தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. |  2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |

குருபாதம்

ஆராய்ச்சி முன்னுரை

பேராசிரியர், முனைவர் கு. சுந்தரமூர்த்தி, எம். ., பிஎச். டி.

அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்,

தருமை ஆதீனம், தருமபுரம்.

1.0 சைவ நன்மக்களுக்குக் கிடைத்திருக்கும் அருட் செல்வங் களுள் பன்னிரு திருமுறைகளும் தலைமையும் தகவும் உடையன வாம். அவற்றுள் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்கும் திருத் தொண்டர் புராணம் அரியதொரு பெருங்காப்பியமாகும். இதனை இருவகையில் எண்ணி மகிழலாம். 1. காப்பிய அமைப்பு 2. வாழ்வி யல் அமைப்பு

இவ்வரும்பெரும் நூற்கு அமைந்திருக்கும் தனித்தன்மைகள் பலவாம். அவற்றுள் சில குறிப்பிடத்தக்கன.

1.1 இறைவன் வான்வழி, `உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுக்க, ஆசிரியர் இந்நூலை அருளியுள்ளார். இவ்வாறு அடி எடுத்துக் கொடுக்கச் செய்யப் பெற்ற பெருங்காப்பியம் ஈதொன்றே யாம்.

1.2 முன்னுள்ளோர் தொகுத்துச் செய்தனவற்றை விரித்தும், விரித்துச் செய்தனவற்றைத் தொகுத்தும் கூறல் நூல் செய்வார் செய்யும் மரபாகும். அவ்வகையில், தி.7 `திருத்தொண்டத் தொகை' தொகை யாய், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய தி.11 `திருத்தொண்டர் திரு வந்தாதி' வகையாய், இப்பெருங்காப்பியம் விரியாய் அமைந் துள்ளது. இந்நிலையில் அமைந்ததும் ஈதொன்றேயாம்.

1.3 இதற்கு முன் எழுந்த காப்பியங்கள் பலவும் அரசர்களையே காப்பியத் தலைவராகக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரத்தின் காப்பியத் தலைவனான கோவலன், ஒரு குடிமகனே எனினும், அரசனோடு ஒப்ப வைத்து எண்ணத் தகும் செல்வச் சிறப்பினன் ஆவன். மணிமேகலை யும் அச்செல்வனின் மகளே ஆவள். ஆதலின் அக்காப்பியங்கள் இரண்டும் காப்பியத் தலைமை கொண்டதில் வேற்றுமை இருப்பினும், செல்வச் சீர்மையில் வேற்றுமையில்லை. ஒரு கால எல்லைக்குப் பின்பே துறவு மேற்கொள்கின்ற நிலை மணிமேகலைக்கு வருகின்றது. ஆனால் இப்பெருங் காப்பியமோ,

ஆரங் கண்டிகை ஆடையும் கந்தையே

பாரம் ஈசன் பணிஅல தொன்றிலார்

ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்

வீரம் என்னால் விளம்பும் தகையதோ?

-தி.12 சரு.1-4 பா.9

எனக் கூறப் பெறும் அடியவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு இலங்குகின்றது. இவ்வகையில் அமைந்த இலக்கியம் ஈதொன்றேயாம்.

அற்றேல் காப்பியத் தலைவராய சுந்தரர், அரசர் நரசிங்கமுனை யரையரால் மகன்மை கொள்ளப் பெற்ற நிலையில், அரசியல் திருவு டையார் என்றல் பொருந்துமே எனில், அன்று. அவர்தம் வாழ்வு, மகன்மையாம் நிலையில் வாழ்ந்த வாழ்வன்றி, அரசியல் திருப்பெற்று வாழ்ந்த வாழ்வன்று. அன்றியும் கீளார் கோவணமும், திருநீறு மெய்ப் பூசியும் பெருமானின் தாளே வந்தடையும் தகைமையும் கொண்ட வாழ்வே வாழ்வாக அமைந்திருந்தமை அவர்தம் திருவாக்கினா லேயே அறியப் படுவதொன்றாகும் (தி.7 . 24 பா.2).

