
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
3.0. இலக்கண அமைதிகள்:
இற்றைக்குக் காணும் இலக்கண நூல்களில் தொல்காப்பியமே முதன்மையும் தலைமையும் உடையதாகும். செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிய இந்நூல் எழுத்து, சொல், பொருள் எனும் மூவகைப் பகுப்பில் அமைந் துள்ளது.இவற்றுள் முதலிரு பகுப்புகளிலும் கூறப்பெற்றிருக்கும் எழுத்தமைவுகளும் சொல்லமைவுகளும் இந்நூற்கண் அமைந்துள் ளமை வெளிப்படை. அவற்றுள் எடுத்துக்காட்டாக ஒன்று ஈண்டுக் குறிக்கத்தகும்.
3.1. ஒடுஉருபு: உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் `ஒடு, உருபு அங்குக் குறிக்கப் பெறும் பொருள்கள் இரண்டனுள், உயர்ந்ததனோடு வைத்துக் குறித்தல் வேண்டும் என்னும் தொல்காப்பியம். ` ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே'(தொல். சொல். வேற். மயங். 8) என் பது அந்நூற் கூற்றாகும். இதற்கேற்பக் காரைக்காலம்மையாரின் இளமை வளர்ச்சியை, `அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவதென வளர்வார்'(தி.12 பு.24 பா.4) எனச் சேக்கிழார் கூறியுள்ளார். அன்பு, அழகு ஆகிய இரண்டனுள், அன்பே இறவாத இன்ப அன்பாய் அம்மையார் வரலாற்றில் அமைகிறது. அழகு ஒரு கால எல்லையில் உதறியெறியப்படுகின்றது. இந்நுட்பம் அமைய, இவ்விலக்கண அமைதி இடம்பெற்றுள்ளமை அறிந்து இன்புறத் தக்கதாம்.
இனித் தொல்காப்பியம் மூன்றாம் அதிகாரத்தில் கூறப்பட்ட பொருளமைவுகள் எவ்வகையில் இடம் பெற்றுள்ளன என்பதைக் காணலாம். இதன்கண் காணும் பொருள் அமைவுகள் அகம், புறம் என இருவகையில் அமைந்துள்ளன.
3.2. அகப்பொருள் அமைதி: கைக்கிளை, ஐந்திணை, பெருந் திணை என இதனை எழுவகைப்படுத்திக் காண்பர். கைக்கிளை என் பது ஒருதலைக் காமமாகும். ஐந்திணை என்பது ஒத்த காமமாகும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமமாகும்.
இவற்றுள், ஐந்திணை என்பது புணர்தல், பிரிதல் முதலான ஐவகை ஒழுக்கங்களைக் குறிக்கும். இவ்வொழுக்கங்கள் ஐந்தும் நிகழ்தற்குரிய இடங்கள் குறிஞ்சி, பாலை முதலிய ஐவகை நிலங்களு மாம். இவற்றுள், பாலை என்பது தனக்கு என ஒரு நிலன் உடைய தன்று என்பர். எனினும் முதற்பொருளில் ஒன்றான பொழுதும், ஏனைய கருப்பொருள் உரிப்பொருள்களும் இதற்கும் உரியவாகக் கூறுவர். இவ்வகையில், இவ் ஐவகை நிலங்களுக்கும், முதல் கரு உரியென வரும் மூவகைப் பொருள்களையும் நம் இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும். இவற்றை ஆசிரியர் சேக்கிழார் பொதுவாகப் பலவிடங்களிலும், சிறப்பாகத் திருக்குறிப்புத்தொண்டர் வரலாற்றிலும் (தி.12 பு.19) கூறுகின்றார்.
3.2.1 முதல் கரு உரி என்பன: முதற்பொருளாவன, நிலமும், பொழுதுமாம்; கருப் பொருளாவன, தெய்வம், உயர்ந்தோர், அல் லோர், பூ, விலங்கு, ஊர், நீர், பறவை, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்பனவாம். உரிப் பொருளாவன-புணர்தல், பிரிதல் முதலிய ஐந்துமாம். திருக்குறிப்புத்தொண்டர் வரலாற்றில் (தி.12 பு.19) 6 முதல் 10 வரையிலுள்ள பாடல்களில் இந்நால்வகை நிலங்களும் தொகுத்துக் கூறப்பட்டிருப்பதோடு, அவற்றின் ஊர், யாழ், பறவை, பூ முதலியனவும் கூறப் பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத்தை 11 முதல் 14 வரையிலுள்ள பாடல்களிலும், முல்லை நிலத்தை 16 முதல் 19 வரை யிலுள்ள பாடல்களிலும், மருத நிலத்தை 20 முதல் 32 வரையிலுள்ள பாடல்களிலும், நெய்தல் நிலத்தை 33 முதல் 40 வரையுள்ள பாடல் களிலும் விதந்து கூறுகின்றார்.
3.2.2 நிலத் தெய்வம்: இவற்றுள் முல்லை நிலத்திற்கும் மருத நிலத்திற்குமுரிய தெய்வங்களைச் சேக்கிழார், "அங்கண் முல்லையின் தெய்வ மென்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண்மால்" (தி.12 பு.19 பா.18) எனவும், "இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்" (தி.12 சரு.1-2 பா.12) எனவும் குறித்துக் காட்டுகின்றார். இவ்வாறு காட்டுவதோடு இவர்கட்கும் தெய்வமாய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோவில் களை அவ்வந் நிலங்களிலும் அமைந்திருக்குமாற்றையும் காட்டுகின் றார். இவ்வமைவும் இந்நூற்கென அமைந்த தனிச்சிறப்பாகும். பாலைக்கு ஞாயிற்றையும் கொற்றவையையும் உரிய தெய்வமாகக் கூறுவர். அவ்வகையில் "கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் லிடங்கள் நீல வாட்படை நீலிகோட்டங்களும் நிரந்து" (தி.12 பு.19 பா.15) என இவரும் கூறுகின்றார். குறிஞ்சி நிலத் தெய்வம் முருகப் பெருமானாவர். அதனை வெளிப்படையாகக் கூறாராயினும் நாகனும் தத்தையும் தம் நிலத் தெய்வமாகிய முருகவேளை வழிபட்டுத் திண்ணனாரைப் பெற்றனர் எனக் குறிக்கும் முகத்தான் குறிப்பின் உணர வைத்தார். தொல்காப்பியத்தை `அருந்தமிழ்' (தி.12 பு.19 பா.18) எனக் குறித்துப் போற்றும் அருமை யும் அறிதற்குரியதாம். `முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" (சிலப்பதி. காடுகாண். 64-66)) எனச் சிலப்பதிகா ரம் குறித்தற்கேற்ப இவரும் `கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள்' (தி.12 பு.19 பா.15) எனக் குறித்திருப்பதும் அறிந்து இன்புறுதற்குரியதாம்.
3.2.3 திணை மயக்கம்: அவ்வந் நிலங்கட்கும் உரிய கருப் பொருள்களும், முதற்பொருளில் ஒன்றான பொழுதும் ஒரோவழி மயங்கி வருதலுமுண்டு. இதனைத் திணை மயக்கம் என்பர். `திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே, நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப, புலன் நண்குணர்ந்த புலமையோரே' (தொல். அகத். 12) என்னும் தொல்காப்பியமும். இவ்வகையிலான திணை மயக்கத்தை ஆசிரியர் சேக்கிழார், மேற்கூறிய திருக்குறிப்புத்தொண்டர் வரலாற்றில் (தி.12 பு.19 பா.41-46) அமைத்துக் காட்டுகின்றார். இந்நானில வளங்களைச் சிறப்பாக இவ்விடத்துத் தொகுத்துக் கூறிய ஆசிரியர், அவ்வவ் அடியவர்களும் தோன்றிய நில வளங்களைக் கூறுங்காலும் தனித்துக் கூறியும் மகிழ்வர். இவ்வகைமை ஆண்டாண் டும் கண்டு மகிழ்தற்குரியதாம்.
3.2.4 உரிப்பொருள் அமைதிகள்: கைக்கிளை - இது காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகைநிலையில் அமையும். இக்காட்சி தானும்,`ஒன்றே வேறே என்று இருபால்வயின், ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' (தொல். களவு. 2) என்பதற்கேற்ப அமைவதாகும். இதன்பின் நிகழ் வதே புணர்தலாகும். இவ்வமைவு சுந்தரர் வரலாற்றில் இடம் பெற்றுள் ளது. சுந்தரர், பரவையாரைக் கண்டு ஐயுற்ற திறத்தைத் தடுத்தாட் கொண்ட புராணத்தில் (தி.12 சரு.1-5) 140,141 ஆகிய பாடல்களிலும், பரவையார் சுந்தரரைக் கண்டு ஐயுற்ற பாங்கை 144 ஆவது பாடலிலும் காணலாம். `ஐயக்கிளவி ஆடூஉ விற்குரித்தே"(தொல். பொருள். 44) எனத் தொல்காப்பியம் கூறினும், ஐயுற்றுத் தெளிதற்குரிய அறிவுடைமை பரவையாரிடத்து இருந்தமையின், அவரும் ஐயுற்றதாகக் கூறினார். தி.12 சரு.1-5 பா.152-168 வரை உள்ள பாடல்கள், சுந்தரர், `காமம் கண்ணிய மரபிடை தெரிய நெஞ்சொடு புணர்த்தும்' (தொல். பொருள். 2), `சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்' (தொல். பொருள். 2) கூறிய கூற்றா கும். தி.12 சரு.1-5 பா.171-177வரை உள்ள பாடல்கள் பரவையார் காமம் கண்ணிய மரபிடை தெரியத் தோழியரையும் இறைவனையும் நோக்கிக் கூறிய கூற்றாகும். ஐயுற்ற ஆரூரரும் பரவையாரும் ஒரு வரை ஒருவர் தெளிந்து கொண்டது, அவரவரும் தத்தம் அருகிருந்தார் பால் கேட்டுத் தெளிந்ததாகும். இறைவனின் திருவுளக் குறிப்பே இந்நிகழ்ச்சிகளுக்கு மூல காரணமாக அமைவதோடு, அப்பெருமா னின் அருளாலேயே மணம் புணரவும் நேருகிறது. இவ்வாறே திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டு ஐயுறுகின்றார். அவ்வையம் சுந்தரர்பாலதாகவே அமைய, இறைவன் மணம் நேர அருள்பாலித்து விடுகின்றார்.
3.2.5 ஐந்திணை: ஒத்த காமமாகிய இவ்வைந்திணை இரு வகையில் அமையும். ஒன்று, காதலர் இருவர் கருத்தொருமித்து ஆத ரவுபடும் இன்பமாம். இதன்வழி வளர்ந்த காதலின் பின், தாய் தந் தையர் இதனை அறிந்து மணம் புணர்க்க நேருதலும் உண்டு. காதலர் தாமே மணம் செய்து கொள்ளுதலும் உண்டு. இதனைக் `கொடுப் போரின்றியும் கரணம் உண்டே' (தொல். கற்பு. 2) எனவரும் தொல் காப்பியர் கூற்றால் அறியலாம். மணம் நேரவிருக்கும் ஆணிற்கும் பெண்ணிற்கும், பிறப்பு குடிமை முதலான பத்து வகை ஒப்புமைகள் பெற்றோர்களால் எண்ணப் பெற்று, மணம் புணர்க்கப்பட்டு வாழும் நிலை இரண்டாவதாகும். இவற்றுள் முன்னைய முறையில் நிகழ்ந்ததே சுந்தரர், பரவையாரையும் சங்கிலியாரையும் மணந்த திறமாகும். புனிதவதியார், மானக்கஞ்சாறர் மகளார், ஞானசம்பந்தர் ஆகியோ ரின் திருமணம் இரண்டாம் நிலையில் நிகழ்ந்தனவாகும். சடங்கவியார் மகளார், திலகவதியார் ஆகியோர்க்கு நேரவிருந்த திருமணங்களும் இவ்வகையனவேயாம்.
3.3 புறப்பொருள் அமைதி: அகப்பொருட் செய்திகளை எழுவகைத் திணைகளில் வைத்து விளக்கியது போல, புறப்பொருட் செய்திகளையும் எழுவகைத் திணைகளுள் வைத்து விளக்குவர் தொல்காப்பியர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். இவற்றுள் முதல் நான்கும், போர் மேற்கொள்ளும் அரசரும், மறவரும், அவ்வச் செயல்களைச் செய் யுங்கால் அணிந்து கொள்ளும் மலர்களால் பெற்ற பெயராகும். வாகை என்பது இப்போர்த்திறனால் பெறும் வெற்றியானும், அவரவர்களும் தத்தம் ஒழுக்கத்தானும், பெறுதற்கரிய பேற்றானும் பெறும் வெற்றி யாகும். போர்த்திறனால் பெற்ற வெற்றிக்கு, ஏனைய செயல்களுக்குச் சூடியது போல, வாகையைச் சூடுவர். காஞ்சி - நிலையாமையையும், பாடாண் - மக்களின் ஒழுகலாறுகளையும், தெய்வத் திறம் பேணிப் பெறும் பெருவளங்களையும் குறிப்பனவாம்.
