கோவலூர்வீரட்டம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்கஅருள்மிகு சிவானந்தவல்லி உடனுறை வீரட்டநாதர்


மரம்: கொன்றை
குளம்: பெண்ணையாறு

பதிகங்கள்: படைகொள் -2 -100 திருஞானசம்பந்தர்
செத்தையேன் -4 -69 திருநாவுக்கரசர்

முகவரி: திருக்கோயிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 605757
தொபே. 04153 224036

கோவலூர் என்பது ஊரின் பெயராகவும், வீரட்டம் என்பது கோயிலின் பெயராகவும் அமைந்துள்ளன. வீரட்டம் என்றால் வீரத்தைக் காட்டிய இடம். இச்செய்தி ``கோவலூர்தனுள் - வீரட்டானஞ் சேர்துமே`` என்னும் இக்கோயிலுக்குரிய திருஞான சம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய தலங்கள் எட்டாகும். அவைகளுள் இது ஒன்று. இது அந்தகாசுரனைக் காய்ந்த இடம். இச்செய்தியை,

அவுணரிற் கள்வ னான அந்தகற் காய்ந்து மூன்று
புவனமும் கவலை தீர்த்த புண்ணியன் புரமீ தாகும்
என்னும் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தின் அர்ச்சனைப் படலமும் வலியுறுத்தும்.

இறைவரது திருப்பெயர்:- வீரட்டநாதர். இறைவியாரது திருப்பெயர்:- சிவானந்தவல்லி. தீர்த்தம் பெண்ணையாறு. இது பெண்ணையாற்றின் தென் கரையில் இருக்கிறது. (திருக்கோவலூர் என்னும் தொடர்வண்டி நிலையத்தில் வடக்கே 1/2 கி.மீ. தூரத்திலுள்ள திருஅறையணி நல்லூரை அடைந்து, அங்கிருந்து பெண்ணையாற்றைக் கடந்து தென் கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம்) இது நடுநாட்டுத் தலங்கள் இருபத்திரண்டில் பதினொன்றாவது ஆகும். பண்ணுருட்டியிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிலையத்துக் வடபால் கோயில் உள்ளது. மலாடர் கோமானாகிய மெய்ப்பொருள் நாயனார், தம்மோடு பலமுறை போர்புரிந்து, தோற்ற முத்தநாதனால், வஞ்சனையால் உயிர்க்கு இறுதி நேர்ந்த இடத்தும் ``மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள்`` எனும் உறுதியால், அவனைக் காத்துக் கூத்தப்பெருமான் திருவடி நீழல் அடைந்த பதி இது வாகும். இத் திருக்கோயிலுக்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.கல்வெட்டு:

இக்கோயிலில் 79 கல்வெட்டுக்களின் படிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் சோழர்களது காலத்தவை. அவற்றுள் 52 கல்வெட்டுக்கள் இவை:- பரகேசரி 1, இராஜகேசரி1, இராஜராஜன் 10, இராஜேந்திரன் 8, இராஜாதிராசன் 1, ராஜேந்திரதேவன் 1, வீரராஜேந்திரன் 1, அதிராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 6, விக்கிரமன் 1, குலோத் துங்கன்-II 1, இராஜாதிராஜன் 2, குலோத்துங்கன்-III 3, இராஜராஜன்-III 3, நிச்சயிக்கப்படாதது குலோத்துங்கன் 4, இவைகள் தவிர பல்லவர்கள் 3, இராஷ்டிரகூடன், கன்னரதேவன் 3, பராந்தகன் 2.

இக்கல்வெட்டுக்களால் இக்கோயிலானது சோழர்களது முழுக்காலத்திலும் நன்கு புகழப்பெற்றிருந்தது என அறிகிறோம். இக்கல்வெட்டுக்களை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் ஒரு சிறந்த சரிதப் பகுதியே கிடைக்கக்கூடும். இவ்வூரைச் சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜநநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர் என்று கூறியிருக்கிறது. சுவாமி திருவீரட்டான முடையார் தேவர் என்றே கண்டிருக்கிறது. விளக்குத் தானங்கள் நிரம்பச் செய்யப்பட்டுள்ளன. அதற்காகவும், வழிபாட்டிற்காகவும் நிலங்கள் கொடுக்கப்பட்டன. இராஜராஜன் காலத்துப் பெரிய கல்வெட்டு ஒன்று, நீண்ட அகவற்பாவால் எழுதப்பட்டு இறுதியில் இரண்டு வெண்பாக்களும் ஒரு விருத்தமும் கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதில் பண்டைய வழக்கங்கள் பல கூறப்பட்டுள்ளன.

இக்கோயிலில் சோழமன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜன், பரகேசரிவர்மனாகிய உடையார் வீரராஜேந்திரதேவன், பரகேசரிவர்மனாகிய உடையார் அதிராஜேந்திரதேவன், ராஜகேசரிவர்மனாகிய உடையார் குலோத்துங்கசோழதேவன், இராஜகேசரிவர்மனாகிய திருபுவனச் சக்கரவர்த்தி இராசாதிராசதேவன் இவர்களின் காலங்களிலும், பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் இவர்களின் காலங்களிலும், கங்கபல்லவர்களில் விஜய நிருபதுங்கவிக்கிரமன், விஜயநந்தி விக்கிரமநந்திவர்மன் காலங் களிலும், ராஷ்டிரகூட வம்சத்துக் கன்னரதேவன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இத்திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலைக் கட்டியவர் மகதைப்பெருமாளின் மந்திரியாவர். அது குலோத்துங்க சோழரின் இருபதாம் ஆண்டில் கட்டப்பெற்றது. இக் கோயிலில் உள்ள மடைப்பள்ளி விக்கிரமசோழசேதிராயரின் மனைவியாரால் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழனின் நான்காம் ஆண்டில் கட்டப் பெற்றதாகும்.

இக்கோயிலில் நுந்தாவிளக்குக்களுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்தான் மிகுதியாகும். ஒரு விளக்கினுக்கு முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு எருதும்: நான்கு விளக்கினுக்கு நானூற்றெண்பது ஆடுகளும்: இருபத்துநான்கு விளக்குக்களுக்கு இரண்டாயிரத்து முன்னூற்று நான்கு ஆடுகளும் இவைபோன்று பலவாகக் கொடுக்கப் பெற்றுள்ளன. பரகேசரிவர்மனாகிய இராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இக்கோயிலுக்குரிய அணிகலன்களைக் குறிப்பிடுகின்றது.

இத்திருக்கோயில் கல்வெட்டினால் முதலாம் இராச ராசனுடைய மனைவியராகிய ஒலோகமாதேவியாரின்தாயாரின் பெயர் அமிர்தவல்லி என்று அறியக்கிடக்கின்றது. பரகேசரிவர்மனின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு செம்பியன்மிலாடுடையாரைப் பற்றியும், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டு மிலாடுடையார் மகளைப்பற்றியும் விக்கிரம சோழன் கல்வெட்டு கீழையூர்மலையமான் விக்கிரமசோழசேதி ராயனைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 230-306, pages 15, 16, 17 and 18.)

 
 
சிற்பி சிற்பி