரால் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியாரை மருந்து சாத்திப் பிரதிஷ்டைசெய்யத் தம்முடைய நிலக்குடிவார உரிமை விற்றுக் கொடுக்கப்பட்ட செய்தி அறியப்பெறுகிறது(-123 of 1908), கோயில் கணக்கர்களால் தவறிழைக்கப்பெற்ற கோயில் நிலங்களைத் திரும்பவும் அளந்து கட்டி மீண்டும் கோயிலுக்கே உரிமையாக்கியதாக இவனுடைய 23 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கிறது. தேவர கண்டன் மனைவியான அவனிமுழுதுடையாளால் திருமஞ்சன தீர்த்தத்திற்காக நான்கு தண்ணீர்ப் பானைகள் அளிக்கபெற்றன.
1-90 of 1908, 2-105 of 1908, 3-128 of 1908,
4-112 of 1908, 5-91 of 1908.
மாறன்சடையன்:
இவன் காலத்தில் 40 கழஞ்சு பொன் அளிக்கப்பெற்ற செய்தி அறிவிக்கப்பெறுகிறது(-90 of 1908,). நாகராஜதேவன் I (கி.பி. 985 - 1013) திருப் புத்தூர் சபையார் உறங்காப்புளி அடியில்கூடி ஏதோ தீர்மானித்ததாகத் தெரிகிறது. சிதிலமாதலின் முழுவரலாற்றுக் குறிப்பும் தெரியவில்லை (-105 of 1908)
வீரபாண்டியன்:
திருத்தொண்டத் தொகைத் திருமடத்திற்குத் திருப்புத்தூர்ச் சபையார்கூடி இறையிலிசெய்ததை அறிவிக்கிறது. தயாபஞ்சகம் என்னும் மண்டபத்தைத் திருப்பணிசெய்த வரலாறும் குறிக்கப் பெறுகிறது. தேனாற்றுப் பாசனமான கொறைக்குடியான் அவையன் பெரிய நாயனாரான விசயாலய தேவனால், யவனர்கள் ஆக்கிரமித்த கோயிலை வென்று திரும்பவும் பெற்றுப் புனிதப்படுத்தப்பெற்றது. இது நடைபெற்ற நாள் 2-8-1339 திங்கட்கிழமை என்று எபிகிராபிகா இண்டிகா பகுதி 11 பக். 138 கூறுகிறது. 2-12-1339 இல் அவையன் சொரக்குடி மாளவச்சக்ரவர்த்தியினால் பாடிக்காவல் உரிமைகள் விற்கப்பெற்றன. சில கோயில் நிலங்கள் அருச்சகருக்கு மானியமாக அளிக்கப்பெற்றன (-128 of 1908).
விஜயநகர அரசரான கிருஷ்ணப்பதேவமகாராஜன் காலத்து சகம் 1432 இல் பாண்டி மண்டலத்து கேரளசிங்க வளநாட்டுக் கிராமங் களான நாரணமங்கலம், காரையூர் என்ற இரண்டையும் நரசிம்மராய செல்லப்பரது சந்திக்காகக் கோயிலுக்கு அளித்தான். அவை இரண்டும் இப்பொழுது செல்லப்பாபுரம் என்று வழங்கப்படுகின்றன. அச்சுத தேவ மகாராயர் காலத்தில் அருவியூர் நகரமான குலசேகரப் பட்டினத் தான் ஒருவனால் விளக்கிற்காக நிலம் அளிக்கப்பெற்றிருக்கிறது(-112 of 1908). பெரிய ராமப்பநாயகருக்கு நன்மை உண்டாக வயிரவருக்கு நிலம் அளிக்கப்பெற்றது. கிருஷ்ணராயர் காலத்து வீரநரசிம்மராய நாயக்கரான செல்லப்பர் நன்மைக்காகத் திருப்புத்தூர் உடையான் சிங்கம நாயக்கனால் நிலம் வழங்கப்பெற்றது (-91 of 1908). நாகமநாயக்கர் மகனான விசுவநாத நாயக்கர் நன்மைக்காக ஒரு கிராமம் (வரகுண புத்தூர்) வழங்கப்பட்டது. இவையன்றி நின்ற நாராயண பெருமாள் கோயிலுக்கும் அங்காளம்மன் கோயிலுக்கும் நிபந்தங்கள் அளிக்கப் பெற்றிருப்பதை அறிவிப்பன மூன்று கல்வெட்டுக்கள். இங்ஙனம் திருப் புத்தூர்க்கோயில் பல பாண்டிய மன்னர்களுடைய சமய உணர்ச்சிக்கு அரணாக இருந்தமை அறிந்து இன்புறுதற்குரியது.
|