எட்டாம் திருமுறை
76 பதிகங்கள், 1058 பாடல்கள்
05 திருச்சதகம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
மொத்தம் 100 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பதிக வரலாறு :

பத்தி வைராக்கிய விசித்திரம்
`சதகம்` என்பது, நூறு பாட்டுக்களைத் தொகைநிலையாக வேனும், தொடர்நிலையாகவேனும் செய்யும் செய்யுள் வகை. எனவே, `சதகம்` என்பது, எண்ணால் பெறும் பெயராதல் தெளிவு; இனி, `கலம்பகம், அந்தாதி` என்றற் றொடக்கத்தனவாகப் பிற காரணங் களானும் இது பெயர்பெறும்.
`தொகைநிலை, தொடர்நிலை` என்னும் இரண்டனுள் இச்சதகம் தொடர்நிலை. `சொற்றொடர்நிலை, பொருட்டொடர்நிலை` என்னும் இருவகைத் தொடர்நிலைகளுள், அந்தாதியாய்த் தொடர் தலின், இது சொற்றொடர் நிலையாதல் வெளிப்படை. தொகை நிலையாய் வருவதனையே, `சதகம்` என்றும், அந்தாதியாய் வருவ தனை, `அந்தாதி` என்றும் வேறுபட வழங்கினர் பிற்காலத்தார்.
இவ்வந்தாதித் தொடர், பத்து வகையான பாட்டுக்களை வகைக்குப் பத்தாக உடையது. அந்தாதியுள்ளும் இவ்வாறு வருவ தனைப் பிற்காலத்தார் `பதிற்றுப்பத் தந்தாதி` எனச் சிறப்புப் பெயர் கொடுத்து வழங்கினர். இங்ஙனம் பெயர்களை வேறு தெரித்துக் கூறினாராயினும், சதகம், `அந்தாதி, பதிற்றுப்பத் தந்தாதி` என்னும் செய்யுள் வகைகட்கெல்லாம் அடிகள் அருளிச்செய்த இத் திருச் சதகமே முதல் என்க.
சிவபுராணம் முதலிய நான்கும் மிகப் பல அடிகளையுடைய ஒவ்வொரு பாட்டாகிய தனிநிலைச் செய்யுட்களாதலின் அவற்றை முன்வைத்து, நான்கும், ஆறும், எட்டும் ஆய சீர் வரையறைகளை யுடைய சில அடிகளையுடைய பல பாட்டுக்களின் திரட்சியாகிய தொகைநிலை தொடர்நிலைச் செய்யுட்களாதலின், இத் திருச்சதகம் முதலியவற்றை அவற்றின் பின் வைத்துக் கோத்தனர் முன்னோர். அவற்றுள்ளும், நூறு, ஐம்பது, இருபது முதலிய பாட்டின் தொகைபற்றி அம்முறையே முறையாகக் கோத்தனர் என்க.
மிகப் பல அடிகளை யுடைய தனிநிலைச் செய்யுட்களாதலின், சிவபுராணம் முதலிய நான்கும், `தோல்` என்னும் வனப்புச் செய்யுட் களாம். என்னை?
``இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோல் என மொழிப தொன்னெறிப் புலவர்
(-செய்யுளியல் - 238.)
என்பது தொல்காப்பியமாதலின். இந்நூற்பாவிற்கு உரையாசிரியர் உரைத்த உரையே கொள்ளற்பாற்று.
இத் திருச்சதகம் முதலிய பலவும், பலப்பல வகையான பாட்டுக்கள், நூறு, ஐம்பது, இருபது முதலிய பலவேறு தொகையின வாய், மகளிர் விளையாட்டு, புறக்கைக்கிளை முதலிய வகையில், புகழ்தலும், பரவலும் முதலிய பல பொருள்கள்மேல் தொகை நிலையும், தொடர் நிலையுமாகப் பெரிதும் புதுமைப்பட வருதலின், `விருந்து` என்னும் வனப்புச் செய்யுட்களாம். என்னை?
``விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே``
(செய்யுளியல் - 239) என்பது தொல்காப்பியமாதலின். இந் நூற்பாவில் பின்னை உரையாளர், ``புதுவது கிளந்த`` எனப் பாடம் ஓதினார்.
தொல்காப்பியத்திற்குப் பின்னர்ப் பலவகையில் நெறிப்பட வந்த செய்யுள் வகைகளை `அகலக்கவி` எனவும், `பிரபந்த வகை` எனவும் வைத்துத் தொண்ணூற்றாறு என வரையறைப் படுத்து, அவற்றிற்கெல்லாம் தனித்தனி இலக்கணம் சொல்லிப் போந்தார் பிற்காலத்தார். அவை, பன்னிருபாட்டியல் முதலிய பாட்டியல் நூல்களுட் காணப்படும். எனினும், அடிகள் அருளிச்செய்த சில செய்யுள்வகைகள் அவற்றுள் அடங்கிற்றில.
தேவாரத் திருப்பதிகங்களும் பலவேறு கட்டளைப்படச் செய்யப்பட்டமையின், `விருந்து` என்னும் வனப்பினவே ஆயினும், அவை, இசையாகிய சிறப்புடைமை பற்றித் திருமுறைகளுள் முன்வைக்கப்பட்டன. இயற்பாட்டுக்களிலும், இசைப்பாட்டுக்கள் இனிமையிற் சிறந்தன என்பது நிற்க, கடவுட் பராவலில் இயற் பாட்டினும், இசைப்பாட்டு உணர்வு மிகச் செய்வனவாதல் அறிக.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.