3.3.1 காஞ்சி:- எதிரூன்றல்: பின்வந்த இலக்கண நூல்கள் காஞ்சி என்பதற்கு வஞ்சியரசனோடு எதிரூன்றி நின்று போர்புரிதலைப் பொருண்மையாகக் கொண்டன. ஆசிரியர் சேக்கிழாரும் பின்வந்த இம் மரபினை ஏற்று, `வளவனார் பெருஞ்சேனை வஞ்சிமலர் மிலைந்தேற்ப அளவிலர ணக்குறும்பி லதி கர்கோ னடற்படையும் உளநிறைவெஞ் சினந்திருகி யுயர்காஞ்சி மிலைந்தேற்பக் கிளர்கடல்க ளிரண்டென்ன விருபடையும் கிடைத்தனவால்' (தி.12 பு.41 பா.19) என்று அருளுகின்றார்.
3.3.2 நூழில்: கொன்று குவித்தல் என்பது இதன் பொருளா கும். இதனை,
`மாறுற்ற விறற்படை வாளதிகன்
ஊறுற்ற பெரும்படை நூழில்பட' (தி.12 பு.41 பா.29)
எனவரும் பகுதியில் குறித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
3.3.3 வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவு: திலகவதியாரை மணம் புணர இருந்த கலிப்பகையார் தம்வேந்தருக்கு உற்றுழி உதவியவர் ஆவர். `வேந்தற்குற் றுழிவினைமேல் வெஞ்சமத்தில் விடைகொண்டு போந்தவரும்......... நெடுநாள்கள் நிறை வெம்போர்த்துறை விளைத்தார்' (தி.12 பு,21 பா.26) எனவரும் சேக்கிழார் கூற்றால் இவ்வுண்மை விளங்கும்.
3.3.4 அறந்தலை நின்ற மறவர்: அடியவர்கள் அறுபத்து மூவரில் முனையடுவார் என்பார் ஒருவர். இவர், இரு அரசர்கள் போர்செய்ய, அவருள் மெலிந்தார் தம்மைத் துணை வேண்டின், அவருக்குத் துணை நிற்பர். அம்மெலிந்தாரும் நடுநிலைமையினின் றும் தவறாதவராய் இருத்தல் வேண்டும். இதனை நினையத் தேர்வண் மலையன் என்பான் நினைவிற்கு வருவான். வென்றவரும், தோற்றவ ரும் நினைவு கூரத்தக்க இப்பெருவீரனின் ஆற்றலைக்,
குன்றத்து அன்ன களிறு பெயரக்
கடந்து அட்டு வென்றோனும் நிற்கூறும்மே
வெலீ இயோன் இவன் என,
கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்,
நம் அமர் கடத்தல் எளிது மன் நமக்கு எனத்
தோற்றோன் தானும் நிற்கூறும்மே
தொலைஇ யோன் இவன் என,
ஒரு நீ ஆயினை-பெரும.
எனவரும் புறநானூறு, 125 பகுதி குறித்துக் காட்டும். இத்தகைய பேராற்றலை உடையவர் இவ்வடியவர் ஆவர்.
3.3.5 மழபுல வஞ்சி: போரில் பகைவரை வென்று அவரிடத்தில் இருக்கும் பொருளைக் கொள்ளை கொண்டு வருதல் இத்துறைப் பொருண்மை யாகும். `மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் னகரந் துகளாகத் துளை நெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித் தொகையும் இன்னன வெண்ணில கவர்ந்தே இகலரசன்முன் கொணர்ந்தார்' (தி.12 பு.36 பா.6) எனவரும் சிறுத்தொண்டர் செயல்திறன் இவ்வகையில் அமைவதாகும்.
3.3.6 மாபெரும் தானையர் மலைந்த பூக்கள்: தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் தம்மில் தாம் வேறுபாடு அறிதற்கெனச் சூடிய பூக்கள் மூன்றெனத் தொல்காப்பியம் கூறும். சேரர்-பனை மாலை. சோழர்-ஆத்தி மாலை. பாண்டியர்-வேப்ப மாலை.
`புனையுநறுந் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து' (தி.12 பு.50 பா.7) எனவரும் பாடற்பகுதியால், சேக்கிழார் பாண்டியருக்கு வேப்ப மாலை உரியதாதலையும், போரில் வெற்றி பெற்றமைக்கு அறிகுறியாக வாகை மாலை புனைந்தமையும் ஒருங்கு காட்டி மகிழ்விக்கின்றார்.
3.3.7 தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி: போரில் வெற்றி பெறல், இன்றேல் உயிர் கொடுத்தல் என்ற குறிக்கோளுடன் போர் செய்த வீரர்களுள் உயிர் கொடுத்தாரைக் குறிக்கின்றது இத்தொடர்.
`மண்டு போரின் மலைப்பவர், துண்ட மாயிட வுற்றெதிர் கண்டராவி கழித்தனர், உண்ட சோறு கழிக்கவே' (தி.12 பு.41 பா.23) எனவரும் பகுதி இதற்கு இலக்கியமாக அமைகின்றது. வாகை என்பது `தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப' (தொல்.புறத்.19) என்பதால், அறுபத்து மூன்று அடியவரும் இவ்வகை யில் வாகை சூடியவர்களே ஆவர்.
3. 4 சுவை நலம்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சுவை எண்வகைப்படும் என்றும், அதற்கேற்ப உடலின்கண் ஏற்படும் வேறுபாடுகளே மெய்ப்பாடுகள் என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவர். இவ்வெட்டோடு, சாந்தம் என்னும் ஒரு சுவை உண்டென்றும் அது உலகியல் நீங்கினார் பெற்றியதாதலின், ஆசிரியர் அதனை ஈண்டுக் கூறாராயினார் என்றும் பேராசிரியர் கூறுவர். இவற்றிற்கும் மேலாகப் பத்திச்சுவை என்பதும் ஒன்று உண்டு. அதனைப் பேராசிரியர் கூறாராயினார் எனினும், அதுவும் அவர் கூறியவாறே உலகியல் வயப்பட்டதன்றி அருளியல் வயப்பட்ட தாகலின் அதனையும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறாராயினார் என்றல் பொருந்துவதாகும். இப்பத்துவகைச் சுவைகளும் திருத் தொண்டர் புராணத்தில் அமைந்துள்ளமை அறிந்து இன்புறத் தக்கதாம்.
3.4.1 நகை: பாண்டியனின் வெப்பு நோயை நீக்க இயலாத அமணர்கள் அப்பெருமகனின் உடல் வெப்பத்தால் தம் உடம்புகன்றி அவ்வரசனிடத்தினின்றும், அகன்றும் அகலாதும் இருந்தனராம். `அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க' (குறள், 691) என்பது தமிழ் மறையாகும். இதனைச் சேக்கிழார் `தென்னன்வெப் புறுதீத் தம்மை எறியமா சுடலுங் கன்றி அருகுவிட் டேற நிற்பார் அறிவுடை யாரை யொத்தார் அறிவிலா நெறியில் நின்றார்' (தி.12 பு.28 பா.766) எனக் கூறுமாற்றான் நகைச் சுவையை வெளிப்படுத்துகின்றார். இது போன்றே அமணர்கள் நெருப்பில் ஏடு இட அது வெந்து போகக் கண்டு, `சமணர் அங்குக் கருகிய சாம்ப ரோடும் கரியலால் மற்றென் காண்பார்' (தி.12 பு.28 பா.791) `
செய்வதொன் றறிகி லாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினாற் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன்
எய்தியிய நகையி னோடும் ஏடின்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்ம்மை யாக்கப் புகுந்தநீர் போமின் என்றான். (தி.12 பு.28 பா.792)
என ஆசிரியர் தம் கூற்றாகவும், மன்னவன் கூற்றாகவும் கூறிய கூற்று களும், அமணர்கள் அத்தி, நாத்தி என்றெழுதி ஆற்றிலிட்ட ஏடு, `நீர் வழிப் படூஉம்புணைபோல்' (புறநானூறு, 192) கடலிடைப் பட்டமை கண்டு. `நாணிலா அமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போக' (தி.12 பு.28 பா.816) என ஆசிரியர் கூறும் கூற்றும் நகைச் சுவைக்கு இலக்கா கின்றன.
3.4.2 அழுகை: ஞானசம்பந்தர் மதுரையை அணைந்த பொழுது, சமணர்களுக்கு நேர்ந்த தீய நிமித்தங்களும், கனாக்களும் அவர்களுக்கு அழுகையை விளைவித்தன. ஞானசம்பந்தர் வரலாற் றில் (தி.12 பு.36) 632 முதல் 641 வரை உள்ள பாடல்களைக் காண்க.
3.4.3 இளிவரல்: பாண்டியர் தமக்குற்ற வெப்புநோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப்பட்டதேனும், சமணர்களாலும் தீர்க்கப்பட் டது எனக் கூறவேண்டும் என வேண்டிக் கொள்ள,
`எய்திய தெய்வச் சார்வால் இருதிறத் தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன் என்றுகை தவனுஞ் சொன்னான்'
(தி.12 பு.28 பா.749)
எனவரும் கூற்று இச்சுவைக்கு இலக்காகும்.
`கன்றிஎன் உடம்பொடுங்க வெப்புநோய் கவர்ந்தபோ தொன்றுமங் கொழித்திலீர்கள் என்னவா துமக்கு' (தி.12 பு.28 பா.776) `பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார்' (தி.12 பு.28 பா.788).
பிள்ளையார் முன்னம் பைம்பொற் பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளுநீர்த் தரளப் பத்திச் சிவிகைமேல் ஏறிச் சென்றார்
வள்ளலார் அவர்தம் பின்பு மன்னன்மா ஏறிச் சென்றான்
உள்ளவா றறிகிலாதார் உணர்வுமால் ஏறிச் சென்றார்.
(தி.12 பு.28 பா.800)
எனவரும் கூற்றுக்களும் இச்சுவைக்கு இலக்காக உள்ளன.
3.4.4 மருட்கை:
ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர்
தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு தெளிவெய்தி
ஊனந்தான் இலராகி உவந்திருந்தார் தமைக்கண்டே
ஈனந்தங் கியதிலதாம் என்னஅதி சயம் என்றார்'
(தி.12 பு.21 பா.101)
எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணுநான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினா றாண்டு பேர்பெறும் புகலிவேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தாற் கண்டார்.
(தி.12 பு.28 பா.1109)
எனத் திருநாவுக்கரசர் வரலாற்றிலும், திருஞானசம்பந்தர் வரலாற் றிலும் வரும் காட்சிகள் இச்சுவைக்கு இலக்காகின்றன. இவற்றுள் பின்னைய திருப்பாடல் மருட்கையொடு நகைச்சுவையும் ததும்ப உள்ளது.
3.4.5 அச்சம்: இயற்பகை நாயனார், வேதியராய் வந்த இறைவர்க்குத் தம் மனைவியைக் கொடுத்துச் சுற்றமும் பதியும் கடக்கத் துணையாகச் சென்ற பொழுது, ஊரவர் கொண்ட சினமும், நாவரசரை இடறுதற்கென விடுக்கப்பட்ட கொலைக்களிறு வந்த வரவும் இவ்வச்சச் சுவையை வெளிப்படுத்துகின்றன.
3.4.6 பெருமிதம்: திருப்புகலூரில், வான் அர மகளிர் நாவரசர் முன்னின்று ஆடுதலும் பாடுதலும் செய்ய, `உம்மாலிங் கென்னகுறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக் காளானேன் அலையேன் மின்நீர்' (தி.12 பு.21 பா.423) என்று கூறிய கூற்றும், பாண்டிமாதேவி யாரும் குலச்சிறையாரும் ஞானசம்பந்தரை அரசனிடத்து அழைத்துச் செல்ல அவரிடம் சென்றபொழுது, ஞானசம்பந்தர் இருந்த திருக்காட்சி யும் (தி.12 பு.28 பா.751,752) இச்சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைவனவாம்.
3.4.7 வெகுளி: இறைவன் நம்பியாரூரரைத் தடுத்தாட் கொள்ளச் சென்றபொழுது, இருவருக்கும் நேர்ந்த உரையாடல்களும், திருநீலகண்டரிடத்துச் சிவயோகியராகவும், அமர்நீதியாரிடத்துப் பிரமச்சாரியாகவும் வந்த இறைவன் முறையே ஓட்டையும், கோவ ணத்தையும் கொடுத்து அவற்றை அகலப் போக்கி, அவ்விருவரிடத்தும் அவற்றை, மீளப் பெறுதற்கெனக் கூறிய கூற்றுக்களும், விறன்மிண் டரும் ஏயர்கோனும் சுந்தரரின் செய்கைக்கு வருந்திக் கூறிய கூற்று களும் இச்சுவைக்கு இலக்காவனவாம்.
3.4.8 உவகை: ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தில்லையில் கூத்தப் பெருமானைக் கண்டு வணங்கி மகிழ்ந்த இடங்களிலும், சம்பந்தரும் அப்பரும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்த மூவிடங்களிலும், தாம்தாமும் கொண்ட உவகையும், சுந்தரரும் சேரமான் பெருமாளும் கண்டு மகிழ்ந்த இரு இடங்களில் தாம்தாமும் கொண்ட உவகையும் இச்சுவைக்கு இலக்காவனவாம்.
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |