b

01 முகவுரை


கவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பஞ்

செவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரள

நவிக்கட் சிறுமியர் முற்றில் முகந்துதஞ் சிற்றில்தொறுங்

குவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே.

-நம்பியாண்டார் நம்பி.

உற்ற துணை:

உலகம் இன்பதுன்பங்களுக்கும், ஒளியிருள்களுக்கும், புண் ணியபாவங்களுக்கும், அறிவு அறியாமைகளுக்கும் இருப்பிடம். இத்தகைய கலப்பான வாழ்வில் மக்கள் களிப்படைவதில்லை. தனித்த இன்பத்தை - ஒளியை - புண்ணியத்தை - அறிவை அவாவுகின்றனர். ஆனால் துன்பம் இன்றி இன்பமும், இருளின்றி ஒளியும், பாவமின்றிப் புண்ணியமும், அறியாமையின்றி அறிவும் சிறப்பதில்லை: சிந்த னைக்குப் புலப்படுவதும் இல்லை: அநுபவத்திற்குப் புலனாவதும் இல்லை. ஆதலால் இரண்டுங்கலந்த வாழ்விலேயே உயர்ந்தது சிறக் கின்றது.

ஏன் இரண்டுங்கலந்த வாழ்வு:

இறைவன் பரம கருணாநிதி. மக்களனைவரும் `என்றும் இன்பத்து இருக்கவேண்டும்' என்பதே அவர் திருவுள்ளம். அங்ஙனம் இருந்தும் இன்பமயமாக உலகைப் படைக்காமல் கலந்த வாழ்வின தாய்ப் படைத்ததில் ஆழ்ந்த கருத்து இருத்தல் வேண்டும். அப்பரடிகள் நீற்றறையை நீரோடையாக அநுபவித்தது போல, பொன்னையும் போகத்தையும் பொய்மாயப் பேய்களாகக் கண்டதுபோல, இன்பத்தை யும் துன்பத்தையும் சமபுத்திபண்ணுந் தகுதி வரச்செய்யவேண்டும் என்பதே அக்கருத்து. இத்தகுதி எம்மனோர்க்கு எளிதிற் கைவருவ தன்று.

ஞானிகள் காட்டிய நன்னெறி:

எல்லாரும் இருவினையொப்பு எளிதில் எய்துதற்குத் தோத் திர பாராயணத்தைக் கைக்கொள்ளலாம் என்றனர். தோத்திரங்கள் ஆன்மாக்களாகிய நமக்கு இறைவன் செய்த பரமோபகாரங்களைப் பலகாலும் சொல்லி, கருத்து ஊன்றச் செய்து மனத்தைக் கனியவைக் குங் கருவிகள். மனித மனத்தைத் தெய்வமனமாக்கும் மருந்து; கவலை மனத்தைக் களிப்புமனமாக்கும் குளிகை.

தோத்திரங்களில் சிறந்தன எவை?

ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை.

திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை.

பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது.

தலமுறை:

நமது நாட்டில் சிவபூஜை செய்பவர்கள் தமது ஆன்மார்த்த மூர்த்தியோடு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலத்து மூர்த்தியையும் க்ஷணிகாதிலிங்கங்களில் ஆவாகனஞ்செய்து உடன்வைத்துப் பூசிப் பதும், அந்தந்தத் தலத்துப் பதிகத்தை அன்று பாராயணஞ் செய்வதும் பழக்கம். அதற்குத் தலமுறை மிக்க வசதியளிப்பதாகும்.

பண்முறை:

பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது.

பதிப்புக்கள்:

திருமுறையை முதன்முதல் பல ஏடுகளைத் தொகுத்தாராய்ந்து வெளிப்படுத்திய பெருமை, திருஞானசம்பந்தம் பிள்ளையென்னும் தீட்சாநாமம் பெற்ற மதுரை இராமசாமிப் பிள்ளையவர்களுடையது. இடையிலே செந்தில்வேல் முதலியார் போன்ற அறிஞர் பலர் இத்துறையில் முயன்று திருத்தமாய்ப் பதிப்பித்தனர். அண்மையில் யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணை வித்வசிரோமணி சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பலநாட்டு ஏடுகளைத் தொகுத்து ஒப்புநோக்கிச் சிறந்த பாடம் காணப் பெரிதும் முயன்று, பாடபேதக் குறிப்புக்கள் பலவற்றுடன் வெளியிட்டார்கள். பின்னர், கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்கள் திருத்தங்களுடன் கழகப்பதிப்பு வெளிவந்தது. இன்னும் பல பதிப்புக்கள் எத்தனை வந்தாலும் இன்னும் சிறந்த பாடம் காண வழியுண்டு என்று எண்ணத் தக்க வகையில் ஏடுகள் கிடைத்து வருகின்றன. அங்ஙனம் கிடைக்க, சில பாடல்களுக்குத் திருத்தமான பாடங்கள் இப்பதிப்பிலும் வாய்ந்தன. இவற்றையெல்லாம் சேர்த்து நல்லதொரு பதிப்பாக - அழகான பதிப்பாக ஆதீனச் சார்பாக வெளியிடவேண்டும் என்பது எங்கள் சீர்வளர்சீர் மகா சந்நிதானமவர்கள் திருவுள்ளக்குறிப்பு. பதிப்பழகு படிப்பவர்களின் மனத்தை மிகப் பிணிக்குமல்லவா?

உரைக்குறிப்பும் வேண்டும்:

பலருக்கும் பயன்படக்கூடிய நிலையில் பொழிப்புரையும், தேவையான சொற்களுக்குக் குறிப்புரையும், செய்யுள் முடிபும், தொனிப்பொருள் நயப்பொருள்களும் எழுதினால் நலம் என சீர்வளர்சீர் மகாசந்நிதானம் அவர்கள் ஆணை தந்தார்கள். அதனைக் கேட்டவுடன் அடியேன் திடுக்கிட்டேன். அருளாளப் பெருமக்களால் இயற்றப்பெற்ற திருமுறைகள் எங்கே! அடியேன் எங்கே! பாடலை அருளியவர் நிலையில் நம் சிந்தையும் உயர்ந்தாலல்லவா உண்மை யுரை காண இயலும்; அரசவேடந்தாங்கியவன் அரசபாவனையில் நிலைத்து நின்றால் அல்லவா பிறர்மனங்கவர நடிக்க இயலும்? என்ற எண்ணங்கள் அடியேன் மனத்துப் படிப்படியாக எழுந்தன. அப்போது நாடகம் பார்க்க வந்த பலருடைய பாவனை நடிப்பவனிடம் சென்று தைக்க அவனும் உண்மையரசனாகி உள்ளங்களிக்க நடிக்க வில்லையா? என்ற சிந்தனை பிறந்தது. சிந்தனை "இரும்பிரத குளிகை யினால்" என்ற சித்தியார் திருவிருத்தத்தை நினைவிற்குக் கொண்டு வந்தது. இருபத்தைந்தாவது குருஞானசம்பந்த சுவாமிகள் ஆணை இப்பணியில் அடியேனை ஆட்கொள்ளுகின்றது; அவர்களுடைய பாவனையால் இதற்கேற்ற அருட்பதிவு எளியேனிடமும் உண்டாகும் என்ற உறுதி பிறந்தது. அதனை நிறைவேற்றிக்கொள்ளக் காழிப் பிள்ளை கழலடியையும் பணிந்தேன். அத்தலத்திலேயே "தோடுடைய செவியன்" என்ற முதற்பாடலுக்கு உரை எழுதத் தொடங்கினேன்.

உரையமைதி:

சைவத்திற்குத் தேவாரத் திருமுறைகள்போல வைணவத்திற் குரிய மனம் உருக்கும் நூல்கள் திவ்யப்பிரபந்தங்கள். அவற்றிற்குப் பெரியவாச்சான்பிள்ளை போன்ற வியாக்யானக்காரர்கள் எவ்வளவு முயன்று எத்துணைச் சுவைபட்ட பேருரையைத் தோற்றுவித்திருக் கிறார்கள். எத்தனையோ இடங்களில் திருப்பாடற்போக்கு, அமைதி, சொல்லாட்சி, சொற்றொடர் ஆட்சி, பொருளாட்சி முதலியன அப்படி அப்படி அமைந்திருக்கின்றனவே. அவற்றையும் ஒத்துநோக்கி எழுதி னால் ஏற்புடையதாகுமே என்ற எண்ணம் எழுந்தது. அருளால் அங்ஙனமே இது அமைவதாயிற்று.

பிற சிறப்புக்கள்:

ஒவ்வொரு பதிகத்தின் தொடக்கத்திலும், தெய்வச்சேக்கிழார் பெருமான் தெரிவித்த நெறியில் பதிகம் எழுந்த வரலாற்றுமுறை விளக்கப்பெற்றுள்ளன. செந்தில்நாத அய்யர் அவர்கள் எழுதிய தேவார வேதசாரத்தைத் துணையாகக்கொண்டு வேத, உபநிடத, புராணங்களிலிருந்து ஒப்புமைப் பகுதிகள் தேவையான இடங்களில் தரப்பெற்றுள்ளன. சிவஞானபோத மாபாடியத்திலும், வெள்ளியம்பல வாண மாபாடியத்திலும் முதற்றிருமுறைப் பாடல் சிலவற்றிற்கு எழுதிய உரைக்குறிப்புக்களை ஒட்டி அங்கங்கே குறிப்புக்கள் தரப்பெற் றுள்ளன. இங்ஙனம் இவ்வுரை இனிது நிறைவேறியது. முதற்றிரு முறைப் பதிப்பு முற்றுப்பெற்றது. ஏகபாதம் எழுகூற்றிருக்கை முத லியவற்றிற்குப் பழைய உரை அப்படியே எடுத்துக்கொள்ளப்பெற்றது.

முற்சேர்க்கை:

இதன் தொடர்புரையாக நூலின் தொடக்கத்தில் தலங்களைப் பற்றிய புராணவரலாறுகளும், மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், மடம் இவற்றின் பெயர்களும், சிறப்புக்களும், வழிபட்டு நலம்பெற்றோர் வரலாறுகளும் சேர்க்கப்பெற்றுள்ளன. சிறப்பாக, நமது தமிழ் மன்னர்களுடைய தெய்வபக்தி, திருமுறையன்பு, திருமுறை ஆசிரியர் களிடம் இவர்களுக்குள்ள இணையீடற்ற பக்தி, ஆட்சிச் சிறப்பு, வெற்றி, தோல்வி முதலிய வரலாற்றுக் குறிப்புக்கள், தானச்சிறப்பு இவற்றைக்காட்டும் கல்வெட்டுக் குறிப்புக்களும் சேர்க்கப்பெற்றுள் ளன. இவற்றால் நமது சிவாலயங்களின் தொன்மையையும், நமது தமிழ்மக்கள் தெய்வபக்தியைத் துணைக்கொண்டே தமது புகழையும், வாழ்வையும் வளர்த்துவந்தமையையும் அறியலாம்.

இவ்வண்ணம் இவ்வெளியீடு இத்துணைச் சிறப்புக்களுடன் வெளிவர உறுதுணையாயிருந்தவை, நித்யபாராயணஞ்செய்து வரும் சீர்வளர்சீர் மகாசந்நிதானம் அவர்கள் தந்த சில நயமான குறிப்புக் களும், ஊக்கவுரையுமே என்பது உறுதி. ஆதலால் தெய்வத்தமிழ் நூல் களை ஒவ்வொரு தமிழ்மக்கள் கரத்திலும் விளங்கச்செய்ய வேண்டும் என்ற பெருநோக்குடைய சீர்வளர்சீர் மகாசந்நிதானம் அவர்களுக்கு அடியேன் "ஆளாய் இனியல்லேன் எனலாமே!"

அடியேனுடைய எளிய குறிப்புக்களையும் திருக்கண்ணோக் கிச் சிறப்பித்து நல்லாசி வழங்கியருளிய செந்தமிழ் வளர்க்கும் செம்மல் ஷ்ரீகாசிமடம் சீர்வளர்சீர் காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவடிகட்கும், குடந்தை சிறீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சீர்வளர்சீர் சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள் திருவடிகட்கும் அடியேன் வணக்கம் உரியதாகுக.

இப்பதிப்பு அழகாக வெளிவர ஒப்புநோக்குதல் முதலிய காரியங்களில் முயற்சியுடன் ஒத்துழைத்த புலவர் முத்து. சு. மாணிக்க வாசக முதலியார், வித்துவான் எம். ஆறுமுக தேசிகர், வித்துவான் வி.எஸ். குருசாமி தேசிகர், வித்துவான் எஸ். திருஞானசம்பந்தன் இவர்கட்கும் என் நன்றி உரித்தாகுக.

இவ்வெளியீட்டிற்கு வேண்டிய சீகாழி, திருவையாறு படங் களைத்தந்த ஆனந்தவிகடன் காரியாலயத்திற்கு நன்றி.
கல்வெட்டுக் குறிப்புக்களில் சிலவற்றைத் தொகுக்க வழி காட்டி உதவிசெய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி விரி வுரையாளர் தி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கட்கு மிக்க நன்றி யுடையனாவேன்.

இங்ஙனம் எல்லாவகையிலும் இவ்வெளியீடு நன்றாம் வண்ணம் திருவருள்பாலித்த ஷ்ரீ சொக்கலிங்கப்பெருமான் திருவடி களை மனமொழிமெய்களால் என்றும் வணங்குவேன்.

குற்றங்களைந்து குணம்பெய்து அடியேனை ஆசீர்வதிக்கச் செந்தமிழ்ப் பேரறிஞர்களை வேண்டிக்கொள்கிறேன்.

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்

துறவியெனுந் தோற்றோணி கண்டீர் - நிறையுலகில்

பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்

தன்மாலை ஞானத் தமிழ்.

வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

தருமபுரம் துணைத்தலைவர்.

3-4-1953 தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரி

 

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி