எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
07 திருவெம்பாவை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பதிக வரலாறு :

சத்தியை வியந்தது
`எம்பாவாய்` என்னும் முடிபினையுடைய பாடல்களை யுடைமையால், இப்பாடற்றொகுதிக்கு, `திருஎம்பாவை` என்பது பெயராயிற்று. இவ்வாறு வரும் பாடல்கள், `பாவைப் பாட்டு` எனப் பட்டன என்பது, தொல்காப்பியப் பேராசிரியர் உரையானும், அவையாவும், இறுதியில், `எம்பாவாய்` என்னும் முடிவினையே உடையனவாய் வருமென்பது யாப்பருங்கல விருத்தியுட் காட்டப் பட்ட பாடல் ஒன்றானும் அறியப்படுகின்றன. அதனால், முடிபினாற் பெற்ற பெயராக இங்கு, `திருஎம்பாவை` எனப்பட்டது. `எம்பாவாய்` என்பதற்கு முன்னர், `ஏலோர்` என்பதனைக் கூட்டி, `ஏலோர் எம்பாவாய்` என முடித்தலும் இப் பாவைப் பாடல்கட்குரிய மரபு என்பதும், மேற்குறித்த அப்பாடலானே அறியப்படும்.
இனி இப் `பாவைப்பாட்டு` என்பது யாது என்பதும் ஆராயற்பாலது.
`இளமகளிர் தாம் நற்பண்புகளையுடைய ஆடவரையே கணவராக அடைதல் வேண்டும் எனக் கருதி அதன்பொருட்டு மார்கழித் திங்களில் உமையம்மையை வழிபடும் நோன்பை மேற்கொண்டு, விடியற்காலையில் நீராடச் செல்லுங்கால் நீர்க்கரையில் அவ்வம்மை தன் வடிவமாக மணலாற் பாவை செய்து வழிபடுவர்` எனவும், `அதனால் அந்நோன்பு, பாவை நோன்பு எனப்படும்` எனவும், `அந்நாளில் அப்பாவையை முன்னிலைப்படுத்து அம் மகளிர் பாடும் பாடலே பாவைப்பாட்டு எனப் பெயர்பெற்றது` எனவும் உரைப்பர் சிலர். ஆயினும், அந்நோன்பைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பும் அடிகளது திருவெம்பாவையில் காணப்படாமையின் அங்ஙனம் உரைத்தல் கூடுமாறில்லை.
`ஆண்டாள் திருப்பாவையாகிய வேறொரு பாவைப் பாட்டில் இது விளக்கமாகக் கூறப்பட்டிருத்தலின், அடிகளது பாவைப்பாட்டும் அன்னதே எனக் கோடல் சாலும்` என்பது அவரது கருத்து. அக்கருத்து அடிகட்கு ஒத்ததாயின், மகளிர் முதற்கண் விடியலில் எழுந்து எழாதவர்களை எழுப்புதல் பின்பு யாவரும் ஒருங்குகூடி இறைவனை வாழ்த்தி வணங்குதல் நீர்த்துறைக்குச் சென்று நீராடுதல் என்பவற்றை முறைப்படக் கூறும் தமது திருவெம்பாவையில் அதன் பின்பு இப் பாட்டிற்கு முதலாகிய பாவை வழிபாடு பற்றியாதல் பாவை நோன்பு பற்றியாதல் யாதும் கூறாதே போயினார் என்றல் முறையாகாதன்றோ? அதனால், `பாவைப்பாட்டு` என்பது, பாவை நோன்பு பற்றியாதல், வழிபடப்படும் பாவை பற்றி யாதல் வந்ததன்றென்பது தெளிவு. அன்றியும், சமண் சமயத்தினரும் தம் கடவுள் பற்றிப் பாவைப் பாட்டுப் பாடினர் என்பது, மேற்குறித்த யாப்பருங்கல விருத்தியுட் காட்டிய பாடலாலும், பிறவாற்றாலும் அறியப்படுதலாலும், பாவைப் பாட்டு என்பது உமைவழிபாட்டுப் பாடலாயின் அவர் அதனைக் கொள்ளா ராதலாலும் இது தெளிந்து கொள்ளப்படும். இன்னும், `எம்பாவாய்` என்பது, வழிபடப்படும் தெய்வப் பாவையை விளிப்பதாய், பொருள் பயந்து நிற்குமாயின், பின்னர்க் கூறப்படும் பொருள்கள் அத் தெய்வத்தைப் பற்றியாதல் வேண்டுமன்றி வேறாதல் கூடாமையானும் அங்ஙனம் கூறுதல் பொருந்தாமையறிக.
`பாவைப் பாட்டு` என்பது, பாவை நோன்பு பற்றியதன் றாயின். மற்றியாதோ எனின், `அம்மானைப் பாட்டு, ஊசற்பாட்டு` முதலியவை மகளிர் விளையாட்டுப் பாடலாதல் போலப் பாவைப் பாட்டும் அவரது விளையாட்டுப் பாடலேயாம். அங்ஙனமாயின், அம்மானை ஊசல் முதலியன விளையாட்டாதல் போலப் பாவையும் விளையாட்டோ எனின், அன்னதன்று; இளமகளிர் தாம் நீராடுங்கால் பாவையொன்றனை நீராட்டி ஆடும் விளையாட்டின்கண் அப்பாவையை, `எம்பாவாய்` என விளித்துப் பாடும் பாட்டே` `பாவைப்பாட்டு` எனக்கொள்ளுதுமாகலின், `பாவை` என்பது விளையாட்டாகாமைபற்றி இழுக்கில்லை. எனவே, விளையாட்டு வகையால் நோக்கின் இது, `நீராடற் பாட்டு` எனப் பெயர் பெறற்பாற்று என்பதும், அவ்வாறாயினும் பாவையை விளித்துப் பாடுதல்பற்றி, `பாவைப்பாட்டு` என வழங்கப்பட்டது என்பதும் போதரும். இவையெல்லாம் எற்றாற் பெறுதுமெனின், பாவைப் பாட்டுக்கள் யாவும் நீராடல் பற்றியே வருதலாற் பெறுதும். இதனானே, இப் பாட்டின்கண் வரும் `ஏலோர்` என்பது, பாவை நீராட்டு மகளிர் அப்பாவையை விளிப்பதோர் சொல்லெனக் கொள்ளப்படும்.
ஆண்டாள் திருப்பாவை பாவை நோன்பு பற்றி வந்தமை தெளிவாதலின், பாவைப் பாட்டுக்கள் பலவும் அத்தன்மையனவே எனக் கொள்ளுதல் எளிதாய் இருக்க, அதனை விடுத்து, வேறு காரணம் கற்பித்துக் கொண்டு இவ்வாறெல்லாம் கூறி இடர்ப்படுதல் என்னையோ எனின், பாவை நோன்பாவது, `மாயோன் கண்ணனாய்த் தோன்றி ஆயர்பாடியில் வாழ்ந்த ஞான்று அவனையே கணவனாகப் பெற விரும்பிய ஆயர்குல மகளிர் நோற்றுத் தம் கருத்து நிரம்பப் பெற்ற நோன்பு எனக் கிருட்டின பாகவதம் கூறுதலன்றித் தமிழ் நூல்களி லாதல், சிவநெறி நூல்களிலாதல் அஃது யாண்டும் கூறப்படாமை யானும், ஆண்டாளும் ஆயர்பாடி மகளிர்போலக் கண்ணனைக் கணவனாகப் பெறுதலையே விரும்பினமையின், கிருட்டின பாகவதம் கூறுமாற்றானே தானும் நோற்கக் கருதிப் பாடிய, அப்பாவைப் பாட்டிற்கு அக்காரணம் பொருந்துவதன்றி, தம் கடவுளரைக் கணவனாகப் பெறும் விருப்பத்திற்கே இயைபில்லாது, அன்பு காரணமாக அவரைப் பாடிப் பரவுதல் மாத்திரையே கருதி, பாவை நோன்பு என்பதொன்று காணப்படுவதற்கே இடனின்றிப் பாடப்பட்ட பிற பாவைப் பாட்டிற்கும் அதுவே காரணம் எனக் கூறின், அது நூற் கருத்திற்கு ஏலாமை யானும் அங்ஙனங் கொள்ளுதல் பொருந்தாதாம். அதனாலன்றோ, வாதவூரடிகளது திருவெம்பாவை ஒன்றையே பற்றுக்கோடாக் கொண்டு அதன் வரலாறுரைத்த கடவுள் மாமுனிவர், `மார்கழித் திங்களில் திருவாதிரையை முடிவாகக் கொண்ட பத்து நாள்களிலும் மகளிர் விடியலில் எழுந்து, எழாதவர்களையும் எழுப்பிக் கொண்டு நீர்த்துறைக்குச் சென்று நீராடினர்` என்னுந் துணையே கூறியதன்றி, ஆண்டாள் கண்ணனைக் காதலித்துப் பாடிய பாவைப் பாட்டிற் காணப்பட்ட பாவை நோன்பை இங்கும் புகுத்திக் கூறாது போயினதூஉம் என்க. எனவே, திருவாசகத்தின் முன்னை உரையாளர் ஒருவரும் பாவை நோன்பு பற்றிய செய்தியை ஈண்டுக் கொண்டு கூறாமையும் இதுபற்றியேயாயிற்று.
கிருட்டின பாகவதம் கூறும் பாவை நோன்பு, மாயோன் தேவி முதலிய பிற தெய்வங்களைப் பற்றியதாகாது, சிவபிரான் தேவியாகிய உமையம்மையைப் பற்றியதேயாக, அதனை, சிவபிரானையும், உமையம்மையையுமே வாழ்த்துவதாய இத்திருவெம்பாவைக்கு ஏலாது என்றது என்னையெனின், அது, செயல்வகையில் உமை யம்மையைப் பற்றியதாயினும், கருத்து வகையில் கண்ணனைக் கணவனாக அடைவதையே பயனாகக் கொண்டமையின், அக் கருத் தில்லாத மகளிரைப் பற்றி வரும் இத் திருவெம்பாவைக்கு அஃது ஏற்புடைத்தாகாமை தெளிவாதல் அறிக.
இன்னும், ஆயர் பாடியில் தோன்றிய ஆயர் கன்னியர் அனை வரும், கண்ணனாகிய ஒருவனையே காதலித்தலை அவரைப் பெற்றோர் விரும்பாது சினந்தமையின், அம்மகளிர், தம் கருத்தை நிறைவேற்றுதற்குத் தெய்வம் பராவுவாராய், அதனைத் தம் இல்லத்தில் தம் இருமுதுகுரவர் முன்னர்ச் செய்யமாட்டாது தாம் நீராடச் செல்லும் நீர்க்கரையிற் செய்தலும், அங்ஙனம் செய்கின்றுழி, மாயோனைக் கணவனாகப் பெற விரும்பும் தம் விருப்பத்தினை அவன் தேவி யிடத்து வெளிப்படுத்த மாட்டாராயினமையின், அவளை வழிபடா தொழிதலும், கண்ணனைக் கடவுளாகக் கருதினும் கணவனாகற் பாலன் எனக் கருதினமையின், அம்முறையால் சிவபிரானையும் அயலானோர் ஆடவனாகக் கருதி அப்பெருமானையும் வழிபடாது, உமையை வழிபடுதலும் உடையராயினமையின், அவையெல்லாம் திருவாதவூரடிகள் அருளிச் செய்த இத் திருவெம்பாவையிற் கூற்று நிகழ்த்தும் மகளிர்க்குப் பொருந்துமாறில்லை. என்னையெனின், இறைவனைக் கணவனாகப் பெற்றுத் தழுவி இன்புறக் கருதுதல் மாயோன் நெறியிற் காணப்படுவதன்றிச் சிவநெறியிற் காணப்படுவ தன்றாகலின். இறைவனைக் கணவனாகக் கருதுதல் மாயோன் நெறி யிற் காணப்படுவதற்கும், சிவநெறியில் அது காணப்படாமைக்கும் காரணம், `இறை இன்பமும், இவ்வுடம்பு இல்லாவிடினும் ஒளியுடம் பாய வேறோர் உடம்பு கொண்டு நுகரப்படுவதே என்பது மாயோன் நெறியினர் கொண்ட கொள்கையும், அவ்வாறின்றி, `இறைவனுக்கும் உயிருக்கும் இடையே உடம்பென்பதொன்று நிற்கும் நிலையாதாயி னும் அது, இறைவனை நேரே தலைப்படுவதாகாமையின் பந்தமே` என்பதும், `அதனால் இடையீடு யாதுமின்றி உயிர் இறை நிறைவில் ஒன்றாய்க் கலந்து அவ்வின்பத்தில் அழுந்தி நிற்பதே வீடு` என்பதும் சிவநெறிக் கொள்கையுமாதலேயாம். இவ்வுண்மை, ஆண்டாள் வரலாற்றிலும், பாடலிலும் இறைவனைக் கணவனாகக் கண்டு காதலித்தமை கேட்கப்படுதலாலும், காரைக்காலம்மையார் வரலாற்றிலும், பாடலிலும் அது கேட்கப்படாமையோடு, இறைவனை அவர், `அப்பா` என அழைத்தமையே கேட்கப் படுதலாலும் நன்கு புலனாகும்.
காரைக்காலம்மையார் தாம் தசைப்பொதி உடம்பைச் சுமந்து நின்றது உலகியல் பற்றித் தம் கணவன் பொருட்டாகவே என்பதையும், அவ்வுடம்பு கணவனுக்கு ஆகாமை அறிந்த அப்பொழுதே அவர் இறைவனை வேண்டி அவனது அருள் வலியால் அவ்வுடம்பை உதறித் தள்ளிப் பேயுருப் பெற்றதையும் சேக்கிழார்,
``ஈங்கிவன் குறித்த கொள்கை இதுஇனி இவனுக்காகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப்பொதி கழித்திங் குன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப்
பாங்குற வேண்டு மென்று பரமனைப் பரவி நின்றார்.``
(தி.12.காரைக்-49)
எனவும்,
ஆனஅப் பொழுது மன்றுள் ஆடுவா ரருளி னாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பை யெல்லாம் உதறிஎற் புடம்பே யாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவ மானார்.``
(தி.12.காரைக்-50)
எனவும் இனிது விளங்கக் கூறினார்.
இங்ஙனம் உடம்பைச் சுமையாகக் கருதி வெறுத்து,
அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே;
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர்பார் ஆகாயம்

அப்பொருளும் தானே அவன்.
(தி.11.அற்புதத் திருவந்தாதி - 20)
என்று இறைவனை அறிவினுள்ளே அறிவினாலறிந்து இன்புற்றிருந்த அம்மையாரது ஞானத்தின் மிகுதிக்கு ஓர் எல்லையும் உண்டோ! அதனாலன்றோ ஞானத்தின் திருவுருவேயான ஞானசம்பந்தரும், `அம்மை தலையால் நடந்த திருத்தலத்தை யான் காலால் மிதியேன்` என்று அஞ்சி ஆலங்காட்டினுட் செல்லாது புறத்தே தங்கியிருந்ததும் இறைவனும் அவரை `வா` என்று உள்ளே அழையாது, அவரிருந்த இடத்திற்றானே சென்று பாடச் செய்து அப்பாடலைக் கேட்டதும் என்க. இவற்றாலெல்லாம், `இறையின்பத்தை நுகர்தற்கு உடம்பு வேண்டப் படுவதன்று` என்பதோடு, `அஃது அதற்குத் தடையுமாம்` என்பதே சிவ நெறிக் கொள்கை என்பது போந்தது.
மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பும் மிகை.
(குறள். 345) எனத் திருவள்ளுவரும் கூறுதல் காணலாம். `வீடாவது ஓர் உலகமே` என யாண்டும்கூறி, அவ்வுலகம் `செங்கண்மாலுலகமே` என்ற தம் கருத்தை,
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.
(குறள். 1103) என்பதன் உரையில் வெளிப்படுத்திய பரிமேலழகர், ``மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்`` என்னும் குறள் உரையில், `உடம்பென்ற பொதுமையான் உருவுடம்பும். அருவுடம்பும் கொள்ளப்படும்` எனக் கூறி, அருவுடம்பின் தன்மையை விளக்கு மளவே உரைத்து அதற்கு மேல் ஒன்றும் உரையாது போயினமையின், தாம் கூறும் வீட்டுலகத்திற் செல்வோர்க்கு உடம்பு உளதாதல் பற்றி யாதும் உரைக்க மறந்தார் போலும்!
இறை இன்பம் உடம்பு கொண்டே நுகரப்படுவது எனவும், இறைவன் சிறப்புடைய ஓர் ஆடவன் (புருடோத்தமன்) எனவும் கொள்ளுதலால், `அவனது இன்பத்தை நுகரும் அடியார்களுள் ஆடவ ரினும், மகளிரே பெரிதும் தகுதியுடையர்` என்பர் மாயோன் நெறி யினர். சிவநெறியின்கண் அக்கொள்கையின்மையானும், `ஆடவர், மகளிர்` என்னும் வேறுபாடு உடம்பின் கண்ணதன்றி, உயிரின்கண் இன்மையானும், இறையின்பத்தை நுகரும் அடியாரிடத்து ஆடவர், மகளிர் என்னும் வேற்றுமை கொள்ளாது, இருதிறத்தவரும் ஒப்ப உயர்ந்தவர் எனவே கொள்வர் சிவநெறியாளர். இதனானே, இறை வனோடு அவன் அடியாரிடை நாயக நாயகிபாவம் கொள்ளுதலும் சிவநெறியின்கண் இல்லையாயிற்று. அது, சரியை, கிரியை, யோகம், என்பவற்றை முறையே, `தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம்` எனக் கூறியவாறே, ஞானத்தை, `நாயகி மார்க்கம்` எனக் கூறாது, `சன்மார்க்கம்` என்றே அவர் கூறிப்போதலாலும் நன்கறியப் படும்.
அங்ஙனமாயின், தொல்காப்பியர்,
`காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்`
(பொருள். 81) எனக் கூறியவாறு கடவுள் வாழ்த்தில், `கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்` என்பதொரு துறை காணப்படுவது என்னையெனின், பாடாண்திணையுள் வரும் கைக்கிளை, பாட்டுடைத் தலைவனது பெருமை புலப்படற் பொருட்டு அவனைப் பாடும் புலவர், ஒருத்தி அவனைக் காதலித்தாளாகப் புனைந்து கூறுத லன்றி அஃது உண்மை நிகழ்ச்சி அன்றாதலின், அது பற்றி வருவதோர் ஐயமில்லை. அதனாலன்றோ, அத் துறையுள், காதலித்த தலைவி இவள் என இயற்பெயர் கூறுதல் இல்லையாயிற்று.
சமண் சமயத்தினர், `பெண்டிர்க்கு முத்திப் பேறு இல்லை` என்பர்; இறைவனோடு அவன் அடியாரிடை நாயக நாயகி பாவம் கூறுவார், `ஆடவர்க்கு முத்திப் பேறு இல்லை` என்பர்; இவ்விரண்டும், உயிரியல்பையும், உடம்பியல்பையும் பகுத்துணரும் உணர்வினார் முன்னர் நகையைத் தோற்றுவிக்குமளவாய்ப் போமென்பதறிக. இவற்றாலெல்லாம், ஆளுடைய அடிகளது திருவெம்பாவையினது பெற்றியை அதனையே கொண்டும், ஏனைச் சிவநெறி நூல்களைக் கொண்டும் நோக்குதல் வேண்டுமன்றிப் பிற நூல் கொண்டு நோக்குதல் கூடாமை உணர்ந்து கொள்க. இதனானே, திருவெம்பாவையிற் கூற்று நிகழ்த்து மகளிராதல், அவர் வாயிலாக ஆளுடைய அடிகளாதல் பிற சிவநெறி நூல்களின் ஆசிரியராதல் இறைவனைக் கணவனாகவும், தம்மை மனைவியராகவும் கருதிநின்றார் என்பதற்கோர் காரணம் இன்மையும் நன்குணர்ந்து கொள்ளப்படும்.
இனி, இத் திருவெம்பாவை முதலாக உள்ள பாவைப் பாட்டுக்கள் கடவுள் பொருளாகப் பாடப்பட்டன எனினும், அவற்றிற்கு முன்னர் வழங்கிய பாவைப் பாட்டுக்கள் கடவுள் பொருளாகவன்றி மக்கள் பொருளாக வழங்கின எனக் கொள்ளல் வேண்டும். ஏனெனின், அம்மானை வரி, ஊசல் வரி முதலியன அவ்வாறு வருதலைச் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களிற் காண்கின்றாமாதலின். ஆசிரியர் தொல்காப்பியனார் பாடாண் திணையுள், `கொற்றவள்ளை` என்பதொரு துறை கூறியிருத்தல் இக்கருத்தை நிலைநிறுத்தும். எவ்வாறெனின், `வள்ளை` என்பது உரற்பாட்டாகலானும், அதனால் பாட்டுடைத் தலைவர் பாடப்படுவர் என அவர் கூறலானும், அவ்வாறே அம்மானைப் பாட்டு, ஊசற் பாட்டு முதலியவற்றானும் பாட்டுடைத் தலைவர் பாடப்பட்டனர் என்பது சொல்லாதே அமைதலான் என்க. கொம்மைப் பாட்டு, பள்ளுப்பாட்டு முதலியவற்றால் பாட்டுடைத் தலைவரை இக்காலத்தாரும் பாடுதல் காணப்படுவது. இப்பாட்டுக்கள், சொல்லும், பொருளும் விழுமியவாகாதுவரின், `நாட்டுப் பாடல்` எனப் புறவழக்காம். அவ்வாறின்றி, நல்லிசைப் புலவரால் சிறப்புறப் பாடப்படுமாயின், `வரிப்பாட்டு` எனப் புலனெறி வழக்காய் உயர்ந்த இலக்கியமாம்.
புறத்திணை வகையும், அகத்திணை வகையுமாய்ப் பெரும் பான்மையும் மக்களையே நுதலி நடந்த இப்பண்டைப் புலனெறி வழக்கத்தினை, புறத்திணையுள் பாடாண் பகுதி கடவுளையும் நுதலிவருதலும், அகத்திணை பாடல்களுள் பாட்டுடைத் தலைவர் சார்த்துவகையாற் பாடப்படுதலும் ஆகிய மரபு பற்றி, ஆளுடைய அடிகள் முழுதும் கடவுளையே நுதலிவருவனவாக்கி, (தி.8 திருவாசகம், திருக்கோவை) இருபெரும் பகுதியவாய திருப்பாட்டுக்களை அருளிச் செய்வார். திருவாசகத்திடையே கொற்றவள்ளை போல்வனவாய, `பொற்சுண்ணம், அம்மானை, தெள்ளேணம், சாழல், பூவல்லி, உந்தி, தோணோக்கம், ஊசல்` என்பவற்றை அருளினாராக லின், அவ்வாறே அருளப்பட்ட பாவைப் பாட்டாகிய திருவெம்பாவைக்கும் மகளிர் விளையாட்டாத லொன்றே, காரணமாதல் சாலுமாகலின், அதற்கு வேறு காரணம் வேண்டுவதின்மையறிக.
அம்மானை முதலிய பாட்டுக்களைப் போலவே மகளிரது நீர் விளையாட்டுப் பாடலாகிய பாவைப் பாட்டை இறைவனுக்கு ஆக்குவார், அதனை ஏனைய போலப் பொதுப்படச் செய்யாது, இயல்பாகவே சிவபிரானுக்குரியதாய் நிகழும் மார்கழி நீராட்டிற்குரித் தாகச் செய்தருளினார், அது, தமது நெறிக்குப் பெரிதும் பொருந்து வதாய்ச் சிறந்து காட்டும் என்பது பற்றி. அதனானே, அன்று தொடங்கி இத் திருவெம்பாவை சிவபிரானுக்குரிய திருவாதிரை விழா நாள்களில் இன்றியமையாது ஓதப்படுவதாயிற்று.
மார்கழித் திங்களில் சிவபிரானுக்குத் திருவாதிரை விழா எடுத்தலும், அந்நாள்களில் உலகு செழிக்க அந்தணர் வேள்வி வேட்ட லாகிய தம் தொழிலைச் சிறக்கச் செய்தலும், இல்லறத்தவராகிய ஆடவரும் பெண்டிரும் அந்நாளில் சென்று தீர்த்தமாடித் தாம் தாம் விரும்பியவற்றைப் பெற இறைவனை வேண்டி நிற்றலும், அவரிடையே சிற்றிளமகளிரும் முதுபார்ப்பனியர் சொல்வழியே நோற்றலை மேற்கொண்டு தம் தாய்மாரோடு சென்று நீராடுதலும் போன்ற தவச் செயல்கள் நடைபெறுதலும் ``விரிகதிர் மதியமொடு`` என்னும் பரிபாடல் (11).
``கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூ லந்தணர் விழவு தொடங்கப்
புரிநூ லந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர்பு ஆடிப் பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்
தையல் மகளிர் ஈரணி புலர்த்தர``
என்பது முதலாக விரித்துக் கூறியவாற்றான் நன்குணரப்படும். இதனுள், `அம்பா ஆடல்` என்றது, இளமகளிர் தம் தாயரோடு கூடி ஆடுதலாம் என்பதை அதன் உரையிற் காண்க.
தேவர்கட்கு எடுக்கும் விழாக்கள் நிறைமதிநாள் பற்றி நிகழ்வன ஆதலாலும், அது சிவபிரானுக்குரிய திருவாதிரை நாளோடு கூடி வருவது மார்கழித் திங்களிலாதலாலும், அத்திங்கள் சிவபிரானுக் குரிய விழாத் திங்களாயிற்று. ஆகவே, அரசனுக்குரிய விழா நாள், நாடு முழுவதற்கும் விழா நாளாதல் போல, முழுமுதற்றேவனாகிய சிவபிரானுக்குரிய விழாத்திங்கள், ஏனைய தேவர் பலர்க்கும் விழாத் திங்களாயிற்று. அதனானே, திங்கள் பன்னிரண்டனுள்ளும் மார்கழித் திங்கள் சிறந்ததாயிற்று. தேவதேவனாகிய சிவபிரானது திருவாதிரை விழாவைத் தேவர் பலரும் ஒருங்குகூடிச் சிறக்கச் செய்வர் என்பதை,
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத் தும்நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.
என்னும் சேந்தனார் திருப்பல்லாண்டில் (தி.9. ப.12) உணர்க. திருவாதிரைத் திருநாட் சிறப்புப்பற்றித் திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருப்பதிகமே அருளிச் செய்தார் (தி.ப.4.ப.21).
வாதவூரடிகள் அருளிச் செய்த இம் மார்கழி நீராட்டு. மேற்காட்டிய பரிபாடல் முதலிய சங்கப் பாடல்களுள், `தைந் நீராட்டு` எனக் குறிக்கப்படுகின்றது. `தைந்நீராட்டு` என்பதற்கு, `தைத்திங்கள் நிறைமதி நாளில் ஆடும் நீராட்டு` எனப் பொருள்கொண்டு, `மேற் குறித்த பரிபாடற் பகுதியின்படி, மார்கழித்திங்கள் நிறைமதி நாளில் தொடங்கிய விழா, தைத்திங்கள் நிறைமதி நாள்காறும் நிகழ்ந்து நிரம்பு மாகலின், அந்நாளில் நிகழும் நீராட்டு, `தைந்நீராட்டு` எனப்படுதல் இயல்பே` என்பாரும், `தைந்நீராட்டாவது, தைப்பிறப்பு நாளில் ஆடும் நீராட்டு` என்பாரும் என இருதிறத்தார் உளர். அவருள் முன்னர்க் கூறியவாறு கூறுவார் பக்கம் வலியுடைத்து. அதனால் தொடக்க நீராட்டு மார்கழி நீராட்டும், முடிவு நீராட்டுத் தைந்நீராட்டுமாதலின், அடிகள் சிவபிரானுக்குரிய திருவாதிரை நாளில் ஆடும் மார்கழி நீராட்டினையே அருளிச் செய்தாராவர். ஆதிரை விழா, ஆதிரை நாளுக்கு முன்பே தொடங்கி ஆதிரைநாளில் முற்றுப் பெறுதல் பிற்கால வழக்காம். இவ்வழக்குப் பற்றியே கடவுள் மாமுனிவர் தமது திருவாதவூரடிகள் புராணத்துள்,
மாதர்கொள் மாதரெல்லாம்
மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரை முன்ஈ ரைந்தே
ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும்
அழைத்திருள் விடிவ தான
போதிவர் தம்மிற் கூடிப்
புனற்றடம் ஆடல் செய்வார்.
எனக் கூறிப்போந்தார்.
இங்ஙனம் திருவாதவூரடிகள் பாடாண் திணையின் பல்வகை யானும், அகத்திணைத் துறைகள் பலவற்றானும் `தி.8 திருவாசகம், திருக்கோவையார்` என்னும் இருதிறத்துப் பாடல்கள் ஓராயிரத்திற்கு மேற்பட்டவற்றைப் பல அடிகளானும், சில அடிகளானும் அமையப் பாடியருளினமையின், இவையே தமிழ் மொழியில் முதற்கண் கடவுட் பேரிலக்கியமாக அமைந்தன என்பதும், அதன்பின்னரே அடிகள் அருளிய வகையானும், பிற வகையானும் கடவுள் இலக்கியங்கள் தமிழில் பெருகுவவாயின என்பதும், அடிகள் இவ்வாறு கடவுள் நெறியில் இயற்றமிழ் இலக்கியத்தைத் தோற்றுவித்தருளினமையின், அதன் பின்னர் நல்லிசை ஞானசம்பந்தரும், நாவுக்கரையரும் பெரும்பான்மையும் பாட்டுக்களை நான்கு என்னும் அடிவரை யறையுட்படுத்து இசைத்தமிழ் இறையிலக்கியத்தைப் பெருகச் செய்தனர் என்பதும், அவர் வழியே நின்று நம்பியாரூரரும், பின்னும் திருவிசைப்பா ஆசிரியன்மார்களும் அங்ஙனமே செய்தனர் என்பதும் இவ்வாற்றால் பிறமதங்களினும் நால்வர் பெருமக்கட்குப் பின்னர் இறை இலக்கியங்கள் இயற்றமிழாகவும், இசைத்தமிழாகவும் தோன்றின என்பதும், இங்ஙனம் யாப்பு வகையால் பல மதக் கடவுள் இலக்கியங்களும் ஒரு நெறிப்பட்டன போலத் தோன்றினும், அவை பொருள் வகையால் வேறுபட்டே நிற்பன என்பதும், அதனையறியாது அவையனைத்தையும் ஒன்றெனக் கருதின் ஒன்றானும் பயனின்றாய் ஒழியும் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். படவே, திருப் பாவைக்கு உரை கூறுவார் மதமே பற்றித் திருவெம்பாவைக்கும் உரைகூற முற்படுதல் பொருந்தாததொன்றாமாதலின், திருப்பாவை யுள் கூறப்படும் பாவை நோன்பிற்குத் திருவெம்பாவையோடு யாதோர் இயைபும் இன்றென்க.
இனி இது நிற்க, அடிகள் அருளிச் செய்த இத் திருவெம் பாவைக்கு முன்னோர் உரைத்த குறிப்பு, `சத்தியை வியந்தது` என்பது. இஃது உண்மையில் இப்பகுதிப் பதினான்காம் திருப்பாட்டில் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி`` என வரும் தொடரிலும், ``முன்னிக்கடலைச் சுருக்கி`` எனவரும் பதினாறாம் திருப்பாடல் முழுவதிலும் அம்மையைத் தனியாக எடுத்துப் பாடினமை பற்றியே உரைக்கப்பட்டதாம். இங்குக் காட்டிய இவ்விடங்களையன்றிப் பிறிதோரிடத்தை அம்மையைத் தனியாகப் பாடிய பாடலாகத் திருமுறைகளிற் காணுதல் இயலாது. அதுபற்றியே இங்ஙனம் குறிப்புரைத்தனர் முன்னோர். இவ்வாறு ஒரு பகுதியுள் எவையேனும் ஒன்றிரண்டு பாடல்களைச் சிறப்புடையனவாகக் கருதி அப்பகுதிக்கு அவர் கருத்துரைத்தல் மேலே காட்டப்பட்டது; இனி வருகின்ற பகுதிகளினும் காட்டப்படும்.
அங்ஙனமாக, இக்குறிப்பில் உள்ள, `சத்தி` என்னும் சொல், `அம்மை, மாது, மங்கை` முதலிய இலக்கியச் சொற்கள் போலாது, சாத்திரச் சொல்லாய் இருத்தலானும், பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பியவாறாக அருளிச் செய்யப்பட்ட திருப்பாடல்கள், காக தாலிய நியாயமாக எட்டாய் அமைந்தமையானும், `உலகத் தோற்றத்தின் பொருட்டு முதற்கண் எழுந்த, `மனோன்மனி` என்னும் சிவசத்தி, `சருவபூ தமனி` என்னும் சத்தியை எழுப்ப, அச்சத்தி, `பலப்பிரமதனி` என்னும் சத்தியை எழுப்ப, இவ்வாறே, `பலவிகரணி` கலவிகரணி, காளி, இரௌத்திரி, சேட்டை, வாமை` என்னும் சத்திகள் முறையே ஒன்று ஒன்றனை எழுப்புதலையே இத் திருப்பாடல்கள் கருதின என உள்ளுறைப் பொருள் கூறினர், முன்னை உரையாளர். அதனையே பிறரும் மேற்கொண்டு உரைப்பாராயினர். அது கருத்தாயின், ஏனைய பன்னிரண்டு திருப்பாடல்கட்கும் உலகத் தோற்றத்தோடு இயைந்த உள்ளுறைப் பொருள் கூறல் வேண்டும்; அங்ஙனம் கூறின், பெரிதும் நலிந்து கூறலாம் என்று அஞ்சி அவரும் நெகிழ்ந்து போயினமை யானும், ஏனைய பகுதிகளில் யாதொன்றையும் இன்னோரன்ன சாத்திரப் பொருளே பொருளாக வெளிப்படையாகவேனும், குறிப்பாகவேனும் அருளிச் செய்யாத அடிகள், இத்திருவெம்பாவை மட்டில் யாது கருதி இங்ஙனம் செய்தார் எனக் கடாவுவார்க்கு விடையிறுத்தல் இயலாதாகலானும், அவ்வாறு உரைப்பனவெல்லாம் உரையாமாறில்லை.
இனி, இத்தத்துவ உரையை மேற்கொள்ளாது விடுத்து, `இந்நீராட்டிற்குரிய மகளிர் பன்னிரண்டியாண்டிற்கு மேற்படாத பருவத்தினரே` எனக் கொண்டு, `இவ்வெட்டுத் திருப்பாட்டுக்களும் முதற்றொடங்கி ஒவ்வொருபாட்டும் முறையானே பன்னிரண்டி யாண்டு முதலாக ஐந்தியாண்டு ஈறாகக் குறைந்த பருவத்து மகளிரை எழுப்பியவையாம்` என உரைப்பாரும் உளர். அப்பொருளை இப் பாடல்கள் இனிது தோற்றுவியாமையேயன்றி, சில பொருள்கள் அக் கருத்திற்கு மாறுபடவருதலான், அதுவும் ஓர் நயங்கூறலாய் முடிவ தன்றி வேறாகாதென்க.
அன்னதேல் இவை எல்லாம் ஆக; திருவம்மானை, திருத் தெள்ளேணம் முதலியவை அவ்வவ் விளையாட்டுப் பற்றிய பாடல் என்னும் துணையே தோன்றச் சொல் நிலையை அம்மகளிர் கூற்றாக அமைத்தாரேனும், பொருள் நிலையெல்லாம் தம் கருத்தாகவே அருளிச் செய்த அடிகள், இத் திருவெம்பாவை மட்டில் பொருள் நிலையையும், ``உன்னடியார் தாள்பணிவோம்; ஆங்கவர்க்கே பாங் காவோம்; - அன்னவரே எங்கணவராவார்`` ``எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க`` `முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை` என்றாற்போல அம் மகளிரது கூற்றாகவே அருளிச் செய்தது என்னையெனின், நீராட்டுப் பாடலாகிய இதனை, ஏனைய விளையாட்டுப் பாடல்கள்போலப் பொதுவகையாற் செய்யாது, இறைவனது விழா நாளில் ஆடும் நீராட்டிற்குரியதாகச் செய்தருளினமையின், அதனைத் தமக்கேயன்றி அம்மகளிர்க்கும், உலகினர் பிறர்க்கும் பயன்படுக என்னும் கருணை காரணமாக அங்ஙனம் செய்தருளியதன்றி வேறில்லை என்க. அம்மையைத் தனியாகப் பாடிய பாட்டு இதன்கண் காணப்பெறுதலும் மகளிர் பொருட்டேயாம்.
பாவைப்பாட்டுப் பற்றியும், இத்திருவெம்பாவைப் பொருள் பற்றியும், அவை ஏதுவாக அடிகளது நிலை, ஏனை அடியாரது நிலை பற்றியும் பலரும் பலவாறு கூறுபவாகலின், அவைபற்றி இத்துணை விரித்துக் கூறல் வேண்டுவதாயிற்று.
இவற்றால், `பாவைப்பாட்டு என்பது, கன்னிமைப் பெண்கள் நோன்பு மேற்கொண்டு வழிபடும் பாவை பற்றியது அன்று; அம் மானை, ஊசல் முதலியன போல மகளிர் விளையாட்டுப் பாடலே` என்பதும், `அவ்வாடலாவது நீராட்டு` என்பதும், `அந்நீராட்டினை அடிகள் மார்கழி நீராட்டாக வரையறுத்தருளினார்` என்பதும், `அதனால், இத்திருவெம்பாவையைத் தமக்கேயன்றி அந்நீராடு மகளிர்க்கும், உலகினர் பிறர்க்கும் பயன்படுமாறு செய்தருளினார்` என்பதும், `இவ்வாற்றால் இத்திருவெம்பாவையில் வரும் மகளிராதல், இதனை அருளிச் செய்த அடிகளாதல், ஏனைச் சிவநெறி ஆசிரியராதல் இறைவனை உடம்பால் தழுவி இன்புறக் கருதினார் என்றதற்கு ஒரு தினைத் துணையேனும் இடமின்று` என்பதும் ஒருவாறு காட்டப் பட்டன.
நூறும், ஐம்பதுமாகிய பாடற்றொகுதிகளை முறையானே முன் வைத்துப் பின்னர் இருபதாகிய பாடற்றொகுதிகளை வைக்கின்றுழி, எட்டடியான் இயன்ற இத்திருவெம்பாவையை முன்வைத்துக் கோத்தனர். இது, முழுதும் வெண்டளையான் வந்த எட்டடித்தரவுக் கொச்சகக் கலிப்பாவான் இயன்றது. தொல்காப்பியர், `கொச்சக ஒருபோகு` என்றதனையே பிற் காலத்தார், `கொச்சகக் கலிப்பா` என்றனர்.
``தரவின் றாகித் தாழிசை பெற்றும்
தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும்``
(தொல். பொருள். 452) என்றமையின் இது தரவு மாத்திரமாய் வந்தது. மேலும் இவ்வாறு வந்தமையும், இனியும் இவ்வாறு வருதலும் காண்க. இவ்விடத்து,

``யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது``
(தொல்.பொருள்.452) என்றமையான், கலிவெண்பாட்டுப்போல இக்கொச்சக ஒரு போகும் முழுதும் வெண்டளையானே வருதல் கொள்ளப்பட்டது.
``தரவே தானும் நாலடி இழிபாய்
ஆறிரண் டுயர்வும் பிறவும் பெறுமே``
(தொல்.பொருள் .438) எனவும்,
``தரவே தானும்
நான்கும் ஆறும் எட்டும் என்ற
நேரடி பற்றிய நிலைமைத் தாகும்``
(தொல்.பொருள். 445) எனவும் ஆங்காங்குக் கூறினமையின், இங்குத் தரவு எட்டடியாய் வந்தது. வருகின்ற பகுதியுள் ஆறடியாய் வரும். நாலடியாய் வருதலே பிற்காலத்தில் பெருவழக்காயிற்று.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.