திருக்கோவையார்-இயற்கைப் புணர்ச்சி


பண் :

பாடல் எண் : 1

திருவளர் தாமரை சீர்வளர்
காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங்
காந்தள்கொண் டோங்குதெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி
னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்
கொடிபோன் றொளிர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:திருவளர் தாமரை திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் அழகு வளரு நீலப் பூக்களையும்; ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஒர் வல்லியின் ஒல்கி மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது வடிவுவளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ! என்றவாறு.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமி ழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்ப ரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும். தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ் வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும்.
திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவ னொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயி லென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலை யென்றும் வழங்கும் இத்தொடக்கத்தனவெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க.
வளரென்பதற்கு வளருமென்றும்மைகொடுத்து உரை வாய்பாடு காட்டியதெற்றிற்கு மேலாலோ வளரக்கடவதென்பது கடா. அதற்குவிடை வளர்ந்த தாமரை வளராநின்ற தாமரையென்று கழிகாலத்தையும் நிகழ்காலத்தையுங்கூறாது, மேல்வருங்காலத்தைக் கூறவேண்டியது. கழிகாலத்தைக் கூறினாற் கழிந்ததனைக் கூறிற்றாம். நிகழ்காலத்தைக் கூறினால் முன்னும் பின்னுமின்றி இப்பொழு துள்ளதனைக் கூறிற்றாம். ஆகலான் வளருமென்று வருங்காலங் கூறியவாறன்று; மூன்று காலத்திற்கும் பொதுவாகிய சொற்றோன்றவே கூறினார். ஆயின் உம்மைச்சொன் மூன்று காலத்திற்கும் பொதுவாகி வந்தவாறென்னை?. இது செய்யுட் சொல்லாதலால் வந்தது. செய்யுளி னொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; அது ஞாயிறு திங்களியங்கும், யாறொழுகும், மலைநிற்கும் என்றற்றொடக்கத்தன வற்றானறிக. அன்றியும்,
முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை #9;
யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து ; ; ; ; ; மெய்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்
- தொல். சொல். வினை-43
என்றாராகலின், உம்மைச்சொல் வருங்காலத்தையே காட்டாது மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குமென்றேயறிக.
இனித் திருமகடங்குந் தாமரை யெனினு மமையுமென்று அமைவுரைத்ததென்னை, இதனையுவமையாக்கக் குறையென்னை யெனின், திருமகளாலே தாமரையுயர்ந்ததாம். தாமரையினது சிறப்புக் கூறிற்றில்லையாம். என்னை, எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்குண்டாகையாலே திருமகளென்று பெயராயிற்று. அங்ஙனம் பெருமையுடையவளும் இதன் சிறப்பு நோக்கியேயிதனி லிருந்தாளல்லது தன்னாலேயிதற்குச் சிறப்புப்பெற வேண்டியிருந் தாளல்லள், ஆகலாற் றாமரைக் கொத்ததும் மிக்கதுமில்லை. அங்ஙனம் பெருமையுடையவளாலும் விரும்பப்பட்டதாகலான் திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்பது பெற்றாம்.
இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், ``தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்`` (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க.
இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான் முல்லையும், கோங்கு பாலைநிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின் பெருமை கூறினார், நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக்கோவையின்கண் முன்னர்க் ``குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்`` (தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் ``சினையிற்கூறு முதலறிகிளவி`` (தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டா னால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத் துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே யொத்த களவொழுக் கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின் பயத்ததெனச் சுட்டினார்.
களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக் காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின்கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றா ராயினும், இன்பந் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ் வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவு விடுத்த விழுமி யோருள்ளமும் விழைவின்கட்டாழுமாதலின், காமனது வென்றிக் கொடியெனவே வென்றிகொள்ளாநின்றது என்றானென்பது. முதற்கட் கிடந்த இப்பாட்டுக் காட்சியின்மேற்று. இப்பாட்டால் வேட்கை இவன்கணுண்டாயவாறென்னை பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையிற் பெற்றாம்.
உவகைமிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம்; அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக்குறி, உவப்பித்தலினுவகையாயிற்று. உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடியோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையாமாறு,
பூப்புனை மாலையு மாலைபுனை மாதருந்
தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங்
கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும்
-திவாகரம், 11ஆவது
என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் பாதாதிகேசாமாதல் வருணிக்கவேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப் பட்டது. என்னை, திருவளர் தாமரை யென்று முகமுதலாகவெடுத்துக் கொண்டு அன்னநடையென்று பாதத்திலே முடித்தலான். ஆயின், இதில் நடைகண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவா மெனின், இவன் நடைகண்டானல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்னநடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின் வினையாகலிற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்த தென்றது அன்னத்திற்குச்சினை கால், காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை.
அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல். என்னை, ``சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின் புறுதல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே`` (தொல். பொருள். அகத்திணை - 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற் சொன்னாராகலினென்பது.
அஃதேல் உவகையென்னும் மெய்ப்பாட்டானே மகிழ்ச்சி பெற்றாம். இனியிச்சொற்கள் விசேடித்து மகிழ்வித்தவா றென்னை யெனின், நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து தான் வேட்ட பொருள் வயிற் றன்குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந் தோறும் மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந் திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்; இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது.
நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம் பின்றிப் பெருகுமென்பது.

குறிப்புரை :

1.1. காட்சி
காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃதொருவியப் பென்னென்றல். அதற்குச் செய்யுள்
1.1 மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர்வேலவன் கண்ணுற்றது.
திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோவெனின்,
அறிவோ னறிவில தெனவிரண் டாகு
நெறியினிற் றொகைபெற்று நிரல்பட விரிந்த
மண்புன லனல்வளி மாவிசும் பெனாஅ
வெண்மதி செஞ்சுடர் வேட்போ னெனாஅ
வெண்வகை நிலைஇய வெவ்வகைப் பொருளுந்
தோற்றநிலை யிறுதி கட்டுவீ டென்னு
மாற்றருஞ் செயல்வழி மாறாது செயப்பட்டு
வெருவா வுள்ளத்து வேட்போன் றான்செய்
யிருவினைப் பயன்றுய்த்து மும்மல னொரீஇப்
பொருவறு சிவகதி பொற்பினிற் பொருந்தவு
மேனைய தத்தங் குணநிலை புணரவு
நிலைஇ யவ்வயி னிமித்த மாகி
யலகு தவிர்த்த பலவகை யண்டமு
மின்னுழை வெயிலின் றுன்னணுப் புரைந்து
தன்னு ளடங்கவுந் தானவற் றுள்ளு
நுண்ணுணர் வாயு நோக்கரு நுழையிற்
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்திப்
போக்கும் வரவும் புணர்வு மின்றி
யாக்கமுங் கேடு மாதியு மந்தமு
நடுவு மிகந்து ஞானத் திரளா
யடியு முடியு மளவா தயர்ந்து
நெடியோ னான்முக னான்மறை போற்ற
வெரிசுடர்க் கனலியி னீங்காது விரிசுடர்
வெப்பமும் விளக்கமு மொப்பவோர் பொழுதினிற்
றுப்புற வியற்றுவ தெனவெப் பொருளுங்
காண்டலு மியற்றலு மியல்பா மாண்டுடன்
றன்னினீங் காது தானவின்று விளங்கிய
வெண்ணெண் கலையுஞ் சிலம்புஞ் சிலம்படிப்
பண்ணமை தேமொழிப் பார்ப்பதி காண
வையா றதன்மிசை யெட்டுத்தலை யிட்ட
மையில் வான்கலை மெய்யுடன் பொருந்தித்
தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி
யெல்லையி லானந்த நடம்புரி கின்ற
பரம காரணன் றிருவரு ளதனால்
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்
ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்
செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்
அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென
இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்
ஆங்கவ் விரண்டனுள்
ஆகமநூல் வழியி னுதலிய ஞான
யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரி
துலகநூல் வழியி னுதலிய பொருளெனு
மலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்
புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி
துலையா மரபி னுரைக்கற் பாற்று.
அஃதியாதோவெனின், எழுவாய்க்கிடந்தபாட்டின் பொருளு ரைக்கவே விளங்கும். அஃதேல், இப்பாட்டென்னுதலிற்றோவெனின், அறம், பொருள், இன்பம், வீடென்னு நான்கு பொருளினும் இன்பத் தை நுதலி இத்திருக்கோவையின்கணுரைக்கின்ற களவியற் பொருளி னது பொழிப்பிலக்கணத்தையும், அதற்குறுப்பாகிய கைக்கிளைத் திணையின்கண் முதற்கிடந்த காட்சியென்னும் ஒருதலைக் காமத்தினையும், உடனிலைச் சிலேடையாகவுணர்த்துதனுதலிற்று.
திருவளர்தாமரை ... போன்றொளிர்கின்றதே.
மதிவாணுதல் ... கண்ணுற்றது.

