தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 6 | 7 | 8 | 9 |

6.4 சிவஞான சித்தியார்: இந்நூலையும், இருபா இருபஃதை யும் அருளியவர் அருள்நந்தி சிவாசாரியார் ஆவர்.

6.4.1 இறைவனிடத்துக் கொளத்தகும் உண்மையான அன்பின் றிச் செய்யும் செயல்கள் யாவும் அறமாகா; மறமேயாம். மாறாக இறைவன் மீது அன்பு கொண்டு செய்யும் செயல்கள் யாவும் மறமாகா; அறமேயாம். இதனை விளக்கத் தக்கன் வரலாற்றோடு, சண்டேசுவரர் வரலாற்றையும் இயைத்துக் கூறுகின்றார் அருள்நந்தி சிவாசாரியார்,

அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும்

பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்;

வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி

நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. -சித்தியார், சுபக்.119

என்பது அவர் திருவாக்காகும்.

6.4.2 உயிர்கள் வினைக்கேற்ப உடல் எடுக்கும் என்பதை விளக்க அகலிகை, திருமால், மாவலி ஆகியவரோடு, கோச்செங்கணார் வர லாற்றையும் இயைபு படுத்திக் கூறுகின்றார் ஆசிரியர்.

அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான்

பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலாம் முழுதும் ஆண்டு

நிகரிலா அரச னாகும் சிலந்திநீ டுலகம்போற்றச்

சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே.

-சித்தியார், சுபக்.134

என்பது அவர் திருவாக்காகும்.

6.5 இருபா இருபஃது: மாணாக்கர் வினவும் சில வினாக்க ளுக்கு ஆசிரியர் விடை அருளும் முகமாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வகையில் ஆசிரியர் தரும் விடையாக, "ஆட்பால் அவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா" (தி.3 .54 பா.4) எனவரும் திருஞானசம்பந்தரின் திருப்பாசுரப் பகுதி இடம் பெற்றுள்ளது. இப் பாசுரத்தை எடுத்து மொழியும் ஆசிரியர், `பாண்டியன் கேட்பக் கிளந்த மெய்ஞ்ஞானம்" (இருபா. 2) என இதனைக் குறித்தருளுகின்றார். இவ்வாறு இவர் குறித்தற்கு,

தென்னவன் மாறன் தானுஞ் சிரபுரத் தலைவர் தீண்டிப்

பொன்னவில் கொன்றை யார்தந் திருநீறு பூசப் பெற்று

முன்னைவல் வினையும் நீங்க முதல்வனை அறியுந் தன்மை

துன்னினான் வினைகள் ஒத்துத் துலையென நிற்ற லாலே.

(தி.12. பு.28 பா.819)

உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்

நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்

கலதிவாய் அமணர்காண் கிலார்க ளாயினும்

பலர்புகழ் தென்னவன் அறியும் பான்மையால்.

(தி.12. பு.28 பா.820)

எனவரும் சேக்கிழார் திருவாக்கே அடித்தளமாயிற்று என்பது உணரத்தக்கதாம்.

6.6 போற்றிப் பஃறொடை: இந்நூலையும், அடுத்துவரும் சங்கற்ப நிராகரணத்தையும் அருளியவர் உமாபதி சிவசாரியாரவர்.

தம் மக்களுக்கு உற்ற நோய் நீங்க, மருத்துவருக்குச் சுடவும், அறுக்கவும், உரிக்கவும் பொருள் கொடுக்கும் பெற்றோர், பின் அந் நோய் நீங்கப் பெற்றவழி, உவப்பர். இதனை, இறைவன் உயிர்களின் வினை நீக்கத்திற்கென நமன்வழி ஒறுக்கும் மறக்கருணைக்கு உவமை யாக்கிக் கூறும் ஆசிரியர், இடையே மனுவேந்தனின் அரசியல் மாட்சியும் இதுபோன்றதேயாம் என உணரக்காட்டுகின்றார்.

`கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்

காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதியம்

ஈத்துத்தாய் தந்தைதமர் இன்புறல் - வாய்த்தநெறி

ஓடியதே ரின்கீழ் உயிர்போன கன்றாலே

நீடுபெரும் பாவம்இன்றே நீங்குமென - நாடித்தன்

மைந்தனையும் ஊர்ந்தோன் வழக்கே வழக்காக

நஞ்சனைய சிந்தை நமன்தூதர் - வெஞ்சினத்தால்

அல்ல லுறுத்தும் அருநரகங் கண்டுநிற்க

வல்ல கருணை மறம்போற்றி' -போற்றிப். 49-57

என்பது அவர் திருவாக்காகும்.

உயிர்கட்கு, வினைக்கு ஈடான உடலைக் கொடுத்து இயக்குதல் இறைவற்கே இயல்பு. அங்ஙனமாகச் சுந்தரர் முதலை உண்ட பாலனை அழைத்ததன் வாயிலாக, அவருக்கும் அவ்வியல்பு உளதாதலைக் கூறி வினவ, அவரும் "பிள்ளை தரச் சொல்லு காலனையே" (தி.7 .92 பா.4) என இறைவரிடத்து அப்பிள்ளையை வேண்டிப் பெற்றனரல் லது, தாமே தோற்றுவிக்கவில்லை என விடையளிக்கின்றார் ஆசிரியர்.

ஐந்தொழில் உயிருந் தந்திடல் தகுமோ

ஆவதென் முந்நாள் நாவலர் பெருமான்

பண்டொரு முதலை யுண்ட மைந்தனை

வரவழைத் தனன்என் றாய்பிழைப் பிலததூஉந்

தந்திட வேண்டு மென்றனர் அன்றே. -சங்கற்ப. 32-36 சிவசமவாதி

என்பது அவர் திருவாக்காகும்.

இறைவன் நினைவளவில் எதனையும் செய்வது அல்லது, உடல்கொண்டோ அல்லது கருவிகொண்டோ எதனையும் செய்வ தில்லை. ஆனால் உயிர்களின் நிலை வேறு என்று கூறச் சம்பந்த சரணா லயர் ஞானசம்பந்தரின் திருவாக்கினைக் கொண்டே புத்த நந்தியின் தலையினை இடறச் செய்யவில்லையோ என, அதுவும் இறைவனின் அருள்கொண்டு செய்ததல்லது வேறில்லை எனத் தெளிவிக்கின்றார்.

காழி மாநகர்க் கவுணியர் கடவுள்

ஞான மாகிய நற்பதி கங்கள்

எழுதுறு மன்பர்தம் இன்புறு மொழியால்

களிறென அணைந்த கல்மனப் புத்தன்

முருட்டுச் சிரம்ஒன் றுருட்டினர் அன்றி

வாய்ந்த வாளொன் றேந்தினர் இலரே

என்றதும் ஈர்வாள் கொன்றதென் பதுபோல்

தனித்துணை அருளால் துணித்தனர் என்பர்.

-சங்கற்ப. 22-29 ஈசுவரஅவி

என்பது அவர்தம் திருவாக்காகும். இத்துணையும் பெரியபுராண வரலாறுகளை மெய்கண்ட நூல்கள் முகந்து நின்ற பாங்காம்.

7.0 முப்பொருள் உண்மை:

இனி இப்பெருநூலில் காணும் முப்பொருள் உண்மையைக் காண்போம்.

7.1 இறை:

7.1.1 இறைவன் ஒருவனே யாவன்: `ஒன்றே குலம் ஒருவனே தேவன்', (தி.10 பா.2072) `ஒருவன் என்னும் ஒருவன் காண்க' (தி.8 .3 வரி.43) என்னும் திருமுறையும். இதற்கேற்ப `இறைவன்' `உம்பர் பிரான்' `எவ்வுயிர்க்கும் சான்றாம் ஒருவன்' எனவரும் வாக்குகள் இந்நூற்கண் அமைந்துள்ளன.

7.1.2 எவ்வுயிர்க்கும் தலைவன்: `ஆதிபகவன் முதற்றே உலகு' (குறள், 1) என்னும் தமிழ் மறையும். இதற்கேற்பத் `தேவரையும் மால், அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமை யாக உடைய எம்மான்' (தி.12 சரு.1-5 பா.37) எனும் திருவாக்கு இந்நூற்கண் அமைந்துள்ளது.

7.1.3 இறைவன் என்றும் அழியாதவன்: இதற்கேற்ப `ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் நாதனார்', `கேடி லாதான்', `எல்லை முடிவில்லாதான்', `முன்னாகி எப்பொருட்கும் முடி வாகி நின்றான்' எனவரும் திருவாக்குகள் இந்நூற்கண் அமைந்துள்ளன.

7.1.4 வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்: இதற்கு ஏற்ப `நின்மலன்' `விமலன்' எனவரும் திருவாக்குகள் அமைந்துள்ளன.

7.1.5 இறைவன் அரு, உரு, அருவுரு ஆகிய மூவடிவும் உடையன்: `காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்' (தி.12 பு.34 பா.8) எனவரும் திருவாக்கு, இவ்வருளிப் பாட்டைச் செவ்விதாக விளக்கி நிற்பதாகும். இதுவன்றி `உலகெலாம்' (தி.12 பா.1) எனத் தொடங்கும் முதற்பாடலும், `வானாகி நிலனாகி அனலு மாகி மாருதமாய் இருசுடராய் நீரு மாகி, ஊனாகி உயிராகி உணர்வு மாகி உலகங்கள் அனைத்துமாய் உலகுக் கப்பால், ஆனாத வடிவாகி நின்றார்' (தி.12 பு.28 பா.563) என்பது போன்ற திருவாக்குகளும் இக்கருத்திற்கு அரண் செய்வனவாம்.

7.1.6 ஐந்தொழில் இயற்றும் அறிவன்: `தொல்லுலகும் முழுதும் அளித்து, அழித்து, ஆக்கும் முதல்வர்', `அகில லோகங்கள் முழுதும் அழித்த முதல்வனார்', `முழுதுலகம் தரும் இறைவர்', `எல் லாம் தான் வைத்து வாங்க வல்லான்' எனவரும் திருவாக்குகள் இவ் வைந் தொழில்களையும் செய்வோன் இறைவன் என்பதற்கு அரணா கின்றன.

7.1.7 அறுசமயத் தலைவன்: `அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்' (சித்தியார், பாயிரம், 1) எனப் பின்வரும் ஞான நூற்கூற்றுக் கிணங்க, `அறுசமயத் தலைவராய் நின்றவர்' என இந்நூற்கண் ஆசிரியரும் குறித்து மகிழ்வர்.

7.1.8 கருணைத்திருவுரு: இறைவன் யாண்டும் நீக்கமற நிற்பவன் எனினும், உயிர்களை உய்யக் கொள்வதற்கென வடிவும் கொள்வன். அவ்வடிவு தானும் வினை வயத்ததன்றி அவன் தன் கருணைவயத்ததேயாகும். `கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றி' (கந். கலி..) என்பார் குமரகுருபரரும். `நம் தம் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே' (சித்தியார், சூத்.1 பா.55) என்னும் ஞான நூலும். இதற்கேற்ப, `அருட் கருணைத் திருவாளன்', `கருணை திருவடிவான சீர் இணங்கு சிவபெருமான்', `கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி' என்றத் தொடக்கத்தனவாய திருவாக் குகள் இந்நூற்கண் அமைந்துள்ளன.

7.1.9 அருமையும், எளிமையும்: உயிர்கள் தம்மறிவானும் தம்மைச் சூழ்ந்துள்ள உலகியற் சூழல்களாலும் அறிதற்கரியன். மாறாகக், `காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே' என்பதற் கேற்பத் தாழ்வெனும் தன்மையோடும் திருவருள் உணர்வோடும் நிற்பார்க்கு, அவர்கள் காண்பதற்குரிய எளியனாகின்றான்.

நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்

தன்செயல் தானேயென் றுந்தீபற

தன்னையே தந்தானென் றுந்தீபற. -திருவுந்தியார், 6

உள்ளம் உருகில் உடனாவர் அல்லது

தெள்ள அரியரென் றுந்தீபற

சிற்பரச் செல்வரென் றுந்தீபற. -திருவுந்தியார், 7

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்

பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே

நேசமொடும் உள்ளதே நாடி. -சித்தியார், சூத்.9 பா.1

என வரும் ஞானநூற் கூற்றுக்களால் இவ்வுண்மை அறியப்படும். `உல கெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்', `தன்னை யார்க்கும் அறிவரியான்', `இன்ன தன்மையன் என்றறியாச் சிவன்', `அருமறை முறையிட்டு இன் னும் அறிவதற்கு அறியான்', `அரியவனுக்கு அரியானை அடியவ ருக்கு எளியானை', `எளியார், வலியாம் இறைவா', `மெய்ம்மறந்து உற்ற இடத்து உதவும் விடையார்', `நிகரிலா மேருவரை அணுவாக நீண்டானை நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாக்கும் நொய்யானை' என இந்நூற்கண்வரும் கூற்றுக்கள் இதற்கு அரணாக அமைகின்றன. இவற்றுள் முன்னைய நான்கும் அருமையும், பின்னைய நான்கும் எளிமையும் குறித்தன. `அருமையில் எளிய அழகேபோற்றி' (தி.8 .4 வரி 126) என மணிவாசகர் போற்றி மகிழ்வதும் காண்க.

7.1.10 ஐந்தெழுத்தின் பொருள்: திருவைந்தெழுத்தை எண்ணும் முறை பலவகைப்படும். அவை அவரவர் தம் தகுதிக்கும் புண்ணியத்திற்கும் ஏற்ப அமையும். அவற்றுள் `சிவாயநம' என்பதும், `நமசிவாய' என்பதும் பெரிதும் எண்ணப்பட்டு வருவனவாம். `சிவாய நம எனப்பேசி', `ஞான மெய்ந் நெறிதான் யார்க்கும் நமச் சிவாயச் சொலாம்' என இந்நூற்கண்ணும் அம்மந்திரங்கள் நுவலப் படுகின்றன. சிகரம் சிவத்தையும், வகரம் அருளையும், யகரம் உயிரை யும், நம என்பன மலங்களையும் குறிப்பனவாம். கூத்தப் பெருமா னின் திருவுரு இவ்வைந்தெழுத்தும் அமைய விளங்குவதாகும்.

வாசி யருளியவை வாழ்விக்கும் மற்றதுவே

ஆசில் உருவமுமாம் அங்கு. -திருவருட்பயன், 88

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்

நீங்கா எழுத்தே நிறைசுடராம். -உண்மைவிளக்கம், 34

என்னும் ஞான நூல்களும். இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக, `ஐந்தெழுத்தும் பாடிய பொருளாய் உள்ளான்' (தி.12 சரு.1-5 பா.71) எனும் ஆசிரியர் சேக்கிழார் தம் திருவாக்கும் அமைந்துள்ளது.

7.1.11 முடிவில் ஆற்றல் உடையவன்: இறைவனின் எண் குணங்களுள் இதுவும் ஒன்று. இதனை ஆசிரியர் சேக்கிழார் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார். ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதையும் உணராது, தருமம் தன்வழிச் செல்கை கடன் என்று கொண்ட மனுவேந்தனின் அருமந்த அரசாட்சியைத் திருவுளம் கொண்ட இறைவன், இறந்த ஆன்கன்றையும் அவ்வரசரின் உரிமைத் தனிக் கன்றையும் அமைச்சரையும் உடன் எழச் செய்தனன். இவ் வருஞ் செயல் எவராலும், எஞ்ஞான்றும் ஆற்றற்கரிதாம். இத்தகைய அருஞ்செயல் எங்ஙனம் நிகழ இயலும்? எனக் கேட்பார்க்கு விடை யாகவே, `யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொரு ளுளதோ' (தி.12 சரு.1-3 பா.67) என அருளிச் செய்கின்றார் ஆசிரியர். இவ்வாறே, திருநீலகண்டரிடத்துத் தந்த ஓட்டை அவர் அறியாதவாறு அவ்விடத்தினின்றும் அகலச் செய்த அடியவர், `முந்தை நாள் தந்த ஓட்டைத் தந்து நில்' என்கின்றார். திருநீலகண்டரோ மறைந்த மாயம் அறியாது அலமருகின்றார். அவர் மட்டுமா? கேட்டவர்களாகிய நமக்கும் புலனாகவில்லை. நம் எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்கும் இவ்வருஞ்செயல் மன்னுயிர்க்கு அரிதாகலாம். அவ்வுயிர்களுக் கெல்லாம் தலைவனாய இறைவற்கு அஃது அரிதாகுமோ? அரிதாகாது. இதனை, `எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்' (தி.12 பு.2 பா.20) எனக் குறித்துக்காட்டி, பெருமானின் முடிவில் ஆற்றலை வெளிப்படுத்துகின்றார் சேக்கிழார். அமர்நீதியாரிடத்து முன்னர்க் கோவணத்தைக் கொடுத்துப் பின் அவ்விடத்தினின்றும் அகலப் போக்கிய திறமும் இத்தகையதேயாம். `விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்' (தி.8 .5 பா.96) எனவரும் திருவாசகமும் சான்று.

7.2. உயிர்கள்:

7.2.1 `உயிர்கள் பல' என்று கூறும் மெய்ந்நூல்கள். `உலகெ லாம்' என்று தொடங்கும் இம்முதற் குறிப்புச் சொல்லே, இவ்வுண்மையை விளக்கி நிற்கின்றது. காரணம், உணர்தற்கும், ஓதற்கும் உரிமை உடையன அவையே யாதலின். இச்சொல் இந்நூற் கண் பதினான்கு இடங்களில் வருகின்றது. `எவ்வுயிர்க்கும் தாயா னான்', `யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர்', `தேவரையும் மால், அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும்', `யாவும், யாரும் கழறினவும் அறியும் உணர்வும்', `எவ்வுயிர்க்கும் காவலனார்' என வருவனவெல்லாம் இதற்கு அரணாகின்றன.

7.2.2 உயிர், ஆணவத்தோடு பிணிப்புண்டு இருத்தல்: நெல் லிற்கு, உமியும், செம்பில் களிம்பும் இருத்தல் போல்வதாம் இவை, புதியனவல்ல. நெல்லும் செம்பும் என்றோ, அன்றே உமியும் களிம்பும் உள்ளன. இதுபோன்றே உயிர் என்றோ, அன்றே ஆணவமும் உடனாக உள்ளது என்னும் ஞானநூல். `வல்லி மலகன்மம் அன்றுளவாம்', `அன்றளவி உள்ளொளியோ டாவியிடை யடங்கி இன்றளவும் நின்றதிருள்" என்றெல்லாம் ஞானநூல்கள் கூறும். இதற்கு அரணாக, `மாக்கள் சிந்தையுட் சார்ந்துநின்ற பொங்கிய இருள்', `இருள் கெட மண்ணில் வந்தார்' என்பனவாகிய திருவாக்குகள் அமைந்துள்ளன.

7.2.3 உயிர் உணர்த்த உணரும் இயல்பினது: `மையல் மானுடமாய் மயங்கும்வழி ஐயனே! தடுத்தாண்டு அருள்செய வேண்டும்' (தி.12 சரு.1 பா.28) என வேண்டிக் கொண்ட நம்பியா ரூரர், இவ்வுலகத் தொடர்பு கொண்ட நிலையில் மறந்து விடுகின்றார். இறைவன் அடியவன் எனப் பின் உணர்த்தவே உணருகின்றார். `ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட கோதிலா அமுதே' (தி.12 சரு.1-5 பா.72) என அவர்தம் திருவாக்காக வைத்து, ஆசிரியர் இவ்வுண்மையை உணர்த்துகின்றார்.

7.2.4 உயிர் அருள்வழி நிற்ப உயரும் தகையது: இந்நூற்கண் வரும் அடியவர்கள் வரலாறுகள் அனைத்துமே இவ்வுண்மையை விளக்குவனவாம்.

7.3. தளை: உயிர்களைத் தகைத்துச் சிறுமைப்படுத்துவதே தளையாம். இதற்கு மூலமாக இருப்பது ஆணவ மலமாகும். இம்மலத்தினின்று நீங்கவே இறைவன் உயிர்கட்குப் பிறவிகளைக் கொடுக்கின்றான். அவ்வகையில் பிற மலங்களும் இணைகின்றன. பசுவின் மலம் பிற மலத்தை நீக்கத் துணை நிற்பதுபோல, உயிரிடத்து இருக்கும் ஆணவத்தை நீக்கவும், பிற மலங்கள் துணையாகின்றன.

இவ்வகையில் கூறப்படும் மலங்கள் ஐந்தாம். அவை ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், மறைப்பாற்றல் (திரோதாயி) என்பன வாம். இவற்றுள் மறைப்பாற்றலை மறைத்தல் ஒப்புமைபற்றி ஆணவத்துள் அடக்கியும், மாயையும் மாயேயமும் வித்தும் முளை யும் போல்வனவாதலின், அவற்றை ஒன்றாக அடக்கியும் மலங்கள் மூன்று என்றும் கூறுவர். இம்மலங்களை இந்நூற்கண் வரும் 238, 803, 1393, 3693, 4162 ஆகிய பாடல்களில் ஆசிரியர் குறிப்பர். இவற்றுள் மறைப்பாற்றலை மலம் என்று குறிப்பினும், உயிர்கள் தம் நிலையை உணர்ந்து தெளிதற்கும் திருவருள் உணர்வில் சென்று உய்தி பெறுதற்கும் உதவுதலின் அதனை இறைவனின் கருணை என்றும் குறிப்பர்.

மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும்

மூலஆ ணவம் ஒன்று முயங்கி நின்று

பாகமிக உதவுதிரோ தாயி ஒன்று,

பகர்மாயை ஒன்றுபடர் கன்மம் ஒன்று,

தேகமுறு கரணமொடு புவன போகச்

செயலாரும் மாமாயைத் திரட்சி ஒன்றென்று

ஆகமலம் ஐந்தென்பர் ஐந்தும் மாறாது

அருள்என்ப தரிதென்பர் அறிந்து ளோரே. -சிவப்பிர. 32

எனவரும் ஞான நூல் கூற்றால் இவ் ஐவகை மலங்களும் விளங்கும். இதன்கண் `பாகம் மிக உதவு திரோதாயி' என வருவதால், இம்மறைப்பாற்றலின் அருமை விளங்கும். திருநீலகண்டரிடத்தும் அமர்நீதியாரிடத்தும் முறையே ஓட்டையும், கோவணத்தையும் மறைத்து அவர்கட்கு அருளிய பாங்கை இவ்விடத்து எண்ணல் தகும்.

7.4 அடியவர் வரலாற்றில் தத்துவ விளக்கம்: இவ்வகையில் எறிபத்தர் நாயனார் வரலாற்றின் வாயிலாக இச்சைவ சித்தாந்தச் செந்நெறி அமைந்திருக்குமாற்றைக் கூறலும் உண்டு.

சிவகாமியாண்டார் - உயிர்

கருவூர் - உடல்

புட்பக்குடலை - மனம்

தண்டு - வீணா தண்டு

மலர்கள் - பொறை முதலிய குணங்கள்

ஆனிலை - உயிர் புருவ நடுவிலிருந்து 9; 9; 9; 9; தியானிக்கும் இடம்

பசுபதீசுவரர் - உயிர் நிலைபெற நிற்குமிடம்

யானை - ஆணவம்

மிசைகொண்ட இருவர் - இருவினை

பக்கம் கொண்ட மூவர் - மூவகை மாயை

புகழ்ச்சோழர் - மறைப்பாற்றல்

எறிபத்தர் - ஞானாசிரியர்; உற்றிடத்து 9; 9; 9; 9; (பக்குவமுற்ற இடத்து) உதவும் ; ; ; நீரார்

மழு - ஞானவாள்

உயிராகிய சிவகாமியாண்டார் மேற்கூறியவாறு மூவகை மலங்களும் நீங்க ஞானவழிபாடு ஆற்றி வீடு அடைந்தமை இதனால் விளங்கும்.

தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 6 | 7 | 8 |