தலைவாயில

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...|  1 | 2 | |

இரண்டாம் வரகுணன் காலம் (E.I. XXVIII No. 6; E.I. XXXII No. 41)

ஊர்க்கல்வெட்டு காலக்குறிப்பு சமமான கிறித்துவ எண் ஆண்டு

1. அய்யம்பாளையம் ஆட்சிஆண்டு 8 கி.பி. 870 மார்ச்

705/1905 சகவருடம் 792 மாதம் 22 ஆம்

தேதி முதல் 871

மார்ச் மாதம் 21

ஆம் தேதி வரை

இடைப்பட்ட

காலம்

2. திருவெள்ளறை ஆட்சிஆண்டு 13 14 ஆம் தேதி

84/1910 விருச்சிக மாதம் நவம்பர் மாதம்

அச்வதி நக்ஷத்திரம் 875

திங்கட்கிழமை

3. சவந்தினாதபுரம் ஆட்சி ஆண்டு 13 5 ஆம் தேதி

104/1947 தனுர் மாதம் டிசம்பர் மாதம்

அவிட்டம் திங்கட் 875

கிழமை

4. லால்குடி ஆட்சி ஆண்டு 13 6 ஆம் தேதி

121/1929 தனுர்மாதம் சதயம் டிசம்பர் மாதம்

செவ்வாய்க்கிழமை 875

திருவெள்ளறை, சவந்தினாதபுரம், லால்குடி ஆகிய ஊர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளவை. இக்கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் வரகுண மகாராஜர் தனது அதிகாரியான அண்ட நாட்டு வேளான் என்பவனிடம் நிதி அளித்து கோயில்களில் நிசதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIV; E.I. XXVIII No. 6) சவந்தினாத புரத்துக் கல்வெட்டின் நாளுக்கு மறுநாள் லால்குடி கல்வெட்டின் நாளாக அமைவதையும் நோக்கவேண்டும்.

இக்கல்வெட்டுக்களின் காலங்களைப் பின்னோக்கிக் கணித் தால் இரண்டாம் வரகுணன் கி.பி. 863இல் மார்ச் மாதத்திற்கு பிறகு, நவம்பர் மாதத்திற்கு முன் ஏதோ ஒரு நாளில் முடிசூடினான் என்பதை அறியலாம். அதாவது இரண்டாம் வரகுணன் முடிசூடியது கி.பி. 863 ஆகும். இம்மன்னனின் திருநெய்த்தானத்து கல்வெட்டு யாண்டு 4இல் செதுக்கப்பட்டது. (S.I.I. V. No. 608) இதன் காலம் 866-67. வரகுண மகாராஜன் என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்று எரித்த கோன்பராந்தகன் என்பது வரகுணனின் தம்பியே. இதனால் இவ்விருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். கோன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதால் தம்பியாகிய பராந்தகன் 866இல் முடிசூடியிருக்கவேண்டும் என்று கொள்ளலாம். அதாவது அண்ணனே தன் தம்பிக்கு இளவரசுப்பட்டம் கட்டி வைத்தான்.

இச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஷ்ரீ மாற ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை நன்கு அறியலாம். சிங்களவர் உதவிகொண்டு கி.பி. 860 இல் மதுரையில் சிம்மாதனம் ஏறிய மகன் வெகுநாள் ஆளவில்லை. மூன்று ஆண்டு களில் அவனை வரகுணன் விரட்டி விட்டான். பின்பு தனது தம்பியை யும் உடன் சேர்த்துக்கொண்டு நெடுநாள்கள் அரசு புரிந்தான்.

860க்கும் 863க்கும் இடைப்பட்ட காலத்தை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இக்காலத்தில் சிங்களவர்களால் மதுரை சிம்மாதனத்தில் வைக்கப்பட்டவன் யார்? அவனை விரட்டிவிட்டு, வர குணன் எவ்வாறுதனது ராஜ்யத்தைப் பெற்றான் இவ்வினாக்களுக்கு உரிய விடைகளைத் திண்டுக்கல் வட்டத்தில் உள்ள பெரும்புல்லி என்னும் ஊரிலிருந்து கிடைக்கும் கல்வெட்டும் (E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும் வடமொழி சரித்திர வரலாற்றுக் காவியமும் அளிக்கின்றன.

சிங்களவரை விரட்டினால்தான் மதுரையை மீட்கமுடியும் என்பதை வரகுணன் உணர்ந்து செயல்பட்டான். பெரும்புல்லிக் கல்வெட்டில் பாண்டியருக்கும், சிங்களவருக்கும் நடந்த போர் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. இப்போரில் பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு உதவியாக இருந்து சிங்களவரை வென்று, வரகுண மகாராஜருக்குப் பணி பலவும் செய்தான் என்று கூறப்படு கிறது. வரகுணன் தனது ஆட்சியை 863 இலிருந்து கணக்கிடுவதால் அப்போர் அந்த ஆண்டிலேயே நடந்திருக்க வேண்டும்; மதுரையில் இருந்த சகோதரனும் அவ்வாண்டிலேயே விரட்டப்பட்டு இருக்க வேண்டும்.

பாண்டிய குலோதயா என்னும் வடமொழிக் காவியம் தெரிவிக்கும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். (Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20 of English Translation - Edited by Dr. K.V. Sarma - Published by Institute of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V. Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating myself with his research in identifying the historical characters referred to in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the book, my humble service.) வரகுணனுடைய சகோதரன் இராஜ்யத்தைப் பிடுங்கிக்கொண்டு வரகுணனைத் துரத்தி விட்டான். மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில் திருவாதவூர் அடைந்தான். அங்குச் சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல கலைகள் சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் என்னும் அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியால் வரகுணன் தன் சகோதரனை மதுரையிலிருந்து துரத்திவிட்டு, பாண்டி மண்டலத்தை ஆளத்துவங்கினான். வாதபுரி நாயகர் என்று இங்கே கூறப்படுபவர் மாணிக்கவாசகரே ஆவர். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியைப் பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்டுகின்றன. மாணிக்கவாசகர் வரகுணனுக்கு மந்திரியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த சிவனடியாராக இருந்தார் என்பதையும், பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.

வரகுணன் தனது தம்பி பராந்தக வீரநாராயணனுக்கு கி.பி. 866இல் முடி சூட்டி வைத்தான் என்பதை முன்பே கண்டோம். பராந் தகனின் தளவாய்புரச் செப்பேடு மன்னனின் 45ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி. 911 இல் அளிக்கப்பட்டது. (பாண்டியர் செப்பேடு பத்து - தளவாய்ப்புர சாசனம்.)

இதில் பராந்தக வீரநாரயணன் தன் அண்ணன் வரகுணனை எம்கோ என்றும், சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் இச்சாசனத்தை வெளி யிட்டதாகத் தம்பி பராந்தகன் கூறுகிறான்.

"எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை

உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில் ......"

என்பது செப்பேடு வாசகம். இச்செப்பேடு வழங்கிய காலத்தில் வரகுணனும் உயிருடன் இருந்தனன் என்பதை அறியலாம். இச்செப் பேட்டில் பராந்தக வீரநாராயணன் வேறு ஒன்றையும் சொல்கிறான். அதாவது, வரகுணன் அண்ணன்; அவன் சிவதர்மத்தில் ஈடுபட்டவன். அவன் உலகத்தைக் காத்து வருகின்றனன். செப்பேட்டை வழங்கும் பராந்தக வீரநாராயணன் அக்களநிம்மிடி வயிற்றில் பிறந்தவன். பராந்தகன் தனக்குமுன் பிறந்தவனைச் செந்நிலத்தில் தோற்கடித்தான். இதனால் வரகுணனின் தாயும், பராந்தகனின் தாயும் வேறாவர் என்பதை எளிதில் உணரலாம். பராந்தகனால், தோற்கடிக்கப்பட்டவன் வரகுணனாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே அவன் வேறு ஒருவளின் மகன் என்பதையும் நன்கு அறியலாம். தொகுத்து நோக்கினால் ஷ்ரீ வல்லபனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்; மூத்தவளின் மகன் வரகுணன்; இளையவளின் மகன் ஒருவன்; மூன்றாமவளின் மகன் பராந்தக வீரநாராயணன் ஆவான் என்னும் உண்மைகள் புலப்படும்.

பட்டத்து அரசியான மூத்தவளின் மகன் வரகுணன் வயதில் சிறியவனாகவும் இளையவளின் மகன் வயதில் பெரியவனாகவும் இருந்திருக்கலாம். பட்டத்து அரசியின் மகனே முடிசூட வேண்டும் என்று தந்தை நினைத்திருக்கலாம். இதனைப் பொறாத இளையவளின் வயிற்றில் பிறந்தவன் - வயதில் பெரியவன் - சிங்களவர்களுடன் சேர்ந்து துரோகச் செயலில் ஈடுபட்டான் எனலாம். இத்துரோகச் செயலில் ஈடுபட்டவனின் பெயர் வீரபாண்டியன். இதனைக் கொடும் பாளூரில் வாழ்ந்த பூதிவிக்கிரம கேசரியின் கல்வெட்டால் அறியலாம். பூதிவிக்கிரம கேசரியும், வரகுணனும், பராந்தகனும் சமகாலத்தவர்கள். நண்பர்கள். பூதிவிக்கிரமகேசரி வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகக் கொடும்பாளூர் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. (S.I.I. XIX Introduction S.I.I. XXIII Introduction S.I.I. XXXIII - 129; K.V. Subramaniya Iyer - Quarterly Journal of Mythic Society Volume XLIII Nos. 3 and 4.) அந்த வீர பாண்டியன் வரகுணனின் சகோதரன் என்பதைச் சரித்திர நிகழ்ச்சிகள் துணைக்கொண்டு அறிகிறோம்.

மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந் தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவை யாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம் பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்" என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற் காலத்தில் நந்திவர்மன் காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன் 728 இல் காலமானான்.அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன் சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730 இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து 795 இல் மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்ழாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவை களின் கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776 இல் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர். (For the dates of Alwars - See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.)

கும்பகோணம் அருகே உள்ள நதான் கோவில் என்னும் திருமால் தலம் நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. "நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

"பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

தில்லைத் திருச் சித்திர கூடம்"

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத் திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.

"தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த ....."

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில் திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக முக்கியமானது.

திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத் தால் பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக் கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன் - சிவபக்தன்:

863 இல் முடிசூடிய வரகுணன் சோழநாட்டை வென்றான். வரகுணனின் கல்வெட்டுகள் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவிசலூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கி.பி. 885இல் நடந்த திருப்புறம்பியப் போரில் வரகுணன் தோல்வி அடைந்தான். பல்லவரும், சோழரும் வெற்றி அடைந்தனர். வரகுணன் இராச்சிய பாரத்தைத் தனது தம்பி பராந்தக வீரநாராயணனிடத்து ஒப்படைத்து விட்டுச் சிவதர்மத்தில் மூழ்கினான்.

வரகுணனுக்கு வாரிசுகள் இல்லைபோலும். பராந்தக வீர நாராயணன் 911இல் இறக்கவே அவன் மகன் ராஜசிம்மன் பாண்டி மன்னன் ஆனான். இவன் 931 வரை அரசாண்டான். பின்பு சோழர் களுக்குப் பயந்து ராஜசிம்மன் சிங்களத்துக்கு ஓடிவிட்டான்.

ராஜசிம்மனுக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் சுந்தரபாண்டியன். மற்றவன் வீரபாண்டியன். சுந்தரன் இளமையில் இறந்தனன். அவன் பெயரில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப் பட்டது. (S.I.I. XIV Pallimadam inscriptions) வீரபாண்டியன் 938 முதல் 959 வரை மதுரையில் அரசு புரிந் தான். 944 இல் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடந்தது. வீரபாண்டியன் சோழமன்னன் முதல் பராந்தகனின் மகனான உத்தம சீலியைக் கொன்றதால் "சோழன் தலைகொண்ட வீரபாண்டியன்" என்று அழைக்கப்பட்டான். சோழர்களும் வாளாயிருக்கவில்லை. கி.பி. 959இல் நடந்த போரில் சுந்தர சோழனின் மகனாகிய ஆதித்ய கரிகாலன், வீரபாண்டியனைக் கொன்றான். "வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி" என்றும் அழைக்கப்பட்டான் (For these Historical accounts see N.Sethuraman's "Early Cholas" edition 1980.) கொலையும், சண்டையும், சச்சரவும் நமக்கு எதற்கு? ஆகவே இவ்வாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

நால்வர் காலம் - ஆய்வின் சாரம் :

திருநாவுக்கரசர் - 580-660

திருஞானசம்பந்தர் - 640-656

சுந்தரர் - 700-728

மாணிக்கவாசகர் - 863 இல் பல சாத்திரங்கள் அறிந்த சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தவர். 863க்குப்பின் இரண்டாம் வரகுணனிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.

தலைவாயில்

மூன்றாம் திருமுறை - நால்வர் காலம் - தொடர்ச்சி...|  1 | 2 |