கைச்சினம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வெள்ளைநாயகி உடனுறை கைச்சினநாதர்


மரம்: கோங்கிலவு
குளம்: இந்திரதீர்த்தம், வச்சிரதீர்த்தம்

பதிகம்: தையலோர் -2 -45 திருஞானசம்பந்தர்

முகவரி: கச்சனம் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610201
தொபே. 9486533293

திருவாரூர்க்குத் தெற்கிலுள்ள திருநெல்லிக்கா என்னும் தொடர்வண்டி நிலையத்திற்குக் கிழக்கே 3 கி.மீ. தூரத்திலுள்ளது. இது காவிரிக்குத் தென்கரைத் தலங்களுள் 122 ஆவது ஆகும். திருவாரூர் திருத்துறைப்பூண்டி பேருந்து வழியிலுள்ளது.

இந்திரன் இங்கு மணலால் சிவலிங்கத்திருமேனியை எழுந்தருளுவித்துப் பூசித்தான். முடிவில் அதைக் கையினால் எடுக்க முயன்றபோது அது எடுக்கவாராமல் அவனது கை அடையாளம் அவரது திருமேனியில் பதிந்துவிட்டது. ஆதலின் இப் பெயர் பெற்றது என்பர். (சின்னம் - அடையாளம். கைச்சின்னம் - என்பது கைச்சினம் என்று ஆயிற்று).

இறைவரது திருப்பெயர்:- கைச்சினநாதர். இறைவியாரது திருப்பெயர்:- வெள்ளைநாயகி. தீர்த்தம்:- இந்திரதீர்த்தம்: வச்சிரதீர்த்தம் என்பன. தலமரம்:- கோங்கிலவு.

தேவேந்திரன், திருணபிந்து இவர்கள் பூசித்துப் பேறு பெற்றனர். இது ஞானசம்பந்தப் பெருந்தகையாரால் பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது. மதுரை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்ட கோயில் இது.



கல்வெட்டு:

இக்கோயிலில் 11 கல்வெட்டுக்கள் உள்ளன. சோழருடையது எட்டும், பாண்டியரது ஒன்றும், விஜயநகரத்தரசனது இரண்டுமாக மொத்தம் பதினொன்றாகும், இரசேந்திரன் தனது 30-ஆம் ஆண்டில் அதிகாலையில் இரண்டு விளக்குக்கள் எரிக்கவும், மார்கழி, வைகாசி மாதங்களில் விழாக்கள் நடத்தவும் திருக்கைச்சின முடையாருக்குப் பாண்டிய மண்டலத்தில் பூதானம் செய்தான். இராஜராஜன் காலத்தில் அரங்கன் ஆட்கொண்டான். கொடுத்த 50 காசுக்காக 3 பட்டர்கள் நுந்தாவிளக்கு வைப்பதாக ஒப்புக் கொண்டார்கள். குலோத்துங்கன் காலத்தில் அன்னதான நங்கை அதுபோலப் பணம் கொடுத்தாள். இராஜாதிராஜன் காலத்தில் 100 காசுகள் பெற்றுக்கொண்டு விளக்கு வைக்கப்பட்டது. அதுபோலவே குலோத்துங்கன் நாளிலும் செய்யப்பட்டது. பாண்டியரில் சுந்தர பாண்டியன் தனது பத்தாம் ஆண்டில் வைகாசி வசந்தோற்சவத்திற் காகப் பூதானம் செய்தான். விஜய நகரத்தாரில் சகம் 1307ல் கச்சினப் பற்றில் முத்தரசர் பெயரில் உள்ள ஊரின் நிலங்களில் சதுர்வேதிப் பட்டர்களின் வரி தள்ளுபடி செய்யப்பட்டது.

இத் திருக்கோயிலில் சோழ மன்னர்களில் திருபுவனச் சக்கரவர்த்தி விக்கிரம சோழதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவர், திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி இரண்டாம் இராஜாதிராஜ தேவர், மூன்றாங் குலோத்துங்க சோழதேவர் இவர்கள் காலங்களிலும், பாண்டியரில் ஜடாவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியர் காலத்திலும், விஜயநகர பரம்பரையில், வீரபூபதி வீரப்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப் பெற்றுள்ள பதினொரு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவ்வூர், இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டில் இராசேந்திரசோழ வளநாட்டு ஆர்வலக்கூற்றத்துக் கச்சினம் எனவும், விஜயநகரபரம்பரை வீரப்பண்ண உடையார் கல்வெட்டில், இராஜேந்திர சோழ வளநாட்டு வடக்கால் வெண்டாழை வேளூர்க் கூற்றத்துக் கச்சினப்பற்று எனவும் குறிக்கப்பெற்றுள்ளது. இக் கோயிலுக்குரிய நிலங்கள் முதலாம் குலோத்துங்க சோழ தேவரின் 40 ஆம் ஆட்சி யாண்டில் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. இச்செய்தியை விக்கிரம சோழதேவரின் 12-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப் பிட்டுள்ளது. (இக்கல்வெட்டில் பெரியதேவர் குலோத்துங்கசோழ தேவர் என்பது முதற்குலோத்துங்க சோழனாகும்).

ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சிறுகீழூரான முடிமான் தம்பிரான் சோழ சதுர்வேதி மங்கலத்துச் சோமதேவ பட்டன் மகன் கேசவப்பட்டன் இக்கோயில் வைகாசி வசந்த விழாவிற்கு நிலம் கொடுத்திருந்தான்.

பாண்டிநாட்டு. சோழபாண்டிய மண்டலத்து, மதுரோதய வளநாட்டு, பாலைக்குறிச்சி, ஆரியன் திருமறைக்காடு உடையான் மார்கழி, வைகாசி விழாக்களுக்கும் காலைசந்திகளுக்கும் நுந்தா விளக்குக்களுக்கும் இராசேந்திர சோழதேவன் காலத்தில் நிலம் அளித்திருந்தான்.

 
 
சிற்பி சிற்பி