முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பதிக வரலாறு : பண் : நட்டபாடை

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திரு வாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்`1 என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப் படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத் தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மை யப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத் தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக் கொடியைப் பார்த்து, `துணை முலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவ ஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப் பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு ``நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அரு மறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.