பண் :

பாடல் எண் : 2

போதோ விசும்போ புனலோ
பணிக ளதுபதியோ
யாதோ வறிகுவ தேது
மரிதி யமன்விடுத்த
தூதோ வனங்கன் றுணையோ
விணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோவென
நின்றவர் வாழ்பதியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:யமன் விடுத்த தூதோ யமனால் விடுக்கப் பட்ட தூதோ; அனங்கன் துணையோ வசித்தற்கரியாரை வசித்தற்கு அனங்கற்குண்டாயிற்றோர் துணையோ; இணையிலி தொல்லைத் தில்லை மாதோ - ஒப்பில்லாதானது பழையதாகிய இத்தில்லைக்கண் வாழ்வாரோர்மாதரோ; மட மயிலோ என நின்றவர் வாழ்பதி - மடப்பத்தையுடைய மயிலோவென்று சொல்லும்வண்ணம் நின்றவரது வாழ்பதி; போதோ - தாமரைப்பூவோ; விசும்போ - ஆகாயமோ; புனலோ - நீரோ; பணிகளது பதியோ - பாம்புகளது பதியாகிய நாகருலகமோ; யாதோ ஏதும் அறிகுவது அரிது - யாதோ சிறிதுந் துணிதலரிது என்றவாறு.
யமன் தூதும், அனங்கன்றுணையும், மடமயிலும் ஐயநிலை யுவமைக்கணுவமையாய் நின்றன. தில்லைமாது: உவமிக்கப்படும் பொருள். ஐயநிகழ்ந்தது திருமகள் முதலாகிய தெய்வமோ மக்க ளுள்ளாளோவென்றென்க. மக்களுள்ளாளாதல் சிறுபான்மை யாகலிற் கூறிற்றிலர்.
தில்லைமாதோ வென்பதற்குத் தில்லைக்கண் வாழ்வாரோர் மானுடமாதரோ வென்றுரைப்பாருமுளர். தில்லைமானுடமாது மகளிர்க்குவமையாகப் புணர்க்கப்படுவனவற்றி னொன்றன்மையால் உவமையாகாது. உவமிக்கப்படும் பொருளெனின், ஐயமின்றித் துணிவாம். அதனால், தில்லைமாதோவென்பது மானுடம் தெய்வ மென்னும் வேறுபாடுகருதாது மகளிரென்னும் பொதுமை பற்றி நின்றது. தில்லை நின்றவரெனக் கூட்டினுமமையும்.
தெய்வமென்ன - தெய்வமோ அல்லளோவென.
மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த மருட்கை. என்னை,
புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு #9;
மதிமை சாலா மருட்கை நான்கே
- தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 7
என்றாராகலின். ஈண்டு வனப்பினது பெருமையை வியந்தா னென்பது. அவ்வியப்பு மருட்கைப்பாற்படும். பயன்: ஐயந்தீர்தல்.

குறிப்புரை :

1.2. ஐயம்
ஐயம் என்பது கண்ணுற்ற பின்னர் இங்ஙனந் தோன்றாநின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அன்றி மக்களுள்ளாள் கொல்லோ வென்றையுறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.2. தெரியவரியதோர் தெய்வமென்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

பண் :

பாடல் எண் : 3

பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
ஆயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பாயும் விடை அரன் தில்லை அன்னாள் பாய்ந்து செல்லும் விடையையுடைய அரனது தில்லையை யொப்பாளுடைய; படைகண் இமைக்கும் படைபோலுங் கண்கள் இமையா நின்றன; நிலத்து அடி தோயும் நிலத்தின் கண் அடி தீண்டா நின்றன; தூமலர் வாடும் தூய மலர்கள் வாடா நின்றன, ஆதலின் துயரம் எய்தி ஆயும் மனனே துயரத்தையெய்தி ஆராயும் மனனே ; அம் மாமுலை சுமந்து அழகிய பெரியவாகிய முலைகளைச் சுமந்து; தேயும் மருங்குல் தேயாநின்ற மருங்குலையும்; பணை பெருந்தோள் பணைபோலும் பெரிய தோள்களையும் உடைய; இச்சிறு நுதல் அணங்கு அல்லள் இச்சிறு நுதல் தெய்வம் அல்லள் எ-று.
துயரமெய்தி யாயுமனனே யென்றதனால், தெளிதல் கூறப்பட்டதாம். மெய்ப்பாடு: மருட்கையின் நீங்கிய பெருமிதம். என்னை,
கல்வி தறுக ணிசைமை கொடையெனச் #9;
சொல்லப் பட்ட பெருமித நான்கே
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 9
என்றாராகலின், தெளிதலுங் கல்வியின் பாற்படும். பயன்: தெளிதல்.
அவ்வகை தெய்வம் கொல்லோவென்றையுற்று நின்றான் இவ்வகை குறிகண்டு தெய்வமல்லள் மக்களுள்ளாளெனத் துணிந்தா னென்பது. எனவே, தெய்வமல்லளாதற்குக் காரணம் இனையன குறியே வேற்றுமை இல்லை என்பது துணிவு.

குறிப்புரை :

1.3. தெளிதல் தெளிதல் என்பது ஐயுற்றபின்னர் அவயவமியங்கக்கண்டு இவள் தெய்வமல்லளென்று தெளியாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.3 அணங்கல்லளென் றயில்வேலவன்
குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.

பண் :

பாடல் எண் : 4

அகல்கின்ற வல்குற் றடமது
கொங்கை யவையவநீ
புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே
யிடையடை யார்புரங்கள்
இகல்குன்ற வில்லிற்செற் றோன்றில்லை
யீசனெம் மானெதிர்ந்த
பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ
னம்மன்ன பல்வளைக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அகல்கின்ற அல்குல் தடம் அது அகலா நின்ற வல்குலாகிய தடம் அது; கொங்கை அவை முலை அவை; நெஞ்சு அவம் நீ புகல்கின்றது என்னை நெஞ்சே காரணமின்றி நீ சொல்லுகின்றதென்!; அடையார் புரங்கள் இகல் குன்றவில்லில் செற்றோன் அடையாதார் புரங்களது இகலைக் குன்றமாகிய வில்லாற் செற்றவன்; தில்லை ஈசன் தில்லைக்கணுளனாகிய வீசன்; எம்மான் எம்முடைய இறைவன்; எதிர்ந்த பகல் குன்ற பல் உகுத்தோன் மாறுபட்ட ஆதித்தனது பெருமை குன்றப் பல்லை உகுத்தோன்; பழனம் அன்ன பல்வளைக்கு இடை உண்டு அவனது திருப்பழனத்தை யொக்கும் பல்வளைக்கு இடையுண்டு எ-று.
தடம் உயர்ந்தவிடம். அல்குற்றடமது கொங்கையவை என்புழி அல்குற்பெருமையானும் முலைப்பெருமையானும் இடையுண்டு என்றவாறு அன்று; அல்குலும் முலையும் உண்மையான் இடை உண்டு என்றவாறு. அல்குற்றடமதுவென்றும் முலையவை யென்றும் பெருமை கூறியது அவை விளங்கித் தோன்றுதனோக்கி. இகல்குன்றவில்லிற் செற்றோனென்பதற்கு இகல்குறைய வில்லாற் செற்றோனெனினும் அமையும். நயந்த அண்ணல் - மக்களுள்ளா ளென்று துணிதலால் நயந்த அண்ணல். உள்ளியது - கூட்டத்தை நினைந்தது. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை, வியந்துரைத்தலின். பயன்: ஐயந்தீர்ந்து மகிழ்தல்.
இந்நான்கு பாட்டும் ஒருவர் உள்ளக் கருத்தை ஒருவர் அறியாதவொருதலைக் காமம் ஆதலிற் கைக்கிளைப்பால. அகத் திணையின்கண் கைக்கிளை வருதல் திணைமயக்காம்பிறவெனின், கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாய் எழுதிணையின்உள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும், கிளவிக்கோவையின் எடுத்துக்கோடற்கட் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமை நோக்கிக் கைக்கிளை தழீஇயினார். பெருந்திணை தழுவுதல் சிறப்பின்மையினீக்கினார். இது நலம் பாராட்டல்.

குறிப்புரை :

1.4. நயப்பு
நயப்பு என்பது தெய்வம் அல்லளென்று தெளிந்த பின்னர் மக்களுள்ளாள் என்று நயந்து இடை யில்லைகொலென்ற நெஞ்சிற்கு அல்குலும் முலையுங்காட்டி இடையுண்டென்று சென்றெய்த நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.4 வண்டமர் புரிகுழ லொண்டொடி மடந்தையை
நயந்த அண்ணல் வியந்துள் ளியது.

பண் :

பாடல் எண் : 5

அணியு மமிழ்துமென் னாவியு
மாயவன் றில்லைச்சிந்தா
மணியும்ப ராரறி யாமறை
யோனடி வாழ்த்தலரிற்
பிணியு மதற்கு மருந்தும்
பிறழப் பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந்
தோளி படைக்கண்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மின்னும் பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்கள் மின்னையும் பாம்பையுமொக்கும் இடையினையும் பெருந்தோளினையும் உடையாளது படைபோலும் கண்கள்; பிறழ பிறழ பிணியும் பிறழுந்தோறும் பிறழுந்தோறும் பொதுநோக்கத்தாற் பிணியும்; அதற்கு மருந்தும் உள்ளக் கருத்து வெளிப்படுக்கு நாணோடுகூடிய நோக்கத்தால் அதற்கு மருந்தும் ஆகாநின்றன எ-று.
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் எனக்காபரணமும் அமிழ்தும் என்னுயிருமாயவன்; தில்லைச் சிந்தாமணி தில்லைக்கட் சிந்தாமணிபோல அன்பர்க்கு, நினைத்தவை கொடுப்போன்; உம்பரார் அறியாமறையோன் அன்பரல்லாத தேவர்களறியாத வந்தணன்; அடி வாழ்த்தலரின் பிணியும் அவனுடைய திருவடிகளை வழுத்தாதவரைப்போல உறும் பிணியுமெனக் கூட்டுக.
அணியென்றார் அழகு செய்தலான். அமிழ்தென்றார் கழி பெருஞ்சுவையோடு உறுதிபயத்தல் உடைமையான். ஆவி யென்றார் காதலிக்கப்படும் பொருள்களெல்லாவற்றினுஞ் சிறந்தமையான். ஈறிலின்பம் பயக்கும் இறைவனோடு சார்த்த அணியும் அமிழ்தும் ஆவியும் இறப்ப இழிந்தனவே ஆயினும்,
பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின்,
மருளற வரூஉ மரபிற் றென்ப
என்பதனான் ஈண்டுச் சொல்லுவானது கருத்து வகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூங்கு மிக்கனவின்மையானும், உயர்ந்தனவாயுவமையாயின. உம்பராலென்பது பாடமாயின், உம்பரானறியப் படாதவெனவுரைக்க. பிறழப் பிறழும் என்பது பாடமாயின், பிணியும் மருந்தும் மாறி மாறி வரப்படைக்கண்கள் பிறழும் என உரைக்க. இஃது உட்கோள். இவை ஐந்தும் கைக்கிளை.
திணை: குறிஞ்சி. கைகோள்: களவு. கூற்று: தலைமகன் கூற்று. கேட்பது: நெஞ்சு. நெஞ்சென்பது பாட்டின்கண் இல்லையாலோ வெனின் எஞ்சிற்றென்பதாம்; வறிதே கூறினா னெனினுமமையும். இடம்: முன்னிலை. காலம்: நிகழ்காலம். எச்சம்: இப்பெருந்தோளி படைக்கண்களென்புழி இவ்வென்னுஞ் சுட்டுச்சொல்லெஞ்சிற்று. மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். ஈண்டு மெய்ப்பாட்டுப் பொருள்கோள் கண்ணினான் யாப்புறவறிதல். என்னை,
கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு
முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி
னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே.
-தொல். பொருள். மெய்ப்பாட்டியல் - 27
என்றாராகலின். பயன்: தலைமகளது குறிப்பறிந்து மகிழ்தல். பிணியுமதற்கு மருந்துமாம் பெருந்தோளி படைக்கண்களென் றமையின், அவளுடம்பாட்டுக் குறிப்புஅவள் நாட்டத்தானுணர்ந்தா னென்பது. என்னை,
நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்.
-தொல். பொருள். களவியல் - 5
என்றாராகலின்.

குறிப்புரை :

1.5. உட்கோள்
உட்கோள் என்பது மக்களுள்ளாளென்று நயந்து சென்றெய்த நினையாநின்றவன் தன்னிடத்து அவளுக்குண்டா கிய காதல் அவள் கண்ணிற்கண்டு தன்னுட் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.5. இறைதிருக் கரத்து மறிமா னோக்கி
யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.

பண் :

பாடல் எண் : 6

வளைபயில் கீழ்கட னின்றிட
மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத்தொல் லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேன்நய
வேன்தெய்வ மிக்கனவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வளை பயில் கீழ் கடல் நின்று இட சங்கு நெருங்கின கீழ்த்திசைக்கடலிலே நின்று இட; நேர்கழி மேல் கடல் வான் நுகத்தின் துளைவழி கோத்தென அவ்வொத்தகழி மேற்றிசைக் கடலில் இட்ட பெரிய நுகத்தினது துளைக்கட்சென்று கோத்தாற் போல; தில்லைத் தொல்லோன் கயிலை கிளை வயின் நீக்கி தில்லை யிடத்துப் பழையோனது கயிலைக்கண் ஆயத்தாரிடத்து நின்று நீக்கி; இ கெண்டை கண்ணியைக் கொண்டு தந்த விளைவை அல்லால் இக்கெண்டை போலும் கண்ணையுடையாளைக் கைக் கொண்டு தந்த நல்வினையின் விளைவாகிய தெய்வத்தை அல்லது; மிக்கன தெய்வம் வியவேன் நயவேன் மிக்கனவாகிய பிற தெய்வத்தை வியப்பதுஞ் செய்யேன்; நயப்பதுஞ் செய்யேன் எ-று.
கயிலைக்கட் கொண்டுதந்த வெனவியையும். இவளைத்தந்த தெய்வத்தையல்லது நயவேனென்று அவளது நலத்தை மிகுத்த மையின், இதுவும் நலம் பாராட்டல். பயந்தோர்ப்பழிச்சற் (தலைவி யின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்துதல்) பாற்படுத்தினுமமையும். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த மருட்கை. பயன்: மகிழ்தல்.

குறிப்புரை :

1.6. தெய்வத்தை மகிழ்தல்
தெய்வத்தை மகிழ்தல் என்பது உட்கொண்டு நின்று, என்னிடத்து விருப்பத்தையுடைய இவளைத்தந்த தெய்வத்தை அல்லது வேறொரு தெய்வத்தை யான் வியவேனெனத் தெய்வத்தை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.6 அன்ன மென்னடை அரிவையைத் தந்த
மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

ஏழுடை யான்பொழி லெட்டுடை
யான்புய மென்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன
பொன்னிவ் வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும்
விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங்
காய்வந் தகப்பட்டதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:பொழில் ஏழு உடையான் பொழில் ஏழு உடையான்; புயம் எட்டு உடையான் புயம் எட்டுடையான்; முன் என்னை ஆள் ஊழ் உடையான் எனக்கு ஆட்படுந்தன்மை உண்டா வதற்கு முன்னே என்னை ஆள்வதொரு புதிதாகிய முறைமையை யுடையான்; புலியூர் அன்ன பொன் அவனது புலியூரையொக்கும் பொன்னனையாள்; இ உயர் பொழில் வாய் சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையாக இவ்வுயர்ந்த மொழிலிடத்து ஒருபொழுதும் விடாது சூழ்தலை உடைய ஆயத்தை நீக்குதற்குக் காரணமாகிய விதி துணையாக; மனனே மனமே; யாழ் உடையார் மணங்காண் அணங்கு ஆய் வந்து அகப்பட்டது கந்தருவர் மணங்காண் முன் வருத்துவதாய் வந்து அகப்பட்டது; இனிக் கூட்டத்துக்கு உடன்படு வாயாக என்றவாறு.
பொன்னீக்குமெனவியையும். ஆகவென்பது ஆ வென நின்ற செய்யுண்முடிபு; புறனடையாற் கொள்க. அணங்காய் வந்தென்றான், உள்ளஞ்செல்லவும் இது தகாதென்று விலக்குதலால் முன் வருத்தமாயினமையின். தெய்வத்தன்மை உடைத்தாய் வந்து எனினும் அமையும். அகப்பட்டதென்று இறந்த காலத்தாற் கூறினான், புணர்ச்சி துணிந்தமையான். இதுவும் உட்கோட்பாற்படும்.
இவை இரண்டும் ஒருதலைக்காம மல்லவெனினும் புணர்ச்சி நிகழாமையிற் கைக்கிளைப் பாற்படும். புணர்ச்சி நிகழாமை, தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது என்பதனானறிக. பேதையைப் புணர்ச்சி துணிந்தது, விதிதுணையாகக் கந்தருவர் மணம் ஒரு பெண் வடிவு கொண்டு எனக்கு எய்திற்று என்றமையின். இவனோடு இவளி டையுண்டாய அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம். பாங்கற்கூட்டம் தோழியிற் கூட்டம் என்று இவற்றில் அவர் துணையாயவாறுபோல விதியும் இவரை ஆயத்தினீக்கிக் கூட்டின மாத்திரையே அன்றி அன்பிற்குக் காரணமன்றென்பது. அல்லதூஉம், விதியாவது செயப்படும் வினையினது நியதியன்றே, அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சியாய் முடியும், அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோரி தனை இயற்கைப் புணர்ச்சியென்று குறியிட்டது. அல்லதூஉம், நல்வினை துய்த்தக்கால் முடிவெய்தும், இவர்களன்பு துய்த்தாலு முடிவெய்தாது எஞ்ஞான்றும் ஒருபெற்றியே நிற்கும் என்பது. அல்லதூஉம், ``பிறப்பா னடுப்பினும் பின்னுந் துன்னத்தகும் பெற்றியர்`` (திருக்கோவை, 205,) என்றலானும், இவர்கள் அன்பிற்குக் காரணம் விதியன்றென்பது. பலபிறப்பினும் ஒத்த அன்பென்றாராகலின், பலபிறப்பினு மொத்து நிற்பதோர் வினை யில்லை என்பது. அஃதேல், மேலைச் செய்யுளில் வினைவிளைவே கூட்டிற்றாக விசேடித்துச் சொல்ல வேண்டிய தென்னையெனின், இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங் குறையுற அவர்கள் தங்களினாகிய கூட்டம் கூட்டினார்கள். உம்மை நல்வினையைக் குறையுற்று வைத்து இம்மை அதனை மறந்தான்; மறப்புழியும், அது தான்மறவாது இவர்களையுங் கண்ணுறுவித்து இவர்க்குத் துப்பு மாயிற்றாகலான், விசேடிக்கப்பட்டது. அல்லதூஉம், ``பாங்கனை யானன்ன பண்பனை`` (தி.8 கோவை பா.19) என்று அவனை விசேடித்தும், ``முத்தகஞ்சேர் மென்னகைப் பெருந்தோளி`` (தி.8 கோவை பா.106) என்று அவளை விசேடித்தும், அவர்களினாலாய கூட்டத்திற்குக் கூறினமையின், நல்வினைப் பயனும் அம்மாத்திரையே விசேடித்தது என்பது.

குறிப்புரை :

1.7. புணர்ச்சி துணிதல்
புணர்ச்சி துணிதல் என்பது தெய்வத்தை மகிழாநின்றவன் இது நமக்குத் தெய்வப் புணர்ச்சி எனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி அவளோடு புணரத் துணியாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.7 கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத்
தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.

பண் :

பாடல் எண் : 8

சொற்பா லமுதிவள் யான்சுவை
யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப்
புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி
தோட்ட களவகத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சொல்பால் அமுது இவள் யான் சுவை துணிந்து என்ன இங்ஙன் நல்பால் வினை தெய்வம் தந்து என்றது. சொல்லும் பகுதியில் அமுதிவள் யானதன் சுவையென்று துணிந்து சொல்ல இவ்வண்ணமே நல்ல கூற்றின் வினையாகிய தெய்வந்தர என்றவாறு. என்றது சுவையை உடைய பொருட்கும், சுவைக்கும் வேறுபாடு இல்லாதவாறு போல எனக்கும் இவட்கும் வேறுபாடில்லை என்றவாறு. இன்று நான் இவள் ஆம் பகுதி பொற்பு ஆர் அறிவார் என்றது. இவ்வாறு வேறுபாடில்லையாயினும், புணர்ச்சியான் வரும் இன்பம் துய்த்தற்பொருட்டாக இன்று யானென்றும் இவளென்றும் வேறுபாட்டோடு கூடிய அழகை யாரறிவார் இதனை அனுபவிக்கின்ற யானே அறியினல்லது! என்றவாறு. புலியூர் புனிதன் பொதியில் வெற் பில் கல்பாவிய வரைவாய் கடிதோட்டகளவகத்து என்றது. புலியூர்க் கணுளனாகிய தூயோனது பொதியிலாகிய வெற்பிற் கற்பரந்த தாள்வரையிடத்துக் காவலை வாங்கிய களவிடத்து என்றவாறு.
களவகத்துப் பொற்பெனக்கூட்டுக. தந்தென்பது தரவெனத் திரிக்கப்பட்டது. தந்தின்றென்பது தந்தது என்னும் பொருள்படாமை அறிந்து கொள்க. தந்தன்றென்பதூஉம் பாடம்போலும். கடிதோட்ட என்பதற்குக் கடியப்பட்ட தொகுதியை உடைய களவென்று உரைப்பினும் அமையும். தோட்டவென்றது தலைமகளாயத்தையுந் தன்னிளைஞரையும். கடிதொட்ட வென்பது பாடமாயின், மணந் தொடங்கிய களவென்றுரைக்க. கொடியிடையொடுகலவி கொடி யிடையோடு நிகழ்ந்த கலவி. மெய்ப்பாடு: உவகை. பயன்: மகிழ்ச்சி; தலைமகளை மகிழ்வித்தலுமாம். நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட்கூட்ட அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையுமென்ன என்னெஞ்சம் இவள்கண்ணே ஒடுங்க யானென்பதோர் தன்மை காணாதொழிய இருவர் உள்ளங்களும் ஒருவேமாமாறுகரப்ப ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட் பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம் யாவரா னறிப்படுமென்று மகிழ்ந் துரைத்தான்; உரைப்பக்கேட்ட தலைமகளும் எம்பெருமான் என்கண் வைத்த அருளினானன்றோ இவ்வகை யருளியதென்று இறப்பவு மகிழ்வாளாம்.

குறிப்புரை :

1.8. கலவியுரைத்தல்
கலவியுரைத்தல் என்பது தெய்வப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன் புணர்ச்சி இன்பத்தின் இயல்பு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.8 கொலைவேலவன் கொடியிடையொடு
கலவியின்பம் கட்டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 9

உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச்
சிற்றம் பலத்தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல்
போல வளர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உணர்ந்த்தார்க்கு உணர்வு அரியோன் ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின்னுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலான் மீட்டு உணர்வரியோன்; தில்லைச் சிற்றம்பலத்து ஒருத்தன் தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய ஒப்பில்லாதான்; குணம் வெளிப்பட்ட கொவ்வை செவ்வாய் இ கொடி இடை தோள் புணர்ந்தால் அவனது குணமாகிய ஆனந்தம் வெளிப்பட்டாற்போலுங் கொவ்வைக் கனிபோலும் செவ்வாயை உடைய இக்கொடியிடை தோளைக் கூடினாலும்; புணரும் தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் கூடுந்தோறும் பெரிதாகிய இன்பம் முன்புபோலப் பின்னும் புதிதாய் ; மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றது மணந்தங்கிய சுருண்ட குழலையுடையாளது அல்குல் போல வளராநின்றது எ-று.
உணர்ந்தார்க்குக் குணந்தான் வெளிப்பட்டவென இயைத் துரைப்பினுமமையும். உணர்ந்தார்க்குணர்வரியோ னென்பதற்குத் தவத்தானும் தியானத்தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தார்க்கும் என உம்மை வருவித்து உரைக்கப்பட்டது. குணந்தான் வெளிப்பட்ட கொடியிடை என்புழி உவமையோடு பொருட் கொற்றுமை கருதி உவமைவினை உவமிக்கப்படும் பொருண்மேலேற்றப்பட்டது. புணர்ந்தாற் புதிதாயெனவியையும். புணர்ந்தாலுமென இதற்கும் உம்மை வருவித்து உரைக்கப்பட்டது. இன்பத்தன்பு - இன்பத்தான் வந்த செயற்கை அன்பு. மெய்ப்பாடும் பயனும்: அவை. புணர்ச்சிக்கட்டோன்றி ஒருகாலைக்கு ஒருகாற் பெருகாநின்ற பேரின்பவெள்ளத்தைத் தாங்கலாற்றாத தலைமகன் ஆற்றுதல் பயனெனினும் அமையும்.
வளர்கின்றது என்றமையிற் புணர்ந்ததனாற் பயனென்னை யெனின், புணராத முன்னின்ற வேட்கை புணர்ச்சிக்கட்குறைபடும், அக்குறைபாட்டைக் கூட்டத்தின்கட் டம்மிற்பெற்ற குணங்களினா னாகிய அன்பு நிறைக்கும், நிறைக்க எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்பது. அல்குல்போல வளர்கின்ற தென்றவழி ஒருகாலைக்கு ஒருகால் வளருமென்றார் அல்லர். என்னை, குறைபாடு உள்ளதற்கு அன்றே வளர்ச்சியுண்டாவது; அல்லதூஉம் எஞ்ஞான்றும் வளருமெனின், அல்குற்கு வரம்பு இன்மையும் தோன்றும். மற்றென்னை கருதியதெனின், இயற்கைப்புணர்ச்சி புணர்கின்ற காலத்து இவள் பதினோர் ஆண்டும் பத்துத் திங்களும் புக்காள் ஆகலின் இவளது அல்குல் இலக்கணக் குறைபாடு இன்றியே வளராநின்றது. வளர்ந்து பன்னீராண்டு நிரம்பினால் ஒருபெற்றியே நிற்கும். அதுபோல இவன் காதலும் உள்ளம் உள்ளளவு நிறைந்து பின்னைக் குறைபாடின்றி ஒரு பெற்றியே நிற்குமென்பது.

குறிப்புரை :

1.9. இருவயினொத்தல்
இருவயினொத்தல் என்பது புணராத முன்னின்ற வேட்கை யன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நின்று வளர்ந்து சேற லால் தலைமகளை மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.9 ஆரா வின்பத் தன்பு மீதூர
வாரார் முலையை மகிழ்ந்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 10

அளவியை யார்க்கு மறிவரி
யோன்றில்லை யம்பலம்போல்
வளவிய வான்கொங்கை வாட்டடங்
கண்ணுதல் மாமதியின்
பிளவியல் மின்னிடை பேரமை
தோளிது பெற்றியென்றாற்
கிளவியை யென்னோ வினிக்கிள்ளை
யார்வாயிற் கேட்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல் வான் கொங்கை வளவிய அளவை யார்க்கும் அறிவு அரியவனது தில்லையம்பலம் போலப் பெருங்கொங்கைகள் வளத்தையுடையன; தடங்கண் வாள் பெரிய கண்கள் வாளோ டொக்கும்; நுதல் மா மதியின் பிளவு இயல் நுதல் பெரிய மதியின் பாகத்தி னியல்பையுடைத்து; இடைமின் இடை மின்னோடொக்கும்; தோள் பெரு அமை தோள்கள் பெரிய வேயோடொக்கும்; பெற்றி இது என்றால் இவற்றது தன்மை இதுவானால்; கிள்ளையார் வாயில் கிளவியை இனி கேட்கின்றது என் கிள்ளைபோல்வாள் வாயின் மொழியை இனிக் கேட்க வேண்டுகின்றதுஎன்? இப்பெற்றிக்குத் தக்கதே இருக்கும் என்றவாறு.
துறவு துறவியென நின்றாற்போல அளவு அளவியென நின்றது. மொழி கிளிமொழியோ டொக்குமென்பது போதரக் கிள்ளையாரென் றான். வயினென்பது பாடமாயின், வாயினென்பது குறுகி நின்றதாக உரைக்க. வயின் இடமெனினும் அமையும். அவயங்கண்டென்புழி உறுதன் முதலாகிய நான்கையும் கண்டு என்றார். மெய்ப்பாடு: உவகை, பயன்: நயப்புணர்த்துதல்.

குறிப்புரை :

1.10. கிளவிவேட்டல்
கிளவி வேட்டல் என்பது இருவயினொத்து இன்புறாநின்ற தலைமகன் உறுதன்முதலாகிய நான்கு புணர்ச்சியும் பெற்றுச் செவிப் புணர்ச்சி பெறாமையின் ஒருசொல்வேட்டு வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள் 1.10 அன்னமன்னவ ளவயவங்கண்டு மென்மொழிகேட்க விருப்புற்றது.

பண் :

பாடல் எண் : 11

கூம்பலங் கைத்தலத் தன்பரென்
பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
யம்பலம் பாடலரின்
தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
தீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் போதுள வோஅளி
காள்நும் அகன்பணையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:அளிகாள் நும் அகன் பணை வண்டுகாள் நுமதகன்ற மருதநிலத்து; தேம்பு சிற்றிடை ஈங்கிவள் தேம்புஞ் சிறிய விடையை உடைய இவளது; தீம் கனிவாய் கமழும் ஆம்பல்போது உளவோ இனியதாகிய கனிந்த வாய்போல நாறும் ஆம்பற் பூக்களுளவோ?; சொல்லுமின் என்றவாறு.
கூம்புகைத்தலத்து அன்பர் என்பு ஊடு உருக குனிக்கும் கூம்புங் கைத்தலங்களை உடைய அன்பரது என்பும் உள்ளுருகக் கூத்தாடா நின்ற; பாம்பு அலங்காரப் பரன் தில்லை அம்பலம் பாடலரின் தேம்பு பாம்பாகிய அணியை யுடைய பரமனது தில்லையம்பலத்தைப் பாடாதாரைப் போலத் தேம்புமெனக் கூட்டுக.
அல்லும் அம்மும்: அல்வழிச்சாரியை. பாம்பலங்காரம்: மெலிந்து நின்றது. ஈங்கிவளென்பது ஒருசொல். கனிவாய் கனிபோலும் வாயெனினும் அமையும். புனைநலம் என்றது புனையப் பட்ட இயற்கை நலத்தை. அயர்வு நீங்கியது - சொல்லாடாமையின் உண்டாகிய வருத்த நீங்கியது. மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப்புணர்த்துத்தல். இயற்கை அன்பினானும் அவள் குணங்களால் தோன்றிய செயற்கை அன்பினானும் கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் நயப்புணர்த்துதல் என்பது.

குறிப்புரை :

1.11. நலம்புனைத்துரைத்தல்
நலம்புனைந்து உரைத்தல் என்பது கிளவிவேட்டு வருந்தக் கண்ட தலைமகள் மூரன் முறுவல் செய்ய, தலைமகன் அதுபெற்றுச் சொல்லாடாமையான் உண்டாகிய வருத்த நீங்கி, நுமதகன்ற மருத நிலத்துக் குறிஞ்சிநிலத்துஇவள் வாய்போல நாறும் ஆம்பற் பூக்களுளவோவென அந்நிலத்து வண்டோடு வினவா நிற்றல். அதற்குச் செய்யுள்- 1.11 பொங்கி ழையைப் புனைந லம்புகழ்ந்
தங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது.

பண் :

பாடல் எண் : 12

சிந்தா மணிதெண் கடலமிர்
தந்தில்லை யானருளால்
வந்தா லிகழப் படுமே
மடமான் விழிமயிலே
அந்தா மரையன்ன மேநின்னை
யானகன் றாற்றுவனோ
சிந்தா குலமுற்றென் னோவென்னை
வாட்டந் திருத்துவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:சிந்தாமணி தெள்கடல் அமிர்தம் தில்லையான் அருளால் வந்தால் ஒருவன் தவஞ்செய்து பெறும் சிந்தாமணியும் தெளிந்த கடலின் அமிர்தமும் வருத்தம் இன்றித் தில்லையான் அருளாற்றாமேவந்தால்; இகழப்படுமே அவை அவனாலிகழப் படுமா?; மட மான் விழி மயிலே மடமான் விழிபோலும் விழியை உடைய மயிலே! ; அம் தாமரை அன்னமே அழகிய தாமரைக்கண் வாழும் அன்னமே; நின்னை யான் அகன்று ஆற்றுவனோ நின்னை யான் பிரிந்து ஆற்றி உளனாவனோ?; சிந்தாகுலம் உற்று என்னை வாட்டந் திருத்துவது என்னோ சிந்தையின் மயக்கமுற்று என்னை வாட்டுவதென்னோ? என்றவாறு.
அந்தாமரை அன்னம் திரு என்பாருமுளர். நின்னை என்புழி உயிரினுஞ் சிறந்த நின்னையென் றும், யான் என்புழி இருதலைப் புள்ளினோருயிரேனாகிய யானென் றும், அச் சொற்களான் விளங்கின. வாட்டந்திருத்துவதே என்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீரவாய், வாட்டுவதே என்று பொருள் பட்டு, இரண்டாவதற்கு முடிபாயின. வாட்டத்திருத்துவது என்று பாட மாயின், வாட்டத்தின் கணிருத்துவது என்றுரைக்க. பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு. ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல் - அகன்றாற்றுவனோ எனப் பிரிவென்பதும் ஒன்றுண்டு என்பதுபட மொழிதல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவச்சம் உணர்த்துதல்.

குறிப்புரை :

1.12. பிரிவுணர்த்தல்
பிரிவுணர்த்தல் என்பது ஐவகைப்புணர்ச்சியும் (கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறிதல் என்பன) பெற்றுப் புணர்வதன் முன்னும் புணர்ந்தபின்னும் ஒத்தவன்பினனாய் நின்ற தலைமகன் பிரியுமாறு என்னையெனின், இப்புணர்ச்சி நெடுங்காலம் செல்லக்கடவதாக இருவரையுங் கூட்டிய தெய்வந்தானே பிரியாமற் பிரிவிக்கும். அது பிரிவிக்குமாறு, தலைமகன் தனது ஆதரவினான் நலம் பாராட்டக் கேட்டு, எம்பெருமான் முன்னின்று வாய்திறந்து பெரியதோர் நாணின்மை செய்தேனெனத் தலைமகள் நாணிவருந்தாநிற்ப, அதுகண்டு இவள் வருந்துகின்றது யான்பிரிவேனாக நினைந்தாக வேண்டுமென்று உட்கொண்டு, அவளுக்குத் தான் பிரிவின்மை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.12 பணிவள ரல்குலைப் பயிர்ப்பு றுத்திப்
பிணிமலர்த் தாரோன் பிரிவுணர்த் தியது.

பண் :

பாடல் எண் : 13

கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை
பங்கன் குறுகலரூர்
தீங்கிற் புகச்செற்ற கொற்றவன்
சிற்றம் பலமனையாள்
நீங்கிற் புணர்வரி தென்றோ
நெடிதிங்ங னேயிருந்தால்
ஆங்கிற் பழியா மெனவோ
அறியே னயர்கின்றதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் கோங்கின்கணுண்டாகிய பொலிந்த வரும்பையொக்கு முலையை உடையாளது பங்கையுடையான்; குறுகலர் ஊர் தீங்கில் புக செற்ற கொற்றவன் குறுகாதார் புரங்கள் பாசண்ட தருமமாகிய (வேதாசாரவிரோதம்) தீங்கிலே புகுதலான் அவற்றைக் கெடுத்த வெற்றியை உடையான்; சிற்றம்பலம் அனையாள் அயர்கின்றது நீங்கின்புணர்வு அரிது என்றோ அவனது திருச்சிற்றம்பலத்தை ஒப்பாள் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ; நெடிது இங்ஙன் இருந்தால் ஆங்கு இற்பழி ஆம் எனவோ நெடும் பொழுது இவ்வாறு இருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாம் என்று நினைந்தோ; அறியேன் அறிகிலேன் என்றவாறு.
தீங்கிற்புக என்பதற்குத் துன்பம் அறியாதார் துன்பத்திற்புக எனினும் அமையும். ஆங்கென்றது சுற்றத்தாரிடத்தும் அயலா ரிடத்தும்; ஆங்கு அசை நிலை எனினும் அமையும். பிரியல் உறுகின்றான் ஆகலின், இற்பழி யாம் என்று வேறுபட்டாளாயின் நன்று என்பது கருத்து. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல். அவ்வகை தலைமகளது ஆற்றாமைத்தன்மை தலைமகற்குப் புலனாயிற்று; புலனாகத் தலை மகன் இவ்வகை தன்னெஞ்சோடுசாவி ஆற்றானாயினானென்பது.

குறிப்புரை :

1.13. பருவரலறிதல்
பருவரலறிதல் என்பது பிரிவின்மை கூறக்கேட்ட தலை மகள் பிரிவென்பதும் ஒன்று உண்டு போலும் என உட்கொண்டு முன்னாணினாற் சென்று எய்திய வருத்த நீங்கிப் பெரியதோர் வருத்தமெய்த அதுகண்டு, இவள் மேலும் மேலும் வருந்துகின்றது பிரிந்தாற் கூடுதல் அரிதென்று நினைந்தோ நெடும்பொழுது இவ்வாறிருந்தால் அவ்விடத்துக் குடிப்பழியாமென்று நினைந்தோ அறிகிலேனென அவள் வருத்தம் அறியா நிற்றல். அதற்குச் செய்யுள்
1.13 பிரிவுணர்ந்த பெண்கொடிதன்
பருவரலின் பரிசுநினைந்தது.

பண் :

பாடல் எண் : 14

தேவரிற் பெற்றநஞ் செல்வக்
கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
வாடிப் புலம்புவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:தேவரில் பெற்ற நம் செல்வக்கடி முயற்சியும் உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற நமது அழகிய மணத்தை; வடிவு ஆர் திருவே வடிவார்ந்த திருவே; இனி யாவரின் பெற்று யார் சிதைப்பார் இனிச் சிதைத்தற்கு ஈடாகிய தன்மையை யாவராலே பெற்று யாவர் சிதைப்பார் ; இமையாத முக்கண் மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி இமையாத மூன்று கண்ணையும் மூவராலே பெற்றவரது சிற்றம்பலத்தை அழகுசெய்த; மொய்பொழில் வாய் பூ அரில் பெற்ற குழலி செறிந்த பொழிலிடத் துளவாகிய பூக்களது பிணக்கத்தைப் பெற்ற குழலையுடையாய்; வாடி புலம்புவது என் நீ பொலிவழிந்து துன்பப்படுகின்றது என்னோ?. என்றவாறு.
மூவர் சந்திரர், ஆதித்தர், செந்தீக்கடவுள். பிரிவுணர்த்தினான் ஆகலின் பிரிந் தால் என்னாமென்னும் ஐயம் நீங்கக் கூறினான். இக் கடியையாவராற் பெற்றெனினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம், பயன்: வன் புறை. பெரியதோருவகை மீதூர இவ்வகை வற்புறீஇயி னான் என்பது.

குறிப்புரை :

1.14. அருட்குணமுரைத்தல்
அருட்குணமுரைத்தல் என்பது இற்பழியாமென்று நினைந்தோவென்று கூறக்கேட்ட தலைமகள் இது நந்தோழி அறியின் என்னாங்கொல்லோ என்று பிரிவுட்கொண்டு பிரிவாற் றாது வருந்தா நிற்ப, அக்குறிப்பு அறிந்து அவள் பிரிவு உடம்படு வது காரணமாகத் தலைமகன் யாம் பிரிந்தேமாயினும் பிரிவில் லை எனத் தெய்வத்தின் அருள் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
1.14 கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம்
வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 15

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வரும் குன்றம் ஒன்று உரித்தோன் இயங்கு மலையொன்றை உரித்தவன்; தில்லை அம்பலவன் தில்லை அம்ப லத்தை உடையான்; மலயத்து இரு குன்ற வாணர் இளங் கொடியே அவனது பொதியின் மலையிடத்துப் பெரிய குன்றத்தின் கண் வாழ் வாருடைய மகளே; இடர் எய்தல் - வருத்தத்தை விடு; கனங்குழையே கனங்குழாய்; எம் ஊர் பரு குன்றம் மாளிகை நுண் களபத்து ஒளி பாய- எம்மூரிடத்துப் பெரிய குன்றம் போலும் மாளிகைகளின் நுண் ணிதாகிய சாந்தினொளி பரந்து; நும் ஊர் கரு குன்றம் வெள் நிறம் கஞ்சுகம் ஏய்க்கும் - நும்மூர்க்கணுண்டாகிய கரியகுன்றம் வெள்ளை நிறத்தை உடைய சட்டை இட்டதனோடு ஒக்கும் என்றவாறு.
கருங்குன்ற வெண்ணிறமென்பது பாடமாயின், நுண்கள பத்தொளி பரப்ப அவ்வொளி நும்மூர்க் கருங்குன்றத்திற்கு இட்ட வெண்ணிறக் கஞ்சுகத்தோடு ஒக்கும் என்று உரைக்க. ஈண்டுரைத்த வாற்றால், தலைமகன் மிக்கோனாதல் வேண்டும், வேண்டவே ஒப்பு என்னை பொருந்துமாறெனின், ``மிக்கோனாயினும் கடிவரை யின்றே`` (தொல். பொருள். களவியல்.2.) என்பதோத்தாகலிற் பொருந்து மென்க. வற்புறுத்தி - வலியுறுத்தி. இடமணித்தென்றலே வற்புறுத்தலாக உரைப்பினும் அமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: இடமணித்தென்று வற்புறுத்தல்.

குறிப்புரை :

1.15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல்
இடமணித்துக் கூறி வற்புறுத்தல் என்பது அருட்குணம் உரைத்து வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு, நும் மூரிடத்திற்கு எம்மூரிடம் இத்தன்மைத்தெனத் தன்னூரி னணிமைகூறி வற்புறுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்
1.15 மடவரலை வற்புறுத்தி
இடமணித்தென் றவனியம்பியது.

பண் :

பாடல் எண் : 16

தெளிவளர் வான்சிலை செங்கனி
வெண்முத்தந் திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன்
கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங
னேவந்து தோன்றுவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:வளர் வான் சிலை செம் கனி வெள் முத்தம் திங்களின் வாய்ந்து அளி வளர் வல்லி அன்னாய் கால் நிமிர்ந்த பெரிய சிலைகளும் சிவந்த கொவ்வைக்கனியும் வெள்ளிய முத்தங் களும் ஒரு திங்களின்கண்ணே வாய்ப்ப அளிகள் தங்கும் வல்லியை ஒப்பாய்; தெளி யான் சொன்னவற்றைத் தெளிவாயாக; முன்னி ஆடு இனி முற்பட்டு விளையாடுவாயாக; ஒளி வளர் தில்லை அளவா ஒருவன் கயிலை உகுபெரு தேன் துளி வளர் சாரல் கரந்து ஒளிவளராநின்ற தில்லைக்கண் உளனாகிய அளக்கப்படாத ஒருவனது கயிலையிடத்து உகாநின்ற பெருந்தேன்றுளிகள் பெருகுஞ் சாரற் பொதும்பரி லொளித்து; யான் பின் உங்ஙன் வந்து தோன்று வன் யான் பின்னும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன் என்றவாறு.
தெளி வளர் வான்சிலை என்பதற்கு ஒளிவளரும் சிலை யென்று உரைப்பினும் அமையும். திங்களை வல்லிக் கண்ணதாகக் கொள்க. வாய்ந்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபாகலின், அளிவள ரென்னும் பிறவினை கொண்டது. சாரலென்பது: ஆகுபெயர். வன்புறையின் - வற்புறுத்தும் சொற்களால். மெய்ப்பாடு: அது. பயன்: இடம் குறித்து வற்புறுத்தல்.

குறிப்புரை :

1.16. ஆடிடத் துய்த்தல்
ஆடிடத் துய்த்தல் என்பது அணிமை கூறி யகலாநின்றவன், இனி நீ முற்பட்டு விளையாடு; யான் இங்ஙனம் போய் அங்ஙனம் வாராநின்றேன் என அவளை ஆடிடத்துச் செலுத்தாநிற்றல். அதற்குச் செய்யுள்
1.16 வன்புறையின் வற்புறுத்தி
அன்புறுமொழியை அருகுஅகன்றது.

பண் :

பாடல் எண் : 17

புணர்ப்போன் நிலனும் விசும்பும்
பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல்
லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன்
னீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ
அறியேன் புகுந்ததுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:போது இணர் அணி குழல் ஏழை தன் நீர்மை இந்நீர்மை என்றால் - பூங்கொத்துக்களை அணிந்த குழலையுடைய ஏழைதனது நீர்மை இத்தன்மையாயின்; நிலனும் விசும்பும் பொருப் பும் புணர்ப்போன் - மண்ணையும் விண்ணையும் மண்ணின் கண் உள்ள மலையையும் படைப்போன்; தன் பூ கழல் துணர்ப்போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தன்னுடைய பொலிவினை உடைய திருவடியாகிய துணர்ப்போதுகளை எனக்கு முடியணி யாக்கும் பழையோன்; தில்லை சூழ் பொழில் வாய் புகுந்தது அவனது தில்லைக்கண் உண்டாகிய சூழ்பொழிலிடத்து இவள் புகுந்தது; புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் மாயமோ கனவோ! இரண்டும் அன்றி வேறொன்றோ! இன்னதென்றறியேன் என்றவாறு.
பூங்கழலென்பது பூப்போலும் கழலென உவமைத் தொகையாய்க் கழலென்னும் துணையாய் நின்றது எனினும் அமையும், வீரக்கழலையுடைய துணர்ப்போதென்று உரைப்பினும் அமையும். பொழில்வாயிணர்ப்போதென்பாருமுளர். பிறிதோ வென்பதற்கு நனவோ என்பாருமுளர். புகுந்ததுவே என்பதில், வகாரம்: விகாரவகையான் வந்தது. சுற்றம் ஆயம். இடம் அந்நிலம். சூழல் - அந்நிலத்துள்ளும் புகுதற்கரிய அப்பொழில். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: தலைமகளது அருமையுணர்தல்.

குறிப்புரை :

1.17. அருமையறிதல்
அருமை அறிதல் என்பது ஆடிடத் துய்த்து அகலாநின்ற வன் ஆயவெள்ளத்தையும் அவ்விடத்தையும் நோக்கி, இவளை யான் எய்தினேன் என்பது மாயமோ? கனவோ? இன்னதென்று அறியேன்; இனியிவள் நமக்கு எய்தற்கு அரியவளென அவளது அருமை அறிந்து வருந்தா நிற்றல். அதற்குச் செய்யுள் -
1.17 சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி
மற்றவ ளருமை மன்ன னறிந்தது.

பண் :

பாடல் எண் : 18

உயிரொன் றுளமுமொன் றொன்றே
சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற
நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன்
தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென
லாகும் பணிமொழிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:என்னொடு இவட்கு உயிர் ஒன்று உளமும் ஒன்று சிறப்பு ஒன்று என்ன என்னோடு இவட்கு உயிருமொன்று மனமுமொன்று குரவர்களாற் செய்யப்படுஞ் சிறப்புக்களும் ஒன்றென்று சொல்லி; பணி மொழிக்கு தாழ்ந்த மொழியை உடையாட்கு; செவி உற நீள் படை கண்கள் சென்று பயில்கின்ற செவியுறும் வண்ணம் நீண்ட படைபோலும் கண்கள் இவள்கட் சென்று பயிலாநின்றன; அதனால் இவள் போலுமிவட்குச் சிறந்தாள் என்றவாறு.
விண் வாய் செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் விண்ணிடத்துக் குற்றத்தைப் பொருந்தின மூன்று புரத்தையும் கெடுத்தவன் தில்லை சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடை விடாது ஆடுகின்ற கூத்தையுடையான் அருள் எனல் ஆகும் பணிமொழிக்கு அவன் அருளென்று துணியலாம் பணிமொழிக்கு எனக் கூட்டுக.
அருளென்றது அருளான்வரும் ஆனந்தத்தை. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றாமை நீங்குதல்.
இப்பதினெட்டுப் பாட்டும் இயற்கைப்புணர்ச்சியையும் அது நிமித்தமாகிய கிளவியையும் நுதலின. இதனை இயற்கைப் புணர்ச்சியெனினும், தெய்வப்புணர்ச்சி எனினும், முன்னுறுபுணர்ச்சி எனினும், காமப்புணர்ச்சி எனினும் ஒக்கும்.

குறிப்புரை :

1.18. பாங்கியையறிதல்
பாங்கியை அறிதல் என்பது அருமையறிந்து வருந்தாநின்ற தலைமகன் ஆயத்தோடு செல்லாநின்ற தலைமகளை நோக்க, அந்நிலைமைக்கண் அவளும் இப்புணர்ச்சி இவளுக்குப் புலனாங்கொல்லோவென உட்கொண்டு எல்லாரையும் போல அன்றித் தன் காதல் தோழியைப் பல்காற் கடைக்கண்ணாற் பார்க்கக்கண்டு, இவள்போலும் இவட்குச் சிறந்தாள்; இதுவும் எனக்கோர் சார்பாமென உட்கொண்டு அவள் காதல் தோழியை அறியாநிற்றல். அதற்குச் செய்யுள்:
1.18 கடல்புரை யாயத்துக் காதற் றோழியை
மடவரல் காட்ட மன்ன னறிந்தது.
சிற்பி