
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 | 9 |
9.0 இல்லறமும் துறவறமும்:
நல்லற
நூல்களில் சொல்லறம் பல. அவற்றுள் இல்லறம் துறவறம் ஆகிய இரண்டும் சிறந்தனவே என்பர் குமரகுருபரர். அறுபான் மும்மை அடியவர்களில் இல்லறத்தில் நின்றவர்களே பெரும்பாலோ ராவர். துறவறம் கொண்டார் சிலரே ஆவர். துறவு நெறியில், இல்லற வழிவந்த துறவும், இல்லறத்தின் வழிவாராத் துறவும் என இருவகையும் இருந்தன. தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல் களில் இவ்விருவகைத் துறவும் பேசப் பெற்றுள்ளன. ஐயடிகள்காடவர் கோன் இல்லறத்தின் வழிவந்த துறவை மேற்கொண்டவர் எனத் தெரிகிறது. `எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன் னிய சீர்ச் சங்கரன்தாள் மறவாமையே' இவர்களுக்குப் பொருளா யிருந்தது. ஆதலின் இவர்கள் அனைவரும் சிறப்பென்னும் செம்பொருள் காண நேர்ந்தது.9.1 மக்கட் பேறு: மனைமாட்சிக்கு மங்கலமாக அமைவது, நன்மக்கட் பேறே என்பர் திருவள்ளுவர். இப்பெருநூலில் காணும் அடியவர்களுக்கு, ஒரு மகவு இருந்தமையும் தெரிகிறது; பல மகவுகள் இருந்தமையும் தெரிகிறது; மானக்கஞ்சாறர், சிறுத்தொண்டர் ஆகி யோர்க்கு ஒரு மகவே இருந்தது. குங்குலியக்கலயர், அமர்நீதியார், அப்பூதியார், புகழனார் ஆகியோர்க்குப் பலமகவுகள் இருந்தன. மானக்கஞ்சாறர், தனதத்தனார் ஆகியோர்க்குப் பெண் மக்களே இருந்தனர். ஆனால் அந்நிலைக்கு அவர்கள் வருந்தவே இல்லை. அவர்களை இகழவுமில்லை. `பிழைக்கு நெறி தமக்குதவப் பெண் கொடியைப் பெற்றெடுத்தார்', `தனதத்தனார் தவத்தால் திருமடந்தை.... அவதரித்தார்' என்றெல்லாம் சேக்கிழார் இப்பெண் மக்களைப் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார். ஆண்மகவு இருந்தால்தான் முத்திப் பேறு கிட்டும் எனும் கூற்றைப் பொருளிலதாக்கிக் காட்டும் இந்நிலை எண்ணி மகிழ்தற்குரியதாம்.
9.2 மகன்மையும் மகண்மையும்: மக்கட்பேறு இல்லாத பொழுது, தமக்குரிய உறவு நிலையில் மகன்மையோ அன்றி மகண் மையோ கொள்வதே இயல்பு. ஆனால், நம் அடியவர்கள் நிலையில், ஆரூரரை நரசிங்கமுனையரையரும், கோட்புலியார் மகளாரை ஆரூர ரும் முறையே மகன்மையும் மகண்மையுமாக ஏற்கின்றனர். எனவே சிறந்தாரை மகன்மை அல்லது மகண்மை கொள்வதும் மரபாக இருந்து வந்துள்ளன.
9.3 பிள்ளைப் பேற்றில் இடைவெளி: ஒரு குடும்பத்தில் ஒருமகவிற்குப் பின் மற்றொரு மகவு தோன்றுதற்கு இடைவெளி இருத்தல் வேண்டும் என இக்காலத்தே யாண்டும் முழங்கப்படுகின் றது. இது பெற்றோரின் உடல் நலத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிகவும் ஏற்புடையதாகும். இந்நிலையைத் திலகவதியாருக்கும் நாவரசருக்கும் ஏற்பட்ட இடைவெளியைக் குறிப்பதன் மூலம் ஆசிரியர் சேக்கிழார் பெருமான் விளக்கிக் காட்டுகின்றார். `திலகவதி யார்பிறந்து சிலமுறை யாண் டகன்றதற் பின்....... மலருமரு ணீக்கியார் வந்தவதா ரஞ்செய்தார்' (தி.12 ப.21 பா.18) என்பது அவர் திருவாக் காகும். இவ்விடை வெளி ஏறத்தாழ ஐந்தாண்டுகள் ஆகலாம். இவ் வாண்டு வரையறை தெரிதற்கு, `சிலமுறை யாண்டு செல்லச் சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்' (தி.12 பு.10 பா.27) என வரும் கண்ணப்பர் வரலாறு துணையாகின்றது.
9.4 கல்வி நிலை: கல்வி கற்கத் தொடங்குதற்குரிய காலம் ஐந்தாவதாண்டாகும். இதனை நாவரசர், சிறுத்தொண்டர் வரலாறுக ளால் குறிப்பாய் அறிய முடிகின்றது. சண்டேசுவரர் `ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும், உடன் நிறைந்த சந்தமறைகள் உட்பட', அறிந்தார் என்றது முந்தையறிவின் தொடர்ச்சியினாலாம். `வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியம் கருதிய ஒருதிறத்தானும்' (தொல். அகத். 44) எனவரும் தொல்காப்பியர் கூற்றால், நம் தமிழகத்தில் கல்விப்பயிற்சி மூவகையான் அமைந் திருந்தமை அறியலாம். வாயினும் என்பது அறிவுக் கல்வியாகும். கையினும் என்பது தொழிற்கல்வியாகும். ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் என்பது ஆன்மீகக் கல்வியாகும். இவ்வகையில் கற்பித் தமையை இந்நூற்கண் வரும் நான்கு பெருமக்களான, 1. மனுவேந் தன் 2. எச்சதத்தன் 3. புகழனார் 4. பரஞ்சோதியார் ஆகியோர் வாயி லாகக் காணலாம்.
9.4.1 மனுவேந்தன்:
தவமுயன்
றரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளுஞ்சிவமுயன்
றடையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதிக்கவனவாம்
புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப்பவமுயன்
றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.(
தி.12 சரு.1-3 பா.18)எனவரும்
கூற்றால் இவ்வேந்தன் தன் அருமைச் செல்வனுக்கு அளித்த இம்மூவகைக் கல்விநிலைகளும் விளங்கும். கலைகள் பயில்வதன் நோக்கம் முதற்கண், தாம் திருந்த வேண்டுவதாம். இப் பாடற்கண், `திருந்த ஓதி' என வருவதால் இவ்வுண்மை அறியப்படும்.9.4.2 எச்சதத்தன்: `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து' (குறள், 398) என்பதற்கேற்ப, சண்டே சுரர் தம் கல்வியறிவு அமைந்தமையை `முந்தை அறிவின் தொடர்ச்சி யினால்.... செவ்வி உணர்வு சிறந்ததால்' (தி.12 பு.20 பா.13) என வரும் கூற்றால் அறிய முடிகின்றது. எச்சதத்தன் தம் மைந்தரால் சிவப்பேறும் பெறுகின்றார்.
9.4.3 புகழனார்: `பொருணீத்தங் கொளவீசிப் புலன்கொளுவ மனமுகிழ்த்த சுருணீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்குவித்தார்' (தி.12 பு.21 பா.20) என வரும் கூற்றால் புகழனார், தம் அருமைச் செல்வர் மருள்நீக்கியாருக்குக் கல்வி பயிற்றுவித்த பாங்கு அறியலாம். பொருளைத் தண்ணீராகச் செலவு செய்து படிக்க வைத்தமை இதனால் அறியலாம். இவ்வாறு பயிற்றுவிக்கப் பெற்றும், மருள்நீக்கியார் தம் சமயநிலை மாறிப் பிறசமயம் சேர்ந்ததற்குக் காரணம், குடும்பச் சூழலேயாகும். அச் சூழற்குங் காரணம், `வகுத்தான் வகுத்த வகை' (குறள், 377) ஆதலின், `நல்லாறு தெரிந்துணர நம்பர்அருளாமையி னால்' (தி.12 பு.21 பா.37) எனச் சேக்கிழார் கூறுவாராயினர்.
9.4.4 பரஞ்சோதியார்: இவர் (சிறுத்தொண்டர்) வரலாற்றில், தாமும் தம் மகனாரும் பயின்ற திறத்தை ஒருங்கு அறிய முடிகின்றது. பரஞ்சோதியார் மருத்துவக் கலை, வடநூற்கலை, யானை, குதிரை, படைக்கலம் முதலிய படைப் பயிற்சிகள் ஆகிய அனைத்திலும் வல்லுநராவர். `உள்ளநிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்ற வற்றால், தெள்ளிவடித் தறித்தபொருள் சிவன்கழலிற் செறிவென்றே' (தி.12 பு.36 பா.4) உணர்ந்த உணர்வுடையார். இவ்வுணர்வு பள்ள மடையாய் விளங்கியமை இவர் வரலாற்றால் அறிய முடிகின்றது. இத்தகைய பெருமகனார், தம் திருமகனாருக்குச் சிந்தை மலர்சொல் தெளிவில் செழுங்கலைகள் பயிலத் தம் பந்தம் அற வந்தவரைப் பள்ளியில் இருத்திய குறிப்பும் அறிய இயலுகின்றது. இவ்வாற்றான் அலகின் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனத் தெளியும் உணர்வு ஆழமாகப் பதியும் கல்வி நிலையே அக்காலத்து அமைந்திருந்தமை அறியலாம்.
9.5 மகளிர் கல்வி: மகளிர் கல்வி நிலையை அறியத் தெளிவான குறிப்புகள் எவையும் கிடைத்தில. மனைத்தக்க மாண்பும் தற்கொண்டான் வளத்தக்க வாழ்வும் இருந்தமையே பெரிதும் அறிய முடிகின்றது. பெண்டிர் பெரிதும் பெற்றோரிடத்தேயே பயின்று வந்தனர். அப்பயிற்சியும் ஓரளவு கலைப்பயிற்சியும் பெருமளவு மனையறப் பயிற்சியுமாகவே இருந்தன. திலகவதியார், மங்கையர்க் கரசியார் முதலான பெண்மக்களின் வரலாறுகளால் இவ்வுண்மை அறியப்படும். காரைக்காலம்மையாரைப் பொறுத்தமட்டில் அவர் பெரும்புலவராகவும் காணப்படுகின்றார். கயிலை செல்லுமுன் இரு நூல்களும், சென்று வந்தபின் இருபதிகங்களுமாகப் பாடியுள்ளார். இதற்குக் காரணம், தம்மை மணந்த கணவன், தம்மைத் தெய்வமென்று பிறர்க்கும் உணர்த்தி, அவரை வணங்கியெழுந்த காலத்தில், அவருக்கு இறைவன் வழங்கியருளிய ஞானமேயாகும். `உற்பவித் தெழுந்த ஞானத் தொருமையின் உமைகோன் தன்னை அற்புதத் திருவந்தாதி அப்பொழு தருளிச் செய்வார்' (தி.12 பு.24 பா 52) என ஆசிரியர் கூறுமாற்றான் இவ் வுண்மை உணரப்படும்.
9.6 திருமணம்: `அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை (குறள் 49) என்பர் திருவள்ளுவர். இவ்வில்லறத்தை ஏற்கும் ஆணும் பெண்ணும் பெற்றோரைச் சார்ந்திருந்து மணவினை கொள்ளுதலும் உண்டு. அவர்களை விடுத்துத் தாம் இருவருமேயாக மணம் செய்து கொள்ளுதலும் உண்டு. இவ்விருவகை நிலையும் தொல்காப்பியர் கால முதலாகவே இருந்து வந்துள்ளன என முன்னரும் கூறப்பட்டது.
`கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி
மரபிற் கிழவன் கிழத்தியைக்கொடைக்குரி
மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே'-தொல். கற்பியல், 1
`கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான' -தொல். கற்பியல், 2
எனவரும்
நூற்பாக்களால் இவ்வுண்மை அறியப்படும்.மானக்கஞ்சாறரின்
மகளார், காரைக்காலம்மையார், திருஞான சம்பந்தர் ஆகியோரின் திருமணம் கொளற்குரி மரபினோர் கொடுப்பக் கொண்டதாகும். சுந்தரர் பரவையாரையும் சங்கிலியாரையும் மணந் தமை, கொடுப்போரின்றிச் செய்தனவாகும்.9.6.1 திருமண வயது: பெண்ணிற்குப் பன்னிரண்டாண்டும், ஆணிற்குப் பதினாறு ஆண்டும் திருமண வயதாகும். இவ்வரையறை முறையே திலகவதியாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் நிகழ்ந்த திருமண நேர்வால் அறியப்படுகின்றது.
9.6.2 மணவினை: மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரிடத் துத் தக்க பெரியவர்களை விடுத்துப் பெண் கேட்பர். பிறப்பு, குடிமை முதலாகிய நலன்களை ஆய்ந்து முடிவிற்கு வருவர். மணமகன் வீட்டார் மணத்திற்குரிய நன்னாளைத் தேர்ந்து பெண் வீட்டாருக்கு அறிவிப்பர். திருமணத்திற்குரிய நன்னாளைச் சோதிட நூலவர் குறிப்பர். மணநாளுக்கு முன்னைய ஏழாம் நாளில் முளை யிடுவர். கலியாணத்திற்கு முன்நாள், காப்பு நாண் அணிவர். திருமண மக்கள் கையில் காப்பு நாணுடன் மோதிரமும் விளங்கும். மணம் செய்கின்ற இடத்தில் மணமகனின் திருவடிகளைப் பெண்வீட்டார் வழிபட்டு வரவேற்றமையைத் திருஞானசம்பந்தர் வரலாற்றால் அறிய முடிகின்றது. எனினும், இந்நிலை பொதுவாயதன்று திருஞானசம்பந் தரின் தனித்தகுதியால் அமைந்ததாகும். மணம் நிகழ்வதற்கு முன், தம் பெண்ணை மணமகனுக்குக் கொடுப்பதாகப் பெண்வீட்டார் நீர்வார்த் துக் கொடுப்பர். தீ வேட்டு மணம் செய்விப்பர். அதனை மணமக்கள் வலம் வருவர்.
9.6.3 உடன் கட்டை ஏறல்: கணவன் இறந்துவிடின் மனைவி உடன்கட்டை ஏறலும் உண்டு. மாதினியாரும், திலகவதியாரும் முறையே மேற்கொண்ட செயலாலும் சொல்லாலும் இவ்வுண்மை அறியப்படும்.
9.6.4 சில பழக்க வழக்கங்கள்:
9.6.4.1 ஐயிரு நாட்களில் குழந்தைக்கு ஆற்றப் பெறும் செய்வினைகள்: குழந்தை பிறந்தது முதல் பத்து நாள்கள் வரையிலும் இசை முழக்கமும் மறை முழக்கமும் வீட்டில் நிகழும். பொருட்கொடை வழங்குவர். தாய்சேய் இருவருக்கும் வெண்சிறு கடுகினாலாய எண்ணெய் அணிவதன் மூலம் உடல் நலம் காப்பர். வீட்டில் வேம்பின் இலைகளைச் செருகி வைப்பர். தெய்வம் பரவுவர்.
9.6.4.2 முடியிறக்குதல்: குழந்தைகளுக்கு மூவாண்டில் முடியிறக்குவர். இதனை `மயிர் நீக்கும் மணவினை' எனக் குறிப்பர். இது மூவாண்டில் செய்யப்பட்டமை சிறுத்தொண்டர் வரலாற்றால் அறியப்படுவதாகும். நாவரசர் வரலாற்றிலும் அவருக்கு இம்மண வினை நிகழ்ந்தமை கூறப்படுகின்றது.
9.6.4.3 பெயரிடுதல்: பிறந்த மக்களுக்குப் பெயரிடுங்கால் பெரும்பாலும் தாம் வழிபடும் தெய்வத்தின் பெயரையே வைப்பர். இன்றேல் குழந்தையின் பாட்டியார், பாட்டனார் பெயர்களையோ அல்லது அருளாளர், சான்றோர் போன்றவர்களின் பெயர்களையோ வைப்பர். இது அக்கால மரபாகும். இவ்வகையில் திருவாரூர்ப் பெரு மானின் திருப்பெயராகிய ஆரூரன் எனும் பாட்டனார் பெயரைச் சுந்தரருக்கிட்டு வழங்கியமை அறிகிறோம்.
`சீராரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன்' (தி.7 ப.89 பா.11) `அம்மான்தன் திருப்பேர் கொண்ட தொண்டன் ஆரூரன்' (தி.7 ப.59 பா.11) எனவரும் சுந்தரர் திருவாக்குகள் இவ் வுண்மையை விளக்கும். காரைக்கால் அம்மையாரைத் தெய்வம் எனக் கருதிய அவர்தம் கணவனாகிய பரமதத்தன், மறுமணம் செய்து கொண்டு, அப்பெண்வழியாகப் பிறந்த குழந்தைக்குப் புனிதவதி எனப் பெயரிட்டமையையும் எண்ணி மகிழலாம்.
நாகனிடத்துப்
பிறந்த குழந்தை உடல் வலிமையும் பளுவும் உறு தியும் கொண்டு இருக்கக் கண்டு, திண்ணனார் எனப் பெயரிட்டமை இந்நிலையின் வேறானதாம். மருள் நீக்கியார், சீராளதேவன், விசார சருமன், திலகவதியார், பரவையார், சங்கிலியார், வனப்பகை, சிங்கடி போன்ற பெயர்களெல்லாம் எவ்வகையான் இடப்பட்டன என அறிதற்கு இயலாதுள்ளன.9.6.4.4 பொழுது போக்கிற்கான விளையாட்டுக்கள்: விருந் தினராக வந்திருப்பாரை மகிழ்வித்தற்கென நிலைச் செண்டாடுதல், பரிச்செண்டு வீசுதல், தகர்ப் பாய்ச்சல், யானைப் போர், பறவைகளின் போர் முதலிய விளையாட்டுக்கள் இருந்தன. சேரமான் சுந்தரரிடத் தும், சுந்தரர் சேரமானிடத்தும் சென்றபொழுது இவ் விளையாட்டுகள் நிகழ்ந்தனவாக இந்நூல் வாயிலாக அறிகிறோம். இனிப் பெண்பாலார் கழல், பந்து, அம்மானை, ஊசல், சிற்றி லிழைத்தல், சிறுசோறு சமைத் தல் முதலிய விளையாட்டுக்களை மேற்கொண்டு இருந்தமையும் இந்நூலால் அறியப்படுகின்றது.
9.6.5 நோயும், மருந்தும்: சூலை, வெப்புநோய், முயலகன் நோய், கண்நோய், பாம்பு கடித்தலால் வரும் நச்சுநோய் ஆகிய நோய்கள் இந்நூற்கண் குறிக்கப்படுகின்றன. இந்நோய்களுள் காளத்தியில் இறைவர் கண்ணில் குருதிவர நேர்ந்த நோய் திண்ணனார் தம் கண்ணை இடந்து அப்ப நீங்கியதாகும். இந்நோயும் நோய் வயப்பட்டதன்று. தீரா நோய் தீர்த்தருள வல்லானுக்கு நோயுமுண்டோ? அது அப்பெருமான் கண்ணப்பர்தம் அன்பின் திறத்தை வெளிக்காட்ட அருளிய அருளிப்பாடே ஆகும். ஏனைய நோய்கள் யாவும் திரு வருட் கருணையினாலேயே நீங்குகின்றன. எனவே உடற்கண் வரும் நோய்கட்கும் அவ்வுடல் வழிவரும் பிறப்பிற்கும் மருந்தாவது, இறைவனின் திருவருளேயாம் என்பது அறியத் தக்கதாம்.
மருந்தவை
மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்அருந்துயர்
கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமேபொருந்துதண்
புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்செருந்திசெம்பொன்மலர்
திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.(
தி.3 ப.92 பா.1) எனவரும் திருவாக்கும் மறக்கப் போமோ?9.6.6 பெற்ற பெருவளம்: இனி அடியவர்கள் நிறைவாக இறைவன்பால் பெற்ற பெருவளத்தைக் காண்பாம். அப்பெருவளம் பலதிறத்தனவாம். அவை பெருமானால் அருளப் பெற்றனவாகலின், அவ்வப்பேற்றிற்கும் காரணங்கூறல் இயலுவது மன்று; தகுதியுமன்று. ஆயினும் அப்பெரு வளங்கள் அனைத்தும் அவர்கள் ஆராவின்ப அருளமுதார்ந்து நிற்றற்குரிய பெற்றியனவேயாம்.
10.1 தொகையடியார்கள்: இவ்வகையில் குறிக்கப்பெறுவர் ஒன்பது வகையினர் ஆவர். இவர்கள் ஓரிடத்தவரல்லர், ஒரு காலத் தவருமல்லர். தத்தம் தொழிலில் தலை நின்றவாறே வாழ்ந்து திருவரு ளைப் பெற்றவர்கள் ஆவர். இனிப் பெற இருப்பவர்களும் ஆவர். ஆதலின் எண்ணிக்கையானும் காலத்தானும் இடத்தானும் கடந்து நிற்கும் இவர்கள் பெற்ற பெருவளத்தை ஆசிரியர் விதந்து கூறற்கு இடனில்லாதாயிற்று.
10.2 தனி அடியார்கள்: இவ்வகையில் வருபவர்கள் அறுபான் மும்மை நாயன்மார்களும் ஆவர். இவர்கள் அனைவரும் திருவடிப் பேற்றில் திளைத்து நிற்பவர்களே ஆவர். எனினும் சேக்கிழார் அப் பேற்றை வெளிப்படையாகக் குறிக்கும் இடங்களும் உள. இறைவன் வழங்கிய தகுதிப் பாட்டில் நின்று ஆரா இன்பத்தைப் பெற்று நிற்குமாறு கூறுமிடங்களும் உள. உய்த்துணருமாறு அமைந்துள்ளனவும் சில.
