தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 5 | 6 | 7 | 8 | 9 |

4.8 கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம் புலனும்

ஒண்டொடி கண்ணேயுள. -குறள், 1101

இக்குறட்பாக் கருத்தை, "புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக் கண்டு கேட்டுண் டுயிர்த்துற் றுணர்ந்திருந்தார் காதலி னால்" (தி.12 பு.29 பா.267) எனவரும் பாடற்பகுதி முகந்து நிற்கின்றது.

4.9 உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்

போஒய்ப் புறமே படும். -குறள், 933

இக்குறட் கருத்தையும், தொடர்களையும், `பொருளாயம் எய்துதற்குப் புகழ்க்குடந்தை அம்பலத்தே உருளாயச் சூதாடி யுறு பொருள் வென்றன நம்பர் அருளாகவே கொண்டு' (தி.12 பு.32 பா.8) எனவரும் பாடற்பகுதி முகந்து நிற்கின்றது.

4.10 புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான்

&#&#நட்பாங் கிழமை தரும். -குறள், 785

இக்குறட்பாக் கருத்து, "காண்டகைமை யின்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்" (தி.12 பு.21 பா.203) எனவரும் பாடற்பகுதியில் அமைந்து அணி செய்கின்றது.

4.11 தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை. -குறள், 55

இக்குறட்பாக் கருத்து, "மழைக்குதவு பெருங்கற்பின் மனைக்கிழத் தியார்" (தி.12 பு.12 பா.11) என வரும் பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

4.12 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். -குறள், 26

இக்குறட்பாக் கருத்து, `செயற்கருஞ் செய்கை செய்ததீரனே யோலமென்றான்' (தி.12 பு.3 பா.29) என வரும் பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

4.13 தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து. -குறள், 828

இக்குறட்பாக் கருத்து, `மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினிற் படைகரந்த புத்தகக் கவளி ஏந்தி" (தி.12 பு.5 பா.7) எனவரும் பாடற்பகுதியில் குறிப்பாக இடம் பெற்றுள்ளது.

4.14 மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியால் வென்று விடல். -குறள், 158

இக்குறட்பாக் கருத்து, `பத்திரம் வாங்கித் தான் முன்னினைந்த வப்பரிசே செய்ய, மெய்த்தவ வேடமே மெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்' (தி.12 பு.5 பா.15) எனவரும் பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

4.15 இலன் என்னும் எவ்வம்உரையாமை ஈதல்

குலன் உடையான்கண்ணே உள. -குறள், 205

இக்குறட்பாக் கருத்து, "இன்மையால் இரந்து சென்றார்க்கில்லை யென்னாதே ஈயும் தன்மையார்" (தி.12 பு.35 பா.1) எனவரும் பாடற் பகுதி முகந்து நிற்கின்றது.

5.0 மூவர் தமிழை முகந்து நிற்கும் பாங்கு:

சேக்கிழார், மூவர் தமிழை முகந்து நிற்கும் பாங்கு பெரிதும் சுவைத்தற்குரியதாம். பதிக முதற்குறிப்பை முகந்து நிற்கும் இடங்கள் பல. பதிகத்து இறுதித் தொடரை முகந்து நிற்கும் இடங்கள் பல. பதிகத்தின் இடைப்பட்ட தொடர்களை முகந்து நிற்கும் இடங்கள் பல. பதிகத்தின் கருத்தாக அமைந்து நிற்கும் இடங்கள் பல. பதிகம் முதலுடன் இடையுமாகவும், பதிக இறுதியுடன் இடையுமாகவும் முகந்து நிற்கும் இடங்கள் பல. இவ்வகையான் எல்லாம் எண்ணின் அதுவும் ஒரு தனி ஆய்வாக அமையும்.

எடுத்துக்காட்டாகச் சில:

5.1. முதற்குறிப்பாக முகந்து நிற்பன:

5.1.1 `தோடுடைய செவியனெனு'......... மெய்ம்மை மொழித் திருப்பதிகம் (தி.12 பு.28 பா.76)

5.1.2 `கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என நீடிய கோதில் திருப்பதிகம் (தி.12 பு.21 பா.70)

5.1.3 `பித்தா பிறைசூடி', யெனும் பெரிதாந் திருப்பதிகம் (தி.12 சரு.1-5 பா.74)

5.2 நிறைவாக நிற்கும் தொடரை முகந்து நிற்பன:

5.2.1 `மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வ தோவிவர் மாண்பதென்று தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்டமிழ்' (தி.12 பு.28 பா.318)

5.2.2 `புண்ணியா வுன்ன டிக்கே போதுகின்றே னெனப் புகன்று' (தி.12 பு.21 பா.427)

5.2.3 `தவநெறி தந்ததருளென்று தம்பிரான் முன்னின்று பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம்' (தி.12 சரு.1-5 பா.79)

5.3. இடையில் நிற்கும் தொடரை முகந்து நிற்பன:

`நினைப்பவர் தம் மனங்கோயில் கொண்டருளும்

அம்பலத்து நிருத்த னாரைத்

தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ

வெனப்பாடித் தில்லை சார்ந்தார்' (தி.12 பு.35 பா.1)

இனித் தேவார, திருவாசகத் தொடர்களைப் பொன்னே போல் போற்றிக் கையாளும் இடங்கள் பலவாகும். அவற்றுள் சில.

5.3.2 `அமரர் நாடாளாதே ஆரூராண்ட அயிராவணமே' (தி.6 .25 பா.1) எனவரும் திருநாவுக்கரசரின் திருவாக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றில், `அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர்' (தி.12 பு.69 பா.7) என எடுத்தாளப் பெறுகிறது.

5.3.3 "இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லை யென்னாதே ஈத்துவக்கும் தன்மையார்" (தி.2 .42 பா.9) எனவரும் திருஞான சம்பந்தரின் திருவாக்கு, சிறப்புலி நாயனார் வரலாற்றில், "இன்மை யால் இரந்து சென்றார்க் கில்லை யென்னாதே ஈயும் தன்யைார்" (தி.12 பு.35 பா.1) என எடுத்தாளப் பெறுகிறது.

5.3.4 "சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்" (தி.8 .15 பா.6) எனவரும் திருவாசகத் தொடர், சண்டேசுர நாயனார் வரலாற்றில் "இந்த நிலைமை யறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கன்பு தந்த வடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்" (தி.12 பு.20 பா.59) என எடுத்தாளப் பெற்றுள்ளது.

5.4 இவ்வாறே, "சிந்தனை நின் தனக்காக்கி" (தி.8 .5 பா.26) எனத் தொடங்கும் திருவாசகப் பாடல்,

ஆங்கவர் மனத்தின் செய்கை அரனடிப் போதுக் காக்கி

ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்

தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரா னடியார்க் காகப்

பாங்குடை உடையுங் கீளும் பழுதில்கோ வணமும் நெய்வார். (தி.12 பு.67 பா.3)

எனவரும் பாடலில், சொல்லும், பொருளுமாக நடமாடி நிற்கின்றது.

6.0 சைவ சித்தாந்தக் கருத்துகள்:

சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவ சமயம் ஆகும். இதன் அடிப்படை உண்மை இறை, உயிர், தளை எனும் முப்பொருள் பற்றியதாம். உயிர், தளையை நீக்கித் தலைவனை அடையவேண்டும் என்பதே இச் சமயத்தின் முடிந்த முடிபாகும். இக்கருத்துகள் தொல்காப்பியர் காலம் முதலாகவே தொடர்ந்து போற்றப்பெற்று வந்துள்ளன. `வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' (தொல். மரபு, 94), `பால்வரை தெய் வம்' (தொல். சொல். கிளவி 58), `கடவுள்' (தொல். புறத். 23, 27) எனத் தொல்காப்பியத்தில் வரும் குறிப்புகளால் இறையுண்மையும், அப் பெரும் பொருளின் இயல்பும் அறியப்படுகின்றது. `வினையின் நீங்கி, ஒன்றே, வேறே என்று இரு பால்வயின்' (தொல். சொல். களவு, 2) என்பனவாகிய குறிப்புகளால் வினையும் அதன் பயனுமாய தளை உண்மை அறியப்படுகின்றது.

உயிரினங்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணும் குறிப்பானும், `மன்னுயிர்', `தொல்லுயிர்' `எல்லா உயிர்க்கும்' என வரும் குறிப்புகளானும் உயிருண்மையும் அவ்வுயிர் தாமும் பலவா தலும் அறியப்படும். `வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப' (தொல். செய். 109), `ஏமுறு கடவுள்ள ஏத்திய மருங்கினும்' (தொல். கற். 5), `கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' (தொல். புறத். 33) என்பனவாகிய குறிப்புகளால், உயிர்கள் அப்பெருமானை வழிபட்டும், வாழ்த்தியும் வருமாற்றான் ஏமமும், இன்பமும் பெற்று வாழும் எனும் குறிப்பும் அறியமுடிகின்றது.

இதனையடுத்து வந்த சங்க நூல்களிலும் பின்வந்த பன்னிரு திருமுறைகளிலும் இவ்வுண்மைகள் ஆங்காங்கும் பரந்தும், விரிந்தும் காணக்கிடக்கின்றன. திருக்குறளிலோ இக்கருத்துகள் மிக ஆழமாக வும், அழுத்தமாகவும் குறிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழிவழியாகப் போற்றப் பெற்றுவரும் இவ்வரிய கருத்துகள் அளவைகளானும் பொருந்துமாற்றானும் எண்ணித் தொகுத்தும் வகுத்தும் கூறப் பெற்ற நிலையில் நூல் வடிவு பெற்ற காலம், சேக்கிழாருக்குப் பிற்பட்ட கி. பி. 13, 14ஆம் நூற்றாண்டுகளிலாம்.

இப்பெருஞ் சமயத்தைச் சேக்கிழார் ஆங்காங்குப் போற்றி மகிழ்வர். `வேதப் பயனாம் சைவமும் போல்' (தி.12 பு.20 பா.9), `வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' (தி.12 பு.18 பா.1) என்பன அவற்றுள் சிலவாம். `வேதமோடு சைவநெறி விளங்க வந்த கவுணியனார்' "சைவ மாமறைத் தலைவர்", "சைவசிகாமணி யார்", (தி.12 பு.28) என்றெல்லாம் ஞானசம்பந்தரோடு இச்சமயத்தை இணைத்துக் கூறி மகிழும் இடங்களும் உள.

6.1 சித்தாந்தக் கொள்கைகள்: சித்தாந்தம் = முடிந்த முடிபு. இச்சமயத்தின் முடிந்த முடிபாகக் கூறப்படும் பொருள் மூன்று என முன்னர் குறிக்கப் பெற்றது. இதனைச் சேக்கிழாரும், "செய்வினையும் செய்வானும் அதன் பயனுங் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லை" (தி.12 பு.34 பா.5) எனக் குறிப்பர்.

இந் நான்கனுள், செய்வினையையும், அதன் பயனையும் ஒன் றாக வைத்து, ஏனைய இரண்டையும் உள்ளவாறு கொண்டு முன் னோர் கூறினர். இவ்வகையால் இந்நான்கனுள் ஒவ்வொன்றுமே உண்டு என்பாரும் இல்லை என்பாருமாகப் பலரும் பலவாறாகப் பிணங்குவர். சைவநெறி இந்நான்கையும் மலைவின்றி ஒப்புக் கொண்டுள்ளமையை ஆசிரியர் தெளிவாகக் குறிக்குமிடம் இதுவாகும்.

செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும்

உய்வான் உளன்என் றுணர். -திருவருட்பயன், 53

எனப் பின் வந்த திருவருட்பயனும் இதனை வழி மொழிந்து நிற்கும்.

`பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி' (தி.10 பா.114), என முதன் முதலாகக் குறித்துக் காட்டியது திருமந்திரமேயாகும்.

6.2 மெய்கண்ட நூல்களில் அடியவர்களின் வாழ்வும் வாக்கும்:

திருக்களிற்றுப்படியார்: இதனை அருளியவர் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் ஆவர்.

6.2.1. ஞானியர்களின் கருவி கரணங்கள் புறத்தோய்வின்றித் திருவருளிலேயே திளைத்து நிற்கும் என்றும், அவ்வகையினாலேயே அவர்கள் செயற்கரிய செயல்கள் பலவும் செய்தனர் என்றும் இந்நூல் கூறுகின்றது.

பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்

காலனைஅன் றேவிக் கராங்கொண்ட-பாலன

மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்

கரணம் போல் அல்லாமை காண். -திருக்களிற். 12

என்பது அவர் திருவாக்காகும்.

6.2.2 அடியவர்கள் செய்துவந்த அருஞ்செயல்களை வல்வினை மெல்வினை எனப் பகுத்து, அவற்றைச் சிவதன்மம் என இந்நூல் குறிக் கின்றது. இவற்றுள் மெல்வினையை,

ஆதியை அர்ச்சித்தற் கங்கமும் அங்கங்கே

தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே

நல்வினையாம் என்றே நமக்கும் எளிதானவற்றை

மெல்வினையே என்றது நாம்வேறு. -திருக்களிற். 17

எனவரும் பாடலில் விளக்கி, வல்வினைக்கு,

வரங்கள் தரும்செய்ய வயிரவர்க்குத் தங்கள்

கரங்களினால் அன்று கறியாக்க - இரங்காதே

கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை

வல்வினையே என்றதுநாம் மற்று. -திருக்களிற். 18

பாதக மென்றும் பழியென்றும் பாராதே

தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்

கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே

சண்டீசர் தஞ்செயலால் தான். -திருக்களிற். 19

செய்யின் உகுத்த திருப்படி மாற்றதனை

ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து

ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுத்தவரை

நாட்டியுரை செய்வதென்னோ நாம். -திருக்களிற். 20

என வரும் வரலாறுகளை எடுத்துக்காட்டி இவற்றின் வழி அதனை விளக்கியுள்ளார் ஆசிரியர்.

6.2.3 இறைவனைக் காண்பதற்குரிய நெறிகள் யோகமும், பத்திமையும் ஆம். இவற்றுள் யோகநெறியில் நின்று தலைப்பட்ட வர்கள் திருக்குறிப்புத் தொண்டர், அரிவாட்டாயர், ஏயர்கோன் கலிக் காமர், மூர்த்தியார், மூர்க்கர் என்ற ஐவரும் ஆவர் எனக் கூறுகின்றார்.

கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில்

வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும்

அகமார்க்கத் தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா

சகமார்க்கத் தாலன்றே தான். -திருக்களிற். 50

என்பது அவர் திருவாக்காகும்.

6.2.4 இனிப் பத்திமை நெறி நின்று இறைவனைத் தலைப்பட்ட வர்கள், கண்ணப்பர், சேந்தனார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவ ரும் ஆவர் எனக் கூறுமவர்,

கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்

கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர்

தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்று

யாமறியும் அன்பன் றது. -திருக்களிற். 52

அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை

அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்த சடை

வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்

சேந்தனார் செய்த செயல். -திருக்களிற். 53

சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம்

சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த

தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த

மனமுடையாள் அன்பிருந்த வாறு. -திருக்களிற். 54

என அவர்களின் செயற்பாடுகளைக் காட்டி மகிழ்விக்கின்றார்.

6.2.5 சிவன் முதலே அன்றி முதல் இல்லை எனப் பெருமிதத் தோடு கூறுமவர், அப்பெருமானையே முதற் பொருளாகக் கொண்டி ருக்கும் இச்சமயப் பெருமையையும் விளக்கியருளுகிறார்.

இன்று இச்சமயத்தின் அல்லது மற்றேழையுடன்

ஒன்று சொலி மன்றத்து நின்றவரார் - இன்றிங்கே

அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவரார்

எங்கு மிலை கண்டாய் இது. -திருக்களிற். 65

என்பது அவர் திருவாக்காகும்.

6.2.6 திருவருளிலேயே தோய்ந்து நிற்கும் ஞானியர்க்கு, இறைவன் தான் செய்யும் தன்மைகள் அனைத்தையும் அவர்களும் செய்யுமாறு அருள்புரிவன் என்பார்; இதற்கு மேற்கோளாக ஞானசம் பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றார்.

ஓடம் சிவிகை உலவாக் கிழியடைக்கப்

பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்பு

என்புக் குயிர்கொடுத்தல் ஈங்கிவைதாம் ஓங்குபுகழ்த்

தென்புகலி வேந்தன் செயல். -திருக்களிற். 70

கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற்கொலை தவிர்த்தல்

கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் - நல்ல

மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல்

திருவாமூ ராளி செயல். -திருக்களிற். 71

மோகம் அறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென

ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் - தோகையர்பால்

தூதாகப் போகவிடும் வன்தொண்டன் தொண்டுதனை

ஏதாகச் சொல்வே னியான். -திருக்களிற். 72

பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்

தூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக்

கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்

திருவாத வூராளுந் தேன். -திருக்களிற். 73

என்பன அவர் திருவாக்காகும்.

6.3 சிவஞான போதம்: இவ்வரிய நூலை அருளியவர் மெய்கண்டாராவர். ஞானியர்களும் தம் உடல் நீங்கும்காறும் திருக் கோவிலுள்ளிருக்கும் திருமேனி தன்னையும், திருத்தொண்டர்களையும் இறைவன் எனவே கருதி வழிபட்டு வரவேண்டும் என இந்நூல், பன்னிரண்டாவது நூற்பா கூறுகிறது. பெரியபுராண வரலாறுகள் அனைத்துமே இவ்வரிய கருத்தை அடித்தளமாகக் கொண்டன வாகும். எடுத்துக்காட்டாக அரிவாட்டாயர், எறிபத்தர், ஐயடிகள் காடவர்கோன், கணம்புல்லர், கண்ணப்பர், கழறிற்றறிவார், கழற்சிங் கர், குங்குலியக்கலயர், கோச்செங்கட்சோழர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருநாளைப்போவார், சுந்தரர், முருகர், மூர்க்கர் முதலியோர் திருக்கோவில் வழிபாட்டிலும், அப்பூதி அடிகளார், இயற்கையார், இளையான்குடிமாறர், திருக்குறிப்புத்தொண்டர், திருநீலகண்டயாழ்ப்பாணர், பெருமிழலைக்குறும்பர், மானக் கஞ்சாறர், மெய்ப்பொருளார் முதலியோர் அடியவர் வழிபாட்டிலும் திளைத்து நின்றமை அவரவர் தம் வரலாற்றால் அறியலாம். சிறப்பு வகையான் இவர்கள் ஆற்றிய வழிபாடுகளை இவ்வகையால் பிரித்துக் காணினும், பொதுவகையான் இவர்கள் அனைவருமே இவ்விரு வழி பாடுகளையும் உளங்கொண்டவர்களாய் இருந்தனர்.

தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 5 | 6 | 7 | 8 | 9 |