அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார்
மரம்: ஆலமரம்
குளம்: காவிரி
பதிகம்: முத்தன்மிகு -2 -34 திருஞானசம்பந்தர்
முகவரி: கீழ்ப்பழவூர் அஞ்சல்
அரியலூர் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம், 621707
தொபே. 9865078578
ஆலமரத்தைத் தலமரமாக உடைமையால் இது இப்பெயர் பெற்றது. பழு - ஆலமரம். பழுவூர் மேலப்பழுவூர், கீழப்பழூவூர் என்னும் இரு பகுதிகளாக இருக்கின்றது. இவற்றுள் மேலப்பழுவூர் மறவனீச்சரம் என்னும் கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது. கீழப்பழுவூரே தேவாரம் பெற்ற தலம்.
திருவையாற்றிலிருந்து அரியலூருக்குப் போகும் பேருந்துப் பெருவழியில் இருக்கின்றது.
காவிரிக்கு வடகரையில் ஐம்பத்தைந்தாவது தலம். இறைவர் திருப்பெயர் வடமூலநாதர். இறைவி திருப்பெயர் அருந்தவநாயகி. இதற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது. பரசுராமர் தம் தாயைக்கொன்ற பழி நீங்கப் பூசித்த தலம்.
சோழ சம்பந்திகளாகிய சேரர் கிளையினரைப்பற்றிய கல்வெட்டுக்கள் மேலப்பழூவூரில் காணக்கிடைக்கின்றன. அவர்கள் இங்குவந்த காலத்திலேயே இக்கோயில் பூசனைக்கு மலையாள அந்தணர்களை உடன் கொண்டுவந்துள்ளார்கள். அது காரணம் பற்றியே,
``அந்தணர்க ளான மலையாள ரவரேத்தும்
பந்த மலிகின்ற பழுவூ ரரனை``
என ஞானசம்பந்தர் குறிப்பிட்டிருக்கவேண்டும்.