தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 79 |

10.10 திருத்தொண்டர்களின் முத்திப்பேறு (சேக்கிழார் திருவாக்கில்)

2. தில்லைவாழந்தணர் சருக்கம்

1. திருநீலகண்டக்குயவனார் -

`திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்

பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பம் உற்றார் அன்றே.'

(தி.12 பு.2 பா.43)

2. இயற்பகையார் -

`ஞானமாமுனிவர் போற்ற, நலமிகு சிவலோ கத்தில்,

ஊனமில் தொண்டர் கும்பிட் டுடன்உறை பெருமை பெற்றார்.'

(தி.12 பு.3 பா.35)

3. இளையான்குடிமாறனார் -

`என்பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே

முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல்கேட்ப

இன்பமார்ந் திருக்க என்றே அருள்செய்தான்'

(தி.12 பு.4 பா.26)

4. மெய்ப்பொருள் நயானர் -

`அண்டவா னவர்கட் கெட்டா அருட்கழல் நீழல் சேரக்

கொண்டவா றிடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்.'

&#(தி.12 பு.5 பா.23)

5. விறன்மிண்டர் -

`தக்க வகையால் தம்பெருமான் அருளி னாலே தாள்நிழற் கீழ்

மிக்க கணநா யகராகும் தன்மை பெற்று விளங்கினார்.'

(தி.12 பு.6 பா.10)

6. அமர்நீதியார் -

`முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும்

அழிவில் வான்பதங் கொடுத்தெழுந் தருளினார்.'

(தி.12 பு.7 பா.47)

3. இலைமலிந்த சருக்கம்

7. எறிபத்த நாயனார் -

`நற்றவக் கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பிற்

கொற்றவர் கணத்தின் முன்னாம், கோமுதல் தலைமை பெற்றார்.'

(தி.12 பு.8 பா.55)

8. ஏனாதிநாதர் -

`உற்றவரை என்றும் உடன்பிரியா அன்பருளிப்

பொற்றொடியாள் பாகனார் பொன்னம் பலமணைந்தார்.'

(தி.12 பு.9 பா.41)

9. கண்ணப்ப நாயனர் -

`ஏறுயர்த் தவர்தங் கையால் பிடித்துக்கொண்டு என்வ லத்தில்

மாறிலாய் நிற்க என்று மன்னுபேர் அருள்பு ரிந்தார்.'

(தி.12 பு.10 பா.185)

10. குங்குலியக்கலயர் -

`ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த

திருப்பணி பலவுஞ் செய்து சிவபத நிழலிற் சேர்ந்தார்.'

(தி.12 பு.11 பா.34)

11. மானக்கஞ்சாறர் -

`ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர்

பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார்.'

(தி.12 பு.12 பா.33)

12. அரிவாட்டாயர் -

`என்றும் நம் உலகில் வாழ்வாய் என்றவர் உடனே நண்ண

மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.'

(தி.12 பு.13 பா.21)

13. ஆனாய நாயனார் -

`இந்நின்ற நிலையேநம் பாலணைவாய் எனஅவரும்

அந்நின்ற நிலைபெயர்ப்பார் ஐயர்திரு மருங்கணைந்தார்.'

(தி.12 பு.14 பா.40)

4. மும்மையால் உலகாண்ட சருக்கம்

14. மூர்த்தி நாயனார் -

`....இவ்வுலகாண்டு தொண்டின்

பேதம்புரி யாஅருட் பேரர சாளப் பெற்று

நாதன்கழற் சேவடி நண்ணினர் அண்ண லாரே.'

(தி.12 பு.15 பா.48)

15. முருகநாயனார் -

`செங்கண் அடலே றுடையவர்தாஞ்

சிறந்த அருளின் பொருளளிக்கத்

தங்கள் பெருமான் அடிநீழல்

தலையாம் நிலைமை சார்வுற்றார்.'

(தி.12 பு.16 பா.13)

16. உருத்திரபசுபதியார் -

`ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம்

தீதி லாநிலைச் சிவபுரி எல்லையிற் சேர்ந்தார்.'

(தி.12 பு.17 பா.8)

17. திருநாளைப்போவார் -

`சுந்தரத்தா மரைபுரையுந் துணையடிகள் தொழுதிருக்க

அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.'

(தி.12 பு.18 பா.36)

18. திருக்குறிப்புத்தொண்டர் -

`......மூவுலகும்

நின்னிலைமை அறிவித்தோம் நீயும்இனி நீடியநம்

மன்னுலகு பிரியாது வைகுவாய் எனஅருளி.'

(தி.12 பு.19 பா.127)

19. சண்டேசுர நாயனார் -

`வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர்

அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்.'

(தி.12 பு.20 பா.59)

5. திருநின்ற சருக்கம்

20. திருநாவுக்கரசு நாயனார் -

`நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி

அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅரசு அமர்ந்திருந்தார்.'

(தி.12 பு.21 பா.427)

21. குலச்சிறையார் -

`மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி

சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.'

(தி.12 பு.22 பா.10)

22. பெருமிழலைக்குறும்பர் -

`ஏல வேமுன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப

மூல முதல்வர் திருப்பாதம் அணைவார் கயிலை முன்னடைந்தார்.'

(தி.12 பு.23 பா.10)

23. காரைக்காலம்மையார் -

`.......குலவியதாண் டவத்தில்அவர்

எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றும்இருக் கின்றாரை

அடுத்தபெருஞ் சீர்ப்பரவல் ஆரளவா யினதம்மா.'

(தி.12 பு.24 பா.65)

24. அப்பூதியடிகள் -

`செவ்விய நெறிய தாகத் திருத்தில்லை மன்றுள் ஆடும்

நவ்விய கண்ணாள் பங்கர் நற்கழல் நண்ணி னாரே.'

(தி.12 பு.25 பா.44)

25. திருநீலநக்கர் -

`....வாழி சீகாழி

ஒருவர் தந்திருக் கல்லியா ணத்தினி லுடனே

திரும ணத்திறஞ் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்.'

(தி.12 பு.26 பா.37)

26. நமிநந்தியடிகள் -

`சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்

மன்னர் பாத நீழல்மிகும் வளர்பொற் சோதி மன்னினார்.'

(தி.12 பு.27 பா.32)

6. வம்பறாவரிவண்டு சருக்கம்

27. திருஞானசம்பந்தர் -

`நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்

போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.'

(தி.12 பு.28 பா.1253)

28. ஏயர்கோன்கலிக்காமர் -

`தங்குநாள் ஏயர் கோனார் தமக்கேற்ற தொண்டு செய்தே

செங்கண்மால் விடையார் பாதஞ் சேர்ந்தனர் சிறப்பி னோடும்.' (தி.12 பு.29 பா.408)

29. திருமூல நாயனார் -

`சென்னிமதி அணிந்தார்தம் திருவருளால் திருக்கயிலை

தன்னில் அணைந் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்'

(தி.12 பு.30 பா.27)

30. தண்டியடிகள் -

`உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும் ஓதி வழுவா தொழுகியே

மின்னுஞ் சடையார் அடிநீழல் மிக்க சிறப்பின் மேவினார்.'

(தி.12 பு.31 பா.25)

31. மூர்க்கநாயனார் -

`ஏதங்கள் போயகல இவ்வுலகை விட்டதற்பின்

பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம்புக்கார்.'

(தி.12 பு.32 பா.11)

32. சோமாசிமாறர் -

`வன்றொண்டர் பாதம்தொழு தான சிறப்பு வாய்ப்ப

என்றும்நில வுஞ்சிவ லோகத்தில் இன்ப முற்றார்.'

(தி.12 பு.33 பா.5)

7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

33. சாக்கிய நாயனார் -

`..அருள்நோக் களித்தருளி மிக்கசிவ லோகத்தில்

பழஅடிமைப் பாங்கருளிப் பரமரெழுந் தருளினார்.' (தி.12 பு.34 பா.17)

34. சிறப்புலிநாயனார் -

`எஞ்சலில் அடியார்க் கென்றும் இடையறா அன்பால் வள்ளல்

தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள்நிழல் தங்கி னாரே.'

(தி.12 பு.35 பா.5)

35. சிறுத்தொண்டர் -

`...சேவடிக்கீழ்

நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்

என்றும் பிரியா தேயிறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்.'

(தி.12 பு.36 பா.87)

36. கழறிற்றறிவார் -

`ஊர னாகிய ஆலால சுந்தர னுடனமர்ந் திருவீரும்

சார நங்கண நாதராம் தலைமையில் தங்குமென் றருள்செய்தார்'

(தி.12 சரு.13 பா.48)

37. கணநாத நாயனார் -

`தூந றுங்கொன்றை முடியவர்

சுடர்நெடுங் கயிலைமால் வரைஎய்தி

மான நற்பெருங் கணங்கட்கு

நாதராம் வழித்தொண்டின் நிலைபெற்றார்'

(தி.12 பு.38 பா.6)

38. கூற்றுவ நாயனார் -

`இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும்பூ சனை இயற்றி

உம்பர் மகிழ அரசளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்.'

(தி.12 பு.39 பா.7)

8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்

39. புகழ்ச்சோழர் -

`செக்கர்நெடுஞ் சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின்

அக்கருணைத் திருநிழற்கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்.'

(தி.12 பு.41 பா.40)

40. நரசிங்கமுனையரையர் -

`பைவளர்வாள் அரவணிந்தார் பாதமலர் நிழல்சேர்ந்து

மெய்வகைய வழிஅன்பின் மீளாத நிலைபெற்றார்.'

(தி.12 பு.42 பா.8)

41. அதிபத்தர் -

`நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்

தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை அளித்தார்.'

(தி.12 பு.43 பா.19)

42. கலிக்கம்பர் -

`அளப்பில் பெருமை யவர்பின்னும் அடுத்த தொண்டின் வழிநின்று

களத்தில் நஞ்சம் அணிந்தவர்தாள் நிழற்கீழ் அடியார் ருடன்கலந்தார்.'

(தி.12 பு.44 பா.9)

43. கலிய நாயனார் -

`பற்றியஅஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம்

பொற்புடைய சிவபுரியில் பொலிந்திருக்க அருள்புரிந்தார்.'

(தி.12 பு.45 பா.16)

44. சத்தி நாயனார் -

`வைய முய்ய மணிமன்று ளாடுவார்

செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.'

(தி.12 பு.46 பா.6)

45. ஐயடிகள்காடவர்கோன் -

`மன்னுசிவ லோகத்து வழிஅன்பர் மருங்கணைந்தார்

கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரை அடிகளார்.'

(தி.12 பு.47 பா.7)

9. கறைக்கண்டன் சருக்கம்

46. கணம்புல்ல நாயனார் -

`மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத்து

எங்கள்பிரான் கணம்புல்லர் இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.'

(தி.12 பு.48 பா.8)

47. காரி நாயனார் -

`தோய்ந்தநெடுஞ் சடையார்தம் அருள்பெற்ற தொடர்பினால்

வாய்ந்தமனம் போலுடம்பும் வடகயிலை மலைசேர்ந்தார்.'

(தி.12 பு.49 பா.4)

48. நின்றசீர்நெடுமாறர்:

அரசுரிமை நெடுங்காலம் அளித்திறைவர் அருளாலே

பரசுபெருஞ் சிவலோகத் தின்புற்றுப் பணிந்திருந்தார்.'

(தி.12 பு.50 பா.9)

49. வாயிலார் நாயனார் -

`.........சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்

புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்.'

(தி.12 பு.51 பா.9)

50. முனையடுவார் நாயனார் -

`உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருவருளால்

பெற்ற சிவலோ கத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார்.'

(தி.12 பு.52 பா.5)

10. கடல்சூழ்ந்த சருக்கம்

51. கழற்சிங்க நாயனார் -

`திருவருட் சிறப்பி னாலே செய்யசே வடியின் நீழற்

பெருகிய உரிமையாகும் பேரருள் எய்தி னாரே.'

(தி.12 பு.53 பா.12)

52. இடங்கழி நாயனார் -

`தண்ணளியால் நெடுங்காலந் திருநீற்றின் நெறிதழைப்ப

மண்ணிலருள் புரிந்திறைவர் மலரடியின் நிழல்சேர்ந்தார்.'

(தி.12 பு.54 பா.10)

53. செருத்துணை நாயனார் -

`உடுத்த உலகில் நிகழச்செய் துய்யச் செய்ய பொன்மன்றுள்

எடுத்த பாத நிழலடைந்தே இறவா இன்பம் எய்தினார்.'

(தி.12 பு.55 பா.6)

54. புகழ்த்துணை நாயனார் -

`மின்னார்செஞ் சடையார்க்கு மெய்யடிமைத் தொழில்செய்து

பொன்நாட்டின் அமரர்தொழப் புனிதர்அடி நிழல்சேர்ந்தார்.'

(தி.12 பு.56 பா.6)

55. கோட்புலி நாயனார் -

`பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் புகழோய்நீ

இந்நிலைநம் முடன்அணைகென் றேவிஎழுந் தருளினார்.'

(தி.12 பு.57 பா.11)

12. மன்னியசீர்ச் சருக்கம்

56. பூசலார் நாயனார் -

`......பூசனைக ளெல்லாம் பெருமையிற் பலநாட் பேணிப்

பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் நீழல் புக்கார்.'

(தி.12 பு.65 பா.17)

57. மங்கையர்க்கரசியார் -

`மாசில்புகழ் நெடுமாறன் றனக்குச் சைவ

வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப் பின்னை

ஆசில்நெறி யவரோடும் கூட ஈசர்

அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்.'

(தி.12 பு.66 பா.2)

58. நேச நாயனார் -

`....... நாளும் அவர்கழல் இறைஞ்சி ஏத்தி

அடைவுறு நலத்த ராகி அரனடி நீழல் சேர்ந்தார்.'

(தி.12 பு.67 பா.4)

59. கோச்செங்கட்சோழர் -

`ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்கள் அடிபோற்ற

மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ்'

(தி.12 பு.68 பா.17)

60. திருநீலகண்டயாழ்ப்பாணர் -

`மேன்மைப் பதிகத்திசை யாழில் இடப்பெற் றுடனே மேவியபின்

பானற் களத்தார் பெருமணத்தி லுடனே பரமர் தாளடைந்தார்.'

(தி.12 பு.69 பா.11)

61. நம்பியாரூரர் -

`மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரர் ஆகித்தாம் வழுவாத

முன்னை நல்வினைத் தொழில்தலை நின்றனர்.'

(தி.12 சரு.13 பா.49)

`தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி

தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி' (தி.6 .56 பா.7)

11.0 அறிதற்கரியன:

சேக்கிழார் தெய்வத் திருவருளில் தோய்ந்து நின்று இவ்வரிய நூலை அருளியவர் ஆதலின், அவர் தம் திருவுள்ளக் கருத்தை நம் சிற்றறிவு கொண்டு அறிதற்குரியதன்று. அந்நிலையில் நம்மனோரால் அறிதற்கரியனவாகவுள்ள அக்கருத்துகள் ஓரொருகால் திருவருள் உணர்த்த உணர முடியும் என்ற நிலையில் இங்குக் குறிக்கப் பெறுகின்றன.

11.1 நாவுக்கரசர் திருப்பெண்ணாகடத்தில் வீற்றிருந்தருளும் இறைவரிடத்து வேண்டும் மூன்று வேண்டுகோள்களில், `திருநீறு பூசியருளுக' என்பதும் ஒன்றாகும். ஏனை இரண்டையும் சிவகணங்கள் வழி வழங்கியருளிய இறைவன், இவ்வேண்டுகோளை நிறைவேற்றிய குறிப்பு அறிதற்கரிதாகவுள்ளது.

11.2 திருநனிபள்ளியில் ஞானசம்பந்தர், பாலையை நெய்தல் ஆக்கினார் என்பதொரு வரலாறு, வழி நூலாசிரியராலும், திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் முதலிய பல சான்றோர்களா லும் குறித்துப் போற்றப்பட்டுள்ளது. சேக்கிழார் திருவாக்கில் இஃது இடம் பெற்றிலது.

11.3 திருநீலகண்டயாழ்ப்பாணரை மதுரையில் இறைவன் நேர் முகமாகத் தம்முன் வரப் பணித்தனர். திருவாரூரில் வடதிசைக்கண் வேறு வாயில் வகுத்து அதன் வழித் தம்முன் வர அப்பெருமான் பணித்தருளுகின்றார். இந்நிலை அறிதற்கரிதாய் உள்ளது.

11.4 சோமாசிமாறர் வரலாற்றில் அவர்தம் பண்பும், தொண்டும் சிறப்பிக்கப் பெறுகின்றன. எனினும், அவர் பெயர் அவ் வரலாற்றில் குறிக்கப் பெறவில்லை.

11.5 பொய்யடிமை இல்லாத புலவர்கள், கபிலர் முதலாக நாற்பத்தொன்பதின்மர் என வகை நூல் குறிக்கின்றது. சேக்கிழார் திருவாக்கில் பொதுப்படையாகக் குறிக்கப் பெறுவதன்றி இப்புலவர் களைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

11.6 பெருமிழலைக்குறும்பர், சோமாசிமாறர் ஆகியோர் நம்பியாரூரர்பால் கொண்டிருந்த அன்பும், அதனால் அவர்கள் பெற்ற பெருவாழ்வும் அவர்களின் வரலாறுகளில் குறிக்கப்படுகின்றன. ஆனால், சுந்தரர் வரலாற்றில் இவர்களைப் பற்றிய குறிப்பு ஏதும் இன்று.

11.7 காரி நாயனார் சிவபெருமானைப் பாடிக் கயிலை புக்கார் என வகைநூல் கூற, இவ்விரிநூல் மூவேந்தர் மீது கோவை பாடி, அவர்களிடத்துப் பெற்ற பொருள் கொண்டு திருக்கோவில் கட்டி அப் பத்திமை நெறியால் கயிலை சென்றார் எனக் கூறுகின்றது.

தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 79 |