இறைவன்
வீற்றிருக்கும் இடத்தைக் கயிலை, சிவலோகம், சிவபுரி, சிவபுரம் என்றெல்லாம் குறிப்பர். இவ்வகையில் இன்ன இன்ன அடியவர்கள் இவ்வவ்விடங்களை அடைந்தனர் எனக் குறிக்கின்றார்.10.3 கயிலை சென்றார் எனக் குறிக்கப்பெறும் அடியவர்கள்: எறிபத்தர், ஏனாதிநாதர், மானக்கஞ்சாறர், சிறுத்தொண்டர், கணநாதர், காரியார், கோட்புலியார், சேரமான்பெருமாள், சுந்தரர்.
10.4 சிவலோகம் சென்றார் எனக் குறிக்கப்பெறும் அடியவர் கள்: திருநீலகண்டர், இயற்பகையார், இளையான்குடிமாறர், அரிவாட் டாயர், திருக்குறிப்புத்தொண்டர், சோமாசிமாறர், சாக்கியர், அதிபத் தர், கணம்புல்லர், நின்றசீர்நெடுமாறர், முனையடுவார்.
10.5 சிவபுரம் சென்றார் எனக் குறிக்கப்பெறும் அடியவர் கள்: மூர்க்கர்.
10.6 இனி இறைவனடி அடைந்தார் எனக் குறிக்கப் பெறும் அடியவர்கள்: மெய்ப்பொருளார், கூற்றுவர்,விறன்மிண்டர், புகழ்ச் சோழர், கலியர், நரசிங்கமுனையரையர், மூர்த்தியார்,கலிக்கம்பர், முருகர், சத்தியார், உருத்திரபசுபதியார், ஐயடிகள்காடவர்கோன், திருநாளைப்போவார், வாயிலார், திருநாவுக்கரசர், கழற்சிங்கர், பெருமிழலைக் குறும்பர், இடங்கழியார், காரைக்காலம்மையார், செருத்துணையார், அப்பூதியடிகள், புகழ்த்துணையார், நீலநக்கர், பூசலார், நமிநந்தியார், மங்கையர்க்கரசியார், திருஞானசம்பந்தர், நேசர், திருமூலர், திருநீலகண்டயாழ்ப்பாணர், தண்டியடிகள், சிறப்புலியார்.
10.7 கணநாதராக இருக்க அருள்செய்தார் எனக் குறிக்கப் பெறும் அடியவர்கள்: விறன்மிண்டர், எறிபத்தர் , கணநாதர், சுந்தர மூர்த்திகள், சேரமான்பெருமாள்.
10.8 `இந்நின்ற நிலையே நம்பால் அணைக' என்றருளப் பெற்றவர்கள்: கண்ணப்பர், சண்டேசுரர், ஆனாயர், சிறுத்தொண்டர், கோட்புலியார்.
10.9 திருவடிப் பேறு எய்தியமையை உய்த்துணருமாறு கூறப்பெற்ற அடியவர்கள்:
10.9.1 குலச்சிறையார்: இவர் திருவடிப்பேறு பெற்றமையை வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும், இவருடன் இணைந்து பத்திமை செய்த நின்றசீர்நெடுமாறரும், அவரது மனைவியார் மங்கையர்க்கரசியாரும் சிவலோகத்தில் இன்புற்று ஈசர் அடிநிழற்கீழ் அமர்ந்திருக்கும் அருள் பெற்றார்கள் எனக் குறிப்பிடப் பெறுகின் றனர். இவர்களோடு வாழ்ந்திருந்த இவரும் இப்பேற்றைப் பெற்றவ ரென உய்த்துணரலாம்.
10.9.2 சடையனார், இசைஞானியார்: சுந்தரரின் பெற் றோர்கள் இவர்கள். நம்பி ஆரூரரைப் பயந்த பெருமக்கள் என்ற அளவே இவர்கள் குறிக்கப் பெறுகின்றனர். எனினும் அரனடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி காதலன் எனச் சுந்தரர் தம்மைக் குறித்துக் கொள்ளுமாற்றான் இவர்கள் இறைவனின் திருவடிப்பேறு பெற்றமை அறியமுடிகின்றது.
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 8 | 9 |