`கறிவிரவு நெய் சோறு முப்போதும் வேண்டும்', `காற்றனைய கடும்பரி மா ஏறியிட வேண்டும்' (தி.7 .46 பா.10), `முத்தாரம் இலங்கு மிளிர் மணிவயிரக் கோவை அவை பூணத் தந்தருளி மெய்க் கினிதா நாறும், கத்தூரி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்' (தி.7 .46 பா.1) என்றெல்லாம் இறைவனிடம் அவர் வேண்டியதும், தோழமைத்திறம் விளங்க வேண்டிக் கொண்டதன்றி, அவற்றைப் பெற்றுத் துய்த்தும் உய்த்தும் வாழ்வதற்கன்று என்பதும் அவர்தம் வரலாற்றால் அறியப்படுவதாகும். இவ்வாறே ஆங்காங்குப் பொருள் வேண்டிப் பெற்றதும், பரவையார் வழி அண்ணலார் அடியார்தமை அமுது செய்விப்பதற்கன்றித் தம் பொருட்டன்றாம்.

இறைவனால் தடுத்தாட்கொள்ளப் பெற்றபின், அவர்தம் வாழ் வெலாம் திருவருள் திறத்தில் தோய்ந்துநின்ற நிலையிலேயே அமைந் திருந்தது. இவ்வுண்மை, "தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே யோர் நால்விரல்" (தி.7 .45 பா.9), "ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந் திருந்தேன்" (தி.7 .100 பா.2) என வரும் அவர் திருவாக்குகளால் அறியலாம். பேரரசர்களாகவும் பெருஞ் செல்வர்களாகவும் வாழ்ந்த பிற அடியார்களும், தம் மனநிலையில் தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சார்ந்த வாழ்வினராகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

1.4 காப்பியங்களில் காணும் உள் தலைப்புக்கள், சருக்கம், இலம்பகம் போன்ற பெயர்களில், அவ்வவ் வரலாற்று இயைபு பொருந் தவே அமையும். ஆனால், நம் சேக்கிழாரோ, தொகை நூலில் விளங் கும் பாடல்களின் முதற் குறிப்புகளையே சருக்கங்களின் பெயர்களாக அமைத்திருப்பது, தனித்தன்மை வாய்ந்ததாகும்.

1.5 இதுகாறும் எழுந்துள்ள காப்பியங்களில், அவ்வக் காப்பி யத் தலைவர்களுக்கும் பகைவர் இருந்தமை கண்கூடு. அப்பகைமை தானும் மண், பெண், பொன் ஆகிய மூன்றனுள் ஒன்றன் காரணமா கவே அமைந்துள்ளது. ஆனால் இக்காப்பியத் தலைவராய சுந்தர ருக்கோ இவ்வகையிலான பகைமை எதுவும் இன்று. மாறாகக் கருத்து வேற்றுமை கொண்டிருந்த இருவரையே காண்கின்றோம்.

ஒருவர் விறன்மிண்டர்; மற்றொருவர் ஏயர்கோன் கலிக்காமர். இவர்களுள் முன்னையவர் - அடியவர் ஒருவர், பிற அடியவர்களைக் காணுங்கால் வணங்காமல் செல்வது தவறெனக் கருதி வேறுபட்டவர். மற்றொருவர் - அருளுருவாய இறைவரை உலகியல் வயப்பட்ட நிலையில் ஒரு பெண்ணிடத்துத் தூது விடுதல் சாலாதெனக் கருதி, வேறுபட்டவர். இவ்விருவரும் கருத்து வேற்றுமையுற்று வேறுபட் டனரே அன்றிப் பகைமையாகக் கருதிச் சுந்தரரை அழிக்க நினைத்தவர் அல்லர். சுந்தரரும் அவர்கள் கருதியவாறு தம் தவறுகளை உணர்ந்து அவர்கள் இருவரிடத்தும் நட்புக் கொள்ளவே நினைந்தனர்.

அம்மட்டோ? சுந்தரர், "விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்" (தி.7 .39 பா.1) "ஏயர்கோன் கலிக்கா மன் அடியார்க்கும் அடியேன்"(தி.7 .39 பா.5) என அவ்விருவருக் கும் வணக்கம் கூறி வழியடிமையும் பூண்டனர். இவ்வகையில் காப் பியத் தலைவர் ஒருவருக்குப் பகைமை இன்றி எழுந்த இலக்கியம் ஈது ஒன்றே ஆகும்.

காப்பியத் தலைவியான மணிமேகலைக்குப் பகைமை இன்றேனும், அவள்பால் காதல்கொண்ட உதயகுமரனின் காதல் மிகுதியே பகைமையாக, அவன் கொலையுற நேர்ந்தது.

1.6 ஒன்பான் சுவைகளுள் சாந்தம் என்பதும் ஒன்று. அஃது உலகியல் நீங்கினார் பெற்றியாகலின், ஏனைய எண்வகைச் சுவைக ளோடு கூட்டிக் கூறாராயினர் தொல்காப்பியர். ஆனால் அச்சுவையை யும், நாவரசர், மெய்ப்பொருளார் போன்ற அடியவர்களின் வாழ்வியலில் அமைந்திருக்குமாற்றைச் சேக்கிழார் இப்பெருநூலில் காட்டியுள்ளார். இதற்கும் மேலாக, பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய அருளாளரும் இவரேயாவர். அப்பத்திமை மணம் இப்பெருங் காப்பியத்தில் யாண்டும் நீக்கமற நின்று நிலவுவதும் இதற்கென அமைந்த தனிச் சிறப்பாகும்.

1.7 ஒரு பெருங்காப்பியம், படிப்போர்தம் உள்ளத்தை ஈர்த்தாட் கொள்ளுதற்குரிய காரணங்களில், அது கொண்டிருக்கும் காப்பியக் கட்டுக்கோப்பும் ஒன்றாகும். அந்நிலையில் இக்காப்பியத் தலைவராய சுந்தரர், இந்நில உலகத்தில் தோன்றுதற்குரிய காரணத்தை முற்படக் கூறுவாராகத் திருமலைச் சுருக்கம் என்று ஒரு பகுதியைச் சேக்கிழார் அமைத்து, நிலவுலகில் அவர் தோன்றிய பின், தன்னை மறக்க இறைவன் தான் மறவாது எளிவந்து தடுத்து ஆட்கொண்டருளிய கருணைத் திறத்தால், அப்பெருமான்பாலும், அதன்வழி அப்பெருமா னின் அடியவர்கள்பாலும் அடிமைத் திறம் பேணி வாழுமாறு செய்வித் தருளிய பகுதியைத் தடுத்தாட்கொண்ட புராணத்தில் அமைய வைத்து, அவர் அருளிய அத்திருத்தொண்டத் தொகை (தி.7) வழி, அப்பதி னொரு பாடல்களிலும் அமைந்த அடியவர்கள் வரலாற்றையும், அவ்வரலாறுகளில் இயைபுபட அமைந்த காப்பியத் தலைவரின் வரலாற்றையும் இடையிடையே அமையுமாறு செய்து, பதினொரு சருக்கங்களாக அமைத்து, நிறைவாகக் காப்பியத் தலைவராய சுந்தரர் திருக்கயிலை சென்று பெருவாழ்வு பெற்று நிற்கும் திறத்தை, வெள்ளை யானைச் சருக்கத்தில் நிறைவு படுத்தி இருக்கும் கட்டுக்கோப்பு வேறுபிற காப்பியங்கள் எவற்றிலும் அமைந்திராத தனிச் சிறப்பாகும். இவ்வமைப்பே, இக்காப்பியத்தின் தலைவர் சுந்தரர் ஆதலை, விளக்கி நிற்கவும் காண்கிறோம்.

1.8.காப்பியங்களுள் வரும் நகரச் சிறப்பில் பெரும்பாலும் கூறப்பெறுவன, அதன் அகழி, மதில், அப்பதியின்கண் வாழும் நால் வகை மரபினர், அந்நகர அமைப்பு ஆகியவைகளாகவே அமையும். ஆனால், இப்பெரு நூலிலோ, நகரச் சிறப்பில் அவையெல்லாம் கூறப் பெறாது, மனுவேந்தனின் செங்கோற்சிறப்பே கூறப்பெறுகின்றது. காரணம் ஒரு நாடு, எத்துணைச் சிறப்பு மிக்கதாயினும், அந்நாட்டை ஆட்சி செய்துவரும் அரசனின் செங்கோற் சிறப்பு இலதாயின், அத் துணைச் சிறப்புக்களும் பாழாகவே முடியும் என்பது திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கையாகும். `ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு' (குறள், 740) என்பது அவர்தம் திருவாக்காகும். அது கருதியே ஆசிரியர் சேக்கிழாரும், நகரச் சிறப்பில் செங்கோற் சிறப்பையே கூறுவார் ஆயினர். இதுவும் இக் காப்பியத்திற்கென அமைந்த தனிச் சிறப்பாகும். அங்ஙனமாயின், நகரச் சிறப்பு இந்நூல்வழி அறிதற்கு இயலாதாகுமே எனின், அற்றன்று. இதன்கண் கூறப் பெறும் அடியவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் தோன்றியவர்கள். அவ்வவ்விடத்தும் அவ்வந் நகரச் சிறப்புக்கள் விளக்கப் பெற்றுள்ளமையால், இப்பெருநூலில் ஒரு நகரச் சிறப்பன்று; பல்வேறு நகரங்களின் சிறப்பறிய இயலுகின்றது. இவ்வகையானும் இதற்கென அமைந்த தனிச்சிறப்பை அறியலாம்.

1.9. இதுவரை எழுந்துள்ள காப்பியங்கள் பலவும் நூல் என்ற வகையிலேயே அமைந்துள்ளன. ஆனால் இப்பெருநூலோ நூலுக்கு நூலாயும், ஆங்காங்கு இயைபுபடும் திருப்பதிகங்களுக்கு உரையா யும், தத்துவ விளக்கங் கூறும் தகையதாயும் அமைந்துள்ளது. இவ் வருந்திறம் `மூவர் தமிழை முகந்து நிற்கும் பாங்கு' எனவரும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

1.10. காப்பியங்கள் பலவும் அவ்வக் காப்பியத் தலைமக்களின் தோற்றம், வளர்ச்சி, கல்வி, ஆட்சிச் சிறப்பு முதலியனவற்றை முதற்கண் கூறி, பின் அப்பெருமக்களின் வரலாற்றைத் தொடர்ந்து கூறிச் செல் லும். சிந்தாமணி, இராமாயணம், பாரதம் போன்ற காப்பியங்களைக் காண்க. ஆனால் இப்பெருங்காப்பியத்திலோ, காப்பியத் தலைமகனா ரான சுந்தரர், இந்நிலவுலகினின்றும் கயிலைக்குப் போந்தமையை ஒளிவடிவில் முதற்கண் காட்டி, அவ்வொளியை வணங்கி மகிழும் உபமன்னியு முனிவரிடம் அது பற்றி அங்குள்ள முனிவர்கள் வினவ, அவர் அவ்வொளி வடிவான சுந்தரர் இந்நிலவுலகில் தோன்றற்குரிய காரணம், தோன்றி வளர்ந்த நிலையில் இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்ற பாங்கு, திருத்தொண்டத் தொகை (தி.7) அருள நேர்ந்த வரலாறு முதலானவற்றைக் கூறி, அவ்வாற்றான் அவ்வடியவர் திறங்களை எல்லாம் விரித்துக் கூறி, நிறைவாக, அவர் வெள்ளை யானைமேல் இவர்ந்தருளித் திருக்கயிலை சென்று சேர்ந்தமையையும் கூறி அமைத்துள்ளார். இவ்வாறு, ஒருகாப்பியத் தலைவரின் வரலாறு முடிவிலிருந்து முதலுக்கு வருமாறு விரித்துரைக்கும் பாங்குடைய காப்பியமும் ஈதொன்றேயாம்.

1.11. காப்பியங்களில் ஒன்றான இராமாயணத்தில் கம்பர் பெருமான், தம்மைப் புரந்தருளிய சடையப்ப வள்ளலைப் பல்வேறு இடங்களில் வைத்துப் பாராட்டுதல் நாம் அறிந்ததே. நம் சேக்கிழாரோ, தம் காலத்திருந்த அரசராகிய அநபாயச் சோழரைப் பத்து இடங்களில் வைத்துப் பாராட்டி மகிழ்வதோடு, தமக்கு அடியெடுத்துக் கொடுத்த கூத்தப் பெருமானின் திருவாக்காகிய `உலகெலாம்' (தி.12 பாயி. பா.1) எனும் தொடரைத் தம் காப்பியத்துள் முதல், இறுதியன்றி, இடையில் பன்னிரண்டிடத்தும் வைத்தும் கூறியிருக்கும் பாங்கு எண்ணற் குரியதாம். அன்றியும், தம் காப்பியத்திற்கு முதல் நூலை வழங்கியருளி யவரும், காப்பியத் தலைவருமான சுந்தரரை அவ்வச் சருக்கத்தின் இறுதியில் வணங்கி மகிழ்ந்திருக்கும் பாங்கும் அறியத் தக்கதாம். இம் மூவகையானும் அமைந்த நன்றியுணர்வை, பத்திமையை இந்நூலில் காண்டலும் இதற்கென அமைந்த தனிச் சிறப்பேயாம்.

1.12. புராணம் எனில் அரசர், அசுரர், முனிவர் ஆகியோரி டையே தோன்றும் இகலும், அழிவும், இடையே உலகத்தோற்றம் ஒடுக்கம் பற்றிய செய்திகளும் பொருளாக அமைந்து நிற்கும்; சமயத் தொடர்புடையதாய் இருக்கும். இனிக் காப்பியம் எனில் அரசரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு, அவர்களுக்குப் பொன்முடி கவித்தும் நன்மணம் புணர்த்தும் புதல்வரைப் பெறுதல் புனல் விளை யாடல் முதலிய நிகழ்வுகளை அமைத்தும் இயங்கும். அன்றியும் அவர்கள் போர்மேற் செல்லுங்கால் மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி என அத்தொடர்பான செய்திகள் அதனுள் இடம் பெற்றிருக் கும். ஆனால் இப்பெருங்காப்பியத்திலோ இவ்விருவகை அமைப்பும் ஓராற்றான் இயையவும், ஆனால் அவ்விருவகை அமைப்பிலும் இயையாத பல புதுமைப் பொலிவுகள் அமையவும் சேக்கிழார் அமைத்திருக்கும் திறம் தனித் தன்மை வாய்ந்ததாகும்.

2.0 திருத்தொண்டர் புராணம் - ஒரு பெருங்காப்பியம்:

ஒரு பெருங்காப்பியத்திற்கு அமையத்தக்க பண்பு நலங்களை, அணி இலக்கண நூல்கள் விரித்துக் கூறுகின்றன. அவ்வகையில் இக்காப்பியம் அமைந்திருக்குமாற்றைக் காணலாம்.

2.1. வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகிய இம் மூன்றனுள் ஏற்புடைய ஒன்றை முன்னாகக் கொண்டிருக்க வேண்டும் என்பர். அவ்வகையில், "மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" (தி.12 பாயி. பா.1) என வருவது, அம் மூன்றனுள், இரண்டு முதற்கண் அமைய இலங்குகின்றது. `எடுக்குமாக்கதை'(தி.12 பாயி. பா.3) `திருத் தொண்டர் புராணம் என்பாம்' (தி.12 பாயி. பா.10) எனக் கூறுமாற் றான் வருபொருள் உரைத்தல் ஆகிய மூன்றாவதும் அமைந்துள்ளமை அறியலாம்.

2.2. நாற்பொருள் படைக்கும் நடை: அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகை நெறிகளும் அமையக் காப்பியம் அமைதல் வேண்டும் என்பர். அறத்தால் பொருளாக்கி, அப்பொரு ளால் இன்பத்தைத் துய்த்து, இவற்றின் பயனாக வீடுபேற்றை அடைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். `ஊனடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால்' (தி.12 பாயி. பா.2) எனக்கூறும் ஆசிரியர், இம் முடிந்த பயனைப் பெறுதற்கேற்ப அவ்வவ் வடியவர்களும் அறம், பொருள், இன்பங்களில் வழாது, வீடு பெற நின்றமையும் பலபடக் காட்டியுள்ளமையின், இந்நடை நெறி அமைந் திருக்குமாற்றை அறியலாம்.

2.3. காப்பியம் என்பது தன்னிகரில்லாத் தலைவனைத் தலைவ னாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும். இறைவனே தம்மைத் தோழமையாகத் தந்தும், `நம்தமர் ஊரன்' (தி.7 .100 பா.9) என ஏற்றும் அருளிய அருளிப் பாட்டிற்கும் மேலாயதொரு தலைவரும் உளரோ? இலர். அத்தகைய பெருமகனாரே இக்காப்பியத்தின் தலை வராக விளங்குதலின் இதுவும் அமைவதாகும். இப்பெருமகனாரைத் தலைமிசை வைத்து வாழும் தலைமையே நம் தலைமையுமாகும் (தி.12 பு.7 பா. 49).

2.4. மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த்தோற்றம் என்பன போன்ற வருணனைகளைக் காப்பியங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பர்.

மலை: மலைகளில் சிறந்தது திருக்கயிலாயமே ஆகும். அம்மலையின் வருணனை எடுத்த எடுப்பிலேயே முதற்கண் இடம் பெற்றுள்ளது. விறன்மிண்டர், கண்ணப்பர் முதலிய அடியவர்களின் வரலாற்றிலும் மலைவருணனை இடம் பெற்றுள்ளது.

கடல்: அதிபத்தர், கலியர், வாயிலார் முதலிய அடியவர்களின் வரலாற்றில் இக்கடல் வருணனைகளைக் காணலாம்.

நாடு: திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தம் வரலாற்றில் சோழ நாட்டு வளமும், கழறிற்றறிவார் வரலாற்றில் சேர நாட்டு வள மும், மூர்த்தியார் வரலாற்றில் பாண்டி நாட்டு வளமும், திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் தொண்டை நாட்டு வளமும், நாவரசர் வரலாற்றில் நடு நாட்டு வளமும் காணலாம். ஆனாயர் வரலாற்றில் மழ நாட்டின் வளமும், கண்ணப்பர் வரலாற்றில் பொத்தப்பி நாட்டின் வளமும், மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றில் சேதி நாட்டின் வளமும் காணலாம்.

வளநகர்: நாகை, பூம்புகார், உறையூர், மதுரை, திருச்சேய்ஞலூர், மகோதை, தில்லை முதலிய நகர வருணனைகள் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.

பருவம்: இது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப் படும். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் எனப் பெரும்பொழுது அறுவகைப்படும். மாலை,யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு எனச் சிறுபொழுது அறுவகைப்படும்.

பெரும் பொழுதுகள்: திருஞானசம்பந்தர் வரலாற்றில் (தி.12 பு.28), இவற்றுள், வேனில் வருணனையை, 384, 385, 386, 388 ஆகிய பாடல்களிலும், முன்பனிக் கால வருணனையை 328, 329, 330, 332 ஆகிய பாடல்களிலும் காணலாம்.

சிறுபொழுதுகள்: இவ்வாறு சிறு பொழுதுகளின் வருணனைக ளுமே இப்பெருங் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில், மாலை, யாமம் ஆகிய இவற்றின் வருணனைகளைத் தடுத்தாட் கொண்ட புராணத்துட் (தி12 சரு.1-5 பா. 158, 159) காணலாம்.

வைகறை: இவ்வருணனையைக் கண்ணப்பர் வரலாற்றில் (தி.12 பு.10 பா.132) காணலாம்.

காலை: இவ்வருணனையைச் சுந்தரரை இறைவன் தடுத்தாட் கொண்ட வரலாற்றிலும் (தி.12 சரு.1-5 பா.13), கண்ணப்பர் வரலாற் றிலும் (தி.12 பு.10 பா.134), திருஞானசம்பந்தர் வரலாற்றிலும் (தி.12 பு.28 பா.206) காணலாம்.

நண்பகல்: இவ்வருணனையைக் கண்ணப்பர் வரலாற்றில் (தி.12 பு.10 பா.101) காணலாம்.

எற்பாடு: இவ்வருணனையைக் கண்ணப்பர் (தி.12 பு.10 பா.126) வரலாற்றிலும், சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்றிலும் (தி.12 சரு.1-5 பா. 157) ஞானசம்பந்தர் வரலாற்றிலும் (தி.12 பு.28 பா. 192) காணலாம்.

இருசுடர்த்தோற்றம்: இருசுடராவன ஞாயிறும், திங்களும் ஆம். இவற்றுள் ஞாயிற்றின் தோற்றம், தடுத்தாட்கொண்ட வரலாறு (தி.12 சரு.1-5 பா. 13), கண்ணப்பர் வரலாறு (தி.12 பு.10 பா. 134), ஞானசம் பந்தர் வரலாறு (தி.12 பு.28 பா. 209) ஆகியவற்றில் காணலாம். மதியத்தின் தோற்றம், சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்றில் (தி.12 சரு.1-5 பா.160, 162) காணலாம்.

2.5. நன் மணம் புணர்தல்: காப்பியத் தலைவராய சுந்தரருக்கு நேர்ந்த மணங்கள் மூன்றனுள், முன்னையது மணம் புணர்தற்குமுன் இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பெற்றது. அடுத்துப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம் ஆகிய இரண்டும் முறையே தடுத்தாட்கொண்ட வரலாற்றிலும், (தி.12 சரு.1-5), ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாற்றிலும் (தி.12 பு.29) கூறப்பெற்றுள்ளன.

2.6. பொன்முடி கவித்தல்: அரசர்கள் ஒருகால எல்லையி லேயே பொன்முடி கவித்திருப்பர். அருளரசராகிய சுந்தரரோ எப்பொ ழுதுமே பொன்முடி கவித்திருந்தமை அவர்தம் திருவுருவத்தைக் காண்பவர் எவர்க்கும் விளங்குவதாகும். அன்றியும் பொன்முடி கவித்த மூவேந்தரும், தம் பின்வர, அவ்வேந்தர்களுக்கு வேந்தராய்த் திருப்பரங்குன்றத்தில் அவர் இறைவனை வணங்கி மகிழ்ந்ததும் அவர் தம் வரலாற்றில் அறியப்படுவதொன்றாம்.

2.7. விளையாட்டு: பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல் போன்ற விளையாட்டுக்கள் காப்பியங்களில் இடம் பெறல் மரபு. கழறிற்றறிவார், ஆரூரர் இல்லத்தில் வதியும் பொழுது, பல விளையாட் டுக்களைக் கண்டு மகிழ்கின்றார் (தி.12 பு.37 பா.126). இவ்வாறே நம்பி ஆரூரர் கழறிற்றறிவார் அரண்மனையில் வதியும் பொழுதும் பல விளையாட்டுகளைக் கண்டு மகிழ்கின்றார். (தி.12 பு.37 பா.154, 155)

2.8. சிறுவரைப் பெறுதல்: `காதலின்பம் கலந்தணைவாய்' என்ற அளவிலேயே இறைவன் ஆணை அமைதலின், ஆரூரருக்கு மக்கட்பேறு இலதாயிற்று. கோட்புலியார் மகளார் சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் மகண்மை கொள்ள நேர்ந்தமையின், அப்பேறு இவருக்கு ஓராற்றான் உளதாயிற்று எனக் கருதலாம்.

2.9. புலவியிற் புலத்தல், கலவியிற் கலத்தல்: இவ்விரு நிகழ் வுகளும், சுந்தரர், பரவையாரொடு வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தமை அவர் வரலாற்றால் அறியமுடிகின்றது.

2.10. சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகிய மூன்றனுள் யாதா னும் ஒன்றன் தலைப்பை ஏற்று, அக்காப்பியப் பகுதிகள் அமைய வேண்டும் என்பர். இப்பெருங்காப்பியம் சருக்கம் என்னும் பகுதி யைக் கொண்டு இலங்குகின்றது.

2.11. நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றியதாய் இருத்தல் வேண்டும் என்பர்.

இங்குக் குறிக்கப் பெறும் சுவை, நகை முதலாகிய எண்வகைச் சுவைகளே. ஆனால் இப்பெருங் காப்பியமோ இவ்வெண்வகைச் சுவைகளோடு, சாந்தம், பத்திமை ஆகிய இருவகைச் சுவைகளும் சேரப் பத்து வகைச் சுவைகளோடும் அமைந்துள்ளது. இவ்வாற்றான் புராணங்களின் அடித்தளமாக விளங்கும் ஆன்மீக உணர்வோடு, பெருங்காப்பியத்திற்குரிய பெற்றிமைகள் பலவும் கொண்டு இவ்வரிய நூல் புதுமையும் பொலிவும் பெற்று இலங்குதல் காணலாம்.

தலைவாயில்

முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. |  2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |