
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
3.4.9
சாந்தம்: நாவரசர் சமணர்களால் பல்லவன் வழி ஏவப் பட்ட நான்கு இடையூறுகளையும் அமைதியாக ஏற்ற அருமையும், முத்தநாதன் மெய்ப்பொருளாருக்கு விளைத்த தீங்கினை, அவர் அமைதியாக ஏற்ற அருமையும் இச்சுவைக்கு இலக்காவனவாம்.3.4.10
பத்திச்சுவை: இச்சுவை இப்பெரு நூலில் யாண்டும் நீக்கமற நிற்பதொன்றாம். அவற்றுள் சில:3.4.10.1
கற்களின் திரட்சியே மலை எனக் காண்பது நம்ம னோர்க்குரிய இயல்பு. ஆனால் சேக்கிழாருக்கோ "புண்ணியம் திரண்டுள்ளது போல்வது"(தி.12 சரு.1 பா.2) எனக் கூறுமாறு திருக் கயிலை மலை, காட்சி அளிக்கிறது.3.4.10.2
ஆற்றுவளம் காணும் நம்மனோர்க்கு அதன்கண் ஓடுவது நீர்ப்பெருக்காகவே காட்சியளிக்கும். ஆனால் சேக்கிழா ருக்கோ, காவிரி `அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கெனக்' காட்சி தருகிறது: வழிபடும் அன்பருமாகக் காட்சி தருகிறது (தி.12 சரு.1-2 பா.6,7).3.4.10.3
வயலில் விளைந்து நிற்கும் நெற்கதிர்களைக் காணின் நம்மனோர்க்கெல்லாம் மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று , யானை கட்டிப் போரடிக்க வேண்டும் என்ற அளவே தோன் றும். ஆனால் சேக்கிழாருக்கோ அலர்ந்து நிற்கும் கதிர்களெல்லாம் `அரனுக்கு அன்பர் ஆலின சிந்தை போலக்' (தி.12 சரு.1-2 பா.21) காட்சி அளிக்கின்றன. அம்மட்டோ!பத்தியின்
பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்தத்தமிற்
கூடி னார்கள் தலையினால் வணங்கு மாபோல்மொய்த்துநீள்
பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றைவித்தகர்
தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்.(
தி.12 சரு.1-2 பா.22)என்றன்றோ
அக்கதிர்கள் காட்சி தருகின்றன.3.4.10.4
இளமை மீதூர்ந்து நிற்கும் ஆடவர் ஒருவர், அவ் வமைப்பிலான ஒரு பெண்ணைக் காணும்பொழுது, `கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ, அற்புதமோ'(தி.12 சரு.1-5 பா.140) என்றெல்லாம் ஐயுறுவதாகக் கூறுவது, கவிஞர் பலரும் கூறுவன வேயாம். ஆனால் சேக்கிழாருக்கோ, நம்பியாரூரர் பரவையாரைக் கண்டபொழுது, `பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? அற் புதமோ? சிவனருளோ?' (தி.12 சரு.1-5 பா.140) என ஐயுற்றதாகக் கூறக் காண நேருகின்றது. இவ்வாறே ஒரு பெண்ணும் ஒரு தலைவ னைக் காணுங்கால் முருகனோ? மாரனோ? விஞ்சையனோ? என ஐயுறல் இயற்கையாகலாம். ஆனால் சேக்கிழாருக்கோ, பரவையார் ஆருரரைக் கண்டபொழுது, `மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ' (தி.12 சரு.1-5 பா.144) என ஐயுறுவதாகக் காட்டத் தோன்றுகிறது. பரவையாரை நம்பியாரூரர் தேடும்பொழுதும், `ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே' (தி.12 சரு.1-5 பா.152), `எம்பிரான் அருள் எந்நெறிச் சென்றதே' (தி.12 சரு.1-5 பா.163), `எந்தையார் அருள் எந்நெறிச் சென்றதே' (தி.12 சரு.1-5 பா.154) என்பனவாய கூற்றுக்களாலேயே கூற நேருகின்றது. இவையெல்லாம் சிற்றின்ப உணர்விலும் பேரின்ப உணர்வு தலைப் பட்டு நிற்கும் இடங்களாம்.3.4.10.5
காதலர் இருவர் பிரிந்திருக்குங்கால் தென்றல் வருத் துவது இயற்கை. அதனைப் பலபட வெறுத்துக் கூறுவதும் இயற்கை. ஆனால் சேக்கிழாரோ நம்பியாரூரரை வருத்தும் தென்றலைத் தமிழ்த் தென்றலாகக் காட்டுகின்றார். அதுமட்டுமன்று. வருத்துதற்குரிய இயல்பு எவ்வாற்றானும் அதற்கு அமையாதிருக்க வருத்த நேர்வ தென்னோ? என அதனை நோக்கி வினவவும் செய்து, நம்மனோரை யும் சிந்திக்க வைக்கின்றார்.பிறந்த
தெங்கள் பிரான்மல யத்திடைச்சிறந்த
ணைந்தது தெய்வநீர் நாட்டினில்புறம்ப
ணைத்தடம் பொங்கழல் வீசிடமறம்ப
யின்றதெங் கோதமிழ் மாருதம். (தி.12 சரு.1-5 பா.167)என்பது
அவர் கூற்றாகும். நலம் தீங்குகளில் யாதொன்றைச் செய்வார்க் கும் அப்பண்பு வருதற்குக் காரணம், ஒன்று பிறப்பின் வழியாகலாம்; அல்லது, அவர் வாழ்வின் வழிவந்த சுற்றுச் சூழலின் வழி ஆகலாம். இவ்விரண்டினாலும் குறைவற்ற நினக்கு, அதிலும் தமிழ்க் காற்றாகிய நினக்கு, மறம் செய்ய எங்ஙனம் வாய்த்தது? என வியக்கின்றாராம் ஆரூரர். இத்தகைய கைவண்ணமெல்லாம் கூத்தப் பெருமான், ஆசிரிய ருக்கு வழங்கிய அருள் வண்ணமேயாம்.இளையான்குடிமாறனார்
இரவில் கறிக்கெனக் குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிரைத் தடவிப் பறிக்கின்றார். அவ்வாறு பறிப்பவை பயிராகவே நம்மனோர்க்குத் தோன்றும். ஆனால் சேக்கிழாருக்கோ அப்பயிர் அவ்வடியவரின் பாசமாகிய பயிராகத் தோன்றுகிறது; காரணம், அடியவர்க்குணவு என அவர் கொடுப்பது இதுவே இறுதியாகின்றது. இனி அவர் சிவலோகம் பெறும் பேறுபெற இருக்கின்றார். ஆதலால், `பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க'(தி.12 பு.4 பா.21) என்று அருளுகின்றார். இதுபோன்றே அரிவாட்டாய நாயனார் வரலாற்றில், `உள்ளந் தண்ட றக் கழுத்தினோடே, ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப்பரிவார் ஒத்தார்' (தி.12 பு.13 பா.17) என அருளுவதும் காணலாம். விரிப்பில் பெருகும், தொகுப்பின் எஞ்சும் ஆதலின் இவ்வளவில் அமைவதே சாலும்.இவ்வாறாய
அருமைப்பாட்டாலன்றோ `பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ'(சேக்கிழார் பிள்ளைத் தமிழ்) என மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும் கூறுவா ராயினர்.3.5
யாப்பமைதிகள்: சேட்புலத்து ஒருவன் எழுத்தும் சொல் லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால், அச்செய்யுளை இன்னதென்று விகற்பித்து உணர்தற்கு ஏதுவாய ஒசையே பா என்பர். இத்தகைய ஓசை நலம் தவழப் பாக்கள் அமைந்திருக்குமாற்றை இந்நூற்கண் பலவிடத்தும் காணலாம். கண்ணப்பர் (தி.12 பு.10 பா.68-78-79-91), ஆனாயர் (தி.12 பு.14 பா.1-12), ஏனாதிநாதர் (தி.12 பு.9 பா.15-24), புகழ்ச்சோழர் (தி.12 பு.41 பா.20-25) ஆகியோர் வரலாற்றில் காணும் பாடல்களைக் காண்க.இந்நூற்கண்
எடுத்தாளப் பெற்றுள்ள பாவின வகைகள் மூன்றாம். அவை ஆசிரியம், கலி, வஞ்சி என்பனவாம்.1.
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் - 18042.
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் - 753.
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் - 2754.
தரவுக் கொச்சக் கலிப்பா - 12025.
கலி நிலைத்துறை - 5456.
கலி விருத்தம் - 3687.
கட்டளைக் கலித்துறை - 118.
வஞ்சி விருத்தம் - 6ஆக
மொத்தம் பாடல்கள் 42863.6
அணிநலன்கள்: தொல்காப்பியர், உவமவியல் என்றோர் இயலைப் படைத்து, அதன்கண் உவமங்களின் பல்வேறு நிலைகளை விளக்கியுள்ளார். அறியாததொரு பொருளை அறிந்ததொரு பொரு ளின் துணைக் கொண்டு விளங்குதற்கும், அறிந்த பொருளில் காணும் மாட்சிமைகளை விளக்குதற்கும் இவ் உவமம் கருவியாகும் என்பர்.இது
, பொருளை விளக்குதற்குரிய கருவியேயன்றி இதனை அணி என்றல் சாலாது என்பர் பேராசிரியர். எனினும், பிற்காலத்தே இதனை அணி என்று கூறலே பெருவழக்காகக் கொண்டுள்ளமையின் அவ்வாறே ஈண்டும் கொள்ளப்படுகிறது. தொல்காப்பியத்தில் உவமையின் வகைகளுள் ஒன்றாகவே உருவகம் அமைகின்றது. அணி இலக்கணம் பயில்வார் பலரும் மாறன் அலங்காரத்தையும் தண்டியலங்காரத்தையும் பயில்வதையே மரபாகக் கொண்டுள்ளனர். இவற்றுள்ளும் தண்டியலங்காரமே பெரிதும் பயிற்சியில் உள்ளது. இதன்கண் கூறப்படும் அணிகள் முப்பத்தைந்தாம். பொருளணி யியலிலும் சொல்லணியியலிலுமாகப் பல அணிகள் கூறப்படுகின் றன. இவ்விலக்கண வழி அணி நலன்களை எண்ணல் தக்கதாம்.3.6.1
தன்மையணி: எவ்வகைப் பொருளையும் அவ்வவ் வியல்பு நலம் குன்றாது உயர்வு நவிற்சியின்றிக் கூறுவது தன்மையணி ஆகும். கண்ணப்பர் வரலாற்றில் கூறப்பெறும் வேடர்தம் இருக்கையின் இயல்பும் (தி.12 பு.10 பா.3-6) திருநாளைப்போவார் வரலாற்றில் கூறப்பெறும் புலைப்பாடியின் இயல்பும்,(தி.12 பு.18 பா.7-10) அதிபத்தர் வரலாற்றில் கூறப்பெறும் மீனவர்சேரியின் இயல்பும் (தி.12 பு.43 பா.6-8) இவ்வணி நலம்பட அமைந்துள்ளன.3.6.2
உவமை: இந்நூற்கண் வரும் உவமைகள் பலவாம். அவற்றை முத்திறப்படுத்திக் காணலாம்.அ
. இலக்கிய அமைவில் வருவன.ஆ
. சமய உணர்வில் அமைவன.இ
. மெய்யுணர்வு (சாத்திரம்) வகையில் அமைவன.3.6.2.1
இலக்கிய அமைவில் வருவன: துதைந்தெழுங் கன்னி வாளை கமுகின் மேற் பாய்வன மன்னுவான் மிசை வானவில் போலுமால் (தி.12 சரு.1-2 பா.20), முகில்நுழை மதியம்போலத் துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி(தி.12 சரு.1-5 பா.15), தண்மதி முதிர்ந்து, கதிர் சாய்வதென மீதே வெண்ணரை முடித்தது(தி.12 சரு.1-5 பா.29), மறையோன் றன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையுமா போல் வள்ளலுங் கடிது சென்றார் (தி.12 சரு.1-5 பா.50),மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து (தி.12 பு.5 பா.7), கதிரோன் எழ மழுங்கிக் கால் சாயுங்காலை மதிபோல் அழிந்து பொறா மற்றவன்(தி.12 பு.9 பா.8), வெங்கண் புலி கிடந்த வெம்முழையில் சென்றழைக்கும் பைங்கண் குறுநரியே போல்வான் (தி.12 பு.9 பா.10), பான்மதி உவரி ஈன்றாலென மகப் பயந்த போது (தி.12 பு.10 பா.13), கருவரை காளமேகம் ஏந்திய தென்னத் தாதை பொருவரைத் தோள்க ளாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் (தி.12 பு.10 பா.15), வென்றி மங்கை வேடர் வில்லின்மீது மேவு பாதம் முன்சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய் ஒன்றொடொன்று நேர்படாமல் ஒடு நாய்கள் மாடெலாம் (தி.12 பு.10 பா.69), மலையில் தேவர் தம்மைக் கண்ட ணைந்து கொண்டு வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும்பென்ன நீங்கான்(தி.12 பு.10 பா.116), வாயின் மஞ்சனநீர் தன்னை விளைத்த அன்புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார் (தி.12 பு.10 பா.123), மேவு செல்வம் களிறுண் விளங்கனி யாவதாகி அழியவும் (தி.12 பு.13 பா.8), செந்தீ மேலெழும் பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த அந்தணன்போல் தோன்றினார் (தி.12 பு.18 பா.33), பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல் மள்ளர்...... கைவருட வெள்ள நீர்...... மடையுடைப்பது பாலி (தி.12 பு.19 பா.22), ஆங்கு வளரெயிலினுடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம்போல ஓங்கு நிலைத் தன்மையை (தி.12 பு.19 பா.88), ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்கும் தாரகையும் மதியும்போல(தி.12 பு.20 பா.8), மெய்யொளியின் நிழற்காணும் ஆடியென வெண்மதியை வைய மகள் கையணைத்தாற் போலுயர்வ மலர்ச் சோலை (தி.12 பு.21 பா.9), ஒழியாத தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன்போல் மனந் தழைத்தார் (தி.12 பு.21 பா.196), அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய்........ குளிர்தூங்கும்..... தண்ணீர்ப் பந்தர் (தி.12 பு.25 பா.5), பளிக்குமணி மரகத வல்லியிற் கோத்த பான்மை எனத் துளித்தலைமேல் அறுகுபனி தொடுத்தசைய (தி.12 பு.28 பா.329).3.6.2.2
சமய உணர்வில் அமைவன: பொன்னின் வெண் திருநீறு புனைந்தெனப் பன்னு நீள்பனி மால்வரை (தி.12 சரு.1-1 பா.1), புண்ணியம் திரண்டுள்ளது போல்வது கயிலை மலை (தி.12 சரு.1-1 பா.2), பூதம் யாவையின் உள்ளலர் போதென......ஆருர் மலர்ந்ததால் (தி.12 சரு.1-1 பா.33), ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.....காவிரி (தி.12 சரு.1-2 பா.6), அரனுக்கன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் (தி.12 சரு.1-2 பா.21), பத்தியின் பாலராகிப் பரமனுக்காளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலை யினால் வணங்குமாபோல்........ விளைந்தன சாலியெல்லாம் (தி.12 சரு.1-2 பா.22), நீற்றொளியால் நிறை தூய்மையால் புரந்த அஞ்செழுத் தோசை பொலிதலால்....... பாற்கடல் போல்வது (தேவாசிரிய மண்டபம்) (தி.12 சரு.1-4 பா.3), பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் (தி.12 சரு.1-4 பா.6), வண்டலர் கைதை துன்றுநீறு புனை மேனியவாகித் தூயநீறு புனை தொண்டர் களென்ன (தி.12 சரு.1-5 பா.96), அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்(தி.12 சரு.1-5 பா.159),அண்ணல் வெண்ணீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா (தி.12 சரு.1-5 பா.162), சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணில மலையை ஏறி (தி.12 பு.10 பா.103), பொடி மூடு தழலென்னத் திருமேனிதனில்..... திருநீற்றின் (தி.12 பு.12 பா.25), நல்லோர் மனம்போல் சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை (தி.12 பு.16 பா.2), அருட் பெருகு தனிக்கடலும் உலகுக்கெல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும், ஓங்கும் பொருட்சமய முதற் சைவநெறிதான் பெற்ற புண்ணியக்கண் இரண்டெனவும், புவனமுய்ய இருட் கடுவுண்டவ ரருளும் அகிலமெல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருட்கலை ஞானக்கன்றும் அரசும் சென்று (தி.12 பு.21 பா.185), கிளர்ந்த திருநீற்றொளியிற் கெழுமிய நண்பகலும் (தி.12 பு.28 பா.6), தாமரையும்....... செழுஞ்சாமம் பாடுமால் (தி.12 பு.28 பா.12), மாமறையோர்....... அறுவை உத்தரியந் தனிவிசும்பில் எறிந்தார்க்கும் தன்மையாலே, சிவானந்தப் பெருக்காறு போத அதன்மீது பொங்கும் நுரைக்குமிழி யெழுந்திழிவனபோல் (தி.12 பு.28 பா.95),வெண்தரளப் பந்தர் நிழல் எடுத்த திருவடி நீழலென (தி.12 பு.28 பா.395), (திருநீற்றுத் தொண்டர் குழாம்) புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்த (தி.12 பு.28 பா.650), திருநீற்றின்சோதி நல்லொளி வட்டமாகி நண்ணிமேல் வருவதென்ன வில்வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற (தி.12 பு.28 பா.742), இட்ட ஏடு மருவுறும் பிறவியாற்றில் மாதவர் மனம் சென்றாற் போற்பொரு புனல் வைகையாற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் (தி.12 பு.28 பா.846), ஓங்கிய ஞானவெள்ளம் உள்நிறைந் தெழுவ தென்ன...... பாங்கொளி பரப்பி நின்றார் (தி.12 பு.28 பா.1228), சங்கரனார் திருவருள்போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து (தி.12 பு.29 பா.168), அகநோக்குங் குறிப்பேயன்றிப் புற நோக்குங் கண்டவுணர்வு துறந்தார்போல் பிறந்த பொழுதே கண்காணார் (தி.12 பு.31 பா.1).3.6.2.3
மெய்யுணர்வு வகையில் அமைவன: இவ்வுலகத்து முன்னாள் தங்கிய இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை, ஏனைப் புறஇருள் போக்குகின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம் (தி.12 பாயி. பா.10), பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க (தி.12 பு.4 பா.21),முட்டாதார் கொல்களத்தை விட்டு நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்டபோதில் அலைப்பட்ட ஆர்வமுதற் குற்றம் போலாயினார் (தி.12 பு.9 பா.27), சினமொடு கவர் நாய் நிலவிய இருவினை வலை யிடை நிலைசுழல்பவர் நெறிசேர் புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளினளவுளவே (தி.12 பு.10 பா.85), பேணு தத்துவங்களென் னும் பெருகு சோபானமேறி ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல நீள்நிலை மலையை ஏறி(தி.12 பு.10 பா.103), முதல்வனார் அருள் நோக்கால் இன்புறு வேதகத் திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத் தன்பரிசும் வினை யிரண்டும் சாரும் மல மூன்றுமற அன்பு பிழம்பாய்த் திரிவார் (தி.12 பு.10 பா.154), ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப்பரிவார் ஒத்தார் (தி.12 பு.13 பா.17), செய்த விரைத்தாம மென மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார்போல் நின்ற நறுங்கொன்றை (தி.12 பு.14 பா.21), அடியார்தந் தூசுடைய துகள் மாசு கழிப்பார்போல் தொல்லை வினை ஆசுடைய மல மூன்றும் அணையவரும் பெரும்பிறவி மாசினை விடக்கழித்து (தி.12 பு.19 பா.114), பெருஞ்செல்வம் அவர் இருவினைபோல் மாண்டது (தி.12 பு.45 பா.8),3.7.
சிலேடை: ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி தெரிவுதர வருவது சிலேடையாகும். இவ்வணி நலம்பட வரும் பாடல்கள் பல உள. எடுத்துக்காட்டாகத் திருநாட்டுச் சிறப்பில் (தி.12 சரு.1-2) வரும் 32, 35 ஆகிய பாடல்களையும், மூர்த்தி நாயனார் வரலாற்றில் (தி.12 பு.15) வரும் 2,3,5 ஆகிய பாடல்களையும், முருக நாயனார் வரலாற்றில் (தி.12 பு.16) வரும் 4ஆவது பாடலையும் காண்க.3.8.
உருவகம்: உருவகமாக வரும் பாடல்கள் பலவேனும் இரண்டு பாடல்கள் குறிக்கத் தக்கனவாம்.`
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்'(தி 12 பு.28 பா.728). `படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரிற் பணைத்தோங்கி, வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக், கடிய வெய்ய இருவினையின் களைகட் டெழுந்து கதிர்பரப்பி, முடிவிலாத சிவபோகம் முதிர்ந்து முறுகி விளைந்ததால்'(தி 12 சரு.13 பா.2) எனத் திருஞானசம்பந்தரையும், சுந்தரரையும் பற்றிவரும் இவ்வுருவகங்கள் பல்காலும் படித்து இன்புறத்தக்கன. இனைய பல அணிநலன்கள் இந்நூற்கண் ஆங்காங்கும் அமைந்து அணி செய்கின்றன.4.0 திருக்குறள் கருத்துகள்:
இற்றைக்கு
இருக்கும் தமிழ்நூல்களில் ஒழுக்க நெறிகளைத் தலைமையும், தகவும் பொருந்த எடுத்துரைத்திருக்கும் நூல் திருக்குறள் ஒன்றேயாம். ஆதலின், அந்நூற் கருத்தையும் தொடர்களையும் பின் வந்த ஆசிரியர்கள் பலரும் எடுத்துப் போற்றுவார் ஆயினர். அவ்வறி ஞர் பெருமக்களில் சேக்கிழார் பெருமானும் ஒருவர் ஆவர்.4.1
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. -குறள், 733தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. -குறள், 43இவ்விரு
குறட் பாக்களின் கருத்துகளும்,அரசுகொள்
கடன்க ளாற்றி மிகுதிகொண் டறங்கள்பேணிப்பரவருங்
கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்விரவிய
கிளையும் தாங்கி விளங்கிய குடிக ளோங்கிவரைபுரை
மாடம்நீடி மலர்ந்துள பதிக ளெங்கும்.(
தி.12 சரு.1-2 பா.26) எனவரும் பாடலில் ஏற்றுப் போற்றப்பட்டுள்ளன.4.2 "
குணமென்னும் குன்றேறி நின்றார்"(குறள், 29) என வரும் குறள் தொடரை, "கோதிலாத குணப்பெருங் குன்றனார்" (தி.12 சரு.1-4 பா.7) எனவரும் பாடற்பகுதி முகந்து நிற்கின்றது.4.3
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லையாண்டும் அஃதொப்பது இல். -குறள், 363
`
விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' (குறள், 180) எனவரும் குறள் கருத்துகள், "வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" (தி.12 சரு.1-4 பா.8) எனவரும் பாடற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.4.4
சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். -குறள், 359
என்னும்
குறட்பாக் கருத்து, "தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ" (தி.12 பு.28 பா.63); "தங்கிய பவத்தின் முன் னைச் சார்புவிட்டு அகல நீங்கிப்" (தி.12 பு.10 பா.104); "கண்ணுத லோன் திருநீற்றுச் சார்பினோர்க்குங் கவலை வருமோ" (தி.12 பு.28 பா.562); "சைவ மெய்த் திருவின் சார்பே பொருளெனச் சாரு நீரார்" (தி.12 பு.2 பா.2); எனவரும் பாடற்பகுதிகளில் அழகுற எடுத்துப் போற்றப் பெற்றுள்ளது.4.5
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. -குறள், 13
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். -குறள், 17
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பரிது. -குறள், 16
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. -குறள், 18
எனவரும்
குறட்பாக் கருத்துகளை,மண்ணின்மிசை
வான்பொய்த்து நதிகள்தப்பிமன்னுயிர்கள்
கண்சாம்பியுணவு மாறிவிண்ணவர்க்குஞ்
சிறப்பில்வரும் பூசையாற்றாமிக்கபெரும்
பசியுலகில் விரவக்கண்டு. (தி.12 பு.28 பா.562)எனவரும்
பாடற்பகுதி அவற்றின் பிழிவாகத் தந்து நிற்கின்றது.4.6
அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். -குறள், 691
எனவரும்
குறள் கருத்து,"..........
தென்னன்வெப் புறுதீத் தம்மைஎறியமா
சுடலுங் கன்றி அருகுவீட் டேற நிற்பார்அறிவுடை
யாரை யொத்தார் அறிவிலா நெறியி னின்றார்"(
தி.12 பு.28 பா.766) எனவரும் பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.4.7
இருநோக் கிவளுண்கணுள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. -குறள், 1091
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து. -குறள், 1102
இக்குறட்பாக்
கருத்துகளை, "காமன் செருவெழுந்தனுவ தொன்றுஞ் சேம வில் லொன்றுமாக இருபெருஞ் சிலைகள்முன் கொண்டெழுந் தன போல ஏற்ப" (தி.12 பு.28 பா.1097) எனவரும் பாடற்பகுதி முகந்து நிற்கின்றது.முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |