b


குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம்

 

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

01 ஆசியுரை

தேவாரம்

திருச்சிற்றம்பலம்

நறவம் நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்

சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்

புறவம் உறைவண் பதியாம் மதியார் புரமூன் றெரிசெய்த

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே.

-திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்

சொரூபநிலை:

இறைவன் ஒருவனே. அவன் தன்மையால் இருதிறப்படு வான். இதனைத் திருஞானசம்பந்தர், `தோடுடைய செவியன்' என்றார். தோட்டையுடைய செவி அம்மைக்குரியது. அம்மையை இடப்பாகத்தே உடையவராதலின் தோடுடைய செவியன் என்று இறைவனை இருதன்மையோடு கூடிய ஓருருவாகவே கூறினார். இறை வன் தோடுடைய செவியனாய்க் காட்சி கொடுத்தபின் பொங்கொளி மால் விடைமீதிவர்ந்து பொற்றோணி புகுந்தருளினார்.

அத் தோணியப்பரை `நறவம் நிறைவண்டு` என்று தொடங் கும் இரண்டாவதாகப் பாடியருளிய பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் `இமையோர் ஏத்த உமையோடிருந்தானே` என்றமை யாலும் பெருமானை இருதன்மையுடைய ஒருவனாகவே காட்டி யுள்ளமை உணரத்தக்கது.

மேலும் `ஓருருவாயினை மானாங்காரத்து ஈரியல்பாய்' என்றருளினார். திருப்பரங்குன்றம் `நீடலர் சோதி' எனத் தொடங்கும் பதிகத்துள் மூன்றாம் பாடலில்,

"ஓருடம்புள்ளே உமையொருபாக முடனாகிப்

பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே".

என்பதனாலும், திருவண்ணாமலைப் பதிகத்தில் ,

"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகியவொருவன்"

என்பதனாலும்,

"ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கி"

என்னும் நாகைக்காரோணப் பாடலாலும் பொருள் ஒன்று, தன்மை இரண்டு என்பதைத் தெளிவித்தார். சூரியனும் அதன் கிரணமும் போல், சிவமும், சக்தியும் பிரிப்பின்றி ஒரே பொருளாய், இருதன்மை உடையதாம். இதனை மணிவாசகர், `நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்' என்றார்.

அபிராமிப்பட்டர் `உமையும் உமையொரு பாகரும் ஆகி ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்' என்றார்.

இதனை, இறைவனது சொரூபநிலை எனக் கூறுவர் சாத்திர நூலார். சொரூபநிலை என்பது தன்னிலை; அஃதாவது இறைவனது இயற்கை நிலையாம்.

தடத்த நிலை:

இப்பரம்பொருள் தன்னை நோக்க ஒன்றாயும், உலகமுகப் படும் போது, அஃதாவது உயிர்கள் ஈடேற்றம் பெற உலகைத் தொழிற் படுத்தும் போது பலவாயும் பயன்படுகிறது. பரசிவம், பராசக்தி பூரணமாயிருந்தும் செயல்படாமல் ஒன்றாயும் இருதன்மைப்பட்டும் இருக்கிறது.

அப்பரசிவம் தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழிநின்று பராசக்தியை நோக்க, அப்பராசக்தி தன் நிலையினின்றும் இறங்கி ஆதிசக்தியாய், தன் சக்தியில் பலகோடியில் ஒரு கூறு சக்தியால் அயன், அரி, அரன் என்னும் முதல் மூவரைப் படைத்து, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்விக்கின்றது. இதுவே தடத்த நிலையாகும். இதுபற்றியே அபிராமிப்பட்டர் அம்மையை " முதல் மூவருக்கும் அன்னே" என்று அருளினார்.

திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவரும், "மெய், போதம், இன்பம் ஆம் வண்ணம் மெய் (உருவம்) கொண்ட வனாகிய பெருமான் தன் வலியாகிய ஆதிசக்தியின் ஆணைதாங்கி மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய வாளாமேவு அண்ணல்" என்றமையாலும் இக்கருத்துப் புலனாகும்.

இதனை ஞானசம்பந்தர் `ஒருவிண் முதல் பூதலம் படைத் தளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை' என்றார்.

சம்புபட்சமும், அணுபட்சமும்:

சம்பு - இறைவன், இன்பத்தின் ஊற்றுக் கண்ணாயிருப்பவர். இங்குக் குறித்த அயன், அரி, அரன் ஆகிய மூவரும் இறைவனுடைய சக்தியே ஆவர். இது சம்புபட்சம். இறைவனே அயன், அரி, அரன் ஆன நிலை.

இம்மூவரும் தவறு செய்தவர் அல்லர். இவர்கள் படைப்பின் பயனால் உயிர்களிற் சில, புண்ணியச் செயற்பாட்டால் உயர்ந்து, இப் பதவியைப் பெற்றுப் படைத்துக் காத்து அழித்தலைச் செய்தன. இவ்வான்மாக்கள் அணுபட்சத்தினர் எனப்படுவர். அஃதாவது உயிர் வர்க்கத்தினர். ஆணவ மலமறைப்பால் வியாபகம் இன்றி அணுத் தன்மை எய்தியிருப்பதால் உயிர் அணு எனப் பெற்றது.

அயனும் அரியும்:

இம்மூவரில் அயனும் அரியுமே நானேபிரமம் என்று தருக்கிய வர்கள். இறைவன் சோதியாய்த் தோன்றியபோது அடிமுடி தேடி இளைத்தவர்கள்.

அதிலும் அரன் அன்று முதல் இன்று வரை தானே பிரமம் என்று தருக்கியவர் அல்லர். அதனாலேயே அரனே சிவம் எனப் போற்றப்படுகிறார். இவ்விரு அரியும் அயனும் கூட ஒருகற்பத்திலே தான் இவ்வாறு தருக்குற்றனர்.

தருக்குற்றார் இறைவனைக் காண இயலாது என்பதைத்தான் திருமுறைகள் திருமாலும் பிரமனும் தேடிக் காணாதவர் என்று பேசு கின்றன.

இறைவனே மூவரும் ஆயினமையைத் திருநாவுக்கரசர்,

`ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ,

ஓருருவே மூவுருவம் ஆனநாளோ?'

என்ற கேள்வியால் விளக்கிப் போந்தார். இன்னோரன்ன குறிப்புக் களால் இறைவன் ஒருவனே என்பதும், அவன் தானும் தன்சக்தியுமாய் இருதன்மைப்பட்டு இயங்கியும் உலகத்தை இயக்கியும் வருகிறான் என்பதும், அவனே மூவராயும் மூவருக்கும் மேலாக மூவர்கோனாயும் விளங்குகிறான் என்பதும் புலப்படும்.

இவ்வரிய கருத்துக்களை எல்லாம் பன்னிரு திருமுறைகள் பல இடங்களிலும் தெளிவு படுத்துகின்றன.

திருமுறை:

திருமுறை என்ற சொல், திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று. திரு என்பது சிவம். `சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்பது மணிவாசகர் திருவாக்கு. அவர் சிவத்தைத் திரு என்றே குறிப்பிடுகிறார்.

`திரு' என்ற சொல்லுக்கு உண்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்று பொருளும் உண்டு. சிவபரம்பொருளைச் சச்சிதானந்த வடிவ மாகக் காட்டுகின்றன ஞானநூல்கள். சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் திரு எனப்படும். சத் என்பது சிவம், சித் என்பது உமாதேவி, ஆனந்தம் என்பது முருகன். எனவே, உண்மை, அறிவு, இன்பம் இம் மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும்.

இப்பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை எனப்படும். முறை என்ற சொல், நூல் என்ற பொருளில் கந்த புராணத் துள் வந்துள்ளமையைக் காணலாம்.

"இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்

முறைவரை வேன்என முயல்வது ஒக்குமால்"

என்பது கந்தபுராண அவையடக்கப் பாடல் பகுதி.

மேலும் திரு என்ற சொல்லுக்கு, `கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்' என்று திருக்கோவையாருக்கு உரை கண்ட பேராசிரியர் குறிப்பிடுவதும் கொள்ளத்தக்கதே. என்னை? குழந்தை, யானை என்பனவற்றை எத்துணைப் பெரியவர்களாயினும் எத்துணைச் சிறியவர்களாயினும் காணுந்தோறும், காணுந்தோறும் விருப்பம் கொள்வர். அது போல் சத்து, சித்து, ஆனந்தமாக இருக்கும் பரம் பொருளையும் துன்புறுவோர் இன்புறுவோர் யாவராயினும் நினையுந்தொறும், காணுந்தொறும், பேசுந்தொறும் விருப்புற் றிருப்பரே அன்றி வெறுப்புற்றிருப்பாரல்லர் என்பதும் அறிந்து இன்புறத்தக்கது.

தேவாரம்:

இனி இத் திருமுறைகளுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைத் தேவாரம் என்று அழைக்கிறோம்.

தேவ - ஆரம் என்று இதனைப் பிரிக்கலாம். தெய்வத்திற்கு மாலை போல்வது என்பது இதன் பொருள். மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல, சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றபொருளில் இப்பெயர் அமைந்திருத்தலைக் காணலாம்.

தே - வாரம் எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளை விப்பது எனப்பொருள்படும். வாரம் - அன்பு. "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

மேலும், வாரம் - உரிமை. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம்.

தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளிலும் வழங்கி உள்ளது. வாரம் என்பது முதல்நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை இயக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடை முதல்நடை எனவும், விரைந்தநடை திரள் எனவும், இவ்விரண்டிற்கும் இடைநிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கும், இசையொழுக்கும் பொருந்திய இசைப்பாடல் வாரம் எனவும், சொற்செறிவும், பொருட்செறிவும் உடைய பாடல் கூடை எனவும் அடியார்க்கு நல்லார் உரை, விளக்கம் தருகிறது. எனவே, வழிபாட்டிற்குரிய இனிய இசைப்பாடல் என்பதே தேவாரம் என்பதன் பொருளாக அறியப்பெறுகிறது.

தேவாரம் என்னும் பெயர்வழக்கு, இரட்டைப் புலவர்கள் பாடியுள்ள ஏகாம்பரநாதர் உலாவில்தான் இலக்கியத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும், தேவாரம் செய்த திருப்பாட்டும் ... " என்பது அவ்வுலாத் தொடராகும்.

தெய்வக்குடிச் சோழர்:

திருமுறைகளில் தேவாரம் மட்டும் அடங்கன் முறை என்று வழங்கி வருகிறது. தேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்துத் தேவாரத் திருமுறை என்றும் இதனைக் கூறுவர். இவ்வரிய கருவூலத்தை நமக்கெல்லாம் கிடைக்க வழி செய்த பெருமை இறை யருளால் சோழ மன்னர்களுக்கே வாய்த்தது. இதனாலேதான் திரு முறையை வகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர்
திருஅந்தாதியில், கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றில், "மை வைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறி கருதாத், தெய்வக் குடிச் சோழன்" என்று கூறி அருளினார்.

திருமுறைகண்ட சோழன் யார்?:

சோழர்கள்தான் திருமுறைகளை முதன்முதல் கண்டும் கேட்டும், அவற்றைத் திருக் கோயில்களில் ஓதுவதற்கு நிவந்தம் அளித் தும் போற்றினர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

முதலாம் ஆதித்த சோழன் ஆட்சிக் காலம் கி.பி. 873இல் திரு எறும்பியூரிலும், கி.பி. 876இல் பழுவூரிலும் கோயில்களில் திருப் பதிகம் ஓத நிவந்தம் அளித்தமை அவ்வத்தலக் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

முதல் பராந்தக சோழன் ஆட்சிக்காலம் கி.பி. 910இல் திருவாவடுதுறையிலும், கி.பி. 911இல் அல்லூரிலும், கி.பி. 914இல் திருத்தவத்துறையிலும் (லால்குடி), திருமுறைகளை ஓத நிவந்தம் அளித்தமை அவ்வூர்க் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

உத்தம சோழன் ஆட்சியில் கி.பி. 977இல் திருநல்லத்திலும், (கோனேரி இராஜபுரம்) கி.பி. 984இல் அந்துவநல்லூரிலும் திருப் பதிகங்கள் ஓதுவதற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பல்லவர் ஆட்சியில் நந்திவர்ம பல்லவனின் 17ஆம் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 750இல் திருவல்லம் கோயில் கல்வெட்டில் "திருப்பள்ளித் தாமம் பறிப்பார்க்கும், திருப்பதிகங்கள் ஓதுவார் உள்ளிட்ட பல பணிகள் செய்வார்க்கும் நெல்லுநானூற்றுக்காடியும்" என்று குறிக்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது ஆதித்த சோழனுக்கு முன்பே பல்லவர் ஆட்சியிலேயே திருமுறைகளைக் கோயில்களில் ஓதுவதற்கு நிவந்தங்கள் அளித்த உண்மை புலனாகிறது.

இவையெல்லாம் முதலாம் இராஜராஜன் காலத்திற்கு (கி.பி. 985-1014) முன்பே நிகழ்ந்தவை. எனவே திருமுறை கண்ட சோழன் முதலாம் ஆதித்தனா, முதலாம் இராஜராஜனா என்பதில் கருத்து வேறு பாடுகள் தோன்றியுள்ளன.

கல்வெட்டு ஆய்வாளர் திரு. சதாசிவ பண்டாரத்தார் முதலாம் ஆதித்த சோழன் காலமே நம்பியாண்டார் நம்பிகளின் காலம் என்பர். திருமுறை கண்டதும் அக்காலமே என்பர். திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் திரு.க. வெள்ளைவாரணனாரும் அக்கருத்தையே வலியுறுத்துகின்றார்.

கல்வெட்டு ஆய்வாளர், குடந்தை திரு.ந.சேதுராமன் முதலி யோர் முதலாம் இராஜராஜனே என்பர். உமாபதிசிவம் இயற்றியருளிய திருமுறைகண்ட புராணம் இராஜராஜனையே திருமுறைகண்ட சோழன் என்று குறிப்பிடுகின்றது.

சோழர் மூவரின் திருமுறைப்பணி:

நம்பியாண்டார் நம்பிகள், முதலாம் இராஜராஜன் காலத் திலும், முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் இருந்தவராகக் கருதப் படுவதால், இராஜராஜன் காலத்தில் முதல் ஏழு திருமுறைகளையும், இராஜேந்திரன் காலத்தில் எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாந்

திருமுறைகளையும் தொகுத்தவர் ஆவர். இதனால் இந் நம்பிகள் வேதத்தை நான்காக வகுத்த வேதவியாசருக்கு ஒப்பாகப் போற்றப்படுகிறார். அநபாயன் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்தவன்.

"திருத்தொண்டர் புராணம்எழு தியமுறையை மறையோர்

சிவமூல மந்திரத்தால் அருச்சனைசெய் திறைஞ்சி

இருக்குமுதல் மறைநான்கில் இன்றுமுத லாக

இதுவும்ஒரு தமிழ்வேதம் ஐந்தாவ தென்று

கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூப தீபம்

கவரிகுடை கண்ணாடி ஆலத்தி நீறு

பரித்தளவு செயக்கண்டு வளவர்பிரான் முறையைப்

பசும்பட்டி னாற்சூழ்ந்து பொற்கலத்தில் இருத்தி."

என்ற உமாபதி சிவம் அருளிய சேக்கிழார் புராணப் பாடலால், திருத் தொண்டர் புராணத்தைச் சிவமாகப் பாவித்து, சிவமூல மந்திரத்தால் மறையோர் அர்ச்சித்து, `தோடு' செய்த திருநெறிய செந்தமிழோடு ஒக்கும் என்றுரை செய்து, செப்பேடு செய்வித்துப் பன்னிரண்டாந் திருமுறையாக ஏற்றுப் போற்றினர்.

எனவே, முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மூவேந்தர் காலத்திலேயே இப்பன்னிரு திருமுறைகள் தொகுக்கப் பெற்றன என்பதைத் தெளிந்து பணிந்து போற்றுவோமாக.

செப்பேடு:

கி.பி. 1070 முதல் கி.பி. 1120 வரை ஆட்சி புரிந்தவன் முதல் குலோத்துங்கன். இவன் படைத்தலைவர்களுள் ஒருவனான மணவிற் கூத்தன் காளிங்கராயன் என்பான், மூவர் தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து, திருக்கோயிலுள் சேமமுற வைத்தான் என்று தில்லைக் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. அதுபற்றிய வெண்பா:

"முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)

ஒத்தமைத்த செப்பேட்டி னுள்எழுதி - இத்தலத்தின்

எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்கூத்தன்

தில்லைச்சிற் றம்பலமே சென்று."

தில்லைச்சிற்றம்பலத்தின் மேல்பால் மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் இருந்த திருமுறைகள் செல்அரித்திருந்தமையை உணர்ந்தமையால் செல் அரியாவண்ணம் இப்படைத்தலைவன் காளிங்கராயன் செப்பேடு செய்வித்தான்.

திருவாரூரிலும் திருமுறைகள் செப்பேடு செய்திருந் தமையை, அச்செப்பேட்டிலிருந்து படி எடுத்த தருமை ஆதீன ஓலைச் சுவடியால் புலனாகிறது. இப்படி யெல்லாம் திருமுறைகளின் அருமை, பெருமை தெரிந்து போற்றிய முன்னோர்களின் திருவுளக் கருத்தை உணர்வோமாக.

ஓலைச்சுவடிகளில் திருமுறை:

மற்றொரு வகையில் திருமுறைகண்ட சோழன் பற்றிச் சிந்திப் போம். ஞானசம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்து அவர் பாடல்களையெல்லாம் எழுதி வந்த சம்பந்த சரணாலயரே திருமுறை களை முதன்முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதியவர். அதன்பிறகு ஏறத்தாழ ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவ ராகக் கருதப்பெறும் சீகாழி கணநாதநாயனார், திருமுறைகளை எழுதுவோர் வாசிப்போரைத் தயாரித்தார் என்பது அவரைப் பற்றிய செய்தி.

பிற்காலத்தில் திருநெல்வேலிப் பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் சில தேசிகர் குடும்பத்தினர் ஓலையில் திருமுறைகளை எழுதி, பலருக்கும் வழங்கி அதனால் வரும் ஊதியம் கொண்டு வாழ்க்கை நடத்தினர் என்று மர்ரே கம்பெனி திரு. ராஜம் குறிப்பிட்டு உள்ளதும் சிந்திக்கவேண்டிய செய்தி. இதில் காலக் குறிப்பில்லை.

இதுபற்றிப் பொதுவாகச் சிந்தித்தால் தேவாரத் திருமுறைகள் தேவார மூவர் காலத்திற்குபின் மக்கள் வழக்கில் அருகி இருந்தன என்பதும், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் அருளால் நம்பி யாண்டார் நம்பிகள் இராஜராஜன் வேண்டுகோட்படி சிதம்பரத்தில் சிற்றம்பலத்தின்மேல்பால் உள்ள மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் திருமுறைகள் உள்ளன என்பது கண்டு அறிவித்ததுமுதல், இன்றுள்ள மூவர் தேவாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்று கொள்ள இடம் தருகிறது.

திரு. வெள்ளை வாரணனார் திருமுறைகண்டபுராணம் இயற்றியவர் உமாபதிசிவம் என்பதை ஒத்துக்கொள்கிறார். உமாபதி சிவம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.

இராஜராஜசோழன் காலத்திற்குப்பிறகு 300 ஆண்டளவில் வாழ்ந்தவர். இவர் இதுபற்றிச் சிந்திக்காமல் இருந்திருப்பாரா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அபயகுலசேகரன் என்ற பெயர், சோழர்கள் யாருக்கும் பெயராக இருந்ததில்லை என ஆய்வு செய்துள்ளார். பட்டப்பெயராக நம்பியாண்டார் நம்பிகளே கொடுத்திருக்கலாம் என்று கொள்வதால் தவறேதும் இல்லை எனத் தோன்றுகிறது.

இடங்கழி நாயனாரையும், கோச்செங்கட் சோழ நாயனாரை யும் சிற்றம்பலம் பொன்வேய்ந்தவர்கள் என்று நம்பிகள் சொல்கிறார். இதுபோன்ற குறிப்பு இராஜராஜனைப்பற்றி நம்பிகள் ஏதும் குறிப்பிட வில்லையே என்கிறார். இது சிந்தைனைக்குரியதே.

முதலில் தேவாரம் பாடியவர்:

ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களைத் திருக்கடைக்காப்பு என்றும், நாவுக்கரசர் அருளிய பதிகங்களைத் தேவாரம் என்றும், சுந்தரர் அருளிய பதிகங்களைத் திருப்பாட்டு என்றும் பழமையில் வழங்கிய மரபையும் நாம் தெரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும்.

ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் சமகாலத்தில் வாழ்ந்த வர்கள் என்று போற்றப் பெறுபவர்கள். ஆனால் இவர்களில் முதன் முதல் தேவாரம் பாடியவர் யார் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் வரலாற்று அடிப்படையில் நலம் தரும் செயலாம்.

சுருங்கச் சொன்னால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி. 615-630. இந்தக் காலத்தில்தான் அப்பர் பெருமான் சமண சமயத்திலிருந்து சைவம் சார்ந்தார். முதன்முதலில், " கூற்றாயினவாறு" என்று தொடங்கும் தேவாரம் பாடியருளினார். மகேந்திரவர்ம பல்லவன் விளைத்த இடர்களையெல்லாம் இறை யருளால் வென்றார். மகேந்திரவர்மனும் மனம்திருந்தி சைவசமயம் சார்ந்து திருவதிகையில் குணபரவீச்சுரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். திருச்சிராப்பள்ளியிலும் மலைமீது குடைவரைக் கோயில் அமைத்தான். அவ்வரசன் சமணசமயத்தைச் சார்ந்திருந்ததும், நாவுக் கரசரால் மனம்திருந்தி சைவன் ஆனதும் அக்குடைவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி. 630-668. ஞானசம்பந்தர் அவதாரமே கி.பி. 638 என்று நரசிம்மவர்மன் காலமாகக் கணக்கிடுகின்றனர்.

கி.பி. 642இல் நரசிம்மவர்ம பல்லவன் பரஞ்சோதியாரைப் படைத் தலைவராகக் கொண்டு, வாதாபியை வென்று, அவர் சிவன் அடியார் என்பதறிந்து, அவருக்குச் சிறப்புக்கள் செய்து, நிரம்பப் பொருளும் கொடுத்து, சிவதொண்டு செய்துவர விடுத்தான். இப் பரஞ்சோதியாரே சிறுத்தொண்டர் எனப் போற்றப்படுவர். கி.பி. 642 இல் திருச்செங்காட்டங்குடி சேர்ந்து திருவெண்காட்டு நங்கையை மணந்து சீராளதேவரைப்பெற்று மூவாண்டில் பள்ளியில் சேர்த்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் கி.பி. 645இல் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளி இறைவனைத் தரிசித்து, சிறுத்தொண்டரையும், சீராள தேவரையும் "பைங்கோட்டு மலர்ப்புன்னை" திருப்பதிகத்துள் குறிப் பிட்டுள்ளார்.

இவ்வரலாற்றினால் மகேந்திரவர்ம பல்லவன் காலத்திலேயே வாழ்ந்து அற்புதங்கள் நிகழ்த்திய அப்பரே முதலில் தேவாரம் பாடியவர் என்பது தெளிவாகும்.

முதல் ஆசாரியர்:

முதலில் தேவாரம் பாடியவர் என்ற சிறப்பு அப்பருக்கு இருந்தபோதிலும், ஆசாரியத்துவம் யாருக்கு முதன்மையாக வழங்கி யுள்ளார் இறைவன் என்பதையும் தெரிந்துகொள்வது தெளிவுதரும் செயலாகும்.

சீகாழியில் பெருமான் ஞானசம்பந்தருக்குத் தோடுடைய செவியனாய் விடையேறிக் காட்சிகொடுத்தான். அக்காட்சியைத் தன்னை ஈன்றெடுத்த தவமுடைய தாதைக்கு அடையாளங்களுடன் சுட்டிக் காட்டினார் ஞானசம்பந்தர். ஆனால் அக்காட்சி சிவபாத இருதயருக்குப் புலப்படவில்லை.

அடுத்து, திருமறைக்காட்டில் கதவு திறக்கவும் அடைக்கவும் பாடிய நிகழ்ச்சியால், நெகிழ்வுற்ற அப்பரைத் திருவாய்மூர்

வரச் சொன்னார் இறைவன். அதை ஞானசம்பந்தரும் உணர்ந்து அப்பருடன் பின் தொடர்ந்தார். திருவாய்மூர்ச் செல்வனாரும் ஞானசம்பந்தருக்குத்தான் காட்சி நல்கினார். ஞானசம்பந்தர் காட்டக் கண்டார் அப்பரடிகள். அதன் பிறகுதான் அப்பர், `பாட அடியார் பரவக்கண்டேன்' என்று பாடுகிறார்.

முத்தமிழ் விரகராம் ஞானசம்பந்தர் மூல இலக்கியங்களாகப் பலவற்றை இயற்றியதோடு அவையெல்லாம் இசை நுணுக்கம் வாய்ந்த பாடல்களாகப் பாடியுள்ள சிறப்பு, அவதாரத்திற்கு 16 காரணங்கள் குறிப்பிடும் சேக்கிழார் வாக்கு, குடை, திருச்சின்னம், சிவிகை, முத்துவிதானம் போன்ற ஆசாரியருக்குரிய அங்கங்கள் எல்லாம் ஞானசம்பந்தருக்கே கொடுத்துள்ளமை முதலியவற்றால் முதன்மை ஆசாரியத்துவம் ஞானசம்பந்தருக்கே வழங்கியுள்ளமை புலனாகிறது. மேலும் இவர் முத்திப்பேறெய்திய ஆச்சாள்புரம் ஆச்சாரியபுரம் என்று வழங்கியமையாலும் இக்கருத்தை நன்கு தெளியலாம்.

பண் அடைவு:

பண்முறைப் பதிப்பு, தலமுறைப் பதிப்பு என்னும் இருவகைப் பதிப்புக்களே நடைமுறையில் வெளிவந்துள்ளன. அடுத்து வரலாற்று முறைப் பதிப்பும் விரைவில் வெளிவர வேண்டியது அவசியமாகும்.

முதல் திருமுறையில் நட்டப்பாடைப் பண்ணில் 22 பதிகங் களும், தக்கராகப் பண்ணில் 24 பதிகங்களும், பழந்தக்கராகப் பண் ணில் 8 பதிகங்களும், தக்கேசிப் பண்ணில் 12 பதிகங்களும், குறிஞ்சிப் பண்ணில் 24 பதிகங்களும், வியாழக் குறிஞ்சிப் பண்ணில் 25 பதிகங்களும், மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் 8 பதிகங்களும் ஆக 136 பதிகங்களும், 88 தலங்களும் உள்ளன. இவற்றுள் "மாதர் மடப்பிடி யும்" என்ற பதிகம் யாழ்முரி என்றிருந்த போதிலும், அதுவும் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணேயாகும். யாழை முரிக்கத் துணை நின்றதால் யாழ்முரி என்று பெயர் பெற்றதே அன்றி அது தனிப் பண்ணல்ல என்பதும் அறிக.

அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் ஆச்சாள் புரத்திலே, திருமண நிறைவின் போது, பாடிய, "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கும் பதிகமும், திருக்குருகாவூர் வெள்ளடையில் பாடியருளிய "சுண்ண வெண் ணீறணி" என்று தொடங்கும் பதிகமும் ஆக இரண்டு பதிகங் களே உள்ளன. பண் முறைப்படி பார்த்தால், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சிக்கு அடுத்ததாக அந்தாளிக் குறிஞ்சிப் பண் இடம் பெற்றிருக்க வேண்டும். ஞானசம்பந்தர் வாழ்வின் நிறைவில் பாடியதால் அப்பண்ணை மட்டும் மூன்றாம் திருமுறையின் நிறைவில் சேர்த்துள்ளனர். பண்முறைப் பதிப்பு என்ற முறையில் அப்பண் முதல் திருமுறையில் இருப்பதே பொருத்தமானதாகும். விவரம் தெரிவதற்கு இங்கு இது குறிக்கப்பட்டுள்ளது.

"துஞ்ச வருவாரும்" எனத் தொடங்கும் திருவாலங்காட்டுத் திருப்பதிகம், பழம்பஞ்சுரத்தில் சேர்க்கப்பட வேண்டும். இப்பதிகத்தை மூன்றாந் திருமுறையில் பழம்பஞ்சுரப் பதிகங்களோடு சேர்த்து, அத்திருமுறையில் உள்ள அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணமைப்புடைய இரு பதிகங்களையும் முதல் திருமுறையில் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிற்கு அடுத்ததாகச் சேர்ப்பதே முறையாகும். இவ்வாறு ஒன்றைக் கழித்து இரண்டு பதிகங்களை முதல் திருமுறையில் சேர்த்தால் முதல் திருமுறைப் பதிகங்கள் 137 ஆகும்.

திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறையில் `குருவருள்' என்ற தலைப்பில் சில பாடல்களுக்கு விளக்கம் குறிக்கப்பெற்றது. நிற்க, மேலும் சில திருப்பதிகப் பாடல்களின் அரிய கருத்துக்களை இனிக்காண்போம்.

மூத்த திருப்பதிகம்:

இத்திருமுறையில் எட்டுப் பண்களில் அமைந்த 136 திருப் பதிகங்கள் உள்ளன. அவற்றுள் முதல் திருப்பதிகம் தோடுடைய செவியன் என்பது. ஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே பண்ணோடு திருப்பதிகம் பாடி நெறிகாட்டியவர் காரைக்காலம்மையார்.

அவர் பாடிய நட்டபாடைப் பண்ணையே முதலில் ஞான சம்பந்தரும் அருளினார். இது பற்றியே அம்மையார் அருளிய திருப் பதிகம் மூத்த திருப் பதிகம் என்ற பெயரைப் பெறுவதாயிற்று.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலான பதிகங்கள் பத்துப் பாடல்களைக் கொண்டும், சில குறைந்தும் சில கூடியும் அமைந்துள்ளன.

திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பத்துப் பாடல்களோடு பதினொன்றாம் பாடலையும் கொண்டுள்ளது. அதில் பாடியவர் பெயரும் பதிகப்பயனும் கூறப்படுகிறது. பதினொன்றாவது பாடல் திருக்கடைக்காப்பு எனப் பெறும். பலசுருதி எனச் சொல்லப்பெறும் பதிகப் பயன் கூறும் பாடலாக, இத் திருக்கடைக்காப்பு விளங்குகின்றது. இதுபற்றியே அவர் அருளிய தேவாரத்திற்குத் திருக்கடைக்காப்பு எனப் பெயர் வழங்கலாயிற்று.

ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தார் என நம்பியாண்டார் நம்பிகள் கூறுகின்றார். நாவுக்கரசர் நாற்பத் தொன்பதாயிரம் பதிகங்கள் அருளினார் எனச் சுந்தரரும், நம்பி யாண்டார் நம்பிகளும் கூறுகின்றனர். சுந்தரர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

இத்துணைப் பதிகங்களில் பலவும் கிடைக்கப் பெறாமையால் இவர்கள் பதிகம் எனக் கூறுவது பாடல்களையே குறிப்பதாகலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று திருஞானசம்பந்தர் அருளி யனவாக 384 பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளியனவாக 307 பதிகங்களும், சுந்தரர் அருளியனவாக 100 பதிகங்களுமே கிடைத் துள்ளன.

எட்டாம் பாடல்:

இவர் திருப்பதிகங்களில் எட்டாவது பாடல், இராவணன் செய்த பிழையைப் பெருமான் மன்னித்து அவனுக்கு அருள் புரிந்ததைத் தெரிவிக்கின்றது. இதனைச் சேக்கிழார்,

"மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்

கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட

எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட

அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்"

எனக் கூறுவார்.

ஒன்பதாம் பாடல்:

ஒன்பதாவது திருப்பாடல் திருமால் பிரமன் அடிமுடி தேடியறிய இயலாது எய்த்தமையை இயம்புவது. அதற்குச் சேக்கிழார் தரும் விளக்கத்தைப் பின் வரும் பாடலால் அறியலாம்.

"தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்

வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்

இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை

விழுவார்கள் அஞ்செழுத்துந் துதித்துய்ந்த படிவிரித்தார்".

பத்தாம் பாடல்:

பத்தாவது திருப்பாடல், சமணம், புத்தம் ஆகிய புறச் சமய நெறிகளைக் கடிந்துரைப்பது. இதனைக் குறித்துச் சேக்கிழார் அருளும் விளக்கத்தைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

"வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை

நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும்

போதம்இலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்

ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்"
.

பதிகரணம்:

திருப்புறவம் எனும் தலத்தில் `எய்யாவென்றி' என்று தொடங் கும் பதிகத்தின் இறுதிப் பாடலாகிய "பொன்னியல்மாடப் புரிைச" என்னும் பாடலில் மூன்றாம் வரியில் "தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்" என்றதனால் ஞானசம்பந்தர் அவனருளே கண்ணாகக் கொண்டு சீவபோதமற்ற நிலையில் பசுகரணம் அற்றுப் பதிகரணத்தோடு பாடியவர் என்பதை அகச்சான்றால் உணரலாம்.

சென்றடையாத திரு :

திருச்சிராப்பள்ளித் தேவாரம் "நன்றுடையானைத் தீய திலானை" என்பது. இறைவன் ஒருவனே தீதில்லாத நன்றே உடையவன் என்பதை இது விளக்குகின்றது. உடன்பாட்டு வினையால் நன்றுடையான் என்றவர், எதிர்மறைவினையால் தீயது இல்லான் என்றும் கூறி, இறைவனின் இயல்பை, உடன்பாட்டினாலும், எதிர்மறையாலும் வலியுறுத்தியுள்ளார்.

இப்பாடலில் "சென்றடையாத திருவுடையான்" என்கிறார். இதற்கு ஒருபொருள் அவனே அருளினாலன்றி நாமே சென்று அடைய முடியாத திருவை உடையான் என்பது. இக்கருத்தைத்

"தாமே தருமவரைத் தன்வலியி னால்கருதல்

ஆமே? இவன் ஆர் அதற்கு"

என்ற திருவருட்பயன் பாடலால் அறியலாம். நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலையில் அமைந்த,

"என்னைநினைந்து அடிமை கொண்டு என்இடர்கெடுத்துத், தன்னைநினையத் தருகின்றான்"

என்ற பாடலும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற ஆளுடைய அடிகள் வாக்கும் இக்கருத்துப் பற்றியதே.

இந்தக் கருத்தை வலியுறுத்துவார்போல் அப்பரும் எறும்பியூர்த் திருத்தாண்டகத்துள் `பன்னியசெந்தமிழறியேன்' என்ற பாடலில்,

"அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்

அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட

தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்

செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே"

என்றருளியுள்ளமை கண்டு மகிழத்தக்கது.

இதற்கு இரண்டாவது பொருள், இனிச் சென்று சேரவேண்டிய திருவேண்டப்படாதவன் இறைவன் என்பது. குறைவிலா நிறைவினன் என்பதாலும், நிறை செல்வத்தியாகேசர் என்பதாலும் இதனைநன்கு உணரலாம்.

முதலில் கண்ட பொருளையும், இரண்டாவது கண்ட பொருளை யும் வலியுறுத்துமாப்போலே திருச்சிவபுரம் திருத்தாண்டகத்துள் `வானவன்காண்'

என்ற பாடலில் `தேனவன்காண் சென்றடையாச் செல்வன்தான்காண்' என அப்பரும் அருள்வதைக் காண்க.

மூவினைகள்:

திருவாரூரில் பாடிய `பாடலன் நான்மறையன்' என்ற பதிகத் துள் இரண்டாம் பாடலில், "காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே" என்று கடமையை உணர்த்துகின்றார்.

வழிபாட்டாலும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதாலும் பழவினை (சஞ்சிதம்), வரு வினை - மேல் எதிர்காலத்து வருவினை, (ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை, (பிராரத்தவினை) ஆகிய இவையெல்லாம் தீரும் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அறிவுரை.

"வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே". இதுபொதுவாக வினையினால் வரும் துன்பம் நீங்கும் என்கிறது.

`தோடுடைய செவியன்' கடைசிப் பாடலில், தொல்வினை - பழவினை தீர்தல் எளிதாம் என்றறிவித்துள்ளமை காண்க. திரு நள்ளாற்றுப் போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகக் கடைசிப் பாடலில் "உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே" உண்பு - பிராரத்தவினை. இதில் பிராரத்த வினை நீங்கும் என்கிறார்.

"கண்ணார் கோயில் கைதொழு வார்கட் கிடர்பாவம்

நண்ணா வாகும் நல்வினை யாய நணுகும்மே"

என்பதனால் ஆகாமியமாகிய எதிர்வினை நணுகாது என்கிறார் ஞானசம்பந்தர். இவ்வாறு பலபாடல்களால் சஞ்சித, ஆகாமிய, பிராரத்த வினைகள் நீங்கும் என்பதை இம்முதல் திருமுறையிலேயும் குறிப்பிட்டுள்ளமையை, ஓதி உணர்ந்து கொள்க. மூவினையும் முற்றிலும் நீங்காது. நீங்கினால் பிறவி இல்லையாகி விடும். எனவே இலேசாகத் தாக்கும் என்பதையே நீங்கும் என்பதற்குப் பொருளாகக் கொள்க.

முப்பொருளியல்பு:

திருமுதுகுன்றப் பதிகமாகிய `மத்தாவரை நிறுவி' என்ற பதிகத்துள் `விளையாததொர் பரிசில் வரு பசு' என்ற பாடலால் ஒருகாலத்தே தோன்றி விளையாதனவாயுள்ளவற்றை அறிவிக்கிறார். ஒன்று பசு - உயிர். இரண்டு பாசம் -

ஆணவம். மூன்று வேதனை - நல்வினை, தீவினை யாகிய இருவினை. நான்கு ஒண்தளை - மாயை. ஐந்துபாசமாகிய ஆணவம்; ஆறு இவை உயிரைப் பற்றாமல் தவிருமாறு அருள்கின்ற தலைவனாகிய சிவன். இவன் முதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள பழமலைநாதன் என்றருள்கின்றார். அப்பாடல் வருமாறு:

"விளையாததொர் பரிசில்வரு பசு,பாச,வே தனை,ஒண்

தளை,யாயின தவிரஅருள் தலைவன்,னது சார்பாம்

களை யார்தரு கதிராயிரம் உடைய அவனோடும்

முளைமாமதி தவழும்உயர் முதுகுன்றடை வோமே."

திருக்கழுமலத் திருப்பதிகமாகிய "சேவுயரும்" என்னும் பதிகத்துள் `புவிமுதல் ஐம்பூதமாய்' என்னும் பாடலில் சைவ சித்தாந்தத்துள் காணும் 24 தத்துவங்களையும் மிக எளிமையாகக் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம்.

ஆன்ம தத்துவம்:

மண், நீர், தீ, வெளி, காற்று ஆகிய ஐம்பூதங்களும், அவற்றின் நுட்பமாயுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும், (தன்மாத்திரை) இவை தோன்றுதற்கு வாயிலாக உள்ள ஞானேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அறிவுப் பொறிகள் ஐந்தும்; வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற்பொறிகள் ஐந்தும்; அந்தக் கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம் அகங்காரங்களாகிய உட் கருவிகள் நான்கும் ஆக இருபத்துநான்கும் ஆன்மாவிற்கு (உயிர்க்கு) உடலாக அமைந்து அறிவு, இச்சை செயலுடன் உயிர் தொழிற்படத் துணை செய்வனவாம். இக்கருத்தமைந்துள்ள பாடல் பகுதி காண்க.

"புவிமுதல்ஐம் பூதமாய்ப், புலன் ஐந்தாய்,

நிலன் ஐந்தாய்க், கரணம் நான்காய்

அவையவைசேர் பயன்உருவாய் அல்லஉரு

வாய்நின்றான் அமருங்கோயில்"

நிலன் ஐந்தாய் என்பது அறிவுப்பொறி ஐந்திற்கும் தொழிற் பொறி ஐந்திற்கும் இடமாய் நிற்பதால் நிலன் ஐந்தாய் என்றாரேனும் பத்தாகக் கொள்க.

பச்சைப் பதிகம்:

"போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் சிவநெறிக்கு உயிர்ப்பளித்த சிறப்புடையது. சைவரும், சமணரும் அவரவர் தெய்வம் பற்றிய உண்மையை எழுதி அனலில் இடச்செய்தபோது ஞானசம்பந்தர் தாம் முன்பே பாடிய ஓலைச் சுவடி யில் கயிறுசாத்திப் பார்த்தார்; " போகமார்த்த" எனும் இப்பதிகம் கிடைத்தது. இதனைத் தீயில் இட்டு மேலும்"தளிரிள வளரொளி" என்னும் பதிகம் பாடினார் ஞானசம்பந்தர். `போகமார்த்த' எனும் ஏடு எரியாமல் பச்சென்றிருந்தது. அதனால் இப்பதிகத்தை இன்றும் பச்சைப் பதிகம் என்றே குறிப்பிடுகின்றனர். இதில் என்ன உண்மை சொன்னார் ஞானசம்பந்தர் என்று காண்போம்.

சிவபெருமான் போகவடிவம், வேகவடிவம், யோகவடிவம் என்னும் மூவகை வடிவம் கொள்வதை இப்பதிகத்துள் உணர்த்து கின்றார். போகியாயிருந்து உயிர்கட்குப் போகத்தைத் தருகின்றார். வேகியாய் இருந்து அவரவர் செய்த வினைகளை வீட்டி அருள் கின்றார். யோகியாயிருந்து முத்தியை அருள்கிறார். இப்பதிகத்துள் இம்முத்திறக் குறிப்பும் அமைந்துள்ளமையைக் காணலாம். உயிர்கள் அநுபவிக்க இருக்கும் போகத்தைப் பாலாக அம்மை தமது மார்பகத்தில் உள்ள முலைத்தடத்தால் உலகஉயிர்கட்கு வழங்குகிறார் என்னும் குறிப்பு மருத்துவ இயலாரும் வியந்துபோற்றும் சிறப்புடைய தாகும். தாய்ப்பால் இல்லையேல் ஜீவராசிகளுக்கு வாழ்வே இல்லை. அனைத்துச் சீவர்களும் நோய்க்கே இருப்பிடமாவர் என்பது புலன் ஆதல் அறிக. தாய்ப்பாலில்தான் நோய்த் தடுப்பாற்றல் மிகுதியாக வுள்ளது. குழந்தைகட்கு ஓராண்டுக் காலம் தாய்ப்பால் வழங்கினால் சொட்டுமருந்து எதுவும் தேவையில்லை.

தன்னைப்போல் ஆக்குபவன்:

`பந்தத்தால்' எனத்தொடங்கும் திருக்கழுமலத் திருப்பதிகத் துள், ஏழாம் பாடலில் மூன்றாம் வரியில் `திகழ்ந்தமெய்ப்பரம்பொருள், சேர்வார்தாமே தானாகச்செய்யுமவன் உறையுமிடம்' என்று அருளி யுள்ளமை சிந்திக்கத்தக்கது. இறைவனைச் சார்கின்ற உயிர்கட்கு இப் பிறவிக்கு வேண்டிய சுகபோகங்களைக் கொடுப்பதுடன் படிப்படியாக உயர்த்தி அவ்வுயிர்களைத் தானாகவே செய்யும் பெருங்கருணை யாளன் என்பதை இப்பாடலில் உணர்த்துகின்றார்.

இதேகருத்தை அப்பர் பெருமானும், திருப்புள்ளிருக்கு வேளுர்த் திருத்தாண்டகமாகிய `இருளாய உள்ளத்தின்' என்ற பாடலில் `தெருளாத சிந்தைதனைத் தெருட்டித், தன்போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை' என்று அருள்கின்றார். எனவே மும்மலக் கட்டுண்டுள்ள உயிர்களை இறைவன் தன்னைப்போல் ஆக்குதற்கு இவ்வுலகத்தைப் படைத்துக் காத்து அழித்து அருள்புரிகின் றான் என்பது நன்கு விளங்குகின்றதன்றோ!

உள்ளமே கோயில்:

`அகனமர்ந்த அன்பினராய்' எனத்தொடங்கும் திருவீழிமிழலை மேகராகக் குறிஞ்சிப்பண்ணிலுள்ள பாடலில், இறைவன் எத்தகைய உள்ளத்தில் எழுந்தருளியிருப்பான் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். அகத்தில் - உள்ளத்தில் அன்பும் அறுபகை களை தலும், ஐம்புலன் அடக்கலும் உளதாயவழியே உண்மைஞானம் கைவரப் பெறுவர். அத்தகையோர் உள்ளத்தாமரையிலேயே இறை வன் குடியிருப்பான் என்கிறது இப்பாடல். அது வருமாறு:

"அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று

ஐம்புலனும் அடக்கிஞானம்

புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும்

புராணர் கோயில்."

இப்பாடலில் இறைவனைப் புராணர் என்று குறிப்பிட்டு உள்ளமை அறிந்து மகிழத்தக்கது. புரா - நவம் என்ற இருசொல்லே புராணம் என்றாயிற்று. புராதனம் என்பதன் முதல்பகுதி பழமை குறிப்பது. நவம் என்பது புதுமை குறிப்பது. எனவே புராணம் என்பது பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள் என்பதை உணர்த்துவது. இவ்வாறு பல அரிய கருத்துக்களை உள்ளடக்கிய முதல் திருமுறை,

"இன்னெடு நன்னுலகெய் துவரெய்திய போகமும்

முறுவர்கள் இடர்பிணி துயரணைவ் விலரே"

என நிறைவு பெறுகிறது.

முதல் திருமுறையின் முடிவுப் பதிகம் " மாதர் மடப்பிடியும் " என்னும் திருத்தருமபுரப் பதிகம். இது முதல் திருமுறையின் பலன் சொல்வது போல் முடிந்திருப்பது திருவருட் பொருத்தமாகும். இறைவனின் பிணை, துணை, கழல்களை விரும்பிப் போற்றுபவர், நெடுநன்னுலகெய்துவர் என்றதனால் வீடுபேறு அடைவர் என்கிறார். இது இன்ப ஆக்கம். இடர், பிணி, துயர் அணைவிலர் என்றதனால் துன்ப நீக்கம் குறித்தாராயிற்று.

திருவடியைக் குறிக்கும்போது, பிணை-துணை-கழல்கள் என எழுவாயை மூன்றாகக் குறித்ததற்கேற்பப் பயனிலையையும் இடர்-பிணி-துயர் என மூன்றாகக் குறித்துள்ளமை காண்க.

இடர்-விபத்தினால் வரும் துன்பம்; பிணி-உடலில் நோயால் வரும் துன்பம்; துயர்-மனத்தைப் பற்றிய துன்பம். இம்மூன்றும் அகலும் என்கிறார்.

நிறைவுரை:

இன்னோரன்ன அரிய பல கருத்துக்களேடு ஞானக் கருவூலமாக விளங்கும் திருஞானசம்பந்தர் அருளிய இம்முதல் திருமுறை ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின் அருளாட்சிக் காலத்தில் 1953 ஆம் ஆண்டு தருமை ஆதீனப் புலவர் மகாவித்துவான், பத்ம பூஷண், முனைவர். திரு. ச. தண்டபாணி தேசிகரைக் கொண்டு எழுதிய விளக்கக் குறிப்புரையுடன் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழா மலராக வெளிவந்தது.

இதுபோது பன்னிரு திருமுறைகளையும் ஒளியச்சில் ஒருசேர அச்சிட்டு வெளியிடும் முறையில் தருமை ஆதீனப் புலவர், திருநெறிச் செம்மல் திரு. வி.சா. குருசாமி தேசிகரைக் கொண்டு எழுதிய பொழிப்புரை, செந்தமிழ்க்கலாநிதி, பண்டித வித்துவான் திரு. தி.வே. கோபாலய்யரைக் கொண்டு எழுதிய உரைத்திறம் ஆகியவற்றுடன், பன்னிரு திருமுறைகளை உரையுடன் வெளியிட வித்திட்ட ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின் குருபூசை வெள்ளிவிழா நினைவாக வெளி யிடப் பெறுகிறது.

அன்பர்கள் ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் இம்மை மறுமை அம்மை என்னும் மும்மை நலங்களும் பெற்று இனிது வாழச் செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

வாழ்க சிவநெறி! வளர்க திருமுறை! வாழ்க உலகெலாம்!

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி