நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு கருந்தடங் கண்ணி உடனுறை சுந்தரவிடங்கர்


மரம்: மாமரம்
குளம்: தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்

பதிகங்கள்: புனையும்விரி -1 -84 திருஞானசம்பந்தர்
கூனற்றிங்கட் -2 -116 திருஞானசம்பந்தர்
மனைவிதாய்தந் -4 -71 திருநாவுக்கரசர்
வடிவுடைமாம -4 -103 திருநாவுக்கரசர்
பாரார்பர -6 -22 திருநாவுக்கரசர்
பத்தூர்புக் -7 -46 சுந்தரர்

முகவரி: நாகப்பட்டிணம் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 611001
தொபே. 04365 242844

நாகராசனாகிய ஆதிசேடனால் பூசிக்கப்பெற்றமையின் நாகை என்னும் பெயர்பெற்றது. புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்துகொண்டமையால் காயாரோகணம் என்னும் பெயர் எய்திற்று. அதுவே காரோணம் என்று மருவிற்று.

இது நாகப்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு வட மேற்கே சுமார் 2 கி.மீ. தூரத்திலிருக்கிறது. இது காவிரிக்குத் தென்கரையிலுள்ள எண்பத்திரண்டாவது தலம். சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை முதலிய பல நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர் காயாரோகணேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் நீலாயதாட்சி. தீர்த்தம் தேவதீர்த்தம். புண்டரீக தீர்த்தம், இவை முறையே கோயிலுக்குத் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்றன.

அதிபத்தநாயனார் திருவவதாரஞ் செய்த திருப்பதி. சுந்தர மூர்த்தி நாயனார் காற்றனைய வேகத்தையுடைய குதிரை, ஒளியுள்ள முத்துமாலை, சிறந்தபட்டு, முதலானவைகளை வேண்டிப் பெற்றார். விடங்கர் தலங்கள் ஏழனுள் ஒன்று.

திருக்கோயிலில் முதலில் இருக்கும் விநாயகருக்கு நாகாபரண விநாயகர் என்று பெயர். உள்ளேயிருக்கும் பிள்ளையாருக்கு மாவடிப் பிள்ளையார் எனப்பெயர். இத்தலத்து அம்மன் மிகச்சிறப்புடையவர். இத்தலத்தைப்பற்றி ``காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி`` என்னும் பழமொழி வழங்குகின்றது.

இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் நான்கு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்களிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் பதிகத்தின் இறுதிப் பாட்டை வெள்ளிப்பாடல் என்பர். வெள்ளிப்பாடல் என்பது பின்னால் யாரோ ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பெற்றதாகும்.

அவர்கள் அங்ஙனங் கூறுதற்குக் காரணம் ஐந்தாம் திருப் பாடலில் ``சுந்தரனே கந்தமுதலாடை யாபரணம் பண்டாரத்தே யெனக்குப் பணித்தருள வேண்டும்`` என்றிருப்பதாலும், 11-ஆம் திருப்பாட்டில் ``ஒளிமுத்தம் பூணாரமொண்பட்டும் பூவுங் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்`` என்றிருப்பதாலும், முதலில் கூறியவற்றுள் சில இரண்டாவது கூறியவற்றுள் காணப்படுதலால் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படுத்தி, இதை வெள்ளிப் பாட்டு என்பர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் எழுதியுள்ளார்கள். அது அச்சில் வெளிவந்துள்ளது. அது புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்தது.

``கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்`` என்று ஞான சம்பந்தர் கூறியிருத்தலாலும், பாக்கு விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களை நோக்கிப் பசியினால் காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் - என்பதைப் பேச்சுவழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர் கோபித்து அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு ``பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு`` என்பது வரை சுவரில் எழுதி விட்டு, பசி தீர்ந்தபிறகு எஞ்சிய பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு அவ்விடம் வந்தபொழுது, அவர் எழுதியதற்குமேல் ``நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை`` என்று அவ்விளஞ்சிறார் எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச் சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது. இவைகளால் இவ்வூர் மக்களின் கல்வித்திறம் புலப்படும். இவ்வூரில் இருந்த காத்தான் சத்திரத்தைப் பற்றிய காளமேகப் புலவர் பாடலொன்றும் உண்டு.

இந்த ஊர் ஒரு துறைமுகம், வாணிகத்தலம். கீழைத் தஞ்சையின் தலைநகரம். இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் சௌந்தரராஜப்பெருமாள் என்ற பெயரால் விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. மற்றும் காவல் தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில், அமர்ந்தீசர் கோயில், மலைச்சுரம் கோயில் (கயிலாயநாதர்) (இது ஒரு கட்டு மலை,) குமரர் கோயில், நடுவண் நாதர் கோயில், அழகியநாதர் கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன.

திருக்கோயில் 586-250 அடிகள் கொண்டது. இராயகோபுரம் முற்றுப்பெறவில்லை. உட்கோபுரம் 3 அடுக்குக் கொண்ட சோழன் கோபுரம். மடைப்பள்ளிக்கெதிரில் அதிபத்தர் திருவுருவம் உள்ளது.. மாமரம் தலமரம். அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர் சுவாமி பெயர் காரோணர் என்பது காயாரோகணர் என்பதன் மரூஉ.

புண்டரீகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயா ரோகணர் என்று வந்ததாகப் புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர் கருந்தடங் கண்ணி எனத் தமிழில் வழங்கும். இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில் ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான் ரதம் என வழங்கும்.கல்வெட்டு:

ஏழு கல்வெட்டுக்கள் வெளியிடப் பட்டுள்ளன. கயிலாச நாதர் கோயில் சுவரில் கி.பி. 1777 - ல் ஒரு கனவான் இறந்ததாக டச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

சீனா கோபுரத்தில் கிடைத்த ஒரு வெண்கலச்சிலையில் 12ஆம் நூற்றாண்டு எழுத்து இருந்தது. ஒரு சிறு கோயிலில் கி.பி.1777-ல் கவர்னர் ரெய்னர்வான் விலிசிங்கன் அதனைக் கட்டின தாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய முரசின் பேரில் ஒரு சிறு எழுத்து உண்டு. ஒரு வெள்ளி ஏட்டில் தஞ்சை அரசன் விஜயராகவன் நாகப்பட்டினத்தை டச்சுக்காரருக்குக் கொடுத்ததாக எழுதியிருக்கிறது தெலுங்கு வரிவடிவத்தில்.

மற்றொரு வெள்ளி ஏட்டில் தமிழில் அதனையே மராட்டியர் கோறி கி.பி. 1676இல் உறுதிப்படுத்தி எழுதினர். கி.பி. 1774இல் டச்சு தேவாலயம் கட்டப்பட்டது.

 
 
சிற்பி சிற்பி